Search This Blog

1.8.09

ஆடிப் பதினெட்டாம் நோன்பினால் மக்கள் அடையும் பலன் என்ன?




ஆடி பதினெட்டாம்!

(பாரதப் போர் நடந்தது ஆடி மாதத்தில்தானாம். ஆடி பதினெட்டு அதற்காக நடைபெறுகிறாம். பாரதப் போர் நடந்தது பஞ்சாபில். ஆனால் அங்கு ஆடி பதினெட்டு கொண்டாடப்படு வதில்லை. பாரதப் போருக்கு சம்பந்தமே இல்லாத தமிழ் நாட்டில் விழா ஏன்?)

ஆடிபதினெட்டாம் நாளன்று காவிரியாறு பாயும் ஜில்லாக்களிலுள்ள மக்கள் பலர் நோன்பு நாளெனக் கொண்டாடுகின்றனர். அன்று கொண்டாடப்படும் நோன்பின் கருத்தென்ன? இந்நோன்பால் திராவிட நாட்டு மக்கள்அடையும் பலன் என்ன? இந்நோன்பு திராவிட நாட்டவருக்கு உரியதுதானா? என்பவைகளைப் பற்றி மக்கள் சிறிதேனும் சிந்திப்பது கிடையாது.

எதனையும் ஆராய்ந்து உண்மையா பொய்யா? வேண்டப்படுவதா அல்லவா? நமக்குரியதா இல்லையா? என்பவற்றை எண்ணிப் பாராமல், பகுத்தறிவை இழந்து, எவர் சொன்னாலும், எதில் எழுதி வைத்திருந்தாலும் அவற்றை அப்படியே அனுஷ்டித்தல் என்னும் மூடக் கொள்கைக்குத் திராவிட மக்கள் ஆட்பட்டுவிடும் கொடிய வழக்கம் இந்நாட்டில் வேரூன்றி விட்டபடியால்தான், திராவிட மக்கள் மீளா அடிமைத்தனத்திலும் வறுமையிலும் சிக்கித் தப்ப வழி காணாது தவித்து, மேலும் மேலும் அவ்வடிமைத் தனந்தான் சிறந்ததெனக் கூறி, அதிலேயே திளைத்துக் கிடக்கும் நிலைமையை அடைந்து விட்டனர்.

ஆடிபதினெட்டாம் நோன்புக்கு உட்கருத்து இருவகையாக வருணிக்கப்படுகிறது.

1. பாரதப் போர் நடந்தது இந்த ஆடி மாதத்தில் தானாம். ஆடி முதல் தொடங்கி 18 ஆம்தேதி வரை போர் நடந்து 18 ஆம் நாள் பாண்டவர் வெற்றி கொள்ளப் போர் முடிவுற்றதாம். இப்போரில் பாண்டவர் தரப்பில் தமிழ்நாட்டு மன்னன் ஒருவனும் சேர்ந்து, பாண்டவர் படைக்கு உணவுப் பஞ்சம் வராதிருக்கவும், உணவுப் பிரச்சினையால் பாண்டவர் படை பீதியுற்றுத் தோல்வியடைந்து விடாதிருக்கவும் வேண்டிப் பெருஞ் சோறிட்டான் என வில்லிபாரதம் சான்று கூறுகிறது. எனவே, தமிழ் மன்னன் சம்பந்தம் கொண்ட அந்த பாரதப் போர் பாஞ்சாலத்தில் 18 நாள் நடந்து முடிவில் பாண்டவருக்கு வெற்றியுடன் முடிந்த இந்நாள், இங்கே, காவிரியாற்றங்கரையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறோம்.

பாரதப் போர் நடந்தது பஞ்சாபில். ஆனால் கொண்டாட்டம் காவிரியில். பஞ்சாபில் பாயும் பாஞ்சால நதியிலும் இக் கொண்டாட்டமில்லை; அதற்கருகே பாயும் கங்கையாற்றங்கரைகளிலும் இக் கொண்டாட்டமில்லை. காவிரியில் மட்டும் வந்து முளைத்துக் கொண்டிருப்பதன் கருத்தென்ன?

2. இரண்டாவதாக, இதற்குப் புலவர்கள் ஒரு கதை கூறுகின்றனர். தமிழ் நாட்டில் மும்முறை கடல் கோள் ஏற்பட்டதென்று ஆராய்ச்சியாளர்கள் மொழிகின்றனர். இறுதிக் கோள் ஏற்படு முன் குமரியாறு, பஃறுளியாறு என்பவைகள் இந்நாட்டில் இருந்ததாகவும் அவை கடற்கோளால் மறைந்துபோன பின்னர்த் தமிழ்நாட்டின் நில முனைக்குக் குமரியாற்றின் ஞாபகார்த்தமாகக் குமரி முனை என்னும் பெயர் இடப்பட்டதாகவும், அக்கடல் கோள்களில் ஞாபகார்த்தமாகவே ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் நோன்பு அனுஷ்டிக்கப் படுகிறதென்றும் கூறப்படுகிறது.


இந்தக் கருத்தேனும் பொருத்தமாகவோ, பகுத்தறிவிற்கேற்றதாகவோ, மக்களுக்குப் பயன் படுவதாகவோ இருக்கிறதா என்று பார்த்தால் அதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஏதேனும் ஒரு பகுத்தறிவுக் கொவ்வாத காரியம் நாட்டில் நடைபெறுவதாயிருந்தால், அதனை ஏற்க மறுத்து, அது முட்டாள்தனமாகத் திராவிடத்தில் நுழைந்துவிட்ட செயல் என வெளிப்படையாக எடுத்துரைத்து, அதனைக் கண்டித்து ஒழிக்கும் ஆண்மை நம் புலவர்களுள் பலருக்கு ஏற்படுவதில்லை. இத்தகைய செயல்களைப் பகுத்தறிவாளர்கள் கண்டித்து ஒழிக்க முற்படுங்கால், உடனே இப்புலவர்கள் விழுந்தடித்துக் கொண்டு எழுந்தோடி வந்து, அதற்குப் புத்துரைகள், தெளிவுரைகள், விரிவுரைகள், விளக்கவுரைகள் ஆகியவை கூறி, சங்க இலக்கியச் சான்றுகளை எடுத்து வீசி, அச்செயல் திராவிட மக்களுடையதென நிலை நாட்டத் தாங்கள் இந்த பிரிட்டிஷ் ஆட்சியில் கற்ற விஞ்ஞான வித்தைகளையெல்லாம் புகுத்தி, தங்கள் அறிவையும் காலத்தையும் பாழ்ப்படுத்திக் கொண்டு பிற மக்கள் முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாக அமைந்துவிடுகின்றனர். பகுத்தறிவாளர்களான புலவர்கள் சிலர் ஆண்மையுடன் வெளிவந்து, இப்புலவர்களின் அறியாமையை வெளிப்படுத்தினால், அப்புலவர்களுக்குத் தங்களாலான இடுக்கண்களை யெல்லாம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.

போகட்டும்; ஆடிப் பதினெட்டாம் நோன்பு கொண்டாடப்படுவது பாரதப் போர் முடிவை ஒட்டியதாக இருந்தாலும் சரி; அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட கடல்கோள்களின் ஞாபகார்த்தமாக இருந்தாலும் சரி, இதனால் மக்கள் அடையும் பலன் என்னவென்றுதான் நாம் கேட்கிறோம்.

இந்த ஆடிப்பதினெட்டாம் நாளன்று காவிரி ஆற்றங்கரை நெடு மக்கள் குழுமி, பகுத்தறிவுக்கு ஏற்கத்தகாத செயல்களைச் செய்து, மேலும் மூட நம்பிக்கையில் ஆழ்ந்து போவதைத் தவிர, புலவர்கள் கூறும் கருத்தோ அன்றிப் பிறவோ அம்மக்களுக்குத் தெரியுமா? ஆடி நோன்பு வந்தால் ஏழு கன்னி கும்பிட்டு, மஞ்சள் நூல் கட்டிக் கொள்வதும், முளைகளை ஆற்றில் விடுவதும், ஆற்று மணற் பிள்ளையாருக்கு அரிசிப் படையலிடுவதும் அழுக்கேறி மூலை முடுக்குகளில் அடைந்து கிடக்கும் உதவாச் சாமான்களை எரித்து ஆற்றில் தள்ளுவதுமான செயல்களைத் தவிர்த்து வேறென்னதான் நடைபெறுகிறது? வருமானத்தைக் கருதிப் பார்த்தால் புது மாப்பிள்ளைகள் பாடு கொண்டாட்டமாயிருக்கலாம். அதைத் தவிர, அறிவுக்குப் பயன் தரும் செயலோ, மக்களை உயர்த்தும் முறையோ, நாட்டுக்கு நலன் உண்டாக்கும் நாட்டமோ இதிலே அறவே கிடையாதென்பது நன்கு புலனாகிறது.

இதற்குப் பதிலாக, மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி நெருக்கத்தில் இடிபட்டும், உதைபட்டும், காதறுந்தும், மூக்கறுந்தும், நகைகளை இழந்தும் தவிக்கும் காட்சிகளும், புது வெள்ளத்தில் குளிப்பதால் உடல் நிலை கெட்டுப் பின்னர்ப் பலநாள் வரை மருந்தும் கையுமாகத் திரிவதும்தான் ஆண்டு தோறும் இதனால் ஏற்படும் கண்கண்ட பலனாக இருக்கிறது.

எனவே, இனியேனும் தமிழறிஞர்களும், மக்கள் நலனில் ஆர்வ மிக்காரும் முன் வந்து, வெற்றுரைகளை வீம்புக்கேனும் கூறிக்கொண்டிருத்தலை விட்டு, பகுத்தறிவு வாதிகளுடன் ஒன்றுபட்டு நின்று, இம் மூடத்தனமாக செயல்களை அறவே நிறுத்திவிடுமாறு மக்களைத் தூண்டித் திருத்தும் நற்றொண்டு புரியத் துணிவு கொள்வார்களாக என்று கேட்கிறோம்.

திராவிட நாடு பெருமையுற்று,-உன்னத நாகரிகமும், கலைச் சிறப்பும் கொண்டது என்ற தனிப் பெரும் பண்டைப்பண்பைப் பெற்று, உலக நாகரிக நாடுகளுள் இதுவும் ஒன்றென நிமிர்ந்து நிற்கவேண்டு மானால், இத்தகைய அறிவுக் கொவ்வாத மூடச் செயல்களுடைய விழாக்கள் அனைத்தும் தமிழ் நாட்டினின்று அறவே அகற்றப்படவேண்டும். இதற்குச் சான்றுகள் காட்ட சங்க இலக்கியங்கள் தேவையில்லை.

--------------------------"விடுதலை"- தலையங்கம் 3.8.1943,

1 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்