Search This Blog

14.2.09

ஈழத் தமிழர் பிரச்சினை: பின்னணியில் அரசியல்! "நக்கீரனுக்கு" தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி





ஈழத் தமிழர் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறவர்கள் செயல்படுபவர்கள் யார்? - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நக்கீரன் இதழுக்கு (14.2.2009) அளித்த பேட்டி இதோ:


அப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் கொடூரத்தாக்குதலை நிறுத்தக் கோரி தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலித்தாலும் ஒற்றுமையாக ஒலிக்கவில்லை. திமுக தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை, பழ. நெடுமாறனைத் தலைவராகக் கொண்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என இரு அணிகளாகப் பிரிந்து பேரணி, பொதுக் கூட்டம் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல்களும் உருவாகியுள்ளன. இத்தகையப் போக்குகள் ஏன் ஏற்பட்டன என்பது குறித்து, திராவிடர் கழகத்தின் தலைவரும் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணை அமைப்பில் செயலாளராக இருப்பவருமான கி. வீரமணியை சந்தித்தோம்.

நக்கீரன்: திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நீங்களும் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரும் முதல்வரை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுபற்றி பேசீனீர்கள். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற தனி அமைப்பு தொடங்கப்பட்டுவிட்டது. இதில் தி.க. இடம் பெறவில்லை. இப்போது இரண்டு அமைப்புகள் தனித்தனியாகப் போராடுவது ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வாக அமையுமா?

கி. வீரமணி:

இது வருத்தமான நிலைமைதான். ஆனால், இதற்கு காரணம் யார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் எதிரான நிலையில் இருந்தபோதும் இலங்கைத் தமிழருக்காக இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் கலைஞர். அப்படியிருக்கும் போது ஈழத் தமிழர் பிரச்சினையை தங்களின் அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டும் என நினைக்கின்ற ஒரு அணியால் ஏற்பட்டிருக்கின்ற விளைவுதான் இது.

முதலில் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் பெரியார் திடலில் என்னை சந்தித்தார்கள். நெடுமாறன், தா. பாண்டியன் உள்ளிட்டவர்களையும் சேர்த்து மாலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதென முடிவு. அதில் வைகோவும் கலந்து கொள்கிறார் என்பது எனக்கு முதலில் தெரிவிக்கப்படவில்லை. அது ஒருபுறமிருக்க, பெரியார் திடலில் கூட்டம் நடத்தினால் சிலர் வர மாட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில், முதல்வரை முன்னிறுத்தி செயல்பட்டால்தான் இப்பிரச்சினையில் வெற்றி காண முடியும் என்று சொன்னவரே டாக்டர் ராமதாஸ்தான். முதல்வரை நாங்கள் சந்தித்தபோது அவரும், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை செய்யத் தயார், எல்லோரும் ஒற்றுமையாகச் செயல்படுவோம் என்று சொன்னார். ஆனால் முதல்வரை சந்தித்து விட்டோம் என்பதற்காகவே மாலையில் நடக்கவிருந்த ஆலோசனைக் கூட்டத்தை திடீரென ரத்து செய்து விட்டார்கள். பிறகுதான் அவர்கள் தனியாக இன்னொரு நாளில் கூடி புதிய அமைப்பைத் தொடங்கினார்கள்.

நக்கீரன்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை எந்த அடிப்படையில் திமுக அரசுக்கு எதிரான இயக்கமாகப் பார்க்கிறீர்கள்?

கி. வீரமணி:

போரில் அப்பாவி மக்கள் இறப்பது சாதாரணம் என்று, ராஜபக்சேகூட சொல்லாத ஒரு கருத்தை ஜெயலலிதா சொன்னார். அதுபற்றி இவர்கள் யாரும் கண்டிக்கவில்லை. அத்துடன் ஜெயலலிதா இன்னொன்றும் சொன்னார். பாராளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாகக்கூட வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றார். இதிலிருந்தே பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது தெரிகிறது. உள்ளுக்குள்ளே வேறுவித மான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல்வரை வேகப்படுத்தி அவரை ராஜினாமா நிலைக்குத் தள்ளி, அதன்மூலம் காங்கிரசை பயன்படுத்தியோ அல்லது மற்ற கட்சிகளைப் பயன்படுத்தியோ தங்கள் ஆட்சியை அமைப்ப தற்கான அரசியல் திட்டம் பற்றியும் பேசியிருக் கிறார்கள் என்ற செய்தியும் எங்களைப் போன்ற வர்களின் காதுகளுக்கு வந்தது. இப்போது அவர்கள் போகிற போக்கு ஈழத் தமிழர் வாழ் வுரிமைப் பிரச்சினை என்ற நிலையிலிருந்து மாறிவிட்டது. அவர்கள் வைக்கின்ற கண்ணி வெடிக்கு திமுக பலியாகிவிடக் கூடாது என்ற அணுகுமுறையுடன், எப்போதும்போல ஈழத் தமிழர் நல்வாழ்வுக்காகப் பாடுபட இந்தப் பேரவையை அமைக்க வேண்டும் என முடிவு செய்து அதை உருவாக்கினோம்.

நக்கீரன்: இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு முயற்சி எடுக்காத நிலையில், காங்கிரசையும் சேர்த்துக் கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை செயல்படுவது எப்படி சரியாக இருக்கும்?

கி. வீரமணி:

மத்தியில் காங்கிரஸ் கட்சிதான் மேஜர் பார்ட்டி அவர்களை நாம் புறக்கணித்து விட்டால் அது இன்னும் நமக்கு பலகீனம். அது புத்திசாலித்தனமும் அல்ல. ராஜதந்திரமும் அல்ல. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் இங்குள்ள காங்கிரசாருக்கும் இரண்டு கருத்து இல்லை. வாக்கு வங்கியைக் கருதியாவது அவர்கள் இதில் ஈடுபட வேண்டும். அவர்களின் மனஒதுக்கீடு என்பது விடுதலைப்புலிகள் விஷயத்திலும், தனித்தமிழீழம் விஷயத்திலும்தான். இந்தக் கோடு என்பது சி.பி.எம். உள்பட பலரிடமும் இருக்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போது மானதாக இல்லை என்று மத்திய அரசைத்தானே வலியுறுத்த வேண்டும். அந்த அமைப்பினரும் அந்த அரசைத்தானே வலியுறுத்துகிறார்கள். நேரடியாக ராஜபக்சேவிடமா பேசுகிறார்கள்?

நக்கீரன்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஜெய லலிதாவுக்கு எப்போதும் ஒரே பார்வைதான் என்றும், கலைஞர்தான் மாறி மாறி பேசி வருகிறார் என்றும் வைகோ உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பிரபாகரன் அளித்த பேட்டியின் அடிப்படையில் அவர் சர்வாதிகாரி என கலைஞர் சொன்னதும்கூட அவரது நிலைப்பாடு பற்றிய விமர்சனத்திற்கு வழிவகுக்கிறதே?

கி. வீரமணி:

ஜெயலலிதா மாதிரியான பார்வையும் கருத்தும் கலைஞரிடமிருந்து வெளிப்பட்டால் இவர்கள் ஒத்துக் கொள்வார்களா? அவர் ஒன்றும் மாறி மாறிப் பேசவில்லை. சகோதரயுத்தம் பற்றி அவர் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் விஷயத்தில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு வேறு. திமுகவின் நிலைப்பாடுவேறு. ஆனால், தமிழ்ச்செல்வன் இறந்தபோது கவிதை எழுதியது யார்? அதைக் குற்றம் சொல்லி, ஆட்சியைக் கலைக்கச் சொன்ன வர்கள் யார்? அப்படி சொன்னவர்களோடு கூட்டணி சேர்ந்திருப்பது யார்? கலைஞரின் உண்மையான உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைவிட்டுவிட்டு, ஆட்சியை கலைக்க நினைப்பது சரியா? மத்தியில் ஒன்றரை மந்திரி களைக் கொண்டுள்ள பா.ம.க.வே பதவியைவிட்டு வெளியே வராதபோது, தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகால ஆட்சியை தி.மு.க. இழக்க வேண்டுமா?

நக்கீரன்: தி.மு.க., ஆட்சியை இழக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல என்கிறாரே ராமதாஸ்?

கி. வீரமணி:

அப்படியென்றால் அவர்களின் அரசியல் நோக்கமென்ன? நாங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்க மாட்டோம். உங்களுக்கு ஆதரவு தருகிறோம். உங்கள் தலைமையில் போராடுகிறோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சொல்வார்களா?

நக்கீரன்: இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில், இப்பிரச்சினையை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆதரவைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்டுள்ள துணை அமைப்பில் நீங்கள் செயலாளராக இருக்கிறீர்கள். இதன் செயல்திட்டம் என்ன?

கி. வீரமணி:

அமெரிக்கா, பிரிட்டன், அய்க்கிய நாடுகள் அவை ஆகியவற்றின் மூலம்தான் இன்று இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் உலக சட்டங்கள் வாயிலாக இதில் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியும் என்பது குறித்து இந்த துணை அமைப்பின் கமிட்டி கூடி விவாதிக்க இருக்கிறது. ராஜபக்சே யாருக்குமே கட்டுப் படவில்லை. இந்திய அரசு மட்டுமல்ல, அமெரிக்காவில் ஒபாமா அரசின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சொன்னாலும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் சொன்னாலும் கேட்க மறுக்கிறார்.

நாளைக்கே விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என கனவு காண்கிறார். ஏனென்றால், அவருக்கு அங்கே தேர்தல் நெருங்குகிறது. அதற்கு பயன்படும் என நினைக்கிறார். அது நடக்கப் போவதில்லை.

இத்தனை லட்சம் மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்பது பொது அறிவுக்குப் பொருந்தாதது. யுத்தத்தில் உண்மை கள் களப்பலியாகும். அதுதான் இப்போதும் இலங்கையில் நடக்கிறது. இலங்கை அரசு சொல்வது மட்டும்தான் செய்தியாக வெளி யாகிறது. செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட எல்லா அமைப்புகளையும் வெளியேற்றி விட்டார்கள். இந்தக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகும் நிலையில், உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்தச் சூழலில்தான் இந்த நல உரிமைப் பேரவையின் துணை அமைப்பின் பங்கு முக்கியமானதாக வெளிப்படும்.

நக்கீரன்: உலக நாடுகள் தலையிடும் சூழல் ஏற்பட்டாலும், விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்கிறது இலங்கை அரசு. புலிகளுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், இலங்கை அரசுடன் தமிழர்களின் பிரதிநிதிகளாக யார் பேச முடியும்?

கி. வீரமணி:

விடுதலைப்புலிகளைத் தவிர்த்து விட்டு யாருடன் பேசினாலும் தீர்வு ஏற்படாது. அதை ஈழத் தமிழர்களும் ஏற்க மாட்டார்கள். உலக நாடுகளின் தடை என்பது நிரந்தரமல்ல. முஜிபுர் ரகுமானுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்கள். அதே வாரத்தில்தான் அவர் பங்களாதேஷின் சுதந்திரத்தை வென்றெடுத்தார்.

இங்கே உல்ஃபா, நாகாலாந்து இயக்கங்களுடன் இந்திய அரசு பேசவில்லையா? போரை நிறுத்தி விட்டு புலிகளுடன் பேச வேண்டும் என்று தடை விதித்த உலகநாடுகள்தானே சொல்கின்றன!

விடுதலைப்புலிகளின் பங்கேற்பில்லாமல் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

நக்கீரன்: ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்படுகிற நிலையில் அதனைக் கேட்க நாதியில்லையே என்ற கவலையுடன் உலகத் தமிழர்கள் தாய்த் தமிழகத்தைப் பார்க்கிறார்களே?

கி. வீரமணி:

உலகத் தமிழர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியால்தான் உள்நாட்டில் வாழ முடியாமல் உலகம் முழுவதும் சென்றிருக்கிறார்கள்.

அங்கிருந்தே போராட முடியாத சூழ்நிலை. அதே போலத்தான் தாய்த் தமிழகத்திலும் சில நெருக்கடிகள்.

ஒன்றரை மாதத்தில் இங்கே பொதுத் தேர்தல் வரவிருப்பதால், தொண்டையில் மாட்டிய முள்போல இப்பிரச்சினை இருக்கிறது. எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற நிலை உள்ளது.

இப்போது அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டம் இங்கே நிலவுகிறது. அறிவின் பக்கம் நின்று தொலைநோக்குப் பார்வையுடன் செயல் பட வேண்டும். இங்குள்ள தமிழர்களுக்கு நிலையான ஆட்சி இருந்தால்தான் ஈழத் தமிழர் பிரச்சினை உள்பட உலகத் தமிழர் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண முடியும்.

--------------நன்றி: -"விடுதலை" ஞாயிறுமலர் 14-2-2009

5 comments:

Unknown said...

தி.க.வீரமணியின் பேட்டி முழுதும் படித்ததில் யதார்த்தமும், உண்மையும் பளிச் என்று தெரிகிறது. வீம்புக்காக இல்லாமல் பிரச்சினையின் மூலம் வரை சென்று ஆராய்ந்து முடிவுக்கு கொண்டுவருவதற்கான யோசனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

எனக்குக் கூட ஒரு மயக்கம் இருந்தது. வீரமணியின் பேட்டியைப் படித்ததும் தெளிவு கிடைத்தது.

Unknown said...

நக்கீரன் பத்திரிக்கைக்கு வீரமணி அவர்கள் அளித்த பேட்டி பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

//விடுதலைப்புலிகள் விஷயத்தில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு வேறு. திமுகவின் நிலைப்பாடுவேறு. ஆனால், தமிழ்ச்செல்வன் இறந்தபோது கவிதை எழுதியது யார்? அதைக் குற்றம் சொல்லி, ஆட்சியைக் கலைக்கச் சொன்ன வர்கள் யார்? அப்படி சொன்னவர்களோடு கூட்டணி சேர்ந்திருப்பது யார்? கலைஞரின் உண்மையான உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.//

நான் புரிந்து கொண்டேன். இந்த உண்மையை மற்ரவர்களும் புரிந்து கொண்டால் நல்லது நடக்கும் ஒற்றுமை ஏற்படும்.

நக்கீரனுக்கு நன்றி.

Ilaya said...

வீரமணி அய்யா சொல்வதெலாம் சரி .
எல்லோரும் சொல்வது கலைஞரின் பங்களிப்பு
மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
ஏன் அவர்கள் ஆரம்பிக்க பட்ட இயக்கித்தில் சேர்ந்தால் குறைந்து விடுவார்களா.
இல்லை இன்னொரு இயக்கம் ஆரம்பிக்காமல் ஆரம்பித்த இயக்கத்துக்கு அரசு அதரவு என்று சொன்னால் என்ன.EGO தான் காரணம்.யார் பெரியவன் நார்களை யாருக்கு,என்று இல்லை.
இப்போது தேவை..வைகோ சொன்னது போல்"தன் அரசியல் வாழ்கை முடிந்து போனாலும் பரவ இல்லை ஈழ மக்களை காப்பாற்ற வேண்டும் ".
இந்த உணர்ச்சியும் செயலும் தான் ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கிறான்,இங்க ராஜா தந்திரம்,அரசியல் எல்லாம் தேவை இல்லை.
இது வரை என்ன முயற்சி தான் மேல்கொல்லப்பட்டு உள்ளது,வீரமணி இய்யவால் சற்று விவரிக்கவும்.

தமிழ் ஓவியா said...

அருள்கூர்ந்து விடுதலை நாளிதழைத் தொடர்ந்து படியுங்கள். குறைந்த பட்சம் ஈழப்பிரச்சினை தொடர்பாக இந்த வலைப்பூவில் உள்ள விபரங்களைப் படியுங்கள். உண்மை புரியும்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி llaya.

சீ. பிரபாகரன் said...

வணக்கம்.

தமிழீழ விடுதலை வரலாற்றில் திராவிடர் கழகத்திற்கு நிலையான இடம் உள்ளது என்பதை தமிழர்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர்.

...

அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி காலக்கெடு விதித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது...

பிரனாப் முகர்ஜி ஓடி வந்தார் தி.மு.க. தலைவரை பார்த்தார், பேசினார்...

அவர்கள் என்ன பேசினார்கள் என்று யாருக்கும் தெரியாது... பிரனாப் முகர்ஜி என்ன சொன்னார் என்பதை மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைவருக்கும் தெரிவித்திருக்க வேண்டும். பிறகு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை அனைவரும் பேசி முடிவெடுத்திருக்க வேண்டும்...

இதுதான் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை...

ஆனால், நடந்தது என்ன? “மனநிறைவளிக்கிறது... யாரும் பதவி விலகத் தேவையில்லை” என்று கருணாநிதி தனிச்சையாக அறிவித்தார்...

முதல் கோனலை உருவாக்கியது கருணாநிதிதான் என்பதை கி.வி. அவர்கள் மறைக்கக்கூடாது.