Search This Blog

19.2.09

கருநாடக அமைச்சர் செய்துள்ள பைத்தியக்காரத்தனமான - முட்டாள்தனமான நடவடிக்கையைப் பாருங்கள்!




எங்கே அறிவியல் மனப்பான்மை?



சார்லஸ் டார்வின் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி உலகுக்குத் தெரிவித்த உருமலர்ச்சிக் கொள்கை -உயிர்களின் தோற்றம், மனிதன் உருவானது ஆகியவை பற்றிய அறிவியல் கொள்கைகளைப் பறைசாற்றி - அதுவரை மக்களிடம் திணிக்கப்பட்டிருந்த படைப்புக் கொள்கையை உடைத்து நொறுக்கியது. பைபிள் கருத்துகளைக் கருக்கித் தீய்த்தது.

அந்த அறிஞரின் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் பிப்ரவரி 12. அந்த நாளைப் பகுத்தறிவாளர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார் தமிழர் தலைவர். அந்த விழாவுக்குச் சிறப்புப் பெயர் ஒன்றையும் தந்தார் நம் தலைவர். அறிவியல் மனப்பான்மை பரப்பு விழா என்கிற பொருத்தமான தலைப்பு.

நம் நாட்டு அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவு ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமைகளை வரையறை செய்துள்ளது. இதில் வகுக்கப்பட்டதுதான் - அறிவியல் மனப்பான்மையை வளர்த்து, எதற்கும் காரணம் கேட்கும் தன்மையைப் பேணி வரவேண்டும் என்பது. அந்தப்படிக்குநாம் செயல்படுகிறோமா என்கின்ற ஆய்வுக்கு நம்மைநாம் உட்படுத்திக் கொண்டால் கிடைக்கும் விடை - நிறைவாக இருக்காது.

சாதாரணக் குடிமகன்களை விடுங்கள். பொறுப்பிலே இருப்பவர்கள் - சட்டம் இயற்றவும், அதைச் செயல்படுத்தவும், அதன் வழி அரசமைப்புச் சட்டப்படிமக்களைக் காத்திடவும் அதிகாரங்கள் பெற்ற அமைச்சர்களாவது அப்படி இருக்கிறார்களா? கருநாடக மாநிலத்தில் ஓர் அமைச்சர் செய்துள்ள பைத்தியக்காரத்தனமான - முட்டாள்தனமான நடவடிக்கையைப் பாருங்கள்!

கங்கை ஆற்று நீரை 50 ஆயிரம் லிட்டர் மொண்டு, ரயிலில் ஏற்றி, பெங்களூருக்குக் கொண்டு வந்து அம்மாநிலத்தின் 176 தாலுக்காக்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிவன் கோயில்களுக்கு வழங்கப் போகிறாராம். பிப்ரவரி23 இல் நடக்கவிருக்கும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் சிவலிங்கத்தைக் கழுவுவதற்கான ஸ்பெஷல் அபிஷேக தீர்த்தம் இதுதானாம்!

கங்கா ஜலம் தான் இந்துக்களுக்கு எல்லாமே! கடவுள் நம்பிக்கையால்தான் அவர் மந்திரி ஆகியிருக்கிறாராம்! ஆகவே இந்தத் தண்ணீரை எல்லாக் கோயில்களுக்கும் பகிர்ந்தளிக்குமாறு மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவு போட்டிருக்கிறார்!

அறிவியல் மனப்பான்மை இந்த லட்சணத்தில்தான் பா.ஜ.க. ஆள்களிடம் இருக்கிறது. அவர்கள் அமைச்சர்களாக இருப்பதுதான் கேவலம்!


ஆக, தமிழர்தலைவர் தலைப்பு தந்ததும் அதன்படி விழா நடந்ததும் தேவைதானே! இதைச் செய்ய, அவரைத் தவிர - அவர் கட்டளைப்படிச் செயல்படும் நம்மைத் தவிர- வேறு யார் இருக்கிறார்கள் அறிவியல் மனப்பான்மையைப் பரப்ப?

------------------நன்றி:-"விடுதலை" 19-2-2009

2 comments:

Unknown said...

//கங்கை ஆற்று நீரை 50 ஆயிரம் லிட்டர் மொண்டு, ரயிலில் ஏற்றி, பெங்களூருக்குக் கொண்டு வந்து அம்மாநிலத்தின் 176 தாலுக்காக்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிவன் கோயில்களுக்கு வழங்கப் போகிறாராம். பிப்ரவரி23 இல் நடக்கவிருக்கும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் சிவலிங்கத்தைக் கழுவுவதற்கான ஸ்பெஷல் அபிஷேக தீர்த்தம் இதுதானாம்!//

மூடத்தனத்தில் பெரிய மூடத்தனம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு