Search This Blog
15.2.09
பிணத்தை எரியூட்டச் செல்லும் போது நெருப்புச் சட்டியைத் தூக்கிக்கொண்டு செல்வது அவசியமா?
நோய்களிலேயே மிகக் கொடிய, நோய் மூட நம்பிக்கை என்ற நோய்தான்; "கண்மூடிப் பழக்கம்" என்று அருமையானதொரு சொல்லாக்கத்தைத் தந்தார் வடலூர் வள்ளலார்!
காரண காரியமின்றி "பழக்கம், வழக்கம்" என்ற பெயரால் அப்படியே செய்வது, பின்பற்றுவது, மாற்றக்கூடாது என்று வாதிடுவது இவை எல்லாம் மூட நம்பிக்கையின் பல்வேறு அம்சங்கள்; வெளிப்பாடுகள்!
மெத்தப்படித்த மேதாவிகளுக்குக்கூட இதில் தெளிவும் இல்லை, துணிவும் இல்லை!
ஒரு காலத்தில் தவிர்க்க முடியாது செய்த சில பணிகள் - பிற்காலத்தில் அது தேவைப்படாத காலங்களிலும் விடாப்பிடியாக அதனைக் கட்டியழுவது கொடுமை அல்லவா?
நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பற்பல கூட்டங்களில் பகுத்தறிவின் மேன்மை, மூட நம்பிக்கையின் ஆதாரமற்ற பிடிப்புப்பற்றி அருமையாக விளக்குவார்!
முன்பெல்லாம் சுடுகாட்டிற்குப் பிணத்தை எடுத்துச் சென்று எரியூட்டச் செல்லும் நபர்கள், அத்துடன் ஒரு சட்டிக்குள் நெருப்பினை கனன்று கொண்டு இருக்கும்படித் தூக்கிச் செல்வார்கள். தனியே சட்டியைத் தூக்கினால் அது சுடும்; உடைந்துவிடும் வாய்ப்பு உண்டு என்பதால், வாழை மட்டைகளைப் பயன்படுத்தி ஒரு தூக்குபோல் கட்டி சுமந்து அதில் சட்டியை வைத்து தூக்கிக்கொண்டு, ஊர் கோடியில் எல்லையில் உள்ள சுடுகாட்டிற்குச் சென்று, பிணத்தை அங்கு வைத்து, இந்தத் தீயின் உதவி கொண்டு அதை எரிப்பார்கள்; காரணம், அக்காலத்தில் தீக்குச்சி கண்டுபிடிக்கப்படவில்லை. ஊர்கோடியில் தீயைத் தேடிக்கொண்டிருக்க முடியாது என்பதும்கூட காரணம். அன்று சவ ஊர்வலத்தில் இப்படி ஒரு தீச்சட்டி தூக்கினைத் தூக்கி இழப்புக்குரியவர்கள் சுமந்து சென்றது நியாயம்.
ஆனால், இன்றோ தீக்குச்சி வந்துவிட்டது; "லைட்டர்" (Lighter) என்ற "உடனே தீ வைக்கும் கருவி" வந்துவிட்டது. இவையெல்லாவற்றையும்விட சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் அளவுக்கு மின் சுடுகாடுகள் - மயானங்கள் - ஆங்காங்கு பல முக்கிய நகர்ப்புறங்களில் வந்துவிட்டன.
இந்நிலையிலும், மின்சார சுடுகாட்டில் பிணத்தை எரியூட்டச் செல்பவரும்கூட, அந்த வாழைப்பட்டை தூக்குச் சட்டி, நெருப்புச் சட்டியைத் தூக்கிக்கொண்டு செல்வதற்கு ஏதாவது அவசியம் உண்டா? இல்லையே!
என்றாலும், பிணம் செல்லுமுன் இப்படி ஒரு தீச்சட்டி தூக்கும் மூடத்தனம் கைவிடப்படாமல், எதற்கென்றே தெரியாமல், அதுபற்றி அறவே சிந்தியாமல் செய்கிறார்களே!
வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி ஆகாத நாளாம்! பலருக்கு 13 என்ற எண்ணைக் கேட்டால், பார்த்தாலே அர்த்தமற்ற பயமும், குழப்பமும்!
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.என். குரோவர் என்பவரைக் கத்தியால் குத்திவிட்ட நிலையில், அவரை டில்லி அரசு தலைமை மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்துக் காப்பாற்றினார்கள் - சிகிச்சை மூலம்!
அவரைக் கொண்டு சென்ற அறை எண் 13 என்பதைப் பார்த்து, அந்த அறை கூடவே கூடாது என்று அலறினார் இந்த "பிரகஸ்பதி " நீதியரசர்! படிப்பறிவு, பதவி ஆகியவற்றிற்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பது இதிலிருந்தே புரியவில்லையா?
மருத்துவமனையில் வேறு அறை காலியில்லை; அந்தத் தலைமை அதிகாரி உடனே ஒரு தந்திரம் செய்தார். 13 ஆம் எண்ணை வண்ணத்தால் (பெயின்ட்) அடித்துத் திருத்தி "12-ஏ" என்று மாற்றிவிட்டார்; இவர் மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது மாற்றி விட்டீர்களா? என்று கேட்டவுடன், அதிகாரி, "ஆம், மாற்றிவிட்டோம்" என்று பதில் சொன்னவுடன், "இனி பிழைத்துக்கொள்வேன்" என்றாராம் அந்த உச்சநீதிமன்ற நீதிபதி!
என்னே, விந்தை! என்னே மடத்தனம்!
13-அய் கிறித்துவர் வெறுக்கத் தொடங்கியதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது!
இயேசுநாதரின் சீடர்களால், “The Last Supper” "கடைசி இரவு விருந்து" நடந்தபோதுதான், பிலாத் மன்னன் என்ற இயேசுவின் விரோதியான கையாளிடம் பேரம் பேசி, 13 ஆவது சீடனான "யூதாஸ் காரியேத்து" காட்டிக் கொடுத்தான் - கைது செய்ய. எப்படி இயேசுவை அடையாளம் காண முடியும்? என்று கேட்டபோது, மிகுந்த அன்பைப் பொழிவதுபோல கட்டி அணைத்து முத்தம் கொடுப்பேன்; அந்நபர்தான் இயேசு என்று சொன்னானாம் அந்தக் காட்டிக் கொடுத்த துரோகி. அதனால், 13 என்பது "ஆகாத" ஒன்று என்று சொன்னார்களாம்! இப்படி ஒரு கதை காரணம்!
ஆனால், இன்று வரும் 13 ஆம் தேதிகளுக்கோ, 13 எண்களால் எவ்வளவோ லாபங்களும், நன்மைகளும் உண்டு!
மதவாதிகள், கடவுள் நம்பிக்கையாளர்களைக்கூடப் பார்த்து திருஞானசம்பந்தம் கேட்பதாகப் பாடல் உண்டே,
"நாள் என் செய்யும்
கோள் என் செய்யும்?" என்று; அதைக்கூட மறந்துவிட்டு பக்தர்களே, பாவம், பயந்து பயந்து சாகிறார்களே!
"அஞ்சி அஞ்சிச் சாவார்
இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே"
என்ற பாரதியார் பாட்டைச் சுவைக்கின்றனரே தவிர, பின்பற்றுவதில்லையே!
சிந்திப்பார்களாக.
-----------------------"வாழ்வியல்சிந்தனைகள்" பகுதியில் கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரை- "விடுதலை" 14-2-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
வீரமணி அய்யாவின் வாழ்வியல் சிந்தனைகள் சிந்திக்க வைக்கிறது.
இந்த சின்ன விசயம் தெரியாமல் இன்னும் மூடநம்பிக்கையில் உழலும் இந்தச் சமுதாயத்தை மாற்ற பாடுபட்டு வரும் வீரமணி அய்யாவுக்கு நன்றி
//சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.என். குரோவர் என்பவரைக் கத்தியால் குத்திவிட்ட நிலையில், அவரை டில்லி அரசு தலைமை மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்துக் காப்பாற்றினார்கள் - சிகிச்சை மூலம்!
அவரைக் கொண்டு சென்ற அறை எண் 13 என்பதைப் பார்த்து, அந்த அறை கூடவே கூடாது என்று அலறினார் இந்த "பிரகஸ்பதி " நீதியரசர்! படிப்பறிவு, பதவி ஆகியவற்றிற்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பது இதிலிருந்தே புரியவில்லையா?
மருத்துவமனையில் வேறு அறை காலியில்லை; அந்தத் தலைமை அதிகாரி உடனே ஒரு தந்திரம் செய்தார். 13 ஆம் எண்ணை வண்ணத்தால் (பெயின்ட்) அடித்துத் திருத்தி "12-ஏ" என்று மாற்றிவிட்டார்; இவர் மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது மாற்றி விட்டீர்களா? என்று கேட்டவுடன், அதிகாரி, "ஆம், மாற்றிவிட்டோம்" என்று பதில் சொன்னவுடன், "இனி பிழைத்துக்கொள்வேன்" என்றாராம் அந்த உச்சநீதிமன்ற நீதிபதி!
என்னே, விந்தை! என்னே மடத்தனம்!//
13 ஆம் எண் பயம் நீதிபதியையும் விட்டு வைக்க வில்லையா?
இது கொடுமையிலும் கொடுமை. வேதனையிலும் வேதனை.
படிப்பறிவு, பதவி ஆகியவற்றிற்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமே இல்லை இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.
தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி திருநாவு
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கு முன் குத்து விளக்கு ஏற்றுகிறார்கள்.
அடப்பாவிகளா இருட்டிலே இருந்தப்ப உயரமான விளக்கு வேண்டியிருந்தது.
நமக்குத் தான் விடிந்து தலைக்கு மேலே ஒளி நன்றாக வீசுதே,அப்புறமென்ன குத்து விளக்கு.அது காற்றாடியில் அணையாமல் இருக்கப் படும்பாடு.
சேலை பற்றிக் கொள்ளாமல் பாத்துத் தொலையுங்கோ!
வெளியிலே வெளிச்சம் வந்தாலும் மண்டைக்குள்ளே இன்னும் இருட்டு தானா?
Post a Comment