Search This Blog

8.2.09

ஈழத்திலே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு,நம்மிடையே நடக்கும் போரினை நிறுத்திக் கொள்ள வேண்டும்!




ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை காப்பாற்றப்பட அரசியலை ஒதுக்கி வைத்து
விட்டு கலைஞர் தலைமையில் ஒன்றுபட வேண்டும்
தமிழ்நாட்டில் தமிழர்களின் ஒற்றுமைதான்
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான விடியல்!
சென்னை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை



தமிழ்நாட்டில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழர்கள் ஒன்றுபட்டு எழுந்தால் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை காப்பாற்றப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் நேற்று (7.2.2009) மாலை வடசென்னை தங்கசாலையில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

உலகத் தமிழர்களின் உள்ளத்தில் வேதனை!

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் துயரம், துன்பம் கண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேதனை அடைந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் இந்தக் கூட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. உணர்ச்சிகளைத் தூர வைத்துவிட்டு தமிழர்கள் ஒன்று சேர்ந்து வழிகாட்ட வேண்டிய கால கட்டம் இது.
மருத்துவமனையில் உள்ள போதும்கூட உடல் வலியைப் பொருட்படுத்தாமல் உள்ள வலியோடு பல கட்சித் தலைவர்களையும் அழைத்து இரண்டு மணி நேரம் உட்கார்ந்து பலரின் கருத் துகளையும் கேட்டு செய்ய வேண்டிய கடமையினை முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் செய்து கொண்டு தானிருக்கிறார். ஒரு கட்சிப் பிரச்சினையல்ல
ஈழத் தமிழர்ப் பிரச்சினையை ஒரு கட்சிப் பிரச்சினையாக அணுகாமல் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா அவர்களுக்குக்கூட வேண்டுகோள்விடுத்து, ஒன்றுபட்டு பிரச் சினைக்குத் தீர்வு காண்போம் என்று இன்றுகூட அறிக்கை விடுத்துள்ளார்.

1939-ஆம் ஆண்டு முதலே...

இந்தப் பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 1939-ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சிக் காலத்தில் அக்கட்சியின் நிருவாகக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இப் பொழுது ஏற்பட்டு இருக்கும் இந்தப் பிரச்சினையின் தொடக் கத்திலேயே செப்டம்பர் 23-ஆம் தேதி முதலாவதாக திராவிடர் கழகம் இரயில் மறியல் போராட்டத்தை அறிவித்து நடத்தியது. தொடர்ந்து ஒவ் வொரு அமைப்பும் போராடித் தான் வருகின்றன. அதனைத் தொடர்ந்து மயிலை மாங்கொல்லையில் முதல்வர் கலைஞர் அவர்களும் இனமானப் பேராசிரியர் அவர்களும் ஆற்றிய எழுச்சி உரையை தமிழ்நாடு எங்கும் ஒலி பரப்பும் ஏற்பாட்டினை திராவிடர் கழகம் செய்தது. தமிழர்களின் குறைபாடு
தமிழர்களுக்கு பெரிய குறைபாடு, நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலைதான் - நண்பர்களைப் பகைவர்களாகவும், பகைவர்களை நண்பர்களாகவும் கருதும் ஒரு பரிதாப நிலை இருந்து வருகிறது.

ஈழத்திலே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, முதலில் நம்மிடையே நடக்கும் போரினை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய அரசுதான் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்

எப்படி சுற்றினாலும் இந்திய அரசுதான். இலங்கை அரசை வலியுறுத்தி போரை நிறுத்தச் செய்ய வேண்டும். யார் மூலம் மத்திய அரசை வலியுறுத்துவது? இங்குள்ள ஆட்சியின் மூலம் தான் அதனைச் செய்ய முடியும். அந்த முயற்சியைக் கலைஞர் தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து செய்து கொண்டு தானிருக்கிறது.

யாரும் கேட்காமலேயே தீர்மானம் யாரும் கேட்காமலேயே தானாக முன்வந்து இறுதி வேண்டுகோள் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்மொழிந்தவர் மானமிகு முதல்வர் கலைஞர் அவர்கள். அதற்குப் பிறகுதான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அனுப்பப்பட்டார்.

மருத்துவர்கள் அனுமதி பெற்று திமுக தலைமைச்செயற்குழுக் கூட்டத்திலும் முதல் அமைச்சர் கலந்து கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார்.

போர் நிறுத்தம் இடம் பெறவில்லையா?

போர் நிறுத்தம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையே என்று செய்தியாளர் கேட்டதற்கு, நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தைப் படித்துக் காட்டி நீங்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறதே என்று பதில் சொன்னார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்தான் ஈழத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியா என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் பொழுதுகூட, முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அதுவல்ல இப்பொழுது பிரச்சினை; அங்கே படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்; அதற்குப் போர் நிறுத்தம்தான் உடனடி தேவை என்றுதான் பதில் அளித்தார். வெறும் 48 மணி நேரப் போர் நிறுத்தம் என்பது போது மானதல்ல. அது நிரந்தரமாக வேண்டும் என்பதுதான் நமது அழுத்தமான கோரிக்கை.

முதல்வர் கலைஞர் அவர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளார். திருப்தி அளிக்கும் வகையில் காரியங்கள் நடைபெற வில்லையென்றாலும், நேரிடையாக இலங்கை அரசை வலி யுறுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, வலிமையும் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் ஒரு ஹிட்லர்

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் கோரிக்கை விடுத்தும்கூட அவற்றை ஏற்காத இட்லர் ஒருவர் இலங்கையில் ஆட்சிப் பீடத்தில் இருந்து கொண்டி ருக்கிறார். ஒரு மாநில அரசு என்கிற தன்மையில் இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டு தானிருக்கிறது. இந்த ஆட்சி இருப்பதால்தான் நாம் உரிமைக் குரல் கொடுக்க முடிகிறது; போராடவும் முடிகிறது.

ராஜபக்சேபோல் பேசும் ஜெயலலிதா!

அதே நேரத்தில் இன்றைக்கு எதிர்க்கட்சியாகவிருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ன கூறுகிறார்? விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று தானே கூறுகிறார்.

ராஜபக்சே பேச வேண்டியதையெல்லாம் அவரின் சகோதரியாக இருந்து இவர் பேசுகிறாரே!
இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை ஒரு யுத்தம் - ஒரு போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே யுத்தம், போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக இராணுவத்துக்கு முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் இருந்து கொண்டு முற்றிலும் தமிழர்களுக்கு விரோதமாக ராஜபக்சே பேசுவதுபோல பேசுகிறார் என்றால் அதனை நினைத்துப் பார்க்க வேண்டாமா?

ஆட்சி மாறினால் என்ன நடக்கும்?

கலைஞர் ஆட்சி விலகி, இத்தகையவர்கள் கையில் ஆட்சி போனால் என்ன நடக்கும்? ஏற்கெனவே என்ன நடந்தது என்பதை மக்கள் அறிய மாட்டார்களா?

ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கலைஞர் அவர்கள் ஆட்சியைத் துறப்பதல்ல அப்படி துறந்தால் எதிர் விளைவுதான் ஏற்படும்.


இனத்தால், மனத்தால் தமிழர்களாக இல்லாதவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சட்டசபைத் தேர்தல் எப்படியாவது வரவழைக்கப்பட வேண்டுமாம்

செய்தியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிடம் கேட்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலோடு சட்டசபைத்தேர்தலும் வருமா என்று கேட்டபோது, ஜெயலலிதா என்ன கூறுகிறார்? இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. சட்டசபைத் தேர்தலையும் எப்படியாவது வரவழைக்க வேண்டும் என்று கூறுகிறார் என்றால் அவருடைய மனப்பான்மை எத்தகையது என்பது விளங்கவில்லையா?

தமிழ்நாட்டில் இந்த நிலையென்றால் மத்தியில் நிலைமை என்ன? நாகபுரியில் கூடிய பி.ஜே.பி. என்ன முடிவெடுத்திருக்கிறது? அயோத்தியில் ராமன் கோயில் மீண்டும் கட்டுவோம் என்ற கோரிக்கையை முன் வைக்கப் போகிறார்களாம்.

மத்தியில் பி.ஜே.பி. வந்தால்...

மாநிலத்தில் இப்பொழுது உள்ள ஆட்சி அகன்றாலும் ஆபத்து, மத்தியில் பி.ஜே.பி. வந்தாலும் மிகப் பெரிய ஆபத்து நமது தலைக்குமேல் கத்தியாகத் தொடங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்காக நாம் போரிட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இதுபோன்ற ஆபத்துகளும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.

தேவை ஒற்றுமையே!

ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மேலும் மத்திய அரசை வலியுறுத்துவோம். நமது அரசியல் வேற்றுமைகளைத் தூர வைத்துவிட்டு, கலைஞர் அவர்களின் அழைப்பை ஏற்று ஒரு மனதான குரலை அழுத்தமாகக் கொடுத்தால் விளைவுகள் நல்லதாக அமையும். இப்பொழுது நமக்குத் தேவையெல்லாம் ஒற்றுமைதான். நம்மிடைய நிலவும் பிரிவு என்பது கத்தரிக்கோல் போல இருக்க வேண்டும் என்று கலைஞர் அவர்கள் தெரிவித்திருப்பதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். இன்றைக்குத் தேவையும் அதுதான் என்று பேசினார்.

------------------------நன்றி: "விடுதலை" 8-2-2009

3 comments:

Unknown said...

Unfortunately not many will be fooled by these arguments.Saving the DMK govt. may be the only priority for DK. But for others who are disappointed with DMK and its flip-flops in the Srilankan Tamils issue, priorities are different. Ultimately deeds, not words, matter.

செல்வன் said...

"ஈழத்திலே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு,நம்மிடையே நடக்கும் போரினை நிறுத்திக் கொள்ள வேண்டும்!"
களைகளை களையெடுப்பது நல்ல விளைச்சலுக்காக.
-தமிழ் ஓவியா,January 14, 2009 7:27 PM
அந்த போர் நமக்கிடையே தேவை தமிழ் ஓவியா. நீங்கள் தானே கூறினீர்கள்.

தமிழ் ஓவியா said...

நான் சொன்ன பொருள் வேறு. நீங்கள் கொண்ட பொருள் வேறு குழப்பிக் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்.