Search This Blog

11.2.09

ஒன்றே குலம்- ஒருவனே தேவன்னா நமக்கு எதுக்கு உதவும் அது?



இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

நமக்கு இலக்கியமில்லை - என்கிற கருத்துடையவன் நான். இன்றைக்கு இலக்கியம் நமக்குப் பயன்படும்படியாக ஒன்றுமில்லை. நிறைய (இலக்கியங்கள் என்பதாக) இருக்கலாம். இருந்தும் (அவற்றால்) என்ன பிரயோஜனம்? ஏராளமான பிரபுக்கள் இருக்கிறபோது நாட்டிலே இருக்கிற ஜனங்கள் எல்லாம் பட்டினியிலே சாகிறார்களென்றால் எப்படியோ அது மாதிரி இன்றைய தினம் பின்பற்றத் தகுந்ததோ, நம்மை ஒரு நெறியிலே அடக்கி ஆளக் கூடியதான இலக்கியம் நமக்கு இல்லை.

நான் இன்னும்கூட சொன்னேன். இன்றைய நம் புலவர்களுக்குக்கூடச் சொன்னேன் - நமக்குப் பயன்படும்படியான அளவு - படிப்பதற்கு அவர்களுக்கும்கூட இலக்கியமில்லை என்று - நான் நேற்று பேசும்போது சொல்லியிருக்கிறேன். அந்த மாதிரி ஆகிவிட்டது. இருக்கிறதெல்லாம் அருகிப் போனது. எங்கெங்கேயோ போய்விட்டது. மறைந்தும் போய்விட்டது. காலத்துக்கு ஏற்காததாகவும் போய்விட்டது. ஏனென்றால் காலம் மாறுகிறது. எவ்வளவுதான் நாம் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டு இருந்தாலும் கால வேறுபாடு நம்மை மாற்றிக் கொண்டுதான் போகும். ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு கருத்துக்குச் செல்வாக்கு இருந்தது. அந்தக் கருத்துகள்கூட நல்ல பெருமைப்படத்தக்கக் கருத்தாயிருக்கலாம் - நமக்கு அது பயன்படுகிறதா ? இன்றைய வாழ்வுக்குத் தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும்?

இன்றைக்கு எப்படி இருக்குது நம்ம நிலை? ஒன்றே குலம்- ஒருவனே தேவன்ன்னு சொல்லியிருக்கிறான் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னேன்னா? எதுக்கு உதவும் அது? யாருக்கு என்ன பயன்படுது? ஒன்றே குலம் - ன்னா - நாம் ஆயிரத்து அய்ந்நூறு குலமாயிருக்கிறோம். ஒருவனே தேவன்னா நமக்கு முப்பத்து மூணு கோடி தேவர்கள் இருக்கிறாங்க. இது ஒழியறதுக்கு இன்றைக்கு இருக்கிற கொடுமைகளுக்குப் பரிகாரம் என்ன?

யாரோ ஒருத்தர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்னான்னு போயிகிட்டே சும்மா இருக்கிற தேவனை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கிற குலத்தை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கட்டுமென்றால்எங்கே மாறுவது? இது மாத்திரமட்டுமல்ல. இன்னும் அநேக சங்கதிகள் இருக்கு. எல்லாம் சரி. அவைகளை நாம், மற்றும் யாரும் மறுக்கக் கூடியது இல்லை.

இன்றைக்குப் பயன்படும்படியான இலக்கியம் நமக்கு இல்லை. நம்மகிட்ட வருவதற்கு தகுதியில்லை. சங்க இலக்கியங்கள் நிறைய இருக்குது. யாருக்குத் தெரியும்? சுவாமிகள் (குன்றக்குடி அடிகளார்) சொல்லித்தான் சில பேரை எல்லாம் எனக்குத் தெரிஞ்சது பொய் இல்லை. அது நமக்குப் பயன்படலே, ஏன் பயன்படலே? அது நம்மை அவ்வளவு கட்டாயப்-படுத்துகிற மாதிரியாக நம்மைக் கொண்டு செலுத்துகிற மாதிரியான இலக்கியங்கள் இல்லை. நமக்கும் அதைப் பின்பற்றுவதற்கும் வாய்ப்போ - வசதியோ அல்லது வேறுவிதமான நிபந்தனைகளோ நமக்குமில்லை.

*** அந்த இலக்கியம் - இந்த இலக்கியம் - சங்க இலக்கியம் இவைகளையெல்லாம் வைச்சிக்கிட்டு நாம் என்ன செய்ய முடியும்? அல்லது நமக்குள்ளே புகுத்தி நம்மை அதற்குப் பக்குவப்படுத்திட வழி இருக்குதா? இல்லை. ஏன் அப்படிச் சொல்லுகிறேன்னா அந்தக் காலத்திலே எல்லாம் பாட்டாய்ப் போனது என்கிறது ஒரு காரணம். வேறு விசேஷமாய் ஒன்னுமில்லை. அந்தக் காலத்திலே எழுத்து அவ்வளவு சல்லிசாய் இல்லை. படித்த ஜனங்களும் அதிகம் பேராய் இல்லை. எழுதி வைச்சுக்கிறதுக்குச் சாதனமும் இல்லை. ஆகையினாலே அது பாட்டு ரூபமாக வந்து அது அந்தப்படி உள்ளத்திலே புகுந்திருந்தால் கொஞ்சம் பதிந்திருக்கும். இலக்கியம் அப்படி பதியாது. சாதாரணமாக நான்கூட 30, 40 வருஷங்களுக்கு முன்னாலே ஏதோ படிச்சபாட்டுகள் ராமாயணத்திலேயோ அல்லது பாரதத்திலேயோ அல்லது வேறு காவியத்திலேயோ - இலக்கியத்திலேயோ - பாட்டுகள் படிச்சிருக்கிறேன். அந்தப் பாட்டுகள் எல்லாம் இன்னைக்கு ஞாபகமில்லை. அதைப் பாருங்க ஒரு வார்த்தை அதிலே ஞாபகப்படுத்திக்கிட்டேன். கொண்டாந்து விட்டுடுது - பாக்கி எல்லாம் கவின்னா உபயோக மற்றதுன்னு சொல்ல முடியாது. இலக்கியம் படிச்சா ஞாபகத்திலே இருக்காது. கருத்துதான் வரும். பாட்டு படிச்சா சங்கதி பூராவுமே மனசுக்கு வரும். ஏன்னா? ஒரு வார்த்தை எடுத்துக்கிட்டா முதல் வார்த்தையோ - பின்னாலே வார்த்தையோ எதையாவது ஒன்னை எடுத்துக்கிட்டா அந்தப் பாட்டு அப்படியே வந்திடும். அவ்வளவு தூரம் அது எதுகை மோனையோடு அதைப் பொருத்தியிருக்கிறாங்க. அது நல்லாயிருந்தது. அநேகம் பேர் படிக்கிறதுக்கு முடியாவிட்டாலும் சில பேர் மாத்திரம் படிச்சிருந்தாலும் அதைப் பாட்டாக வைச்சுப் பயன்படுத்தும்படியாக இருந்தது.

நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும். ஏதோ நல்வழி - நீதி மஞ்சரி - இன்னா நாற்பது - இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்னு. அப்புறம் நன்னூல். அப்போது இந்தப் பாட்டெல்லாம் பள்ளிக்கூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும். அடிக்கடி அதை எடுத்துப் பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போ அது இல்லவே இல்லை. இப்ப என்னமோ இலக்கியம் - பாரதம் - இராமாயணம்தான் - புராணங்கள் தான் அவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.

இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்ல வண்ணம் அழுத்திச் சொன்னார்கள் - பல தடவை - ஒரு தடவைக்கு மேல் - 10,30 தடவைச் சொன்னார்கள் - குறளைப்பற்றி; ரொம்ப சரி. அவ்வளவுதான் இருக்கிறது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்குத் தெரியலே?

ஆகவே நமக்கு இன்றைக்கு இலக்கியம் இல்லேன்னு சொல்லுகிறேன் நான். எந்தக் கருத்திலே சொல்லுகிறேன்? இலக்கியம் எதுக்காக இருக்கவேணும்? இலக்கியம் மனிதனை நடத்த வேண்டும்; மனிதனாலே நடத்தப்படக் கூடாது. இலக்கியம் - அதனுடைய கருத்துகள் - மனிதனை நீ இந்த இந்த மாதிரி இரு; இப்படி இப்படி நட -இந்த இந்தக் காரியத்திலே என்று அது உதவ வேண்டும். மேல் நாட்டு இலக்கியம் இருக்கிறது - பின்பற்ற என்று சொன்னாலும் அதையும் பார்த்து ஏறக்குறைய நாம் கொஞ்சம் திருத்தும்படியாக இருக்கும்.

--------------26.8.1957 அன்று திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இலக்கிய மன்றத்தில் தந்தை பெரியார் அவர்கள் இலக்கியம் பற்றி ஆற்றிய உரையிலிருந்து

2 comments:

Anonymous said...

Periyar was wrong on several issues like this; If you read EVR's comments on literature, it is like saying literaute should dictate, instead of guiding; It will become like Taliban rule, if somebody creates a rule based on edicts one find in the literature even if it is not of religious variety.

தமிழ் ஓவியா said...

தமிழில் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி.