Search This Blog

24.2.09

ஆஸ்கார் விருது பெற்ற "ஸ்மைல் பிங்கி" போன்ற குறும்படங்கள் தான் நாட்டுக்குத் தேவை

ஸ்மைல் பிங்கி!

திரைப்படத் துறையில் உலக அளவில் பெருமைக்கு உரியதாகப் பேசப்படுவது ஆஸ்கார் விருதாகும். இது கிடைத்தற்கரிய ஒன்றாக மதிக்கவும் படுகிறது. இந்த விருது இந்தியாவுக்கு இதுவரை கிடைத்திடவில்லை என்றும், முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்லம்டாக் மில்லியனர் என்ற திரைப்படம் எட்டு ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றது என்றும் பெருமையாகப் பேசப்படும் நேரம் இது.

இந்தப் படத்தில் சிறந்த இசை அமைப்பு, சிறந்த பாடல் ஆகிய இரண்டுக்குமான ஆஸ்கார் விருதுகளை தமிழகத்தைச் சேர்ந்த தமிழரான ஏ.ஆர். ரகுமான் பெற்றிருக்கிறார் என்பது தமிழ்நாடும், தமிழர்களும் பெருமைப்படத்தக்க சாதனையே என்பதில் அய்யமில்லை. அந்த வகையில் நமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட - வெறும் 39 நிமிடங்களே ஓடும் குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கப் பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒன்றாகும்.

ஸ்மைல் பிங்கி என்பது இந்தக் குறும்படத்துக்கான தலைப்பாகும்.

உத்தரப்பிரதேசத்தில் உண்மையாகவே நடைபெற்ற நிகழ்வினை மய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரம் இது.

உத்தரப்பிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தில் ரம்பூர் தபாஹி என்னும் கிராமத்தில் பிறந்த பெண்தான் பிங்கி.

பிறவியிலேயே உதடு பிளவுபட்ட பெண்ணாகப் பிறந்த அந்தப் பெண் உற்றார் உறவினரால் வெறுக்கப்பட்டவள்தான்.

தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தபோது அந்தப் பெண்ணுக்கே தன்மீது வெறுப்புப் பீறிடுகிறது. யாருடனும் பேச முடியவில்லை; பழக முடியவில்லை; விளையாட்டுப் பருவத்தில் சகக் குழந்தைகளுடன் விளையாடவும் முடியவில்லை - வெறுக்கப்படும் ஒரு பொருளாக ஆன நிலைதான்.

அய்ந்து குழந்தைகளோடு பிறக்கிறாள் - ஏழைக் குடும்பம்; இவள் ஏன் பிறந்தாளோ? என்று தந்தையே நொந்து கொள்ளும் நிலைமை.

அந்த நேரத்தில் தான், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சமூக சேவகர் அங்கு வந்து சேர்கிறார்.

இது ஒன்றும் நோய் அல்ல - எளிமையான அறுவை சிகிச்சைமூலம் சரி செய்துவிடலாம் என்று அந்தக் கிராமத்தில் நம்பிக்கையை ஊட்டுகின்றார்; விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அந்தக் கிராமத்திலே பிங்கியும் ஒருவர்.

அந்தச் சமூக சேவைக்காரர் இலவசமாக பிங்கிக்கு அறுவை சிகிச்சை செய்திட ஏற்பாடு செய்கிறார். 45 நிமிட அறுவை சிகிச்சைக்குப் பின் பிங்கியின் முகமே அழகின் சிரிப்பாக மலர்ந்து விடுகிறது - தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறாள் பிங்கி; அடடா, அப்படி ஒரு ஆனந்தம் அந்தச் சிறுமிக்கு!

மேல் நாடுகளில், பிறந்த நான்காவது நிமிடத்திலேயே இத்தகைய குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து விடுகின்றனர். அப்படி ஒரு குறைபாடு தனக்கு இருந்ததாகவேகூட பிற்காலத்தில் அத்தகையவர் களுக்குத் தெரிவதில்லை.

ஆண்டு ஒன்றுக்கு இத்தகு குழந்தைகள் இந்தியாவில் 35 ஆயிரம் பிறக்கின்றனவாம். போதிய விழிப்புணர்வு இல்லாததால் சக மக்களிடமிருந்து விலகி வாழும் அவலம் அவர்களுக்கு ஏற்படுகிறது.

இந்தத் திரைப்படம் புதிய விழிப்புணர்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கே ஏற்படுத்தி விடுகிறது.

ஏதோ விதிப் பலன்; போன ஜென்மத்தில் நாம் செய்த பாவம் நமக்கு இப்படி ஒரு பிள்ளை பிறந்திருக்கிறது என்று தங்களுக்குத் தாங்களே நொந்து கொண்டும் சமாதானம் செய்துகொண்டும் மகிழ்ச்சியான வாழ்வைத் தொலைத்துக் கொண்டவர்கள் மத்தியிலே இந்தத் திரைப்படம் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதில் அய்யமில்லை.


இவ்வளவுக்கும் இந்தக் குறும்படத்தின் ஓட்டம் வெறும் முப்பத்து ஒன்பதே நிமிடங்கள்தானாம்.

பிரேசில் நாட்டுக்காரரான இயக்குநர் மேஹன் மைலான் என்ற பெண்மணி - யதார்த்தமான நடப்பினை மையப்புள்ளியாக்கி இப்படி ஒரு படத்தைத் தயாரித்து ஆஸ்கார் விருதினையும் பெறச் செய்துள்ளார் என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

உலகின் நடப்புகளில் இதுபோன்று எத்தனை எத்தனையோ யதார்த்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களை எடுப்பதன்மூலம் விழிப்புணர்வை ஊட்ட முடிகிறது - புதிய திருப்பத்தைக் கொடுக்க முடிகிறது என்பதுதான் இதில் பாராட்டப்பட வேண்டிய மிக உயர்ந்த அம்சமாகும்.

இதில் இன்னும் முக்கியமான மகிழ்ச்சி. இந்தக் குறும்படத்தின் கதாபாத்திரமான பிங்கி என்ற பாத்திரம் கற்பனையல்ல; உண்மையிலே அப்படி ஒரு பெண் இருக்கிறார்; அந்தப் பெண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஆஸ்கார் விருது விழா வழங்கும் லாஸ்ஏஞ்சல்சுக்கு தம் தந்தையார் மற்றும் அறுவை சிகிச்சையைச் செய்த டாக்டர் ஆகியோர்களுடன் சென்று, ஸ்மைல் பிங்கி குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் காட்சியையும் நேரில் பார்க்கிறார் என்பது, எத்தகைய உணர்ச்சியின் விளிம்பு - ஆனந்தத்தின் ஆகாயப் பயணம்!

ஒரு காலத்தில் அருவருக்கப்பட்ட பிங்கி - இன்று அனைவராலும் கட்டியணைத்து முத்தம் பொழியப்படுகிறாள்.

கர்ம வினையும் அல்ல; கடவுளின் கட்டளையும் அல்ல - மனிதனின் மிக உயர்ந்த அறிவுத் திறன் எதையும் சந்தித்து, எதையும் சாதிக்கும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் இத்தகு குறும்படங்கள் தான் நாட்டுக்குத் தேவை.

குத்துப்பாட்டும், அடிதடியும் குலை குலையாய்த் தொங்கும் தமிழ்நாட்டுத் திரைப்படங்களின் போக்கு சிரிக்கத்தக்கதாக இருக்கிறது; "ஸ்மைல் பிங்கி" படமோ சிந்திக்கத்தக்கதாக விருக்கிறது - பாராட்டுகள்!

2 comments:

Unknown said...

//கர்ம வினையும் அல்ல; கடவுளின் கட்டளையும் அல்ல - மனிதனின் மிக உயர்ந்த அறிவுத் திறன் எதையும் சந்தித்து, எதையும் சாதிக்கும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் இத்தகு குறும்படங்கள் தான் நாட்டுக்குத் தேவை.//

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி