Search This Blog

26.2.09

தந்தை பெரியார் அவர்கள் "படிக்காதவர்" என்று சொல்லப்படுவது சரியா?


தந்தை பெரியார் அவர்கள் "படிக்காதவர்" என்று சொல்லப்படுவது எந்தப் பொருளில் என்றால் - பள்ளிக்கூடத்தில் - கல்லூரியில் - பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்துப் பட்டம் பெறாதவர் என்ற அந்தப் பொருளில்தானே ஒழிய, வேறில்லை.


அய்யாவைப்போல் எப்போதும் சதா படித்துக்கொண்டும், ஆய்வு செய்துகொண்டுமே இருந்த ஒரு பொது வாழ்க்கைத் தலைவரை எளிதில், எங்கும், எவரும் காண முடியாது!

தந்தை பெரியார்தம் உற்ற நண்பரான பொறியாளர் - மொழி அறிஞர் - மேட்டூர் அணை தற்போது இருக்கும் இடத்தை முதலில் தேர்வு செய்த பெருமகனார் பொறியியல் அறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள், "ஆரிய நாகரிகம் - திராவிட நாகரிகம்" என்ற தலைப்பில் எழுதியுள்ள ஓர் கட்டுரையில்,

ஆங்கிலத்தில் வழங்கும் Lord-Lady என்ற இரண்டு சொல்லையும் எடுத்துக்கொள்கின்றார்.

இந்த இரண்டு சொற்களின் அடிநிலைக் கருத்து (Etymological meaning) என்ன? என்பதைக் காணும் வகையினால், ஆரியர்களின் ஆண் - பெண் பற்றிய வழக்காற்றை விளக்குகின்றார்:

“Lord” (லார்டு) என்னும் ஆங்கிலச் சொல்லின் அடிநிலைக் கருத்து (Anglo Saxon) ஆங்கிலோ சாக்சன்படி,

"ரொட்டி மாவைக் காத்துக் கொண்டிருப்பவன் என்பதாகும்! இதைப்போன்றே “Lady” என்ற சொல்லின் அடிநிலைக் கருத்து (Etymologically) ரொட்டி மாவைப் பிசைவதைப்போல பெண்கள் ஆண்களை வருத்துகின்றனர் என்ற கருத்தைக் கூறுகின்றார்! அதே சமயத்தில் தமிழில் வழங்கும் ஆண் - பெண், தலைவன் - தலைவி, காதலன் - காதலி போன்ற தமிழ்ச் சொற்களின் சிறப்புகளைச் சுட்டுகின்றார்!

பெரியார் பேருரையாளர் ந. இராமநாதன் அவர்கள்,

"ஆண்", "பெண்" என்ற வழக்காற்றில் உள்ள இரண்டு சொற்களின் அடிநிலைக் கருத்துக்குச் சென்று ஆய்வு செய்கிறார்-

"ஆண்" என்ற சொல்லின் கருத்து ஆளுமை உடையவன் என்பதாகும்.

"பெண்" என்ற சொல் - பெட்பை உடையது என்ற கருத்தில் வழங்கப்படுகிறது!

"பெட்பு" என்பது விரும்பப்படும் தன்மை. பெண் என்ற சொல்லின் அடிக்கு வேறு ஒரு கருத்தும் சொல்லப்படுகின்றது. பேணுமை உடையது எதுவோ அதனைப் பெண் என்றே தமிழர் கூறினர் என்று கூறலாம்!

பயன்படுத்தப்படும் பொருளைச் சுட்டிச் சொல்லி, பிறகு அந்தப் பொருளே மாறி கையாளப்படுவதும் உண்டு.

எடுத்துக்காட்டாக, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் அரசுகள் சமர்ப்பிக்கும் வரவு - செலவுத் திட்டம் - "பட்ஜெட்” (Budget) என்று அழைக்கப்படுகிறது!

அத்திட்டத்தை எழுதி, அச்சிட்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அதனை ஒரு தோல் பையில் வைத்து நிதியமைச்சர் எடுத்து வந்தார். பட்ஜெட் என்றால், பையில் உள்ள பொருள் என்று பொருள்படும்.

பிறகு நாளடைவில், வரவு - செலவுத் திட்டமே "பட்ஜெட்” என்றே ஆகிவிட்டதல்லவா?

பழைய தமிழ் இலக்கியங்களில் - அநேகமாக தொல்காப்பியத்தில் "பெண்டாட்டி" என்ற சொல், கணவனை - ஆணைக் குறித்தது என ஓர் சொற்பொழிவில், செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதனார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது!

"கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை". கற்பு என்பது - சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது, மாறாக நடக்காமை என்பதைத்தானே குறிக்கும்?

இப்போது இது பெண்ணடிமைக்குப் பாதுகாப்பான அரணாக அல்லவோ ஆக்கப்பட்டுவிட்டது! ஆண் ஆதிக்கக் கொடி பறக்க "ஒரு குலத்துக்கொரு நீதியாக" அல்லவா ஆக்கப்பட்டுவிட்டது! என்னே கொடுமை! என்னே விந்தை!

"நாற்றம்" என்ற சொல்லுக்கு "வாசனை" - நல்ல மணம் என்பது தான் உண்மையான பொருள். ஆனால், தற்போது வழக்கில் அது வாசனையாக பயன்படுத்துவதில்லை. மாறாக கெட்ட வாடை என்பதைத் தான் குறிக்கிறது.

துர்நாற்றம் என்று ஒரு சொல் இருந்தபோதிலும், நாற்றம் என்றவுடன் மூக்கைப் பிடித்துக்கொள்கிறோமே!

"மதம்" என்ற சொல்லே பல விரும்பத்தகாத வெறித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்தானே!

"மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும்" என்று வடலூர் - வள்ளலார் எச்சரித்தது சரிதானே!

ஒரு பொருள் ஒரு மொழியினரால் பயன்படுத்தப்படும்போது, அவர்களுடைய மொழிச் சொல்லாக இல்லாத பிறமொழிச் சொல் வந்து கலந்து, புழக்கத்தில் இருந்ததால் அவை படையெடுப்பு என்றே பொருள்.

நம் மொழிச் சொற்களையேகூட பிறமொழிச் சொல்லாக நினைத்துப் பயன்படுத்தி, நம் பொருளை அந்நியப்படுத்தும் கொடுமையும் வழக்கில் உள்ளதே!

"பூசை" என்பது வடமொழி "பூஜை" என்று எழுதப்படுகிறது! அதுபற்றி சுனித்குமார் சாட்டர்ஜி என்ற வங்காளத்தைச் சார்ந்த பிரபல மொழி அறிஞர்; அது பூ செய் "பூக்களைப் போட்டு வணங்குதல்" என்ற தமிழ்ச் சொல்லே வேர்ச்சொல் என்று தமது ஆராய்ச்சியில் கூறியுள்ளார்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், "வந்தவர் மொழியா செந்தமிழ்ச்செல்வமா?" என்று தமது "குயில்" வார ஏட்டில் எழுதி வந்தார் - அது நூலாகவும் வந்துள்ளது. அதனையும் காண்க.

சொற்களும் சிந்தனை ஊற்றைப் பெருக்கச் செய்யும். சொல்லை வைத்தே ஆராய்ந்த தந்தை பெரியார் என்ற பேராசானிடம் நான் கற்ற பாடம் அது!

----------------கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து ஒரு கட்டுரை - "விடுதலை" 26-2-2009

0 comments: