Search This Blog

23.2.09

தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் பிரித்து தனித்தனியாக மசோதா கொண்டு வருவது பிரித்தாளும் சூழ்ச்சியே!


* தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் திடுக்கிடத்தக்க சதிப்பின்னல்கள்!
* 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாதாம்!
* தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் பிரித்து தனித்தனியாக மசோதா கொண்டு வருவது பிரித்தாளும் சூழ்ச்சியே!

இன்னும் இரண்டு நாள்கள்தான் நாடாளுமன்றக் கூட்டம்
அதற்குள் இரு மசோதாக்களையும் புதிய வடிவத்தில் கொண்டு வருக!

சென்னையில் நாளை காலை இதனை
வலியுறுத்தி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை


47 கல்வி நிறுவனங்களை - தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பட்டியலிட்டு, அவற்றில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற சமூகநீதிக்கு எதிரான கருத்துக்களை நீக்கி, புதிய வடிவில் மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


14ஆவது மக்களவையின் கடைசித் தொடர் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமையோடு அது முற்றுப் பெறுகிறது. இந்த நிலையில் மகாசிவராத்திரி என்ற பெயரில் திங்கள்கிழமை நாடாளுமன்றத்திற்கு விடுமுறையாம்! (வாழ்க மதச்சார்பின்மை!)

இன்னும் இருநாள்களே!

மீதி இருக்கும் இரு நாள்களில் பெரும்பகுதி மக்களான தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தேசியக் குறைந்தபட்ச திட்டத்தில் (National Common Programme) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று இது (2004 டிசம்பர்).

அதன்படி தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான (பணிகள் மற்றும் சேவைகள்) இட ஒதுக்கீடு மசோதா 2004 என்பது மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. அப்பொழுது கிளம்பிய சில எதிர்ப்பின் காரணமாக, திரு. ஈ.எம்.சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் அமைந்த பணி யாளர் துறையைச் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுதர்சன் நாச்சியப்பன் குழுவின் முக்கியப் பரிந்துரைகள்

அந்தக் குழு பல முக்கியமான பரிந்துரைகளை இணைத்திருந் தது; இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தவறு செய்யும் அதிகாரி களுக்கு மூன்றாண்டு சிறை அல்லது 50 ஆயிரம் ரூபாய் அப ராதம் அல்லது இவை இரண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அப்படி என்ன அவசரமோ!

ஆனால், அந்தக் குழு பரிந்துரைத்த முக்கியமானவற்றை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு, 2008 டிசம்பர் 23இல் மாநிலங்களவையில் இந்த மசோதா அவசர அவசரமாக (ஒதுக்கப்பட்ட நேரம் இரண்டே நிமிடங்கள்) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டிய சட்டரீதியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதிலிருந்தே இதன் பின்னணியில் உயர் ஜாதியினரின் கைகள் இருக்கின்றன என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

கமுக்கத்தின் இரகசியம் என்ன?

அ. தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களின் நலத் துறைக்கு (Ministry of Social Justice and Empowerment) இந்த மசோதா அனுப்பப்படவில்லை.

ஆ. பழங்குடியினரின் அமைச்சகத்துக்கும் (Ministry for Tribal Affairs)அனுப்பி வைக்கப்படவில்லை.

இ. தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் சட்ட ரீதியான அமைப்பான தேசிய ஆணையத்தின் (National Commission for Scheduled Castes) கவனத்திற்கு இந்த மசோதா கொண்டு செல்லப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான சட்ட மீறலாகும்.

ஈ. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கண்களுக்கும் காட்டப்படவில்லை.

இந்திய அரசமைப்பின் சட்டம் 338இன் துணைப் பிரிவு 9இன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான (SC) கொள்கைகளை உருவாக் கும்போது மத்திய மற்றும் மாநில அரசுகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் கருத்தினைக் கேட்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தையும், நடைமுறைகளையும் கண்மூடித்தனமாகத் தூக்கி எறிந்து, மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது எவ்வளவு பெரிய அநீதி - கொடுமை!

அடிப்படையே தவறு!

இன்னும் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இந்த மசோதா மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பாகத் தான் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்; அதற்கு மாறாக பிரதமரின் கீழ் செயல்படும் நாடாளுமன்றப் பணிகள் குறித்த அமைச்சரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திடீர் சேர்க்கைகள் உள்ளே நுழைந்த பின்னணி என்ன?

2004 டிசம்பரில் முதல் முதலாக மக்களவையில் இந்த மசோதா வைக்கப்பட்ட போது இடம் பெற்றிராத சில பகுதிகள் - தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும் மரண அடி கொடுக்கும் வகையில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

1. 45 நாள்களுக்கு உள்பட்ட மத்திய மாநில அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது.

2. அவசர காலங்களில் ஏற்படும் குறிப்பிட்ட மத்திய மாநில அரசு வேலைக்கான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கிடையாது.

3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சார்ந்த பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது.

4. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த (அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் போன்றவை) 47 கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது.

இத்தகைய பகுதிகள் இணைக்கப்பட்டு தாழ்த்தப்பட்டோரின் தலையில் இடியைப் போட்டுள்ளனர்.

பின்னணியில் இருந்த கைகள் யாருடையவை?

இப்படிப்பட்ட அபாயகரமான பிரிவுகளைச் சேர்த்தது வெளியில் தெரியக்கூடாது; கமுக்கமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சூதான எண்ணத்தின் காரணமாகத்தான் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்த மசோதா திட்டமிட்டே அனுப்பி வைக்கப்படவில்லை என்பது வெளிப்படையாகும்.

இதன் பின்னணியில் இருக்கும் கைகள் யாவை என்பது முக்கிய மாகும். 2008இல் கவுஹாத்திக்கு (அசாம் மாநிலம்) பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சென்றிருந்த போது அய்.அய்.டி. இயக்குநர்கள் பிரதமரைச் சந்தித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இடஒதுக்கீடு அளித்தால் தகுதி கெட்டுப்போய் விடும் என்று உபதேசித்த பின்னணியில் தான் இது நடந்திருக்கிறது என்று தெரிய வருகிறது.

அந்த அய்.அய்.டி. இயக்குநர்கள் எல்லாம் யார்? சமூக நீதியை ஒழிக்க கங்கணம் கட்டியுள்ள பார்ப்பனர்கள்தானே அல்லது உயர் ஜாதிக்காரர்கள்தானே என்பது சொல்லாமலேயே விளங்கும்.

எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டனரே!


நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தும், அவர்களுக்காக ஆணையம் இருந்தும், எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, இப்படி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால், 2009ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மத்திய அமைச்சரவை இதனை எப்படி ஏற்றுக் கொண்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கற்க வேண்டிய பாடம்


இதில் மிக முக்கியமாகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. 2004 டிசம்பரில் இந்த மசோதா மக்களவையில் வைக்கப்பட்ட போது - தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மசோதாவாகத்தானிருந்தது. இடஒதுக்கீடு என்று வரும்போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான பொதுவான அம்சம் என்பதால் இரு பிரிவினரையும் சேர்த்தே அவ்வாறு உருவாக்கப்பட்டது.

பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாவதா?

ஆனால் இதரப் பிற்படுத்தப்பட்டோரை நீக்கிவிட்டு, தாழ்த்தப் பட்டோர் மற்றும்மலைவாழ் மக்களுக்காக தனி மசோதாவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சில தலைவர்கள் வற்புறுத்திய தவறான காரணத்தால் தனித்தனியாக மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது ஒரு பிரித்தாளும் (Divide an Rule) தன்மைக்குப் பலியான சோகமாகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஒன்றாக நிற்கும் பட்சத்தில், அந்தப் பலத்தின் வலிமையைத் தெரிந்து ஆதிக்க வாதிகள் தங்கள் வால்களை ஆட்ட முன்வரமாட்டார்கள். பிற்படுத் தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் இரு கைகள்; ஒன்றுக்கு மற் றொன்று எதிரி அல்ல. காலம் காலமாக உயர்ஜாதியினரின் சூழ்ச்சி வலையில் நம் மக்கள் பலியாவது இன்றுவரை தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது.

இன்னும் இரண்டே நாள்கள்தான்

14ஆவது மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடரிலேயே (வரும் செவ்வாய், புதனுக்குள்) தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத் தப்பட்டோருக்குமான இரு மசோதாக்களையும் இடையில் இணைக்கப்பட்ட ஆபத்தான சரத்துக்களை அறவே தூக்கி எறிந்து, திரு. சுதர்சனம் நாச்சியப்பன் அவர்களின் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த சிபாரிசுகளையும் இணைத்து, காலதாமதம் செய்யாமல் குறுக்குச்சால் ஓட்டாமல் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமாய் மத்திய அரசை வலியுறுத்துகின்றோம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் - ஏன் எதிர்க்கட்சிகளும்கூட கோடானு கோடி தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்!


இதனையொட்டி, நாளை 24.2.2009 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் நடைபெறும். அனைத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், சமூகநீதி அமைப்புகளும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். இதில் தவறு நேர்ந்தால், அடுத்து இரண்டொரு மாதங்களில் வரவிருக்கும் தேர்தலில் மக்களைச் சந்தித்து வாக்குகள் கோரும் போது, மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான இந்த மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கின்றோம்.


------------------- "விடுதலை" - 23.2.2009

0 comments: