Search This Blog

5.2.09

பார்ப்பன ஆதிக்கத்திற்கு காரணமாக இருப்பவை எவை?


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க".


என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

------------------------------------------------------------------------------


8. கடவும் -IV

தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும்-உருவமென்றும, அதற்காக மதமென்றும்- சமயமென்றும் - மதாச்சாரியார்களென்றும் - சமயாச்சாரியார்களென்றும் - கட்டியழுபவர்கள். ஒன்று - பகுத்தறிவில்லாதவர்களாகவாவது அல்லது, வயிற்றுப் பிழைப்பிற்கும் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும்.


விசாரமற்றவர்கள் - ஞானமற்றவர்கள்


அதுபோலவே, சிவன் என்றோ, பிரம்மா என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ, கொள்வதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை ஆகும்.

ஆதலால், உலகத் தோற்றமும் அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிப்பு என்பவையான மூவகைத் தன்மைகளையும் மேற்படி சாமிகளோ, - ஆசாமிகளோ, ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கிறான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களை விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும்.


கடவுளுக்கு வைப்பாட்டி

அந்தக் கடவுள் என்பவற்றிற்கு கண், மூக்கு, வாய், கால், கை, தலை, பெயர், ஆண்-பெண் தன்மை, பெண்சாதி - புருஷன், வைப்பாட்டி - தாசி, குழந்தை - குட்டி, தாய் - தகப்பன் முதலானவற்றைக் கற்பித்து அவற்றிடத்தில் பக்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றிற்குக் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து தினம் பலவேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்யவேண்டுமென்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவற்றைச் செய்வதோடு - அந்தக் கடவுள் அப்படிச் செய்தார் - இந்த கடவும் இப்படிச் செய்தார் என்பதான “திருவிளையாடல்கள்” முதலியவை செய்து காட்ட வருடா வருடம் உற்சவம் செய்ய வேண்டுமென்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்கள் பற்றியும், “திருமுறை”யாகப் – “பிரபந்த”மாகப் பாட வேண்டுமென்றும், அவற்றை அப்படிப்பட்ட கடவுள்களுக்கு ஆதாரமாக்க் கொள்ள வேண்டுமென்றும் -


இவை போன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப் போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவை - மூடநம்பிக்கை - வயிற்றுப் பிழைப்பு - சுயநலப் பிரச்சாரமே


சுரண்டிகளின் புரட்டு

நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள் போல் நம் நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு விசாலப்படாமல் இருப்பதற்கும், மக்களின் ஒழுக்கங்குன்றி, மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும், உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும், கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும் அவர்களது பாடல்களும் நெறிகளுமே காரணம். கடவுள் - மதமூட நம்பிக்கைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாத்திகமென்றும், பாப காரியமென்றும் கூறுவது பகுத்தறிவற்ற பாமர மக்களை ஏமாற்றிச் சுரண்டிப் பிழைப்பவர்களின் சுயநலப் புரட்டே ஆகும்.

---------------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 19 - 20

1 comments:

Unknown said...

பெரியாரின் கருத்தை படிக்கும் போது வியப்பாக இருக்கிறது. இப்படி ஒரு மனிதாரா? எதையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அது போல் உண்மையை புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பேசப்படுவதற்குக் காரணம் அவரின் கூர்ந்த் மதியும், யாருக்கும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிசலாக தனது கருத்தையும் செயல்பாட்டயும் பதிவு ச்ய்ததுதான் காரணம் என நான் நினைக்கிறேன்.

சரிதானே?