Search This Blog

14.2.09

கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைப்பது ஏன்?எதனால்?புகழின் உச்சியில் கலைஞர்! அன்னை மணியம்மையாரின் பெருமிதம்!


தந்தை பெரியார் அவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று 28.5.1968 மற்றும் 29.5.1968 ஆகிய நாட்களில் "விடுதலை"யில் எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க தலையங்கத்தில் இருப்பதை எடுத்துக் கூறுவது தற்பொழுது பொருத்தமாக இருக்கும் என்பதால் குறிப்பிடுகிறோம்.

தமிழராட்சி கொண்டு வந்தவருக்கு சிலை வைப்பதில் தவறு என்ன என்று, பொது மக்களுக்காக, பொதுத் தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் பொது மக்கள் பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களை பாராட்ட, பெருமைப்-படுத்த யோக்கியமான பொது மக்கள் முயற்சிப்பது இயற்கையாகும். அதிலும் கலைஞர் கருணாநிதி அவர்கள் விஷயத்தில் பாராட்டத் தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன. கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப் பருவத்தில் இருந்து இன்றைக்கு சுமார் 45 வயது வரை 25-,30 ஆண்டுகளாக பொதுத் தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாகச் சிறை செல்லும் தன்மையில் பல முறை சிறை சென்றிருக்கிறார். இவ்வளவு மாத்திரமல்லாமல் ஒரு கட்சி ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனமாக ஆக்கி இன்று மகா வன்மை பொருந்திய காங்கிரஸ் எதிர்த்து தோல்வியடையச் செய்து வெற்றிக் கொடி கண்ட ஒரு முக்கியஸ்தருக்கு ஒரு சிலை பயனடைந்த பொது மக்கள் அல்லது அக்கட்சியினர், அவ்வரசியலில் பற்றுள்ளவர்கள் சிலை வைக்க முன்வந்தால் இந்த காரியம் கட்சி மாறும் சின்னத்தனத்திற்கும் கிளர்ச்சி செய்யும் காலித்தனத்திற்கும் சமமான விவாதத்திற்குரிய காரியமாகுமா? என்று கேட்கிறேன். இப்படிப் பார்த்தால் இன்றுள்ள இந்த நாட்டிலுள்ள எல்லாச் சிலைகளையும் உடைத்து எறிய வேண்டுவதாகத் தானே ஏற்படும்? மகா அயோக்கியனும் இனத் துரோகியுமான கம்பனுக்குச் சிலை, தமிழனுக்காக ஒரு காசு பயனுள்ள காரியமும் செய்யாத பாரதிக்கு சிலை, என்றெல்லாம் வைக்கப்பட்ட காலத்தில் ஒருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. தமிழரின் பச்சைத் துரோகியாகிய சத்தியமூர்த்திக்கு அவர் ஜாதிக்காரர்கள் எவ்வளவோ ஆடம்பரமான பாராட்டுகள் நினைவுகள் சின்னங்கள் நடத்திய காலத்தில் ஒருவரும் ஒருசிறு வார்த்தைகூடச் சொல்லவில்லை. பெசண்டுக்கு எதற்காகச் சிலை? பார்ப்பன வேஷம் போட்டு தமிழர் ஸ்தாபனமான ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க முற்பட்டார் என்பதல்லாமல் அந்த அம்மாவின் பொதுத் தொண்டு என்ன? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன?

எனவே தான் தமிழனைப் பாராட்டுவதும், தமிழ் மக்களிடையில் பின் சந்ததிக்கு நினைவூட்டும் அறிகுறியாகும், கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத்தில் சிறந்தவர், பொதுத் தொண்டு செய்வதில் சிறந்தவர், பார்ப்பன ஆதிக்க ஆட்சியை தமிழர்க்கு ஆக்கித் தந்தவர். எனவே கலைஞரின் சிலை தயாராகி இருப்பதை ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் கண்டிப்பாக வைத்து நிலை நிறுத்தியே ஆக வேண்டும் என்றும், இந்தக் கமிட்டி யார் கைவிட்டாலும் பொது மக்கள் முன் நின்று நடத்தியே ஆக வேண்டும் என்றும் இதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் எந்தவித இடையூறுக்கும் இடம் கொடுக்காமல் ஆதரவளித்து தமிழர் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். திரு. கருணாநிதிக்கு சிலை என்பது ஒரு நபரைப் பொறுத்து சொந்த விஷயமாக நான் கருதவில்லை. தமிழர்களின் தன்மானத்தைப் பொறுத்ததாகத்தான் கருதுகிறேன்.

இப்படி ஒரு பார்ப்பனருக்கு அறிவிப்பும் ஏற்பாடும் நடந்து முடிந்த நிலையில் இடையில் திடீரென நிறுத்தி விட்டால் பார்ப்பனர் சும்மா இருப்பார்களா? அதையும் சிந்தியுங்கள் எனக் கூறி இப்போதைக்கு இதை முடித்துள்ளேன்.
(விடுதலை 29.5.1968)

அண்ணாசாலையில் - தந்தை பெரியார் ஆணைப்படி கலைஞருக்குச் சிலை, அன்னை மணியம்மையார் தலைமையில் அடிகளார் திறந்த மாட்சி இப்பொழுதும் என் கண்முன் அப்படியே காட்சியளிக்கிறது.

பழங்காலத்துக் கோட்டை கொத்தளங்-களில் அந்தந்த அரசர்களுக்குரிய முத்திரைக் கொடிகள் பறப்பதுபோல் அண்ணா-சாலையின் இருமருங்கில் இருந்த கட்டடங்களின் மாடியில் எல்லாம் திராவிடர் கழகக் கொடிகள் தலைநிமிர்ந்து பறந்து கொண்டிருந்தன. தந்தை பெரியாரின் பணி முடிக்கும் பெருமித உணர்வுகள் அவற்றின் அசைவிலே வெளிப்பட்டன.

அண்ணாசாலையில் ஆடம்பர அணி வரிசைகளால் ஜோடிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஓர் இயக்கத்தின் எழுச்சி அலைகள், ஓர் இனத்தின் பெருந்துடிப்பு, திராவிடர் கழக -திராவிட முன்னேற்றக் கழக கொடித் தோரணங்களாக - எங்கும் கம்பீரமாகச் சிம்மாசனமிட்டிருந்தன.

அய்யா சிலையிலிருந்து ஸ்பென்சர் வரை கழகக் கொடிகளின் அணி வகுப்புகள் தான்! அகன்ற ஆறுகள் போல அடர்ந்து படர்ந்து கிடக்கும் சாலையின் அகல நீளம் என்ன என்பதை கழகக் கொடி பேனர்களும் கழகக் கொடி தோரணங்களும் ஆழம் பார்த்து விட்டன என்றே சொல்ல வேண்டும். சிலை மேடை முகப்பின் இருபுறங்களிலும் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா ஆகியோரின் அரை உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தாலும், டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த இருவர்களாலும் உருவாக்கப்பட்ட ஓர் ஒப்பற்ற பெட்டகம் என்பதை உணர்த்துவதாக இருந்தது.

நாதசுர சக்ரவர்த்தி நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் குழுவினரின் நாதசுர இன்னி-சையுடன் சீர்காழி கோவிந்தராசன் மூலம் புறப்பட்டு, மேடையை நோக்கி வந்து அடைந்தது, சிலை திறப்பு விழாவில், திராவிட முன்னேற்றக் கழக நண்பர்கள் க. அன்பழகன், ப.உ. சண்முகம், மன்னை ப. நாராயணசாமி, மாதவன், அன்பில் தர்மலிங்கம், க. இராசராம், சி.வி.எம். அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன், எஸ்.ஜே. சாதிக்பாட்சா, என். இராசாங்கம், மு. கண்ணப்பன், கே.ஏ. மதியழகன், அரங்கண்ணல் ஆகியோரும்,

திராவிடர் கழகத் தோழர்கள், சைதை எஸ்.பி. தெட்சிணாமூர்த்தி, செங்கற்பட்டு மாவட்ட தி.க. தலைவர் சி.பி. இராசமாணிக்கம், தெ.ஆ.மாவட்ட தி.க. தலைவர் கு. கிருஷ்ண-சாமி, தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம், ஆம்பூர் ஏ. பெருமாள், டி.டி. வீரப்பா, பொத்தனூர் க. சண்முகம், கோவை இராமச்சந்திரன், தர்மபுரி எம்.என். நஞ்சய்யா, வழக்கறிஞர் சண்முகநாதன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான, மணலி கந்தசாமி எம்.எல்.ஏ., செட்டி நாட்டரசர் டாக்டர் ராஜா சர். முத்தையா (செட்டியார்) மற்றும், தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

தந்தை பெரியாரின் 97-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், 97 அதிர் வேட்டுகள் விண்ணைப் பிளந்தன.

தந்தை பெரியாரின் ஆணையை இன்று செய்து முடித்து விட்டோம், இந்தச் சிலையால் கலைஞருக்கு பெருமையால் தமிழினம், தமிழ்நாடு பெருமைப்படுகிறது என்று கழகத் தலைவர் அம்மா அவர்கள், வெள்ளம் போல் திரண்டிருந்த லட்சோப லட்ச மக்கள் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்கள்
(விடுதலை 22.9.1975).

அய்யா அவர்கள் அறிவிப்புக் கொடுத்ததற்குப் பின்பு அதைப்பற்றி ஆராய்ச்சிகளில் ஈடுப்படுவது நம் வேலை அல்ல; அவர்கள் இடும் பணியை - கட்டளையை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதும் செயல்படுத்துவதும் தான் தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களாகிய எங்களின் கடமையாகும். இன்னும் சொல்லப் போனால் கலைஞர் அவர்கட்கு இவ்வளவு காலம் தாழ்த்தி இங்கே சிலை எழுப்புவதற்கு மன்னிப்புகூடக் கேட்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்! என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்கள். தோழர்களே, தந்தை பெரியார் அவர்கள் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று விரும்பியதும், நாங்கள் அந்த விருப்பத்தை இன்று நிறைவேற்றுவதும் என்று ஏதோ பெருமைக்குரிய நிகழ்ச்சி என்ற அடிப்படையல்ல! சிலை வைப்பதால் கலைஞரின் பெருமை ஒருபடி மேலே ஏறுகிறது என்று அர்த்தம் அல்ல! இன்றைய தினம் கலைஞர் அவர்கள் புகழ் எவ்வளவு உச்சிக்குப் போக வேண்டுமோ அந்த அளவு இலக்கை எட்டிவிட்டது. அகில இந்தியாவும் அவர் செல்கின்ற பாதையைத் தங்களுக்கு ஒரு வழிக்காட்டியான பாதையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் எல்லாம் இன்றைய தினம் உருவாகி இருக்கின்றன. பின் எதற்காக கருஞ்சட்டைக்காரர்களாகிய நாங்கள் இதை செய்கிறோம்? என்றும், எந்தக் காரணத்தை முன்னிட்டும், தமிழர்களாகிய நாம் தங்களுக்குள் வேற்றுமைக்கு இடம் கொடுக்காமல் இனத் துரோகத்திற்கு ஆளாகாமல் எதிரிகளைப் பார்த்தாவது திருந்தி தமிழனத்தின் ஒருமைப்பாட்டை கட்டுக்கோப்புடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் காட்டும் உண்மையான நன்றியின் சின்னமாகும் என்றும் உணர்ச்சி மிகுந்த உருக்கத்துடன் தெரிவித்தார்கள்.

-------------------------நினைவுகள் நீளும்...

--------------- - "உண்மை" பிப்ரவரி 1-15 2009 இதழில் கி.வீரமணி அவர்கள் எழுதிவரும் அய்யாவின் அடிச்சுவட்டில்... இரண்டாம் பாகம் (13)

1 comments:

Unknown said...

கலைஞருக்கு சிலை தேவையா? என்று நினைத்துத்தான் இதைப் படித்தென், கலைஞருக்கு அவசியம் சிலை வேண்டும் என்பதை பெரியாரின் எழுத்துக்கள் உணர்த்திவிட்டது.

கலைஞரைப் பற்றி அன்றிலிருந்து இன்று வரை ஒரு தவறான பிரச்சாரத்தைப் பரப்பி வருகின்ரனர். அதில் உண்மையில்லை என்ப்தை பெரியார் போட்டு உடைத்துள்ளார்.

தமிழர்களுக்கு நன்மை செய்பவர்களை மதிக்கும் பாங்கை பெரியார் நன்கு உணர்த்தியுள்ளார்.