Search This Blog

13.2.09

விடுதலைப்புலிகளை ஒதுக்கிவிட்டு பேச்சுவார்த்தை பலன் தராது


இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டுமென்ற
குடியரசுத் தலைவரின் உரை வரவேற்கத்தக்கது!

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மத்திய
அரசின் கொள்கை குடியரசுத் தலைவர் உரையாக வெளிவந்துள்ளது

நாம்அனைவரும்ஒன்றுபட்டுகுரல்கொடுப்போம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்ற இந்தியக் குடியரசுத் தலைவரின் உரையை வரவேற்று, கட்சிகளுக்குள் நடக்கும் போரை நிறுத்தி, ஒன்றுபட்ட முறையில் குரல் கொடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:-

நமது குடியரசுத் தலைவர் உரை என்பது மத்திய அரசின் கொள்கைத் திட்டங்களின் அறிவிப்பு ஆகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்!

மத்திய அமைச்சரவை கூடித்தான் குடியரசுத் தலைவர் உரையைத் தயாரிக்கும். எனவே, மத்திய அரசின் கொள்கைப் பிரகடனம் ஆகும் அது.

குடியரசுத் தலைவரின் கூற்று

அவ்வுரையில் நமது குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள், ஈழத்தில் நடைபெறும் போரை நிறுத்தவேண்டும் என்று இலங்கை அரசுக்கும், போராடும் விடுதலைப்புலிகளுக்கும் அறிவுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போரை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவேண்டும் என்று திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.

ராணுவ ரீதியான சண்டைகளால் இலங்கையில் இடம் பெயர்ந் துள்ள மக்களின் வேதனைகள் எங்களுக்கு (இந்திய அரசுக்கு - மக்களுக்கு) மிகுந்த மனக்கவலையை அளித்து வருகின்றன; இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகள் இயக்கமும் உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும், இராணுவம் தனது தாக்குதல்களை நிறுத்தவேண்டும், விடுதலைப்புலிகள் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும், அப்பொழுதுதான் ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குட்பட்ட அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைக்குத் தீர்வு காண முடியும் என்பதுதான் இந்திய அரசின் நிலை என்று குறிப் பிட்டுள்ளார்கள்.

முதல்வருக்கு மருந்தில்லா மருந்து

மத்திய அரசின் இந்நிலைப்பாட்டில்

(1) போர் நிறுத்தம் உடனே ஏற்படவேண்டும்;

(2) இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று குறிப்பிடப்பட்டதானது, மருத்துவமனையில் இருந்துகொண்டே, ஈழத் தமிழர் பிரச்சினையின் காரணமாக உடல் உபாதைகளுடன் உள்ளத்தில் வலி மிகவும் என்ற நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறிவரும் நமது தமிழினத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இந்திய அரசின் இந்தத் திட்டவட்டமான கொள்கை அறிவிப்பு சரியான, மருந்தில்லா மருந்தாகப் பயன்பட்டிருப்பது அறிய நமக்கு ஆறுதல் ஏற்படுகிறது.

முதலமைச்சரின் வரவேற்பு

முதலமைச்சரே நேற்று அந்நிலையிலும் அவ்வுரை கேட்டு (12.2.2009) அன்றே விடுத்துள்ள ஓர் அறிக்கையில்,

இன்று (12.2.2009) நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர், தமது உரையில், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்றும்; பிரச்சினைக்கு அமைதியான முறையில் இருதரப் பினரும் பேச்சுவார்த்தைகள்மூலம் தீர்வு காணவேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பது; மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் எனக்கு மிகுந்த ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைந்துள்ளது (முரசொலி, 13.12.2009) எனக் குறிப்பிட்டுள்ளார்!

அறுவை சிகிச்சை நடந்ததோ 11 ஆம் தேதி, 12 ஆம் தேதி மதியமே இப்படி மருத்துவமனையிலிருந்து ஒரு முக்கிய வரவேற்பு அறிக்கை விடுத்திருப்பது அவர் களுக்கு உள்ள கவலை, அக்கறை எப்படிப்பட்டது என்பதை உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர் கள் வரை அறிவதற்கான சான்று அல்லவா?

மூன்று முக்கிய கருத்துகள்

குடியரசுத் தலைவரின் இவ் வுரையில் - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மூன்று முக்கிய கருத்துகள் தெளிவாகின்றன.

1. உடனே போர் நிறுத்தம்

2. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை

3. சிங்கள அரசும் - விடுதலைப்புலிகளும் பேசவேண்டும்


விடுதலைப்புலிகளைத் தவிர்த்த பேச்சுவார்த்தை பலன் தராது

விடுதலைப்புலிகளை ஒதுக்கிவிட்டு பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையில் உண்மைத் தீர்வாகாது என்பது இதன்மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, அதே சாக்கில் தடை செய்து, அவர்களுக்குப் போட்டியான சில சோளக்கொல்லை பொம்மை போன்றவர்களை வைத்து ஒப்புக்குக் காட்டினால், உறுபயன் விளையாது என்பதை அங்கே கிழக்கு மாகாணத்தில் நடக்கும் அரசியலைப் பார்த்தாலே புரியும்.

இப்போது பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு - எந்த நிலையில் தந்தை செல்வா போன்றவர்கள் தனி ஈழம் என்ற பிரிவினை கேட்கவேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டார்கள் என்ற சரித்திரம் அறிந்தவர்களுக்கு ஒரு செய்தி - இங்குள்ள பலர் அறியாத செய்தி - விடுதலைப்புலிகள்தான் ஏதோ தனி நாடு - பிரிவினை கேட்கத் தொடங்கியவர்கள் என்ற ஒரு தவறான எண்ணத்தை மனதிற்கொண்டு - சில அரைவேக்காடுகள் உள்பட ஆதாரமில்லாப் பிரச்சாரம் செய்கின்றன!

போர் நிறுத்தப்படவேண்டும்

அரசியல் தீர்வுபற்றி பேச்சுவார்த்தை நடந்து நிரந்தரத் தீர்வு காண இரு தரப்பினர் மேஜையில் அமர்ந்து பேசிடும் நிலையில், எந்த முறையில் அரசியல் தீர்வு என்பதை அந்த மக்களின், பிரதிநிதிகள் தான் தீர்வு காண முடியுமே தவிர, வெளியில் உள்ளவர்களான வெளிநாட்டவர்களின் கருத்துத் திணிப்பு பயன் பெறாது; இப்போது அதுவல்ல பிரச்சினை. உடனே போர் நிறுத்தப்பட்டு அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக (மருத்துவமனைகள்மீது குண்டுவீசப்பட்டு சிகிச்சை பெறும் தமிழர்கள் உள்பட) பொதுமக்கள் காக்கை குருவிகளைப் போல் குண்டுமழையால் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டாகவேண்டும்.

நிபந்தனை இல்லாத போர் நிறுத்தம்தான் உடனடித் தேவை.

வெறும் இராணுவ நடவடிக்கையால் எவ்விதப் பலனும் ஏற்படாது.

ராஜபக்சேயின் கூற்று - உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது

விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டு பிறகு அரசியல் தீர்வு என்ற இலங்கை ராஜபக்சே அரசின் நாடகக் கூற்று உலக மக்களுக்கு ஏற்புடைத்தது அல்ல.

இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை என்பதை உலகம் - உலக நாடுகள் - உணரத் தொடங்கிவிட்டது. எனவே, இந்நிலையில், மேலும் பழைய பல்லவியை இலங்கை அரசு பாடிக்கொண்டே இருப்பதால், பலனேதும் விளையாது.

தமிழ்நாடு அரசு காரணம் அல்லவா!

தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வாளர்களே, உங்கள் மனச் சாட்சிப்படிக் கூறுங்கள்.

இந்த அளவுக்கு இந்தியப் பேரரசு கொள்கை முடிவு கூறும் அளவுக்கு நிலைமை வளர்ந்தது எதனால்? யாரால்?

தமிழக முதல்வர் கலைஞர்தம் அரசு, கட்சி - கூட்டணியில் மத்திய அரசில் இடம்பெற்று, அவர்களையும் வற்புறுத்தி அழுத்தம் கொடுத்ததால்தானே இது சாத்தியமாயிற்று?

இவரது தொடர் வற்புறுத்தல்கள்தானே இந்த விளைவை - விளைச்சலை முளைக்கச் செய்துள்ளது?

இந்நிலையில், முதல்வரை - தமிழக அரசைக் கண்டிப்பதால், குறைகூறுவதால் என்ன பயன்? மத்திய அரசு சொல்லும்போது தானே அது உலக நாடுகளின் மத்தியில் - ஏன் இலங்கைக்குக்கூட அந்த அழுத்தம்தானே ஆக்க ரீதியான பயன் தரும்?

தமிழ்நாட்டுக் காங்கிரசுகாரர்களுக்கு...

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களும் இதனைப் புரிந்து கொண்டு நிதானத்துடன் இப்பிரச்சினையை அணுகக் கடமைப்பட்டுள்ளார்கள்!

அதேபோல, மத்திய அரசின் தலைவர்களைப் பழிப்பது, கொச்சைப்படுத்துவது போன்ற அடாவடித்தனத்தில் இறங்கிடும் பொறுப்பற்ற வீண்செயல்கள், தேவையற்ற விளைவுகளை உருவாக்கி, வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியை உடைக்காமல் இருப்பது அவசரம் - அவசியம்!

தமிழக அரசும், மத்திய அரசும் இரண்டும் இந்நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை நாம் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து மேலும் வலிமையாக்கி அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கி உரிமை முழக்கம் செய்வோம்!

தேவை நமக்குள் போர் நிறுத்தம்

நமக்குள் போர் நிறுத்தம் தேவை! தேவையற்ற விமர்சனங்கள் தவிர்க்கப்படுவது பிரச்சினையின்மீது அக்கறையுள்ளவர்களின் தலையாயக் கடமையாகும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


---------------- "விடுதலை"13.2.2009

2 comments:

Unknown said...

//விடுதலைப்புலிகளைத் தவிர்த்த பேச்சுவார்த்தை பலன் தராது

விடுதலைப்புலிகளை ஒதுக்கிவிட்டு பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையில் உண்மைத் தீர்வாகாது என்பது இதன்மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, அதே சாக்கில் தடை செய்து, அவர்களுக்குப் போட்டியான சில சோளக்கொல்லை பொம்மை போன்றவர்களை வைத்து ஒப்புக்குக் காட்டினால், உறுபயன் விளையாது என்பதை அங்கே கிழக்கு மாகாணத்தில் நடக்கும் அரசியலைப் பார்த்தாலே புரியும்.//

தமிழ் உணர்வாளர்களின் கருத்தும் இதுதான்

Unknown said...

நானும் இதே கருத்தை வழிமொழிகிறேன்.