Search This Blog

16.2.09

ஈழப்பிரச்சினையில் அய்.நா. தலையிட வேண்டும் - ஏன்?

மருத்துவமனைகள்மீது குண்டுவீசக்கூடாது - தாக்குதல் தொடுக்கப்படக்கூடாது என்பது உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் மரபும் - நடைமுறையுமாகும்.

ஆனால், இலங்கையில் சிங்கள அரசின் இராணுவம் என்ன செய்துகொண்டிருக்கிறது?

மருத்துவமனைகளைத் தாக்குவதை ஒரு போர் முறையாகவே கொண்டிருக்கிறது. முன்னியவிளையில் இயங்கிய முல்லைத்தீவு பொது மருத்துவமனை, விசுவ மடுவில் இயங்கிய கிளிநொச்சி பொது மருத்துவமனை, மூங்கிலாறில் இயங்கிய மல்லாவி மருத்துவ மனை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை என்று சிங்கள இனவெறி - பாசிச இராணுவம் தாக்கிய மருத்துவமனைகளின் நீண்ட பட்டியலே உண்டு.

அய்.நா. அதிகாரியும், பன்னாட்டுச் செஞ்சிலுவைக் குழுப் பிரதிநிதியும் சாட்சியமாகவிருக்க - சிங்களப் படையின் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவ உதவி பெற்று வந்த புதுக்குடியிருப்பு மருத்துவ மனையின்மீது தொடர்ந்து மூன்று நாள்கள் (பிப்ரவரி 2 முதல் 4 முடிய) குண்டுவீசித் தாக்கினார்கள் என்றால் இந்தக் கொலைப் பாதகர்கள் எதைத்தான் செய்யமாட்டார்கள்?

இதில் மிகவும் தலைகுனியவேண்டிய ஒன்று என்னவென்றால், மருத்துவமனையின் மீது தாக்கியதற்கும் நியாயம் கற்பித்ததுதான்.

பி.பி.சி. நிறுவனத்திற்குப் பேட்டியளித்த இலங்கைப் பாதுகாப்புத் துறை அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார என்ன கூறினார்? புதுக்குடியிருப்பில் மருத்துவமனை இயங்கும்போது, உடையார்கட்டு மருத்துவமனைக்கு இவர்கள் ஏன் செல்லவேண்டும்? என்று பகிரங்கமாகப் பேட்டி அளித்தார் என்றால், இதன் பொருள் என்ன?

மருத்துவமனைமீது சிங்கள இராணுவம் குண்டு வீசியதை இதன்மூலம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது விளங்கவில்லையா?

இதில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய கொடுமை என்னவென்றால், உடையார்கட்டு மருத்துவமனை என்பது சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வளையமாகும். பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ள மருத்துவமனை யையே குண்டுவீசித் தகர்த்தனர் என்றால், இலங்கை அரசின் வார்த்தைகளுக்கு ஏதாவது மரியாதையும், நம்பகத்தன்மையும் இருக்க முடியமா?

புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்குப் போகவேண்டியதுதானே என்று கேலியாகப் பேட்டி கொடுக்கப்பட்டதே - அந்தப் புதுக் குடியிருப்பு மருத்துவமனையையாவது தாக்காமல் இருந்தனரா என்றால், அதுவும் இல்லை. நூற்றுக்கணக்கான நோயாளிகள் அங்கு இருந்தபோது குண்டுவீசித் தாக்கினார்கள்.

48 மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது - பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல என்று சொல்லப்பட்டதெல்லாம் - நயவஞ்சக நோக்கத்துடன்தானா?

மருத்துவமனையில் இருந்தாலும் சரி, கோயில்களில் தஞ்ச மடைந்தாலும் சரி, பாதுகாப்புப் பகுதி என்று அரசு அறிவித்த பகுதிக்குச் சென்றாலும் சரி வேறு எங்கு நடமாடினாலும் சரி தமிழர்கள் என்றால் கொன்று குவிப்பது, வேட்டையாடுவது என்கிற மூர்க்கத்தனத்தோடு பேரினவாத வெறியோடு இலங்கை நடந்துகொள்கிறது என்பது வெளிப்படையாகும்.

இலங்கையின் சுதந்திர நாள் (பிப்ரவரி 4) விழாவை ஒரு பக்கத்தில் கொண்டாடிக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் அந் நாட்டுக்குரிய தமிழின மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்றால், அங்குள்ள சுதந்திரம் யாருக்கு என்பது விளங்க வில்லையா?

இந்திய சுதந்திரம் யாருக்கு? பார்ப்பனருக்கா? - பார்ப்பனர் அல்லாதாருக்கா? என்று தந்தை பெரியார் அன்று கேட்ட கேள்வி இப்பொழுது இலங்கைக்கும் பொருந்தும். ஈழத்தில் தமிழர்கள் அழிக்கப்படுவது கண்டு பார்ப்பனர்கள் ஆனந்த ராகம் பாடிக்கொண்டு எக்களிப்பில் திளைத்துக் கொண்டிருப்பதை இந்தப் பின்னணியிலும் சிந்திக்கவேண்டியுள்ளது.

தமிழர்கள் மட்டுமல்லர், உலகம் முழுவதும் உள்ள மனிதநேய - மனித உரிமை அமைப்புகளும், அய்.நா.வும் இந்தத் தருணத்தில் செய்யவேண்டிய கடமை என்ன?

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணை அமைப்பு இதனைத்தான் இப்பொழுது வலியுறுத்துகிறது. இந்தியா நேரடியாகத் தலையிட மனமில்லா விட்டாலும் அய்.நா.விடம் பிரச்சினையைக் கொண்டு போகலாமே!

ஜெனீவா பிரகடனம், அடிப்படை மனித உரிமைகள், இன அழிப்பு எதிர்ப்புக்கான சட்டங்கள், செஞ்சிலுவைச் சங்கம் எல்லாம் இருக்கத்தானே செய்கின்றன. அய்.நா.வின் உறுப்பு நாடுகளை இந்தச் சட்டங்கள் கட்டுப்படுத்தத்தானே செய்யும்!


மரபுகளையும், சட்டங்களையும் மீறி இலங்கை அரசு நடந்து கொண்டு வரும்போது, அய்.நா.வும், அதன் உறுப்பு நாடுகளும் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடமையைச் செய்யவேண்டிய பொறுப்பு அய்.நா.வுக்கும், அதன் உறுப்பு நாடுகளுக்கும் நிச்சயம் உண்டு. அந்தக் கடமையையைச் செய்விக்க குறைந்தபட்ச கடமையாவது இந்திய அரசு செய்யவேண்டும். இல்லையெனில், இந்தியாவின் மரியாதை உலக நாடுகள் மத்தியில் தாழும் என்பதில் அய்யமில்லை.

---------------- "விடுதலை" தலையங்கம் -16-2-2009

0 comments: