Search This Blog

21.2.09

மரணத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கும் பெரியார் தொண்டர்கள்!


இப்படியும் ஒரு பெரியார் பெருந்தொண்டர்!

சிங்கப்பூரில் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்து வயோதிகக் காலத்தில் தன் சொந்த ஊருக்குத் திரும்பி (ஆயப்பாடி), கடைசி நாள்களில் மயிலாடுதுறையில் கழித்து, அண்மையில் மறைந்த (17.2.2009) ஓ.டி. மூர்த்தி என்ற (வயது 86) பெரியார் பெருந்தொண்டரின் செயல்பாடுகள் வியப்பை ஊட்டக் கூடிய வித்தியாச மானவை.

1) தனது மரணம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த அவர் முன்னெச்சரிக்கையாக செய்த ஏற்பாடுகள்; தனது இறுதி நிகழ்ச்சிகளுக்காக வும், தனது துணைவியாரின் (இராஜேஸ்வரி) இறுதி நிகழ்ச்சிகளுக்காகவும் தனித்தனியே தலா ரூபாய் பத்தாயிரம் வங்கியில் போட்டு வைத்திருந்தார்.

2) தான் மரணமடைந்த பின் தன் உடலில் போர்த்துவதற்காக கருப்புச் சால்வையையும் வைத்திருந்தார். 3) 28.11.1946-இல் திராவிடர் கழகம் (ஜஸ்டிஸ் கட்சி)யில் தான் உறுப்பினரானதற்கான அட்டையை லேமினேஷன் செய்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார். தனது மரணத்திற்குப் பிறகு தன் மைத்துனர் கலி. பூங்குன்றனிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். (அதே போல ஒப்படைக்கவும் பட்டது).

4) தான் மரணம் அடைவதற்கு ஒருவாரத்திற்கு முன் மயானத்தில் பணிபுரியும் தோழரை அழைத்து, தன்னை எரியூட்டும் செலவுக்கான முன்பணத்தையும் அளிக்க முன்வந்தபோது அந்தத் தோழர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து சென்று விட்டாராம்.

5) தனது உடல் வீட்டில் இருக்கும்போது யாரும் பசியுடன் இருக்கக் கூடாது எல்லோருக்கும் உணவளித்து உபசரிக்க வேண்டும் என்று கூறியதை வீட்டில் உள்ளோர் கறாராக நிறைவேற்றினர்.

அவருடைய மகன் பெயர் வீரமணி (எம்.சி.ஏ) - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி தலைமையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சிங்கப்பூரில் அரசுப் பணியில் இருந்து வருகிறார்.

விந்தையாகவும் வித்தியாமாகவும் இருக்கிறாரா இல்லையா? தனது மரணத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கும் இவர்களுக்குப் பெயர்தான் பெரியார் தொண்டர்கள்!


------------------நன்றி:- "விடுதலை" 21-2-2009

7 comments:

ஆழிக்கரைமுத்து said...

சரி அய்யர்வாள்.

திருச்சில கழிவறைல வீரமணியார் படம் இருக்காமே அதுக்கு என்ன சொல்ல போறீங்க.

சாதி ஒழிப்பில் சிறை சென்று தனது 7 உணவு விடுதிகளையும் இழந்த பெரியார் தொண்டர் கழிவறையில் வாழ்கிறார்.

ஒன்றுமே செய்யாத உங்க அய்யர்வாள் வீரமணி AC மகிழுந்தில் செல்கிறார்.

பெரியார் தொண்டர்களையே கண்டுகொள்ளாத நவீன பார்ப்பான் வீரமணியா தமிழர் தலைவர் ?முதலில் திராவிடர் கழகத்திற்கு தலைவராக இருக்கும் தகுதிதான் உள்ளதா?

தமிழ் ஓவியா said...

கழிவரையை சுத்தப் படுத்தும் தோழர் முதல் கருவரையில் அர்ச்சகர் வேலைக்கு போகும் தோழர் வரை பெரியார் , வீரமணியின் உழைப்பை அறிந்திருக்கிறார்கள்.

எதையாவது எதிர்பார்த்து கொள்கையை ஏற்றுக் கொள்ளுபவர்கள் உண்மையான பெரியார் தொண்டர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?.

"ஆழிக்கரை முத்து அய்யா தான் அனைத்துப் பெரியார் தொண்டர்களுக்கும் தலைவர். வீரமணி எல்லாம் ஒண்னுமே செய்யவில்லை"

போதுமா? மகிழ்சியா ஆழிக்கரை முத்து!

ஆரோக்கியமான நாகரிகமான, சான்றுகளுடன் கூடிய விவாதங்களை தொடர நான் எப்போதும் தயார் ஆழிக்கரை முத்து .

Anonymous said...

திரும்பவும் சொல்லுறன், பகித்தறிவு சிங்கங்களே, நீங்கள் செய்யப் போவது என்ன? முதலில் அதைச் சொல்லுங்கள். ஏதாவது உருப்படியாப் பண்ணுவீங்கள் என்று பார்த்து சலிச்சுப் போனன்.

அதி அசுரன் said...

//கழிவரையை சுத்தப் படுத்தும் தோழர் முதல் கருவரையில் அர்ச்சகர் வேலைக்கு போகும் தோழர் வரை பெரியார் , வீரமணியின் உழைப்பை அறிந்திருக்கிறார்கள்.//

திருச்சியில் கழிவறையில் குடியிருக்கும் பெரியார் பெருந்தொண்டர் மாரியப்பன் அவர்களை முடிந்தால் நேரில் சந்தியுங்கள். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். திறம்பட பல தொழில்கள் செய்தவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர். 1957 சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்று திரும்பிய பின் தன் துணைவியாரைத் தவிர அனைத்தையும் இழந்தவர். தி.க தலைவரிடமிருந்து அவர் எதையும் இப்போதும் எதிர்பார்க்கவில்லை. பெரியார் தத்துவ மய்யம் என்ற அமைப்பின் தோழர்கள் தரும் சிறு சிறு உதவிகள் அவரை இன்று வரை வாழவைத்துள்ளது. அவரது நல்லது கெட்டதுகளுக்கு திருச்சியில் மட்டு்ம் இயங்கிவரும் அந்த அமைப்புதான் உடன் நிற்கிறது. தனது குடும்பத்தில் ஒருவராக அவரை மதித்து தோள் கொடுக்கின்றனர். இதைச் செய்ய உங்களுக்கு என்ன கேடு? செய்யாவிட்டாலும் பரவாயில்லை. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் அடிப்படை நாணயம்கூட இல்லாமல் இதில்கூட வார்த்தை விளையாட்டு தேவையா?

//எதையாவது எதிர்பார்த்து கொள்கையை ஏற்றுக் கொள்ளுபவர்கள் உண்மையான பெரியார் தொண்டர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?.//

குமுதம் ரிப்போர்டரில் இந்த செய்தி வந்த உடனேயே நான் அவரை நேரில் சென்று பார்த்தேன். ஏதாவது உதவி தேவையா? என்று கேட்டபோது அவ்வப்போது வந்து பார்த்து செல்லுங்கள். அதுபோதும் என்றார்.

பார்ப்பன சிரிப்பு நடிகன் எஸ்.வி.சேகர் தோார் மாரியப்பன் அவர்களுக்கு 1 இலட்ச ருபாய் நிதி அளிப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் திரு.சானு அவர்களிடம் பேசியுள்ளார். அதைப் பெற்றுக் கொள்கிறீர்களா எனக் கேட்க அவரும் வந்திருந்தார். அந்த நிலையிலும் பார்ப்பான் தரும் பணம் தேவையில்லை என மறுத்துவிட்டார்.

எதையாவது எதிர்ப்பார்ப்பவர் என்ற குற்றத்தை அவர் மீது சுமத்தும் உங்களைப் போன்ற முட்டுக்கட்டைகளை என்னசெய்வது?

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவனுக்கு முதுகு சொறிவதற்காகச் செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது இப்படிப்பட்ட சாதி ஒழிப்புப் போராளிகளைக் காண / உறவை வளர்த்துக்கொள்ள செலவழியுங்கள்.

அவரைப்போன்ற பல தோழர்கள் எதிர்பார்ப்பது இந்த வயதான காலத்தில் ஒரு ஆதரவை. தோழமையை மட்டும்தான்.

தன் மகனுக்கு பட்டாபிசேகம் சூட்டவேண்டும். அதற்கு அரசுகள் உதவியாய் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் வாழவில்லை.

கேவலம் ஒரு கட்சித்தலைவனை விமர்சித்தால் உங்களுக்குக் கோபம் வருகிறதல்லவா? அதைவிட அதிகமாக இப்படிப்பட்ட தோழர்களை கொச்சைப்படுத்தும்போது எங்களுக்குக் கோபம் வரும்.

நாகரீகமாகவெல்லாம் விமர்சிக்க மாட்டோம். நாகரீகமான செயல்களைச் செய்பவரைத்தான் நாகரீகமாக விமர்சிக்கமுடியும்.

உண்மையையும். முரசொலியையும்(விடுதலை) மட்டும் படித்து நேரத்தை வீணாக்காமல் செய்திகளில் என்ன உண்மை என்பதை அறிய முயற்சி செய்யுங்கள்.

செயலில் பதிலை எதிர்பார்க்கிறேன். கனிணியில் உட்கார்ந்து முட்டுக்கட்டை போடுவதை அல்ல.

தமிழ் ஓவியா said...

//எதையாவது எதிர்பார்த்து கொள்கையை ஏற்றுக் கொள்ளுபவர்கள் உண்மையான பெரியார் தொண்டர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?.//


இதுதான் நான் எழுதிய வாக்கியம்.

இதில் தனிப்பட்ட யாரையும் எந்த நபரையும் குறிக்க வில்லை. பெரியார் தொண்டர்களுக்கென்று ஒரு இலக்கணம் உண்டு. அதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

"எதையாவது எதிர்ப்பார்ப்பவர் என்ற குற்றத்தை அவர் மீது சுமத்தும் உங்களைப் போன்ற முட்டுக்கட்டைகளை என்னசெய்வது?"

இப்படி தவறாக நீங்களாக வழிந்து ஒரு பொருளைக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

ஆழிக்கரை முத்து அவர்கள் "திருச்சில கழிவறைல வீரமணியார் படம் இருக்காமே அதுக்கு என்ன சொல்ல போறீங்க."

இப்படி எழுதியதற்கு நான் கீழ்கண்டவாறு எழுதினேன்.

"கழிவறையை சுத்தப் படுத்தும் தோழர் முதல் கருவரையில் அர்ச்சகர் வேலைக்கு போகும் தோழர் வரை பெரியார் , வீரமணியின் உழைப்பை அறிந்திருக்கிறார்கள்."

இதில் என்ன வார்த்தை விளையாட்டைக் கண்டுவிட்டீர் என்றுஎனக்குப் புரியவில்லை. எனக்கு அந்த அளவுக்கு புலமையும் இல்லை.

//கேவலம் ஒரு கட்சித்தலைவனை விமர்சித்தால் உங்களுக்குக் கோபம் வருகிறதல்லவா? அதைவிட அதிகமாக இப்படிப்பட்ட தோழர்களை கொச்சைப்படுத்தும்போது எங்களுக்குக் கோபம் வரும்.

நாகரீகமாகவெல்லாம் விமர்சிக்க மாட்டோம். நாகரீகமான செயல்களைச் செய்பவரைத்தான் நாகரீகமாக விமர்சிக்கமுடியும்.//

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். யாரும் யாரையும் விமர்சிக்கலாம். விதிவிலக்கு எல்லாம் இதில் இல்லை. ஆனால் விமர்சிக்கும் போது சரியான சன்றுகளுடனும், நாகரிகமாகவும் விமர்சிக்க வேண்டும், ஒத்த கொள்கையுடையவர்களை விமர்சிக்கும் போது இன்னும் கூடுதல் கவனத்துடன் விமர்சிக்க வேண்டும்.
இந்த நிலைப்பாட்டுடன் தான் நான் எப்போதும் இருக்கிறேன். இதைப் பலமுறை நான் சொல்லிவிட்டேன்.

வீரமணி உட்பட அனைத்து பெரியார் தொண்டர்களையும் மேற்கண்ட நிலைப்பாட்டுடன் தான் எனது பார்வையை எனது கருத்தை செலுத்துகிறேன்.

இதுவரை எந்தத் தோழரையும் கொச்சைப்படுத்தியதில்லை. அது போல் யாரையும் குறைவாக மதிப்பிட்டதும் இல்லை. அவரவர்களுக்கு முடிந்ததை செய்தாலே போதும்.

உங்களைப் போல் நான் செயலில் ஈடுபடமுடியாது. நீங்கள் மிகப் பெரிய செயல் வீரர். எனது செயல் பாடுகள் உங்கள் பார்வையில் பூஜ்ஜியமாககூட இருந்து விட்டு போகட்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எனது செயல்பாடுகள் போதுமானது என நினைக்கிறேன்.

அதற்க்காக என்னை குறை கூற ,விமர்சிக்க உரிமை உண்டு. அது உங்கள் உரிமை. ஆனால் என்னை கொச்சைப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.

"உங்களைப் போன்ற முட்டுக்கட்டைகளை என்னசெய்வது? "


எப்போது யாருக்கு, எவருடைய முன்னேற்றத்தில் முட்டுக் கட்டை போட்டேன்? விளக்கினால் சரியாக இருக்கும். விளக்குவீர்களா?

நான் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு கடைபிடித்து வருகிறேன். நான் மற்றவர்களுக்கு உதவியாய் இருந்திருக்கிறேனே ஒழிய உபத்திரவமாய் உங்கள் மொழியில் சொல்வதானால் முட்டுக் கட்டையாய் இருந்ததில்லை. உதவி செய்ததினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன்.

//ஆட்சி அதிகாரத்தில் இருப்பவனுக்கு முதுகு சொறிவதற்காகச் செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது இப்படிப்பட்ட சாதி ஒழிப்புப் போராளிகளைக் காண / உறவை வளர்த்துக்கொள்ள செலவழியுங்கள்.//

என்னுடைய நல்லது கெட்டது போன்ற குடும்ப நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொண்டதில்லை. அது போல் எந்த அரசியல்வாதியையும் சராசரி மனிதனுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே கொடுப்பவன்.

இது தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் விசாரித்து தெரிந்து கோள்ளவேண்டுகிறேன். அப்படி யாருக்காவது முதுகு சொறிந்து விட்டிருந்தால் அதை நீங்கள் அம்பலப்படுத்தலாம்.

ஜாதி ஒழிப்புப் போரளிகளிடம் உறவை வளர்த்துக் கொள்ள அறிவுரை வழங்கியுள்ளமைக்கு மிக்க நன்றி.

இந்த வலைப்பூவின் நோக்கத்தில் கூட கீழ்வருமாறு தெரிவித்துள்ளோம்.

"நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்"
எங்களின் முழக்கமே இது தான்.

ஜாதி ஒழிப்புத் திருமணத்திற்கு பிறகு பெரியார் கொள்கைக்கே தொடர்பில்லாமல், நான் அந்தக்காலத்தில் ....... என்று பெருமை பேசும் நண்பர்களிடம் நான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன். மற்றபடி உண்மையான கொள்கைக்காரகளிடம் எப்போதும் போல் உறவாகத்தான் இருக்கிறேன்.

//நாகரீகமாகவெல்லாம் விமர்சிக்க மாட்டோம். நாகரீகமான செயல்களைச் செய்பவரைத்தான் நாகரீகமாக விமர்சிக்கமுடியும்.//

நான் பெரியாரை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவன் உங்களைப் போல் என்னால் எழுத முடியாது. இதைப் படிக்கும் போது பெரியாரின் கீழ்கண்ட வாசகம் தான் என் நினைவுக்கு வந்தது.

1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு செய்திகள் தொடர்பாக பெரியார் கொடும்பாவிகளைக் கொளுத்தினார்கள் அது தொடர்பாக பெரியார் கூறிய செய்தி இதோ:

"என் உருவத்தை மட்டுமல்ல; என்னையே செருப்பாலடித்தாலும் சரி லட்சியமோ, கவலையோ கொள்ளாதீர்கள். இது நமக்குப் புதிதல்ல; இதெல்லாம் நமக்குக் கிடைத்தால்தான் நமது கொள்கையில் லட்சியப் பாதையில் நாம் வேகமாகச் செல்லுவதாக அர்த்தம். இதற்குப் பதில் காரியமாக, எதிரிகள் வெட்கப்படும்படி தி. மு. க.வை வெற்றி பெறச் செய்யுங்கள். போதும்.
(டிசம்பர் 2008 - பெரியார் பிஞ்சு)

மாரியப்பன் அவர்களின் நிலையைப் பற்றி அறியும் போது நான் உண்மையிலேயே வேதனைப் படுகிறேன்.

வீரமணி அவர்கள் எனக்குத் தெரிந்து பழனியில் நோய்பாதிக்கப்பட்ட தோழருக்கு மருத்துவ உதவிக்காக பணம் கொடுத்து உதவிய செய்தியை அறிவேன்.

பட்டுக்கோட்டை அழகரிக்கும், புரட்சிக்கவிஞருக்கும் பெரியார் எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. அதில் உண்மையில்லை என்பதை வீரமணி அவர்கள் தான் ஆதாரத்துடன் விளக்கி நூல் வெளியிட்டுள்ளார்.

உங்களுடன் எந்த விவாதமும் செய்யக் கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் நீங்கள் என்னைப் பற்றிய தவறான வாதங்களை வைத்ததால் விளக்கம் கொடுக்க வேண்டியதாகி விட்டது.


இந்த வலைப்பூ நடத்துவது தொடர்பாக எனது நண்பர் (பெரியாரிஸ்ட் அல்ல)நீங்கள் இந்த வலைப்பூ நடத்துவது வீரமணி அவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு நான் வீரமணி அவர்களுக்காகவோ, மற்றவர்களுக்காவோ இப்பணியை செய்ய வில்லை. எனது கடமைகளில் ஒன்றாக, எனது திருப்திக்காக இதைச் செய்து வருகிறேன் என்று கூறினேன்.

எனவே நீங்கள் நாகரிகமாக எழுதினாலும் சரி கொச்சைப்படுத்தி எழுதினாலும் சரி ("மதம், பாலா போன்ற பெயரில் என்னை மிக மோசமாக எழுதியுள்ளனர்)

எனது பணியை எனது பார்வையில்,எனது நோக்கில் தொடர்ந்து செய்வேன்.

நன்றி.

அதி அசுரன் said...

முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்ற சொல்லைத் தவிர வேறு எதுவும் தனிப்பட்ட தோழர் மாரிமுத்துவைக் குறித்த விமர்சனங்கள் அல்ல.

தோழர் மாரியப்பன் அவர்கள் இந்த நிலையில் இருப்பதற்கு ஒரு பெரியாரியல்வாதியாக நானும் வெட்கப்படுகிறேன். அதனால்தான் அன்று செய்தி வந்ததும் நேரில் சென்றேன். அந்த செயலைத்தான் உங்களைப் போன்ற தோழர்களிடம் எதிர்பார்க்கிறேன். அந்தக் காலத்தில் புரட்சிக்கவிஞருக்கு உதவி செய்யப்பட்டதா? இல்லையா என்ற வறட்டு வாதமெல்லாம் எதற்கு? ஆதாரப்பூர்வமாக குமுதம் ரிப்போர்டரில் செய்தி வந்துவிட்டது. அதற்கு / அவருக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? பதிலை செயலில் காட்டுங்கள். நீங்களோ அல்லது நானோ எழுதி எழுதி செயல்வீரர் என்று நிருபித்துக்கொள்ள வேண்டியதில்லை.

தமிழ் ஓவியா said...

//முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்ற சொல்லைத் தவிர வேறு எதுவும் தனிப்பட்ட தோழர் மாரிமுத்துவைக் குறித்த விமர்சனங்கள் அல்ல.//

நான் யாருக்கும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. அப்படி ஏதாவது இருந்தால் விளக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.

நானும் எனது வருவாயில் என்னாலான சிறு தொகையை பொதுக் காரியங்களுக்கு செலவிட்டு வருகிறேன்.
நான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை இருப்பினும் முடிந்ததை செய்து வருகிறேன் எனது சக்திக்கு மீறிய வகையில் என்று கூடச் சொல்லலாம்.

நான் பாதிக்கப்பட்ட போது சென்னை சென்று வரக்கூட பணம் இருக்காது. எனது தந்தை கந்து வட்டிக்கு வாங்கி பணம் கொடுத்து அனுப்புவார்.

யாரையும் குறை கூறுவதை விட்டு விட்டு நம்மாலான உதவிகளை செய்வோம்.