Search This Blog

13.2.09

அரசாங்கம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யவேண்டும் - அண்ணா ஆசை நிறைவேறுமா?


இக்காலத்தில் உலவும் நாசத்தை விளைவிக்கும் நம்பிக்கைகளை அக்காலத்தில் காணமுடியாது. தமிழர் எண்ணம் பிறருக்கு அடிமையாகாதிருந்த காலத்தில் எப்படிக் காண முடியும்? அகநானூறு, புறநானூறுகளில் எந்தத் தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்பொழுது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்றோ எங்கேயாவது பாடலுண்டா? அல்லது படை கிளம்பி எதிரிகளுடன் போரிடும் பொழுதாவது வருணாஸ்திரம், வாயுவாஸ்திரம், மோகனாஸ்திரம், அக்கினியாஸ்திரம் ஆகிய அஸ்திரங்களில் எந்த அஸ்திரமாவது எதிரியை வீழ்த்தியபோது உதவியதாக எங்காவது பாடல் இருப்பதாகச் சொல்ல முடியுமா?

ஆனால் அரசாங்கம் இப்படித் தமிழனின் பண்டைப் பெருமையை எடுத்துக்கூறி இன்று மனதில் படர்ந்துள்ள மூடநம்பிக்கைகளை அகற்றுமாறு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதை ஆபத்து என்று கருதுகிறது. பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகங்களில் பகுத்தறிவு புகுத்தப்படுவதைத் தடை செய்கிறார் கல்வி மந்திரியார். மறைந்த வரலாற்றை மக்களுக்குக் கூறுவது சர்க்காருக்கு வகுப்புத் துவேஷமாம், நான் நிச்சயமாக சொல்லுகிறேன்; மாணவர்களை எங்களுடைய பிரச்சாரங்களைக் கேட்க வேண்டாம் என்று தடுத்தாலும், பல்கலைக் கழகத்தை மூடினாலும், பகுத்தறிவுக்கு தடை விதித்தாலும், பிரச்சாரத்தை சட்ட விரோதமாக்கினாலும், அறிவுப் பஞ்சமே உண்டாக அரசாங்கம் ஏற்பாடு செய்தாலும், மண்டபங்களிலே, மாந்தோப்புகளிலே, மலைச்சரிவுகளிலே, மரநிழலிலே, பாதை ஓரத்திலே, நாங்கள் பிரச்சாரம் செய்வோம். எங்களுடைய குரல் எங்கும் எட்டித்தான் ஆகும். எங்களுடைய கருத்து யாருடைய மனதிலே படவேண்டாம் என்று கருதினார்களோ, அவர்களுடைய மனதிலே புகுந்தே தீரும்.

பாடத் திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்தான் மக்களுக்குப் பழைமையினிடத்திலுள்ள பாசம் குறையும். மனத்திலுள்ள மாசு நீங்கும். காலத்திற்குத் தக்கதுபோல கருத்து வளரும். அப்பொழுது மக்கள் உணவுப் பஞ்சத்தால் மடியும் பொழுது, சாந்தி பருவ ஆராய்ச்சி நடக்காது. மழையைப் பற்றிய ஆராய்ச்சி நடக்கும். சொற்பக் காலத்தில் விளையக் கூடியப் பயிர்களைப் பற்றி ஆராய்ச்சி நடக்கும். ஆனால் பகுத்தறிவு, பாடப் புத்தகங்களில் நுழைவதை சர்க்கார் தடை செய்தால் நிச்சயம் சாந்தி பருவ ஆராய்ச்சிதான் நடக்கும். மேல் நாட்டார் நம் நினைப்பைக் கண்டு நகைப்பர்.

மதிப்புற்றிருக்க வேண்டிய பொருள் மதிப்பற்றிருப்பது நல்லதல்ல? விஞ்ஞானம் மதிப்புப் பெற மாணவர்கள் உழைக்க வேண்டும். மாணவர்கள் மக்களிடம் சென்று அவர்கள் மனதிலே உள்ள மாசை நீக்கவேண்டும். மனதிலுள்ள மாசை நீக்கி பகுத்தறிவைப் பரப்பிவிட்டுப் பிறகு விஞ்ஞானத்தைப் பற்றி பிரசாரம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் மனம் தெளிவடைவர்; அறிவைப் போற்றுவார்கள்; அஞ்ஞானத்தைக் கைவிடுவார்கள், உண்மையை நம்புவார்கள், பொய்யை நம்பமாட்டார்கள்.

-----------------------"நிலையும் நினைப்பும்" என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா பேசியபோது 23.9.1947

3 comments:

Unknown said...

அண்ணா நூற்றாண்டில் கலைஞர் அவர்கள் அண்னாவின் இந்த விருப்பத்தை நிறை வேற்ற வேண்டும் என்பது எனது ஆசை

நற்கீரன் said...

"தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்பொழுது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்றோ எங்கேயாவது பாடலுண்டா"

ஆழமான நோக்கு...

யாகம், தவம், மந்திரம் செய்து எதாவது ஒரு அறிவியல் நுட்ப உண்மையை புலர்த்தி இருக்கிறனரா? இல்லை என்றே தெரிகிறது.

அதே வேளை சிலருக்கு மகிழ்ச்சி தந்தா, தடுக நாம் யார். அவரது நொய், பால் இதர பொருட்களை நெருப்பில் போடுகிறார்கள்.

எங்கே பிரச்சினை என்றால் பள்ளியில் திணிப்பது. எல்லா சயங்களையும் அறிவியல் நோக்கில் சொல்லுத் தரலாம். ஆனால் சமய நோக்கில் பள்ளியில் சொல்லித் தருவது ஆரோக்கியமற்றது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்,

நன்றி நற்கீரன்.