Search This Blog

25.2.09

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இணைப்பும், ஒற்றுமையும் மிகவும் தேவை

பிரித்தாளும் சதிக்குப் பலியாகக் கூடாது!

சமூகநீதி இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பொதுவானது. இரு பிரிவினர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் விழுக்காடு தனித்தனியாக வரையறுக்கப்பட்டுள்ளது. யார் பங்கையும் யாரும் எடுத்துக்கொள்ள முடியாது.

இந்த இரு பிரிவினரும்தான் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டுக்கும்மேல். இரு பிரிவினருக்கும் பொதுவான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் எந்த அதிகாரவர்க்கமும், கொம்பர்களும் இட ஒதுக்கீட்டில் கை வைக்கத் துணியமாட்டார்கள்.

நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை என்பது 300-க்கு மேலாகும். இந்தப் பிரச்சினையில் 300 உறுப்பினர்களும் எழுந்து நின்றால், இவர்களின் சமூகநீதி உரிமையில் கைவைக்க யாருக்குத் துணிவு வரும்?

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரச்சினை வரும்போது, நமக்கென்ன வந்தது என்று பிற்படுத்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோருக்குப் பிரச்சினை வந்தால் நமக்கென்ன என்று தாழ்த்தப்பட்டவர்களும் ஒதுங்கி நின்றால், மாடுகளை சிங்கம் பிரித்த கதையாகத்தானே ஆகும்.

ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இட ஒதுக்கீடு அறவே கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின், உயர்ஜாதி ஆதிக்கக்காரர்களின் ஒரே எண்ணமாகும்.

40 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட முதல் நிலை (Class I Officers) அதிகாரிகளின் கூட்டம் டில்லியில் 1990 இல் கூடி நிறைவேற்றிய தீர்மானம் என்ன?

தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் உள்ள இட ஒதுக்கீடு நீக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி னார்களே - மறந்துபோய்விட்டதா?

இந்த மனப்பான்மை அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல - நீதித்துறையிலும்கூட இருக்கிறது என்பது வெளிப்படை.

இந்திரா - சகானி வழக்கில் (மண்டல் குழுப் பரிந்துரைகள் பற்றிய வழக்கு) ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில் தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் மோதவிடும் ஒரு சன்னமான வேலை செய்யப்பட்டதே.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்று கூறப்பட்டது.

வழக்கோ பிற்படுத்தப்பட்டவர்களுக்கான - வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்டதாகும். இதில் தாழ்த்தப் பட்டவர்கள் எங்கே வந்தனர்? எதற்காக தாழ்த்தப்பட்டவர் களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்கிற பிரச்சினை அங்கே வந்தது? சம்பந்தம் இல்லாமல் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதன் நோக்கம் என்ன?

மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கப்பட்டதால்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு சங்கடம் வந்தது என்று விவரம் தெரிந்த தோழர்கள்கூட விமர்சனம் செய்யும் ஒரு நிலையை உச்சநீதிமன்றமே உருவாக்கியது என்பதை மறந்து விடக்கூடாது.

தாழ்த்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்படுகிறது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய அந்த வாய்ப்பு இதுகாறும் அளிக்கப்படவில்லை. ஏனிந்த பாரபட்சம்? மக்களவைத் தலை வரின் அதிகாரத்தின்கீழ் உள்ள செயல்பாடு இது - எத்தனையோ முறையீடுகள் அவரிடம் கொண்டு செல்லப்பட்டும், அதனை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக்கொள்ளவில்லை - காரணம் அவர் ஒரு சட்டர்ஜி என்பதுதான்.

ஆணை வடிவத்தில் (ஜி.ஓ.) இருந்த இட ஒதுக்கீடு சட்டமாக (Act) கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் மசோதா கொண்டு வரும்போது, ஆணையாக இருந்தபோது, தாழ்த்தப் பட்டவர்களுக்கு இருந்த வாய்ப்புகள் சட்டமாக வரும்போது தடுக்கப்படுகின்றன என்றால் - இதன் நோக்கம் என்ன?

47 நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற ஒன்றைத் திணித்து, எந்தவித விவாதத்துக்கும் இடம் அளிக்காமல் இரண்டே நிமிடங்களில் மசோதாவை குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றுகிறார்கள் என்றால், இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சியையும், திட்டமிட்ட வகையில் செய்யப்படும் சதியையும் கவனிக்கவேண்டுமே!

இத்தகு சதிகள், சூழ்ச்சிகள் முறியடிக்கப்படவேண்டுமானால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இணைப்பும், ஒற்றுமையும் மிகவும் தேவை என்பதை உணரவேண்டும். இரு சமூகத் தலைவர்களுக்கும் இதில் அதிகப் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில், நமது எதிரிகள் நாணயமற்றவர்கள். நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


-------------------"விடுதலை" தலையங்கம் -25-2-2009

0 comments: