Search This Blog

13.2.09

பைபிளில் வரும் கருத்துகளை அரசுப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கக் கூடாது

பெருமைக்குரிய பிப்ரவரி 12

இந்நாள் பெருமைக்குரிய நாளே - ஏன்? மனிதன் எப்படி பரிணாம வளர்ச்சியில் உருப்பெற்றான் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்த சார்லஸ் டார்வின் பிறந்த நாள் இந்நாள் (1809).

கிறித்துவக் குடும்பத்தில் டார்வின் பிறந்திருந்தாலும், கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்கிற ஆதாம் - ஏவாள் கதையினை நம்பாமல், கடுமையான உழைப்பால், முயற்சியால், சிந்தனையால் - உயிர்கள் தோன்றிய விதத்தை விளக்கி நூல் எழுதினார்.

1831 டிசம்பர் 27 இல் எச்.எம்.எஸ். பீகிலி என்ற கப்பலின் மூலம் தென் அமெரிக்கா மற்றும் தென்கடல் முழுவதுமாகச் சுற்றித் திரிந்து பெரும் ஆராய்ச்சியில் தம்மை மூழ்கடித்துக் கொண்டார். இதற்காக இவர் எடுத்துக்கொண்ட காலம் அய்ந்தாண்டுகள் ஆகும். ஊர்வன, பறப்பன, தாவரங்கள் என்று பல வகையிலும் தம் சிந்தனையைச் செலவிட்டு இறுதியாக அவர் கண்டுபிடித்த அறிவியல் கொள்கைதான் உயிர்களின் பரிணாம வளர்ச்சி என்ற கொள்கை.

தொடக்கத்தில் அது எள்ளி நகையாடப்பட்டது. இறுதி வெற்றி பகுத்தறிவுக்கே - விஞ்ஞானத்துக்கே என்பதற்கு அடையாளம்தான் டார்வின் கொள்கை விஞ்ஞான ரீதியாக ஏற்கப்பட்டதாகும்.

எந்த கிறித்துவ மதம் டார்வின் முடிவை ஏற்க மறுத்ததோ, நாத்திகன் என்று பட்டம் கொடுத்தோ, அந்தக் கிறித்துவ மதத்தின் உலகத் தந்தை போப் ஜான்பால் 1996 ஆம் ஆண்டில் உலக மக்களுக்கு ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கினார்.

போன்டிபிகல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற நிறு வனத்துக்கு அவர் அனுப்பிய செய்தி ஒன்றில் புத்தறிவு பரிணாம வளர்ச்சித் தத்துவத்தினை அங்கீகரிக்கச் செய்கிறது. டார்வின் கொள்கையைப் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று கூறினார். (தி இந்து, 26.10.1996).


இங்கிலாந்து சர்ச்சும் டார்வின் கொள்கைகளை அன்று எதிர்த்ததற்காக 126 ஆண்டுகளுக்குப்பின் தன் மன்னிப்பைக் கோரியது. (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 15.9.2008).


விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் எல்லாம் அதன் தொடக்கத்தில் எதிர்ப்புகளைச் சந்திக்கத்தான் செய்தன. ஆனால், நாளாவட்டத்தில் அறிவு வளர்ச்சி பெறப் பெற விஞ்ஞானத்தின் முன் அஞ்ஞானமான மதம் மண்டியிட்டது என்பதே கடந்தகால, நிகழ்கால வரலாறாகும்.

1925 ஆம் ஆண்டில் கூட டார்வின் கண்டுபிடித்த பரிணாமத் தத்துவத்தைப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்ற சட்டம் இருந்தது. பட்லர் சட்டம் என்று அதற்குப் பெயர்.

டென்னஸி மாநிலத்தைச் சேர்ந்த ஸ்கோப்ஸ் என்ற ஒரு பள்ளி ஆசிரியர் அத்தடையை மீறி டார்வின் தத்துவத்தை வகுப்பறையில் பேசியதால், அவருக்கு நூறு டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க வேடிக்கை என்ன வென்றால், அந்த ஆசிரியருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கக் காரணமாகவிருந்த வழக்கறிஞர் தன் மனச்சான்று உறுத்தியதால், அந்த அபராதத் தொகையை அவரே கட்டினார். அதற்குப் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு அர்சன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் அதே மாதிரி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த முறை நீதிபதிகள் தவறு செய்யவில்லை. அமெரிக்க அரசமைப்புச் சட்டம், அரசுக்கும், மதத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கலாகாது என்று தெளிவாகச் சொல்கிறது என்று எடுத்துக்காட்டி, பைபிளில் வரும் கருத்துகளை அரசுப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியது.

எதிர்ப்புகளையும், தடைகளையும் கடந்து கடந்து இறுதியில் விஞ்ஞானம் வெற்றி பெற்றே வருகிறது.

2009 ஆம் ஆண்டு என்பது சார்லஸ் டார்வினின் 200 ஆம் ஆண்டு பிறந்த ஆண்டு என்பது ஒரு பக்கம்; அவர் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்த பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்கான 150 ஆம் ஆண்டும் இதுவேயாகும்!

உலகம் முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்கள், சிந்தனையாளர்கள் இந்த வகையில் இதனைக் கொண்டாடவேண்டும் - இதனை மய்யமாக வைத்து அறிவியலுக்கு மாறான மூடக் கருத்துகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவேண்டும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை வரும் 18 ஆம் தேதி சென்னையிலும், 19 ஆம் தேதி வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலும் சிறப்பான கருத்தரங் கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் இதற்கான பொறுப்பை சென்னையில் எடுத்துக்கொண்டிருக்கிறது.

உலகில் மிகக்கொடிய நோய் மூட நம்பிக்கை என்னும் கடவுள், மதம் சார்ந்த பக்தி நோயாகும். அதனை ஒழித்து மக்களை வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்ல டார்வின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாளில் உறுதிகொள்வோமாக!

----------- "விடுதலை" தலையங்கம் -12-2-2009

3 comments:

மணிகண்டன் said...

தலைப்பு அரசு பள்ளிகளுக்கு பதிலா பள்ளிகள்ன்னு இருக்கணும்.

Unknown said...

அரிய தகவல்கள் அடங்கிய கட்டுரை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மணிகண்டன்
&
தமிழ்