Search This Blog

11.2.09

முல்லைத்தீவை இலங்கை சிங்கள இராணுவம் நெருங்கிவிட்டதா?

அடுத்து என்ன?

முல்லைத்தீவை இலங்கை சிங்கள இராணுவம் நெருங்கிவிட்டது என்றும், இன்னும் 96 கிலோ மீட்டர் தூரம்தான் எஞ்சியிருக்கிறது என்றும் பரபரப்புச் செய்திகள் இலங்கை அரசு தரப்பில் வெளியிடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இன்னொருபுறத்தில் மூன்று லட்சம் மக்கள் முல்லைத் தீவில் இருக்கிறார்கள்; விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு அப்பாவிப் பொதுமக்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்துக் கொண்டு இருக்கிறது என்கிற குற்றச்சாற்று உலக அளாவிய நிலையில் ஓங்கி ஒலிக்கிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு, அந்தப் பகுதிக்குத் தாராளமாக பொதுமக்கள் வரலாம் என்று கூறி 48 மணிநேர அவகாசத்தைத் தருவதாக இலங்கை அரசு அறிவித்தது.

இலங்கை அரசின் வஞ்சகத்தை உணர்ந்த ஈழத் தமிழர்கள் அவ்வாறு செல்வதற்குத் தயக்கம் காட்டினார்கள். இலங்கை அரசின் வார்த்தைகளை நம்பிச் சென்ற பொதுமக்கள் குண்டுபொழிந்து அழிக்கப்பட்டனர்.


இந்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி - பாதுகாப்புப் பகுதிக்கு வரும் மக்களைத் தாக்கக் கூடாது என்று கர்ச்சனை செய்தார்.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல, நேற்றைய தினம் பாதுகாப்புப் பகுதிக்கு வந்த அப்பாவித் தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலுக்கு ஆளாகினர் என்றும், ஓட ஓட விரட்டப்பட்டனர் என்றும், இந்தத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

போர் நடக்கும் பகுதிகளில் காயம் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி போன்ற சேவைகளில் ஈடுபட்ட செஞ் சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் வெளியேறும்படி இலங்கை அரசு ஆணை பிறப்பித்துள்ளது. காயங்களுக்கு மருத்துவ உதவி செய்து வந்த மருத்துவமனைகளும் அழிக்கப்பட்டு விட்டன.

இந்தத் தகவல்கள் எல்லாம் வெளியுலகுக்குத் தெரியாமல் ஆக்குவதற்காக செய்தியாளர்களும் அப்பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. பச்சையான பாசிசம் ஆயிரங்கால் பாய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.

அய்.நா.வின் குரலும், அமெரிக்கா - இங்கிலாந்தின் கூட்டுக் குரலும், அய்ரோப்பிய யூனியன்களின் வேண்டு கோள்களும் ராஜபக்சே என்னும் நவீன ஹிட்லரால் துச்சமாக மதிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டுவிட்டன.

இன்னொரு தகவல் பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருக்கிறது. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அய்.நா. பாதுகாப்பு சபையில் மெக்சிகோ நாடு கொண்டு வரவிருந்த தீர் மானத்தை ருசியா தடுத்துவிட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது உண்மையாக இருக்குமானால், இதை விட பொதுவுடைமை - மார்க்சிய தத்துவத்தின்மீது குத்தப் பட்ட கரும்புள்ளி செம்புள்ளி வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஒரு பக்கத்தில் ருசியா, இன்னொரு பக்கத்தில் சீனா என்று இரு பக்கத்திலும் உள்ள கம்யூனிஸ்ட் நாடுகள் என்று கருதப்படும் இரு நாடுகளும் தேசிய இன உரிமைக்காகக் கிளர்ந்தெழும் மக்களை நசுக்குவதற்குத் துணை போகின்றன என்பது தலைகுனியத் தக்கதாகும்.

ஈழ மக்களின் நல்வாழ்வு மீது அனுதாபம் தெரிவிக்கும் இந்தியாவின் இடதுசாரிகள் இந்தத் தருணத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது வெகுமக்கள் மத்தியில் எழுந்து நிற்கக்கூடிய செங்குத்தான வினாவாகும்.

பாதுகாப்புப் பகுதிக்கு வந்து சேரும் மக்களைத் தாக்கக் கூடாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய பின்பும், சிங்களப் பேரினவாத அரசு அதனை சட்டை செய்யவில்லை என்ற நிலையில், இந்தியா அடுத்து என்ன செய்யப் போகிறது என்கிற வினாவும் தினவெடுத்து நிற்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகள் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ளுமா? அய்.நா. மன்றம் தன் கடமையைச் செய்யுமா? இந்திய அரசு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இலங்கை அரசைப் பணிய வைக்குமா?

இந்த வினாக்களை தமிழர்கள் மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள மனிதநேயவாதிகள் எழுப்புகிறார்கள். இதற்கு என்ன பதில்? உலகமே எதிர்பார்க்கிறது!

-------------------நன்றி:-"விடுதலை" 10-2-2008

0 comments: