Search This Blog

28.2.09

இட ஒதுக்கீடு - இன்றைய நிலை என்ன?

இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி என்ற பொருளில் இன்று பரவலாகப் பேசப்படுகிறது. இது உண்மைதான். மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் சமூக நிலையில் கீழே தள்ளப்பட்டுள்ளனர்.

இது மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட ஜாதி அமைப்பு முறை என்னும் திட்டமிட்ட சதியால் உருவாக்கப்பட்ட அவலமான நிலை.

கல்வி என்பதுதான் இருளை விரட்டி வெளிச்சத்தைத் தரும் உன்னதக் கருவி. ஆனால், பெரும்பாலான மக்களான இவர்களுக்கு கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, சாஸ்திரத்தைக் காட்டி கல்வி மறுக்கப்பட்டது. இருட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் உருட்டித் தள்ளப்பட்டனர்.


இந்த மக்கள் விடுதலை பெற வேண்டுமானால், வளர்ச்சி பெறவேண்டுமானால், அவர்களின் சமூக நிலை உயரவேண்டுமானால், கல்வி வாய்ப்பு முன்னுரிமையாக அளிக்கப்படவேண்டும்; அரசுப் பணிகளில் உரிய வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். இதனைத்தான் சமூகநீதி (Social Justice) என்று கூறி வருகிறோம்.


நேற்று (27.2.2009) சென்னை தேவநேய பாவாணர் நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற, நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்களால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகித்த - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சமூகநீதி என்ற சொல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டு இருப்பதை எடுத்துக்காட்டினார்.

We, the people of India having solemnly resolved to constitute India into a Sovereign Socialist Secular Democratic Republic and to secure to all its citizens: Justice, social economic and political; Liberty of thought, expression, belief, faith and worship; Equality of status and of opportunity; and to promote among them all.

Fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the nation... என்ற அரசமைப்புச் சட்டத்தின் பகுதியை எடுத்துக்காட்டி சமூகநீதிக்கு (Social Justice) முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து விளக்கினார்.

சமூகம், பொருளாதாரம், அரசியல் என்று தனித்தனியாக அரசமைப்புச் சட்டத்தில் பகுத்துக் காட்டி கூறப்பட்ட பிறகு, சமூகநீதி என்பதில் பொருளாதாரம் என்ற அளவுகோலைக் கொண்டு வந்து திணிப்பதில் என்ன நியாயம் என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.


நேற்று நடைபெற்ற அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நீதியரசர்கள் பி. சண்முகம், ஏ.கே. ராஜன், பேராசிரியர் சச்சிதானந்தம் ஆகியோரும், உச்சநீதிமன்றம் புதிதாகத் திணித்துள்ள கிரீமிலேயர் என்ற பொருளாதார அளவுகோல் என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று நிறுவினர்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணிப்பவர்கள் திறந்த போட்டியில் (Open Competition) அதே அளவுகோலைக் கொண்டுவர மறுப்பது ஏன்? அங்கும் இந்த அளவுகோலைக் கொண்டுவரவேண்டும் என்ற ஒரு கருத்தை வலியுறுத்தினால், அதற்கான மக்கள் கருத்தை ஒன்று திரட்டினால், கிரீமிலேயர் என்ற பேச்சின் பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டார்கள். நீதியரசர் ஏ.கே. ராஜன் அவர்கள் தெரிவித்த இந்தக் கருத்தினை சமூகநீதியாளர்கள், பிரச்சாரகர்கள், நாடெங்கும் கொண்டு சென்றால், நற்பயன் விளைவிக்கும். இந்தக் கருத்தினை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும், கழகச் சொற்பொழிவாளர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கின்றனர் என்றாலும், ஒரு பரவலாக அனைத்துத் தரப்பினரும் - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், தலைவர்களும், எழுத்தாளர்களும் ஒரு தீவிரத் தன்மையுடன் மக்கள் மத்தியிலே கொண்டு செல்வது சரியானதாகவிருக்கும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய ஜஸ்டிஸ் திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பொருளாதார அளவுகோல் (கிரீமிலேயர்) கொண்டுவரப்படவேண்டிய காலம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டால், வருமுன் தடுக்கும் நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சமூகநீதியாளர்களும் இணைந்து பலமான குரலை நாடு அதிரும் அளவுக்குக் கொடுத்தால்தான் சமூக அநீதியின் படையெடுப்புத் தடுக்கப்படும்.

சமூகநீதிக்கான அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட பகுதிகள் சாதகமாகவிருந்தாலும், அவற்றிற்குத் தவறான வியாக்கியானங்களைக் கொடுத்து, திரிபு செய்பவர்கள் நீதிபதிகளாகவே இருக்கின்றனர் என்ற கருத்தையும் தமிழர் தலைவர் பதிவு செய்யத் தவறவில்லை.

சட்டம் என்பது வியாக்கியானம் செய்யப்படும் தன்மையைப் பொறுத்துத்தான் உள்ளது என்று தந்தை பெரியார் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தொலைநோக்கோடு குறிப்பிட்டதையும் இந்த நேரத்தில் கவனிக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தை நீதிபதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்ற ஒரு நிலை உருவாகியிருப்பது - கவலைக்குரிய ஒன்றாகும்.

இட ஒதுக்கீட்டின் காரணமாக பலன் பெற்றவர்களே கூட, இந்தப் பிரச்சினையில் இப்பொழுது எழுந்து நிற்கும் பிரச்சினையின் ஆபத்துகளைப் புரிந்துகொள்ளாமலிருப்பது - இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு சாதகமான தன்மையாகும்.

இட ஒதுக்கீடு காரணமாக, கல்வி பெற்றதையும், உத்தியோகம் பெற்றதையும் மறந்துவிட்டு, அப்படி பெற்றது என்பது தமது தகுதிகள் குறைவாக பிறரால் மதிக்கப்பட நேரிடும் என்ற தவறான எண்ணத்தில், தாழ்வு மனப்பான்மையில்தான் அவ்வாறு நடந்துகொள்கின்றனர்.

பாமர மக்களைப் புரிய வைப்பதைவிட, படித்தவர்களை (பாசாங்கு தூக்கக்காரர்களை) புரிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய கடமையும் சமூகநீதியாளர்களுக்குக் கூடுதல் சுமையாக இருந்து வருகிறது.

நேற்றைய நூல் வெளியீட்டு விழா - பல வகைகளிலும் புதிய எழுச்சியை, உணர்ச்சியை உருவாக்கிக் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். நூலாசிரியர் நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்களால் எழுதப்பட்ட சமூகநீதி தொடர்பான அந்த ஆங்கில நூல் தமிழில் மொழி பெயர்க்கப்படவேண்டும் என்று தமிழர் தலைவர் அவர்களும், நீதியரசர் பி. சண்முகம் அவர்களும் கூறிய கருத்து செயல்படுத்தப்பட்டால், வெகுமக்கள் மத்தியில் சமூகநீதி உணர்வுகள் பரவிட வெகுவாகத் துணை புரியும் என்பதில் அய்யமில்லை.


-------------------- "விடுதலை"தலையங்கம் 28-2-2009

0 comments: