Search This Blog

9.2.09

கல்வி நிறுவனங்களில் இந்துத்துவா கண்காட்சியா?
இந்து ஆன்மீக சேவை கண்காட்சி என்ற ஒன்று சென்னை - அண்ணா நகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா விவேகானந்த வித்யாலயத்தில் கடந்த வெள்ளிமுதல் ஞாயிறுவரை நடைபெற்றுள்ளது.

இந்தக் கண்காட்சியில் ராமகிருஷ்ணமடம், ஆரிய சமாஜம், பிரம்ம குமாரிகள், சின்மயா மிஷன், ஷா அறக் கட்டளை, பதஞ்சலி யோக பீடம், நித்யானந்த தியான பீடம், அரவிந்த ஆஸ்ரமம் உள்ளிட்ட 30-க்கும் அதிகமான இந்து அமைப்புகள் அரங்குகளை அமைத்திருந்தனவாம்.

இந்த இடத்தில் அரசின் கவனத்திற்கு ஒன்றை முக்கியமாகக் கொண்டுவர விரும்புகிறோம். அரசு நடத்தும் பல பள்ளிகளுக்கும்கூட ஜெய்கோபால் கரோடியாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளன.

யார் இந்த ஜெய்கோபால் கரோடியா? அசல் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதி. ரூ.5 இலட்சம் கொடுத்தால் கொடுப்போரின் பெயர் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சூட்டப்படும் என்று அரசு ஆக்கி வைத்திருக்கிற ஆணையின்படி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். தன்மையானவர்கள் உள்ளே நுழைந்துவிட்டனர்.


ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு ரூ.5 லட்சம் என்பது ஒரு தொகையேயல்ல. எப்படியோ கல்வி நிறுவனங்களில் ஊடுருவ வசதி செய்து கொடுக்கப்பட்டது. (20 ஆண்டு களுக்குமுன்).


இப்படி பெயர் சூட்டப்படுவது என்கிற அரசின் அணுகு முறையில் போதிய விழிப்புத் தேவை. நாளைக்கே ரூ.5 லட்சம் செலுத்தி காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே யின் பெயரைக்கூடச் சூட்டச் சொன்னால் நிலைமை என்னவாகும்?


முழு பள்ளிக்கும் பெயரை வைக்காமல், கொடுக்கப்படும் நிதியின்மூலம் கட்டடப்படும் கட்டடத்தின் பகுதிக்கு நன்கொடையாளர் பெயர் சூட்டப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. இதுகூட சரியானதல்ல.

பார்ப்பவர்களுக்கு, இது அரசு பள்ளி என்று தெரிவதில்லை; யாரோ தனியார் நடத்தும் பள்ளி என்ற எண்ணம் தான் இதன்மூலம் ஏற்பட்டுவிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரின் பெயரில் அமையும்போது - அங்கு ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்க் கும்பல் உள்ளே நுழைந்து பிஞ்சு உள்ளங்களில் இந்துத்துவா நஞ்சைத் திணிக்கும் அபாயம் ஏற்படுவதை அரசு சிந்திக்கவேண்டும்.

ஏற்கெனவே இந்தியா தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. அக்கல்வி நிறுவனங்களில் எல்லாம் வன்முறைக் கலாச்சாரம் திணிக்கப்படுகிறது என்ற தகவல்கள் வெளிவந்ததுண்டு.

அப்படியிருக்கும்போது ரூபாய் அய்ந்து லட்சம் பெற்றுக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரின் பெயரைச் சூட்டும்போது, அதன் வீரியம் எத்தனை மடங்கு பெருக வாய்ப்புள்ளது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஒரு பள்ளியில் 30 இந்துத்துவா நிறுவனங்கள் கண்காட்சி அரங்குகளை நடத்துகின்றன என்றால், அதில் என்னென்ன இடம் பெற்றுள்ளன - எத்தகைய செய்முறைகளை அங்கு காட்டுகிறார்கள். எந்தெந்த அமைப்புகளுக்கு உறுப்பினர் களைச் சேர்க்கின்றனர் என்பதையெல்லாம் காவல்துறையின் புலனாய்வுத் துறை திரட்டியிருக்கிறதா என்று தெரிய வில்லை. அப்படி திரட்டியிருந்தால், இந்த ஜெய்கோபால் கரோடியா பள்ளிகளின் செயல்பாடுகள்பற்றி கல்வித் துறைக்கும், அரசுக்கும் உண்மைகள் தெரிய வந்திருக்க முடியும்.

நாட்டையே இந்துத்துவா பயங்கரவாதம் அரற்றிக் கொண்டிருக்கும் நிலையில், கல்வி நிறுவனங்களிலேயே இந்துத்துவா நஞ்சு ஊட்டப்படுவதும், பயிற்சிகள் அளிக்கப் படுவதும் பொதுமக்கள் மத்தியிலே, அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு கண்காட்சிகளை நடத்த அனுமதிப்பதும் என்றால், இந்தத் தீய சக்திகளுக்கு அரசின் கல்வித் துறையே பயன்பட்டுவிட்டது என்றுதானே பொருள்பட்டுவிடும்?

கல்வி நிறுவனங்களில் மதத் தொடர்பான கண்காட்சிகள் நடத்தக்கூடாது என்று கறாராக சுற்றறிக்கைகள் அனுப்பி, எச்சரிக்கவேண்டும்.


கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு நல்லறிவையும், சமூக உணர்வையும், அறிவியலையும், சகோதரத்துவத்தையும் ஊட்டவேண்டுமே தவிர, வெறுப்பை விதைத்து அவர்களை வெடிகுண்டுகளாக மாற்றிட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

--------------------- நன்றி:-"விடுதலை" தலையங்கம் -9-2-2009

5 comments:

Unknown said...

//கல்வி நிறுவனங்களில் மதத் தொடர்பான கண்காட்சிகள் நடத்தக்கூடாது என்று கறாராக சுற்றறிக்கைகள் அனுப்பி, எச்சரிக்கவேண்டும்.//

எந்த மதப்பிரச்சாரமும் பள்ளிகளில் நடக்கக்கூடாது என்பதுதான் எனது கருத்தும்.

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி வலைப்பூக்கள்

பாபு said...

இந்தச் சேதிய பாருங்க தோழர்.

இவனுங்க பள்ளிக்கூடத்துல வந்து பேரணி நடத்துவாய்ங்களாம், அதப் பத்திரிககாரவுங்க படம் பிடிச்சா கைது பண்ணுவாய்ங்களாம், என்ன தேசமடா!