Search This Blog

4.2.09

பெரியார் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமா?


பல்கலைக் கழகத்தில்
பாடம் நடத்திய ஒரு பல்கலைக் கழகம்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் "அண்ணா பொது வாழ்வியல் மய்யம்!" என்ற அமைப்பு கால் நூற்றாண்டாக இயங்கி வருகிறது. தலைவராக பேராசிரியர் முனைவர் இரா. தாண்டவன் அமைந்து அரும் பணியாற்றி வருகிறார்.

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 15 தொடங்கி இவ்வாண்டு செப் டம்பர் 25 வரை மாதம் ஒரு நிகழ்ச்சி என்ற பாங்கில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் அண்ணா நினைவு நாளாகிய நேற்று (3.2.2009) காலை 10.30 மணிக்கு சென்னைப் பல்கலைக் கழகம் நூற்றாண்டு விழாக் கட்டடத்தில் "ஈரோடு முதல் காஞ்சிவரை" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற ஏற்பாடாகி இருந்தது.

விழாவுக்குப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் எஸ். இராமச்சந்திரன் தலைமையேற்றுப் பெருமை சேர்த்தார்.

துறைத் தலைவர் முனைவர் இரா. தாண்டவன் வரவேற்புரை வழங்கினார்.

முனைவர் இரா. அரங்கசாமி

நான் அறிந்த அண்ணா எனும் தலைப்பில் மேனாள் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. அரங்கசாமி உரை நிகழ்த்தினார்.

உரை நிகழ்த்தினார் என்பதைவிட குமுறினார் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். கோடை இடியாக அமைந்தது அவ்வுரை என்று கூறலாமா? என்பது பட்டி மன்றம் வைத்து முடிவு செய்யவேண்டிய ஒன்றாகும்.

அந்தக் குமுறலில் - கோடையிடியில் நியாயமான, உண்மையான மின்னல் கீற்றுகள் நடுநாயகமாக இழையோடின என்பதை யாரே மறுக்க முடியும்?

நம் நாடு தமிழ்நாடு, நம் தாய்மொழி தமிழ் மொழி, வாழ்கின்ற நாமோ தமிழர்கள்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தமிழ்நாடு என்பதற்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்டுவதற்கு ஒரு அரசு வரவேண்டுமா?

தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டு சட்டம்போட்டுதான் நிறுவவேண்டும் என்ற நிலை ஏற்படவேண்டுமா?

தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்சகனாக இருக்க உரிமை உண்டு என்பதற்குப் போராட வேண்டுமா? அதற்காக ஒரு அரசு வந்து சட்டம் இயற்றித்தான் தீரவேண்டுமா?

தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழில் வழிபாடு நடத்தப் பட வேண்டும் என்பதற்குப் போராடும் நிலையும், சட்டம் இயற்றும் நிலையும், அதற்காக நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்கும் ஒரு நிலையும் ஏற்பட்டிருப்பது பெருமைக்குரியது தானா?

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி சொல்வார்களே, அந்த அளவுக்குத் தமிழன் மூளையில் அடிமை விலங்கு பக்தி விலங்கு பூட்டப்பட்டிருப்பது தானே காரணம்?

நான் நினைத்துப் பார்க்கிறேன் - தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர் தோன்றாது போயிருந்தால்... நினைக்கவே முடியவில்லை என்னால்... என்று அவர் கொப்பளித்தார். ஒவ்வொரு சொல்லும் நெருப்புத் துண்டமாக அவரின் இதயச் சூளையிலிருந்து வெடித்து வெளியில் வந்து விழுந்தது என்பதுதான் உண்மை.

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இங்கே சிறப்புரை ஆற்ற இருக்கிறார் என்றால், அது ஒரு பெரிய பேறு.

எந்த ஆட்சி வந்தாலும், அந்த ஆட்சி தந்தை பெரியார் கிழித்த கோட்டை தாண்டி நடைபோட முடியாது. அப்படிப் போட்டால், அந்த ஆட்சி நிலைக்காது.

அரசியல் பக்கம் போகாத, பதவிப் பக்கம் போகாத எனக்குச் சொந்த புத்தி தேவையில்லை; தந்தை பெரியார் தந்த புத்தியே போதும் என்று சொல்லுகிற தமிழர் தலைவர் மானமிகு வீர மணி அவர்கள்தான் எந்த ஆட்சிக்கும் வழிகாட்டி என்றால் சாதாரணமா? அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 69 சதவிகிதம் - யார் காரணம்? எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த வருமான வரம்பு ஒழிக்கப்பட்டது யாருடைய முயற்சி யால்?

நன்றியோடு நினைவு கூர்கிறோம் - திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் சீரிய முயற்சியால், ஓயாத உழைப்பால்! என்று அடுக்கடுக்காக பேராசிரியர் அரங்கசாமி அவர்கள் அனல் குண்டத்திலிருந்து அள்ளி வீசிய அக்னி மழை பார்வையாளரை நிசப்தத்தில் நெட்டித் தள்ளியது.

தமிழர் தலைவர்

தமிழர் தலைவர் உரையாற்ற தொடங்குமுன் இணைப் புரை வழங்கிய தமிழகம் அறிந்த பேச்சாளர் நாப்பறை கொட்டும் கருத்தாளர் பேராசிரியர் தி. இராசகோபாலன் அவர்களின் அறிமுகச் சொற்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை.

அய்யா பெரியார் ஒரு பல்கலைக் கழகம். அண்ணா ஒரு பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக் கழகங்களைப்பற்றி ஒரு பல்கலைக் கழகத்தில் பேச இருப்பவரோ இன்னொரு பல்கலைக்கழகம் என்று அவர் சொன்னபோது, நயமும், வினயமும் இருந்ததால் அரங்கம் ஆர்ப்பரித்தது.

இதோ தமிழர் தலைவர் பேசுகிறார்:

1. சென்னைப் பல்கலைக் கழகத்தில் நான் பேசுவதற்கான தகுதி எனக்கு என்ன என்ற வினாவை எழுப்பி அவரே பதிலும் சொன்னார்.

நான் சென்னை சட்டக்கல்லூரியில் படித்தேன். அந்த வகையில் நான் சென்னைப் பல்கலைக் கழக மாணவன்தானே! (அப்பொழுது தனியாக சட்டப் பல்கலைக்கழகம் கிடையாது. சென்னை சட்டக் கல்லூரியும், சென்னைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்ததுதான்!).

2. அய்யாவை அண்ணா பிரிந்தாரா?

இந்தக் கேள்விக்கு அண்ணாவைவிட்டே பதில் சொல்ல வைத்தார் ஆசிரியர்.

பெரியார் இருக்கிற இடத்தில் நானிருப்பேன் - நானிருக்கிற இடத்தில் பெரியார் இருப்பார் - அவருடைய கருத்துகள் இருக்கும் என்று நாகரசம்பட்டி பள்ளி விழாவிலே (19.1.1967) முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரைக் கொத்தி லிருந்து ஒரு மலரைப் பறித்துக் கொடுத்தார் கழகத் தலைவர்.

3. பெரியார் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமா?

இன்றைய தினம் பெரியாருடைய குடும்பத்தில், ஒரு பெரிய குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்து, ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு திக்கிற்குச் சென்று, நான் இந்தத் திக்கில் போய் இதைக் கொண்டு வந்தேன்; அண்ணன் அந்தத் திக்கிலே போய் அதைக் கொண்டு வந்தான் என்று சொல்வதைப் போல், அவருடைய பிள்ளைகள் எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சியில் அவர்கள் இல்லை? எந்தப் பிள்ளையும் ஒருவருக்கொருவர் சோடை போனவர்கள் அல்லர்; அவர்கள் எதை எதைப் பெறவேண்டுமென்று கருதுகிறார்களோ, அதைப் பெற்று குடும்பத்தில் நடக்கிற விழாவில் அவர்கள் பெற்றவற்றை பெரியார் அவர்களிடம் காட்டி, இதோ பாருங்கள் நான் பெற்றது என்று ஒவ்வொருவரும் காட்டும்போது, உரிய புன்னகையோடு அவற்றைப்பார்த்து, நான் கேட்டது இது அல்லவே! என்கிறார்கள். அவர்கள் கேட்டதைப் பெற்றுத் தரத்தக்க ஆற்றல் யாரிடத்திலும் இல்லை. அப்படிப் பெற்றுத் தரும் பொறுப்பு அவர்களி டத்தில்! போற்றிப் பாதுகாத்துக் கொள்ள என்னாலே முடி யும்; அது கிடைத்தால் யாருக்கு என்ன பங்கு என்று கேட்கச் சிலர் இருக்கலாம்! என்று முதல்வர் அண்ணா அவர்கள் திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியார் விழாவிலே (17.9.1967) ஆற்றிய உரைக் களஞ்சியத்திலிருந்து இந்த ஒரு கருவூலத்தை அவையோர்க்கு எடுத்து வழங்கினார்.

4. அண்ணாவின் அடக்கம் எத்தகையது?

அண்ணா அவர்கள் முதலமைச்சரானாலும் அவர் அய்யாவிடம் கற்ற அந்தப் பாடம், பணிவு, மரியாதை காட்டும் பண்பு என்பவை தனித்தன்மையாகும்.

முற்றிய நெற்கதிர் எப்படி தலைசாய்ந்து இருக்குமோ, அதைப் போன்றது அண்ணாவின் அடக்கம்.

ஆட்சியில் நாம் இருப்பதால் நம் தோழர்கள் தலைநிமிர்ந்து நடக்கின்றனர். ஆட்சியின் சுமையை அறிந்து நானோ அந்தக் கனத்தினால் தலை குனிந்து செல்கிறேன் என்றார். முதலமைச் சராக இருந்தபோதுகூட சூழ்நிலையின் கைதியாக இருக்கி றேன் என்று சொன்னதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரத்திலும் இந்த அமைச்சர வையையே அய்யாவுக்குக் காணிக்கையாக்குகிறேன் என்றாரே!

தந்தை பெரியாரைப்பற்றிச் சொல்லும்போது அண்ணா குறிப்பிட்டதைக் கவனிக்கவேண்டும்.

பெரியாரை லட்சகணக்கானோர் பின்பற்றிக் கொண்டு வருகிறார்கள். அவர்களிலே ஒருவனாக இருப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய உளம் கனிந்த நன்றியை நான் பெரியார் அவர் களுக்குக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன். அவர்களுடைய அன்பினையும், ஆதரவினையும் பெற்றவன் என்ற முறையில், அவர்களுக்கு என்னிடமிருக்கிற தனிப்பட்ட பாசத்திற்கு என்னுடைய இதயம் கனிந்த, கனிவு நிறைந்த, நட்பு மிகுந்த, தூய்மை நிறைந்த வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிஞர் அண்ணா அவர்கள் அய்யாவின் பிறந்த நாள் விழாவிலே பங்கேற்று திருச்சியில் (17.9.1967) உரையாற்றிய போது ஆற்றிய உரையின் ஒரு கற்கண்டுத் துண்டு இது.

அய்யாவிடம் வணக்கத்தைத் தெரிவிக்கும்போது எப்படிப் பட்ட சொற்களையெல்லாம் அண்ணா கையாண்டார் என்பதை எடுத்து விளக்கினார் விடுதலை ஆசிரியர்.

இதயம் கனிந்த, கனிவு நிறைந்த, நட்பு மிகுந்த, தூய்மை நிறைந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணா அவர்கள் அளந்து அளந்து சொற்களைப் பயன்படுத்திய அந்தப் பாங்கை, பண்பாட்டை, அடக்கத்தை மாணவர்கள் கற்கவேண்டும் என்றார் தமிழர் தலைவர்.

5. அண்ணாவின் சாதனை என்ன?

தன்னுடைய சாதனைகளாக மூன்றினை அண்ணா அவர்கள் குறிப்பிட்டதை ஆசிரியர் எடுத்துக்காட்டினார்.

சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கொடுத்தது.

தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை, இரு மொழிதான் இங்கு என்று ஆக்கியது.

இந்த மூன்று சாதனைகளையும் குறுகிய ஆட்சிக்காலத்தில் சாதித்து இருக்கிறோம்.

எங்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வருவோர் யாராகவிருந் தாலும், இவற்றை சாதித்து இருக்கிறானே அண்ணாதுரை என்று கோபம் வரும் - இதனை நீக்கவேண்டும் என்று கூடத் தோன்றும், அதேநேரத்தில், இதில் கை வைத்தால் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ற பயமும் ஏற்படும்.

அந்தப் பயம் உங்களுக்கு உள்ளவரை இந்த நாட்டில் அண்ணாதுரைதான் ஆண்டு கொண்டிருக்கிறான் என்று அறிஞர் அண்ணா அவர்கள் பேசியதை தமிழர் தலைவர் எடுத்துச் சொன்ன சேதி பலருக்கும் புதிதாக இருந்தது - பலத்த கரவொலி அதிர்ந்தது.

6. அண்ணாவின் இலட்சியப்பற்று எத்தகையது?

தாய்த்திரு நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் சூட்டப்பட்டது. அதற்கான விழாவிலே அண்ணா அவர்கள் கலந்துகொண்டார். உடல் நலம் கருதி முதல்வர் அண்ணா அவர்கள் பங்கேற்கவேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள். ஆனாலும், அண்ணா அவர்கள் அதனை ஏற்கவில்லை.

அந்த விழாவிலே பங்கு கொண்டு, மருத்துவர்கள் சொன்ன தையும் எடுத்துச் சொல்லி, என் தாய்த்திரு நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதைக் கொண்டாடும் விழாவிலே கலந்துகொள்ளாத இந்த உடம்பு இருந்து என்ன பயன்? என்று அண்ணா அவர்கள் சொன்னார்களே, அதனை திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் கூறியபோது பார்வையாளர் முகங்களில் ஒரு வாட்டம் - ஏக்க ரேகைகள் முற்றுகையிட்டன.

-------------------- மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி...

1 comments:

Unknown said...

மின்சாரம் அவர்கள் "பல்கலைக் கழகத்தில்
பாடம் நடத்திய ஒரு பல்கலைக் கழகம்"
என்ற தலைப்பில் துக்குத்துத் தந்த செய்திகளைப் படிக்கும் போது நேரிடையாக நம் கண்ன் முன்னே நிகழும் நிகழ்வுகள் போல் சிறப்பாக இருந்தது.