Search This Blog

28.2.09

பாரதியஜனதா தூக்கிப் பிடிக்கும் பிதாமகனின் பாரதிய பண்பாடு இதுதான்.

முட்டுச் சந்தில் பா.ஜ.க.பாரதிய ஜனதாவின் அரசியல் ஒரு முட்டுச் சந்தில் நின்று கொண்டு இருக்கிறது.

அதன் முக்கிய கூட்டணி கட்சி என்பது அய்க்கிய ஜனதா தளம்; அதன் செய்தித் தொடர்பாளர் சிவானந் திவாரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்:

நாங்கள் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்தாலும், அத்வானியை முன்னெடுத்துச் செல்வதை ஏற்பதாகயில்லை என்று கறாராகவே கூறியிருக்கிறார்.

பா.ஜ.க.வோ 15-ஆவது மக்கள வைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கான பிரதமர் வேட்பாளராக அத்வானியை முன்னிறுத்தியுள்ளது.

இதற்கிடையே முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் பிரதமராவற்கான வேட்பாளர் தானே என்று மார்தட்டி நிற்கிறார், எனக்கு அந்தத் தகுதியில்லையா? என்று கேட்கிறார்.

இந்தியாவில் இருக்கக் கூடிய தொழிலதிபர்கள், பணத் திமிங்கலங்கள் - ரத்தன் டாட்டா, அனில் அம்பானி, சுனில் மிட்டல் போன்றவர்கள் - நரேந்திரமோடிதான் பிரதமராக வர வேண்டும் என்று கொடி பிடிக்கின்றனர்.

மக்களவைக்குத் தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பிரதமர் பதவியை, முன்னதாகவே அறிவிப்பது என்ன ஜனநாயகம்? என்ற கேள்வியும் இன்னொரு பக்கத்தில் எழுந்துள்ளது. இங்கு என்ன அதிபர் தேர்தலா நடக்கிறது?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்ற வாளியாக இருக்கக் கூடியவர் - இந்தியாவுக்கான பிரதமரா? என்ற வினா விவேகம் படைத்தவர்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது. குற்றச்சாற்று என்றால் சாதாரணமானதல்ல - இ.பி.கோ 147,153(ஏ) 149, 153(பி) மற்றும் 505 - கலவரம் விளைவித்தல், மக்களிடையே மத மோதலை உருவாக்குதல்; சட்ட விரோதமாகக் கூடுதல், ஒரு சமூகத்துக்கு விரோதமாக இன்னொரு சமூ கத்தைக் குற்றம் செய்யத் தூண்டுதல் - இது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பவர் தான் இந்தியாவின் பிரதமர் என்றால் இதைவிடத் தலைக்குனிவு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?

இந்தக் கல்யாணத் திருக்குணங்கள் உள்ளவர்தான் இந்தப் பாரதப் புண்ணிய பூமிக்கு மிகப் பொருத்தமான பிரதமர் என்கிறது சோ கூட்டம்!

பாபர் மசூதியை இடிக்கச் சொல்லி அத்வானி தூண்டுதல் செய்து உரையாற்றியதற்கு வீடியோ சாட்சியமெல்லாம்கூட உண்டு.


இந்தியாவில் இருக்கும் நீதிமுறைக் குறைபாடும், நிருவாகத்தின் ஊனத்தாலும்தான் இது போன்ற மனிதர்கள் எல்லாம் சிறையில் இருப்பதற்குப் பதிலாக வீதியிலே உலா வந்து கொண்டி ருக்கிறார்கள்.

தனிப்பட்ட பண்புகளை எடுத்துக் கொண்டாலும் - அத்வானியின் மருமகள் இவருக்குக் கொடுத்த சான்றிதழே போதுமானது. முன்னாள் பிரதமர் வாஜ்பேயிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.என். சுதர்சனுக்கும் அவர் எழுதிய கடிதம் இதோ:

கனத்த மனதுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பாரதிய ஜனதா புதிய தலைவராக அத்வானி தேர்வு செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டதும், சில பழைய நினைவுகள் என் மனதில் நிழலாடின. அந்தச் சம்பவங்களை வார்த்தைகளால் என்னால் விளக்க முடியாது.

ஒவ்வோர் இந்தியனும், ஒவ்வோர் இந்துவும் சமூகத்தில் உள்ள அவமானத்தால் தலை தொங்கவிட வைக்கும் நிகழ்ச்சிகள் அவை. பொருளாதார ரீதியிலும், ஒழுக்கரீதியிலும், மற் றும் ஒவ்வொரு வழியிலும் அத்வானி ஒரு முழுமையான ஊழல்வாதி. நல்ல நடத்தையில் லாத அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதற்குப் பதிலாக அவரைக் கட்சித் தலைவர் ஆக்கியுள்ளீர்கள். அவரது நடவடிக்கைகள் பற்றி பொது மக்களுக்கு இன்னமும் தெரியாது.

இன்று குறிப்பிடும் விஷயங்கள்பற்றி ஏற்கெனவே தங்களுக்குத் தெரிவித்துள்ளேன்.

இந்தத் தகவல் வெளியே வந்தால் பாரதிய ஜனதா பற்றிய கவுரவமும் தகர்ந்து போகும். மாமனாருக்கும் மருமகளுக்கும் இருக்க வேண்டிய நல்லுறவு மீதான நம்பிக்கையைப் பொது மக்கள் இழந்து விடுவார்கள். அத்வானி மாமனராக இருந்த போதிலும் அந்த உறவின் புனிதத்தை ஒரு போதும் புரிந்து கொண்டதில்லை. என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தினார். பொது வாழ்வில் அவர்பற்றிய மதிப்பீட்டுக்கும், வீட்டில் அவர் நடந்து கொள்ளும் முறைக்கும் சம்பந்தமேயில்லை

(ஆதாரம்: Times of India 29.11.2004)


பாரதியஜனதா தூக்கிப் பிடிக்கும் பிதாமகனின் பாரதிய பண்பாடு இதுதான்.

அத்வானி - சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயின் மோதல் இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. மும்பைப் பொதுக் கூட்டத்திற்குச் சென்ற அத்வானி சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயைச் சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை - இதுகுறித்து பல்வேறு யூகங்கள் பேசப்படுகின்றன.

தேசியவாத காங்கிரசுடன் தனி ஆலாபரணத்தை சிவசேனா தலைவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை போயஸ் தோட்டத்தின் கதவு கருணை காட்டாதா என்று கண் விழித்துக் காத்திருக்கின்றது பா.ஜ.க..

பா.ஜ.க.வின் இந்திய செயலாளர் திருநாவுக்கரசர் பச்சையாகவே கட்சியின் ஆசையை மனந்திறந்து வெளியிட்டுள்ளார்.

வலுவிழந்து போன காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காமல் அடுத்து ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.வை அழைத்திருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க. மாநில வழக்கறிஞர்களின் கூட்டத்திலேயே இப்படி மனந் திறந்திருக்கிறார்.

பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி அமைத்து 27 இடங்களை வென்றோமே என்று பழைய நெல்லைக் குத்திக் காட்டுகிறார்.

அதிமுக பொதுச் செய லாளர் வெளிப்படையாக காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த நிலையிலும், அம்மா - தாயே! என்று யாசகம் கேட்கும் அளவுக்கு பா.ஜ.க. பட்டுப் போய்க் கிடக்கிறது.

காங்கிரசையே கூடுதல் சுமை - எக்ஸ்ட்ரா - லக்கேஜ் என்று சொன்ன செல்வி ஜெயலலிதா, பா.ஜ.க.வை எந்த இடத்தில் நிற்க வைத்துப் பார்ப்பார் என்று தெரியாதா?

தேர்தல் முடிவுகளுக்குப் பின் அம்மையார் எடுக்கும் முடிவு வேறாகயிருக்கலாம்; ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில் பதவிக்காக சுயநலனுக்காக எந்த கோட்டையும் தாண்டக் கூடியவராயிற்றே! அதுவும் அக்கட்சியில் இருந்த - இன்னும் சொல்லப் போனால் - அம்மையாரை அரியணையில் அமர வைக்க ஒரு கட்டத்தில் காரணமாகவிருந்த திருநாவுக்கரசருக்குத் தெரியாமலா இருக்கும்?

கொள்கை ரீதியாகப் பார்க்கும் பொழுது இந்துத்துவா அணியில் செல்வி ஜெயலலிதா இருப்பதுதான் நூற்றுக்கு நூறு சரியாக இருக்க முடியும்.

தேர்தலில் இலாபம் என்ற கண்ணோட்டத்தில் பா.ஜ.க. வின் கூட்டு இடிக்கிறதே - என்ன செய்ய!

இன்னொன்றும் இதில் உண்டு. பிரதமர் நாற்காலியின்மீது ஜெயலலிதா அம்மையாருக்கு ஒரு கண்ணிருக்கிறது. தேவேகவுடாவுக்கு பரிசுச் சீட்டு விழுந்தது மாதிரி விழாதா என்ற ஆசையில் அண்ணாந்து பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்கி றார். அப்படியிருக்கும்போது அத்வானியைப் பிரதமராக அறிவித்துள்ள பா.ஜ.க.வுடன் எப்படி கூட்டுச் சேர மனம் இடம் தரும்?

எது எப்படியிருந்தாலும் ஜெயலலிதாவின் அதிமுக வுடன் கூட்டுச் சேர்பவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு அபாயம் இருந்து கொண்டே யிருக்கும்.

அதற்குச் சாட்சியம் - முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயிதான். ஜெயலலிதாவுடன் தாம் கூட்டணி சேர்ந்து கொண்டு ஆட்சி செய்த காலம் எனது நிம்மதியைத் தொலைத்த காலம் என்று ரத்தக் கண்ணீர் வடித்து பேட்டி கொடுத்ததை மறந்து போய் விட முடியுமா?

பா.ஜ.க.வைப் பொறுத்த வரை தன்வசம் இருந்த பல மாநில ஆட்சிகளைப் பறி கொடுத்திருக்கிறது. புதிதாக கருநாடகம் கிடைத்தாலும் எடியூரப்பா ஆட்சி குறைந்த கால அளவிலேயே மக்களின் வெறுப்பு நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறது. சங்பரிவார்கள் போடும் ஆட்டம் சகிக்க முடியவில்லை. வெகு மக்கள் மத்தியில் கடும் வெறுப்பு மேலோங்கி நிற்கிறது. இந்துத் தலிபான்களாக சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் போட்டுக் காட்டுகின்றனர். சட்டமன்றத்திற்கு நாளைக்கே தேர்தல் வைத்தாலும் ஆட் டம் காலி என்ற நிலையில் குறுகிய காலத்திலேயே வாக்காளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்து விட்டார் இடையூறப்பா!

மாற்றுக் கட்சிகளை விலைக்கு வாங்கும் சந்தையில் அது இறங்கியுள்ளது; இதற்கு ஆபரேசன் லோட்டஸ் என்று பெயராம். மைசூர் மாவட்டம் மாண்டியா நக ராட்சியில் வெறும் இரண்டே உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு இப்பொழுது அந்த நகராட்சி பா.ஜ.க.வின் கையில். எப்படித் தெரியுமா? மதச் சார்பற்ற ஜனதா தளம் 24, காங்கிரஸ் 5, சுயேட்சைகள் -6 அத்தனைப் பேரும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். எப்படியிருக்கிறது?

ராமன் கோயிலைக் கட்டியே தீருவோம் என்று வில் அம்புடன் தேர்தல் களத்தைச் சந்திக்க இருக்கிறது பா.ஜ.க. சமூக, பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் கைவசம் இல்லை ராமனைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளதால் கூட்டணி கட்சிகள் முகம் சுளிக்கின்றன.

இது அவர்களுக்கு எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும் என்பதை இன்றைக்கே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.

அதுவும் ராமன் கோயில் என்று சொல்லி இன்னொரு மதக்காரர்களின் வழி பாட்டுத்தலத்தை இடித்த வன்முறையாளர் - இந்தக் குற்றத் துக்காகச் சிறைக் கொட்டடியில் இருக்க வேண் டிய ஒருவர் - என்ன தைரியம் இருந்தால், பாபர் மசூதியை இடித்ததோடு அல்லாமல் அதே இடத்தில் கலவரத்தைத் தூண்டுவதற்காகவே ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று சொல்லுவார்? இதனை எப்படி அனுமதிக்க முடியும்? என்ற சூறாவளிக் கேள்வி இந்தக் கூட்டத்தின் அஸ்தி வாரத்தையே கலகலக்கச் செய்து விடுமே!

கட்சிகளுக்கு அப்பாற் பட்ட மக்களிடம் ஒரு கருத்து குத்திட்டு நிற்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமான மதச் சார் பின்மையில் நம்பிக்கை இல் லாத இந்தக் கூட்டம் ஆட் சிக்கு வந்தால் இந்தியாவே குஜராத்தாக மாறிவிடும் அபாயம் தலைக்கு மேல் தொங்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

இவ்வளவு பலகீனங்கள் பா.ஜ.க. பக்கம் இருந்தாலும், இன்றைய ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸின் நிலை என்ன? அது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யவில்லை? என்ற நேர்மையான கேள்விகள் மக்கள் மன்றத்தில் உண்டு.

குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதி அளித்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான - இவர்கள் விஷயத்தில் காங்கிரஸ் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போக்கு - காங்கிரசின் வேருக்குள் ஒளிந்திருக்கும் பார்ப்பனியத்தின் நச்சுக் கொடுக்கைத்தான் அடையாளம் காட்டும்.

பா.ஜ.க. ஒன்றும் சமூகநீதிக்காக உயிரை விடும் கட்சியல்ல; வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்ததே - சமூகநீதிக்காவலராக வி.பி.சிங் இருந்த காரணத்தால்தானே.

அதே நேரத்தில் காங்கிரஸ் செய்திருக்க வேண்டிய ஒன்றை செய்யத் தவறியதால் அதன் பலனை எதிர்க்கட்சிகள் அனுபவிக்கும் ஆபத்தினை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னும்கூட குடிமூழ்கி விடவில்லை. குடியரசுத் தலைவர் மூலமாக அவசரச் சட்டங்களை இயற்றி (Ordinance) பெரும்பான்மை வாக்காளர்களான தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோ ரின் நல்லெண்ணத்தைக் காப்பாற்ற எப்படியும் முயற்சிக்க வேண்டும். முயற்சிப் பார்களா?

--------------- மின்சாரம் அவர்கள் 28-2-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரை

0 comments: