Search This Blog

24.2.09

தமிழ் இலக்கியத்தில் ஜாதி எதிர்ப்பு

பண்டைத் தமிழ் மக்கள் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்பதையே கோட்பாடாகக் கொண்டிருந்தனர். சங்ககாலத் தமிழகத்தில் ஜாதிப் பிரிவினைகள் இருந்தாலும் ஒருவரையொருவர் மதித்து, ஒருமைப்பாட்டுப் பண்புடன் விளங்கினர் என்பதை அறியமுடிகின்றது. இருப்பினும், பிறப்பால் உயர்வு - தாழ்வு வரையறுக்கப்படும் இழிவைப் போக்கும் வகையில் கல்வி கற்பதையும், கலப்பு மணத்தையும் முன்வைத்துத் தம் ஜாதியெதிர்ப்புச் சிந்தனையை மிக மென்மையாகச் சங்கப்புலவர்கள் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ள திறத்தை ஆங்காங்கே காணமுடிகிறது. ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் புறநானூற்றில்,

"வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கண் படுமே"

என்று பாடியிருப்பது, ஜாதியொழிப்புச் சீர்திருத்தத்தின் முதல்குரலாக ஒலிக்கிறது என்று கூறலாம். பிறப்பால் தாழ்ந்த வகுப்பால் தோன்றிய ஒருவன் கல்வியறிவும் பெற்றால், அச்சிறப்புக் காரணமாக உயர்ந்த வகுப்பினர்க்குரிய சமுதாயத் தகுதியை அடையலாம் என்பதே இப்பாடற்பகுதியின் கருத்தாகும். கல்வியின் சிறப்பை வலியுறுத்துவதற்காக இப்பாடல் புனையப்பட்டிருந்தாலும், ஜாதியால் தீர்மானிக்கப்பெறும் உயர்வுதாழ்வு வேறுபாட்டைக் களைய வேண்டுமானால் கல்வி கற்பதே உகந்ததாகும் என்னும் தீர்வையும் முன்வைத்துள்ளது. இதன் வாயிலாக இப்புலவனின் ஜாதிமறுப்புச் சிந்தனையையும் அதன் தீர்வின் திசைநோக்கிப் பயணப்பட்டிருக்கும் பாங்கையும் அறியமுடிகிறது. கற்பதன்மூலம் ஜாதியால் ஏற்படும் உயர்வு தாழ்வு வேறுபாடு மறையும் என்றும் இதே கருத்தை,

"எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடிக் கற்றோரை மேல்வருக என்பர்"

என்று 'வெற்றிவேற்கையும்' எடுத்துக் காட்டியிருக்கிறது. இதே "கருத்தை நாலடியாரும், கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப் படும்"

என்று சுட்டிக் செல்கிறது. சங்க இலக்கியம் சுட்டும் சமுதாயத்தில் தொழில்களின் அடிப்படையில் சில பிரிவினர் தாழ்ந்த நிலையினராகக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்களிடையே ஒருமைப்பாட்டுணர்வு நிலவியதால் ஜாதிப்புன்மை இல்லையென்று கூறலாம். எனவேதான் சங்ககாலப் புலவர்களிடையே ஜாதி எதிர்ப்புச் சிந்தனை மென்மையாக இழையோடுகிறது.

மணிமேகலை காட்டும் சமுதாயத்தில்தான் வருணப்பாகுபாடு பாராட்டும் நிலையை வெளிப்படையாகக் காணமுடிகிறது.

"நால்வேறு வருணப் பாகுபாடு காட்டி
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்"


எனவரும் பகுதி, இடுகாட்டில்கூட வருணப்பாகுபாடு பாராட்டும் நிலை அக்காலச் சமுதாயத்தில் நிலவியதைத் தெளிவுபடுத்துகிறது. ஜாதிமுறையின் அடிப்படையில் மக்கட் சமுதாயம் பிளவுபட்டு நிற்பதைக் கண்ட சாத்தனார், வைதிகப் புராண இதிகாசங்களில் காணப்படும் ஜாதி குறித்த செய்திகளைத் தாக்குகிறார். அந்தணர்கள் வேள்வியில் கொலை செய்வதற்காக வைத்திருந்த பசுவை ஆபுத்திரன் கடத்தி வைத்துக் கொள்கிறான்; அதனைக் கண்ட அந்தணர்கள் அவனை ஒவ்வாத செயல் செய்தவன் என்று இழித்தும் பழித்தும், அவன் பிறப்பை அவமதித்தும் பேசுகின்றனர். அவர்களை நோக்கி,

"ஆண்மகன் அசலன் மான்மகன் சிருஞ்சி
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?"

என ஆபுத்திரன் வினவுகின்றான். ஆவயிற்றில் பிறந்த அசலமுனிவன், மான்வயிற்றில் பிறந்த சிருஞ்சி, புலிவயிற்றில் பிறந்த விரிஞ்சி, நரி வயிற்றில் பிறந்த கேசகம்பளன் ஆகியோரை உயர் அறவோர் கூட்டத்தினர் என்று நீங்கள் போற்றுகின்றீர்; விலங்குகளின் வயிற்றில் பிறந்த இவர்கள் உயர்ஜாதியினராகக் கருதப்பெறும் நிலையில், இனிய பாலைத் தருகின்ற பசுவோடு தொடர்புடைய நான் மட்டும் எப்படி இழிகுலத்தவன் ஆக முடியும் ஆகமுடியும் என்று புரட்சிக்குரல் எழுப்புகின்றான். இதன் மூலம், பிறப்பின் அடிப்படையில் ஏற்படும் ஜாதி வேறுபாடுகளைப் பாராட்டும் மனநிலைக்குச் சாவுமணி அடிப்பது தெளிவாகப் புரிகிறது.

---------------- முனைவர் ச.முருகேசன் அவர்கள் "உண்மை" பிப்ரவரி 15-28 2009 இதழில் எழுதிய கட்டுரை

1 comments:

Unknown said...

//ஆவயிற்றில் பிறந்த அசலமுனிவன், மான்வயிற்றில் பிறந்த சிருஞ்சி, புலிவயிற்றில் பிறந்த விரிஞ்சி, நரி வயிற்றில் பிறந்த கேசகம்பளன் ஆகியோரை உயர் அறவோர் கூட்டத்தினர் என்று நீங்கள் போற்றுகின்றீர்; விலங்குகளின் வயிற்றில் பிறந்த இவர்கள் உயர்ஜாதியினராகக் கருதப்பெறும் நிலையில், இனிய பாலைத் தருகின்ற பசுவோடு தொடர்புடைய நான் மட்டும் எப்படி இழிகுலத்தவன் ஆக முடியும் ஆகமுடியும் என்று புரட்சிக்குரல் எழுப்புகின்றான். இதன் மூலம், பிறப்பின் அடிப்படையில் ஏற்படும் ஜாதி வேறுபாடுகளைப் பாராட்டும் மனநிலைக்குச் சாவுமணி அடிப்பது தெளிவாகப் புரிகிறது.//

நல்ல அறிவூட்டும் ஆராய்ச்சி கட்டுரை.