Search This Blog

20.2.09

ஒரே குடும்பத்தில் பத்து ஜாதி மறுப்புத் திருமணங்கள்


திருமணத்திற்குமுன் தேவை ஜோதிடப் பொருத்தமல்ல -
முழு மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்படவேண்டும்

திராவிடர்கழகம்இதனைஓர்இயக்கமாகவேநடத்தும்!

தமிழர்தலைவரின்அறிவியல்சிந்தனைஉரை




திருமணத்திற்குமுன் மணமக்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனை தேவை - இதனை ஓர் இயக்கமாகவே திராவிடர் கழகம் நடத்தும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

திருவண்ணாமலை பா. ஜெயக்குமார் - லெ. கண்மணி ஆகியோர் வாழ்க்கை இணை நல ஒப்பந்தவிழா (12.2.2009), சென்னை அ.ம. பகுத்தறிவு - மா. சிவகார்த்திகேயன் ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா (13.2.2009) ஆகியவற்றிற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட முக்கிய கருத்துகள் வருமாறு:

நமது மக்கள் இதுவரை மணமக்களின் ஜாதகம் - ஜோதிடப் பொருத்தங்களைத்தான் பார்த்து வந்தனர் - பார்த்தும் வருகின்றனர்.

மணமகன், மணமகளையோ; மணமகள் மணமகனையோ ஒருவருக்கொருவர் பார்த்துக்கூட இருக்கமாட்டார்கள் - பேசியிருக்கமாட்டார்கள்.

ஜோதிடத்தால் பயன் என்ன?

சம்பந்தமே இல்லாத மூன்றாவது பேர்வழியாகிய, வருமானத்துக்குரிய தொழிலாக நடத்திக் கொண்டிருக்கிற ஒரு ஜோதிடனிடம் சென்று இவர்களுக்குப் பொருத்தம் இருக்கிறதா? இவர்களின் வாழ்க்கை நல்ல முறையில் அமையுமா? என்று கேட்கிறார்கள்.

நட்சத்திரம், லக்னம் பார்ப்பதாகக் கூறி எதையெதையோ சொல்லுகிறான் ஜோதிடன். அப்படிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறவர்கள் எல்லாம் நல்லபடி வாழ்கிறார்களா? குழந்தைகள் பிறக்கின்றனவா என்றால், அதுதான் இல்லை.

குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்துக் கோரும் பெரும்பாலான திருமணங்கள் ஜோதிடம் பார்த்து நடத்தப்படுபவைதான்.

உண்மையில் பார்க்கவேண்டிய பொருத்தம் எது?

ஆனால், உண்மையில் பார்க்கவேண்டியது எதை? மணமக்களின் ரத்தப் பரிசோதனைதான் முதலில் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.

பெரியார் கல்வி நிறுவனங்களில் மாணவ - மாணவியர்க்கு அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது - அதில் அவர்களின் குருதிப் பிரிவு இடம் பெற்றிருக்கும்.

பொதுவாக உங்கள் ஜாதிப் பெயர் என்னவென்றால் உடனே சொல்லி விடுகிறான். முதலியார் என்றால் ஒரு முதலியார் அல்ல; அக்கரை முதலியார், இக்கரை முதலியார், ஆர்க்காட்டு முதலியார், சைவ முதலியார் - அசைவ முதலியார் என்ற பல பிரிவுகள் உண்டு - அந்தப் பிரிவில் எந்தப் பிரிவு முதலியார் என்றும் துல்லியமாகச் சொல்லி விடுவார்கள்.

அதெல்லாம் சரி, உன் ரத்தப் பிரிவு என்னவென்று கேட்டால், திருதிருவென்று விழிப்பான் - அதெல்லாம் தெரியாதுங்க என்பான். பாமர மக்கள் மட்டுமல்ல; படித்தவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை.

தேவையில்லாத - உண்மையல்லாத ஜோதிடத்தில் அக்கறை காட்டுகிறார்கள்; தேவையான உடல்கூறுபற்றி அறிந்துகொள்ள விரும்புவதில்லை.

திருமணத்துக்குமுன் மருத்துவப் பரிசோதனை அவசியம்

ரத்தப் பரிசோதனை மட்டுமல்ல; திருமணத்துக்கு முன் மணமகன், மணமகள் ஆகியோர் முழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில்தான் திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும். இதனை ஓர் இயக்கமாகவே திராவிடர் கழகம் நடத்தும்.

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஓடிய நிலையில், குழந்தை பிறக்கவில்லையென்றால், ஓர் ஆண் இன்னொரு திருமணம் செய்துகொள்ளத் துடிக்கிறான்.

மலட்டுத்தன்மை என்பது ஆணிடமும் உண்டு; பெண்ணிடமும் உண்டு. ஆனால், அதுபற்றியெல்லாம் மருத்துவ ரீதியாகத் தெரிந்துகொள்ளாமல், ஆண் ஆதிக்க உணர்வோடு, மலட்டுத்தனம் என்றால், அது ஏதோ பெண்ணுக்கு மட்டும்தான் உண்டு என்பதுபோல, ஆண்கள் மட்டுமல்ல - பொதுவாக சமுதாயத்திலேயே அப்படி ஒரு கருத்து நிலவுகிறது.

திருமணத்துக்குமுன் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால், இந்தப் பிரச்சினைகளுக்கு இடம் இல்லாமல் போய்விடும் அல்லவா!

அதுமட்டுமல்ல, பெண் குழந்தை பிறந்தால் அதற்குக் காரணம் மனைவி என்ற மூடத்தனமான எண்ணமும் நம் மக்களிடம் இருந்து வருகிறது.

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆணின் உயிர் அணுக்கள்தான். அதுகூடப் புரியாமல், ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக இன்னொரு திருமணம் செய்துகொள்ளும் பிற்போக்குத்தனம் மாற்றப்படவேண்டும். போதிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.

உடல் உறுப்புகள் கொடை

ஒரு காலகட்டத்தில் கண்கொடை அளிப்பது என்பதே அதிசயமாகவிருந்தது; அது இப்பொழுது சாதாரணமாகிவிட்டது; குருதிக்கொடை என்பதும் அரிதாகவேயிருந்து வந்தது. இப்பொழுது சர்வசாதாரணமாகிவிட்டது.

அண்மைக்காலத்தில் உடல் உறுப்புகள் கொடை என்ற மிக உயர்ந்த மனிதநேய உணர்வு நாட்டில் வளர்ந்து வருவது வரவேற்கத்தகுந்த மாற்றமாகும்.

திராவிடர் கழகத் தோழர்கள் எடுத்துக்காட்டு!

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் பல தோழர்கள் உயில் எழுதி வைத்துவிடுகின்றனர். தங்கள் மறைவிற்குப் பிறகு முழு உடலையும் மருத்துவமனைக்கு ஒப்படைத்துவிடவேண்டும் என்று எழுதி வைத்து, அதன் அடிப்படையில் உடல்தானம் அளிப்பதையும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

திருக்கழுக்குன்றம் நிகழ்ச்சியின் உந்துதல்...

திருக்கழுக்குன்றத்தில் டாக்டர் தம்பதியினரின் (டாக்டர் அசோகன் - புஷ்பாஞ்சலி) மகன் ஹிதேந்திரன் சாலை விபத்துக்கு ஆளாகி மரணமடைந்தான் (20.9.2008). அவன் உடலுறுப்புகளைத் தானமாக அளித்திட பையனின் பெற்றோர்களாகிய மருத்துவர்கள் முன்வந்தனர்.

சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் இறந்த பையன் இதயம் அகற்றப்பட்டு பதினாறே நிமிடங்களில் சென்னை முகப்பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு அபிராமி என்ற பெங்களூரு சிறுமிக்கு மாற்று இதயமாகப் பொருத்தப்பட்டு உயிர் பிழைக்கும்படி செய்யப்பட்டது என்றால், இந்தச் செயலுக்குப்பின் உள்ள மனித உணர்வும், அறிவியல் சாதனையும் பாராட்டப்படவேண்டாமா? அதுபோலவே உலகப் புகழ்பெற்ற பகுத்தறிவாளரான டாக்டர் ஏ.டி. கோவூர் அவர்களின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டு பெங்களூருவைச் சேர்ந்த பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்தப்பட்டு, பார்வை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வெறும் மத எண்ணங்களுக்கு ஆட்பட்டிருந்தால், இந்த மாற்றங்கள் ஏற்பட்டு இருக்குமா? ஒரு உயிர்தான் பிழைத்திருக்குமா? பார்வையற்ற மனிதன் பார்வைதான் பெற்றிருப்பானா?

கல்லூரி மாணவனான ஹிதேந்திரன் மரணமடைந்தான் என்று சொல்வதைவிட ஒரு சிறுமியின் இதயம்மூலம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதுதானே உண்மை. இதன்மூலம் மரணம் வெல்லப்பட்டு இருக்கிறது என்று கருதலாம் அல்லவா!

ஹிதேந்திரனின் இதயம் மட்டுமல்ல; சிறுநீரகங்கள் இருவருக்கும், கல்லீரல் ஒருவருக்கும் பொருத்தப்பட்டு அய்ந்து பேர் உயிர் வாழும்படிச் செய்யப்பட்டுவிட்டது. இதுதான் பகுத்தறிவுச் சிந்தனை என்பதாகும். செத்த பின் எரிப்பது, சாம்பலைக் கரைப்பது என்கிற மதவாதப் போக்குகள் மாற்றப்படவேண்டும்.

ஜாதி ஒழிக்கப்படுகிறது


உடலுறுப்புத்தானமாக இருந்தாலும் சரி, குருதிக்கொடையாக இருந்தாலும் சரி, இவற்றில் மனிதநேயம் மேலோங்கி நிற்பது மட்டுமல்ல - ஜாதி சாகடிக்கப்படுகிறது என்பதுதான் மிக முக்கியமான அம்சமாகும்.

அய்யங்கார் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு ஏ1பி பாசிடிவ் பிரிவு குருதி தேவைப்படுகிறது - விளம்பரம் செய்கிறார்கள் - ஒருவர் மட்டும்தான் அந்தப் பிரிவு குருதிக்குச் சொந்தக்காரர்; அவரோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

அந்தப் பிரிவு ரத்தம் தேவைப்படும் நோயாளியான அய்யங்காரிடம் சென்று, உண்மையைச் சொன்னால், அவர் என்ன சொல்லுவார்? செத்தாலும் பரவாயில்லை; ஆதிதிராவிடர் இரத்தம் என் உடலில் ஏறக்கூடாது என்றா சொல்லுவார்? டாக்டர் கையைப் பிடித்துக்கொண்டு இப்பல்லாம் யாருங்க, ஜாதியைப் பார்க்கிறாங்க; நான் பெரியார் கட்சியில் சேர்ந்து ரொம்ப நாளாகிவிட்டது என்றுதானே சொல்வார்?

செட்டியார் ரத்தம் செட்டியாருக்கும், முதலியார் ரத்தம் முதலியாருக்கும், அய்யங்கார் ரத்தம் அய்யங்காருக்கும், ஆதிதிராவிடர் ரத்தம் ஆதிதிராவிடருக்கும்தான் பொருந்தும் என்ற நிலை உடற்கூறில் கிடையாதே!

நாங்கள் பிரச்சாரம் செய்து ஜாதியை ஒழிப்பதைவிட குருதிக் கொடையாலும், உடல் உறுப்புத்தானத்தாலும் ஜாதி ஒழிகின்றது என்கிறபோது - எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவே இதனை நாங்கள் கருதுகிறோம்.

மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கம்!

பல மாற்றங்கள் மக்களிடத்தில் வருவதற்குக் காரணமான திராவிடர் கழகம், அடுத்து இதுகுறித்து மக்கள் மத்தியிலே தீவிரமான பிரச்சார இயக்கத்தை நடத்துவோம்.

அரசுகூட இதுபற்றிச் சிந்திக்கலாம் - சிந்திக்கவும் வேண்டும். திருமணத்திற்குமுன் மருத்துவப் பரிசோதனை - உடலுறுப்புகளைத் தானமாக அளிப்பவர்களின் குடும்பத்தினரை ஊக்குவிக்கும் வகையில் சில சலுகைகளை, முன்னுரிமைகளை அறிவிக்கலாம் என்று பேசினார் திராவிடர் கழகத் தலைவர்.

லேனா. தமிழ்வாணன்

வடபொன்பரப்பி, வெ.கோ. பாலசுப்பிரமணியம் - பா. சகுந்தலா ஆகியோரின் மகன் ஜெயக்குமார் - தேவகோட்டை அரு. லெட்சுமணன் - லெ. மீனாட்சி ஆகியோரின் மகள் கண்மணி ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 12.2.2009 வியாழன் மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை திருமலை திருமண மகாலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மணமகளின் பெரியப்பாவும், கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் அவர்களின் மகனுமான லேனா. தமிழ்வாணன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

அவர்தம் உரையில் குறிப்பிட்டதாவது:

இந்தக் குடும்பத்தில் எங்களுக்குச் சம்பந்தம் கிடைத்ததற்காக மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். மணமகன் வீட்டார் காட்டிய அன்பும், மரியாதையும் எங்களைச் சிலிர்க்கச் செய்தது.

எங்கள் வீட்டுப் பெண் ஒரு நல்ல குடும்பத்திற்குச் சென்றிருக்கிறது என்கிற மன நிறைவு எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் நினைவாற்றலைக் கண்டு நான் வியந்தேன். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தாலும், பசுமையாக அந்தச் சந்திப்புகளையெல்லாம் அவர் சொல்கிற பாங்கு என்னை ஆச்சரியப்படுத்தியது என்று குறிப்பிட்டார்.

கு. இளங்கோவன்


மணமகனின் தாய்வழி மாமாவும், வேலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளருமான கு. இளங்கோவன் நன்றி கூறினார். இது எங்கள் குடும்பத்தில் பத்தாவது ஜாதி மறுப்புத் திருமணம் என்றும் பதிவு செய்தார்.

வந்திருந்தோர் அனைவருக்கும் மிகச் சிறப்பாக மதிய விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

2 comments:

Unknown said...

பெரியார் கட்சிக்காரகள் ஜாதி ஒழிப்பதில் காட்டும் அக்கரை வியக்க வைக்கிறது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு