Search This Blog
10.2.09
அண்ணாவை அவமதிக்காதே, ஆரியத்தனத்தைக் காட்டாதே!
"அண்ணா நாமம்!"
செல்வி ஜெயலலிதா தலைமையேற்கும் அண்ணா தி.மு.க. - இதற்குமேல் அண்ணாவை அசிங்கப்படுத்த முடியாது என்கிற அளவுக்கு அழிவை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் சேலம் மாநகர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் நேர்காணல் நேற்று போயஸ் தோட்டத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் 60 பேர் கலந்து கொண்டார்களாம். போட்டியிடுபவர்களின் கல்வித் தகுதி, தொழில், சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றதுடன், சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகமும் கேட்டுப் பெறப்பட்ட தாம்.
மூவர் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெறுவதற்கு யாருடைய ஜாதக பலன் பொருந்தி வரு கிறதோ, அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமாம்.
அண்ணாவின் பெயரை கட்சியிலும், கொடியிலும் பொருத்தியிருக்கக் கூடிய ஒரு கட்சி எவ் வளவுக் கேவலத்திற்கு மூடத்தனத்தின் பாதாளத்திற்குச் சென்றிருக்கிறது பார்த்தீர்களா?
புத்த மார்க்கத்தில் பார்ப்பனர்கள் ஊடுருவி அழிந்தது போல, திராவிட இயக்கத்தில் ஆரியம் புகுந்து அட்டகாசம் செய்கிறது - அதன் அடிப்படை ஆணிவேரை அறுக்கிறது என்பதை இதன்மூலம் பளிச்சென்று தெரிந்துகொள்ளலாமே!
தூத்துக்குடி துறைமுகத் திட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.ஆர்.வி. ராவ், கோயிலுக்கு முதலமைச்சர் அண்ணாவை அழைத்த நேரத் தில், தான் செல்லாமல், மற்றொருவரை அனுப்பி வைத்தார் என்ற வரலாறு எல்லாம் தெரி யாத ஒருவர் கட்சியை மிகத் தவறான பாதையிலே அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
அய்யா பெயரையும், அண்ணா பெயரையும் கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் உச்சரித்துக்கொண்டும் திரிகிறார்களே - இதுபற்றி அ.இ.அ.தி.மு.க.வில் இருக்கும், அண்ணாவை உள்ளபடியே மதிக்கும் தோழர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
அண்ணாவை அவமதிக்காதே, ஆரியத்தனத்தைக் காட்டாதே! என்று கொந்தளித்துக் குரல் கொடுக்கும் ஒரே ஒரு தோழர்கூட அக்கட்சியில் இல்லையா?
ஜாதகம், சடங்கு, யாகம் என்றெல்லாம் பார்த்துத்தானே கடந்த தேர்தலில் ஜெயலலிதா அம்மையார் களத்தில் இறங்கினார் - ஆட்சியைப் பிடிக்க முடிந்ததா?
என் ஜாதகம் எனக்கு வெற்றியைக் கூறுகிறது என்று கூறி தேர்தலில் குதித்த டி.என். சேஷன் வெற்றி பெற்றாரா?
காந்தியாருக்கு 125 வயது என்று ஆயுள் குறித்தாரே பிரபல ஜோதிடர் திருத்தணி வி.கே. கிருஷ்ணமாச்சாரி, முடிவு என்னாயிற்று?
விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடத்தில் வளர்க்கவேண்டும்; அது ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதற்குமாறாக இருக்கக்கூடியவர் இந்த நாட்டுக் குடி மகன(ள)க இருக்கக் கூடிய தகுதி அற்றவர் அல்லவா!
"அண்ணா நாமம் வாழ்க!" என்று இவர்கள் உச்சரிப்பது அண்ணாவின் கொள்கைக்கு நாமம் போடத்தானா?
-------------------- 10-2-2008 "விடுதலை" இதழில் மயிலாடன் அவர்கள் எழுதியது
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment