Search This Blog
12.2.09
தைப்பூசம் கொண்டாடும் காவடி பக்தர்களே, வள்ளலார் கருத்தை வாழ்வியலாக்க ஏனோ மறந்தீர்!
1823 அக்டோபரில் பிறந்து தமிழகத்தில் கண் மூடிப் பழக்கங்கள் எல்லாம் மண் மூடிப்போக வேண்டுமானால், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்ற உண்மையை தமது இறுதிப் பகுதியிலே உணர்ந்து பிரச்சாரம் செய்த வடலூர் வள்ளலார் - இராமலிங்க அடிகளார் மறைந்தது 1874. (அவர் மறைந்தாரா? அல்லது வேறுவகையான முறையில் மரண மடைந்தாரா? என்ற கேள்வி இன்னமும் விடை காண முடியாத ஒன்றாகும்.)
51 ஆண்டுகள்தான் வாழ்ந்த வள்ளலார் தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்குச் செய்த தொண்டறம் தூய்மையானது, வாய்மை மிக்கது. தமிழர்தம் எழுச்சி - மறுமலர்ச்சி - வரலாற்றில் இடம் பெற்ற இணையற்ற முயற்சியாளர் அவர் ஆவார்.
நம் நாட்டில் சமூக சீர்திருத்தம் அல்லது, சமூகப் புரட்சிக் கருத்துகளைக் கூறும் எவரது கருத்தும் பரவி அதனை ஒட்டிய ஒரு வாழ்க்கை நெறி அமையாது தடுப்பதற்கு ஆரியம் தொடர்ந்து அவர்கள் அவதாரப் புருஷர்களாக, கடவுள் களுக்கு வணங்கப்படும் மூடத்தனப் பக்தியை உருவாக்கி, கொள்கைளைப் பின் பற்றாமல் ஆக்குவதை ஒரு சிறந்த தந்திரமாகக் கையாளுவது, பகுத்தறிவாளர்களான - புத்தர் காலந்தொட்டே வாடிக்கையாக்கிவிட்டனர். புத்தரை மகாவிஷ்ணுவின் 9 ஆவது அவதாரம் என்றும் துணிந்து புளுகி எழுதிப் பரப்பி, கடவுள் - ஆத்மா மறுப்பாளரையே கடவுளாக்கிவழிபடச் செய்து, புத்தக் கொள்கைகளை அது பிறந்த மண்ணை விட்டே விரட்டி விட்டனர்!
இராமலிங்கர் ஆரிய நெறிகள், பழக்க வழக்கங்கள் முதலியவைகளைக் கண்டித்ததால், அவரை இராமலிங்க சாமியாக்கிவிட்டனர்.
இதை அவர்களே,கண்டித்துள்ளார்கள்:
இராமலிங்க சுவாமி என்று வழங்குவிப்பது என் சம்மதம் அன்று. என்ன? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலின் இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும்.
தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னை தெய்வம் என்று சுற்றுகிறார்கள்!
அய்யோ!
நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததனாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும்புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன்; இருக்கிறேன்; இருப்பேன்.
உலகெலாம் பெரியவர் பெரியவர் எனவே, சிறக்கவும் ஆசையில்லை!
- இவை அவர்களது அறிவுரை - தெளிவுரையாகும்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கருத்துகளை, கொள்கைகளைத்தான் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்கர் இறுதியில் உண்மையை உணர்ந்து பாடினார்!
மதங்கள்தான் இன்றைய தீவிரவாதத்திற்குத் தாயாக இன்று உலகத்தாரை அலறவைக்கிறது; அச்சுறுத்தி அழிவையும் அழைத்து வருகின்றது.
பகுத்தறிவுவாதிகள், சுயமரியாதை இயக்கத்தினர் - திராவிடர் கழகத்தவர் - மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தது எவ்வளவு தொலைநோக்கு என்பதை இப்போது நம் மக்கள் உணர்வார்களா?
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன்; வாட்டமே செய்யும் கூட்டத்தில் பயில்வேன்
வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன்
தன்னை விழாதவகை மறக்கும் ஒருவர் அறிவளித்த வள்ளல் கொடியே
உடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்த்தேன் . . . மெய்யுரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர்! பொறித்த சமயம் எலாம் பொய்! பொய்யே!! அவற்றில் புகுத்தாதீர் !
மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும்
கவிதை நடையில் எழுதியவைகள் அல்லாது,வசன நடை யில் வள்ளல் இராமலிங்க அடிகளார் எழுதிய கருத்துகளும் மிகவும் சிந்திக்கத் தக்கன.
தைப்பூச விழாவில் காவடி தூக்கி ஆடுவது, அருட் பெருஞ்சோதி, தனிப்பெருங் கருணை என்று ஓங்கி முழக்கமிடுவதுதானா வள்ளலார் நெறி? வள்ளலார் அன்பர்களே, கொஞ்சம் சிந்தியுங்கள்; விழி திறந்து சரியான பாதை- வடலூர் பாதை - ஈரோட்டுப் பாதையே!
வள்ளலார் எழுதிய வசனநடையில் ஒரு பகுதி இதோ:
சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம்.
நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று சொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா? அப்படி லட்சியம் வைத்ததற்கு சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கின்ற திருவருட்பாவில் அடங்கியிருக்கிற பாட லையும், மற்றவர்களுடைய பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாட்சி சொல்விவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது!
கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பார்த்துக் கூவுகின்றார்
பலன் ஒன்றும் கொண்டறியார். வீணே நீறுகின்றார்; மண்ணாகி நாறுகின்றார்;
அவர்பால் நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ!
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போற்காட்ட நேராவே
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டறியேன்
சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டறியேன்
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணிந்தேன்
வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதாகமத்தின் விளைவறியீர்! சூதாகச் சொன்னவலால் உண்மை வெளிதோன்ற என்ன பயனே இவை? உரைத்தல் இலை
வேதம், ஆகமம் (ஆரியர்க்குரியன) எல்லாம் எதற்காக உருவாக்கப்பட்டனவென்றால் சூதாக - சூழ்ச்சிக்காக - உருவாக்கப்பட்டவை என்பதை பளிச்சென்று பறைசாற்றிய பகுத்தறிவு வாதியல்லவா வள்ளலார் பெருந்தகை!
மூடநம்பிக்கை ஒழிப்பிலும் முன்னோடியாக நின்றவர் வள்ளலார் அவர்கள் என்பதற்கு அவரது கவிதைகளும் -அருட்பா - ஏனைய (வசன)உரைநடை எழுத்துகளுமே தக்க சான்றுகளாகும்!
சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமம் ஆச்சாரம் சமயாச்சாரம் எனச் சண்டையிட்ட கலக வழக்கு வெளுத்தது.
கலையுரைத்த கற்பனைகள் நிலையெனக் கொண்டாடும் கண் மூடிப்பழக்கமெலாம் மண்மூடிப்போக!
பெண்களின் மறுமணத்தை இராமலிங்கர் வரவேற்றார்; நியாயப்படுத்தினார். நானிலத்தில் நடக்கவேண்டும் என்றும் கூறினார் - 19ஆம் நூற்றாண்டிலேயே!
கைமையைத் தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே
அதாவது,கைம்மையாவதை, விதவையாவதை ஒழித்து, மங்கலத்தைக் கொடுத்த இரக்கமே என்று கூறுகிறார்!
பெண்கள் நகை அணிதலை தந்தை பெரியார் வன்மை யாகக் கண்டித்தார்கள்!
பெண்கள் அலங்கார பொம்மைகளா? நகை மாட்டும் ஸ்டாண்டுகளா?
என்று கேட்டார் பெரியார்.
வள்ளலார் கருத்தும் அஃதே!
பெண்கள் நகை அணிந்து தம் இயற்கை அழகை நாசம் செய்து, கேலிக்குரியதாக்கி விடுவது நல்லதல்ல என்று கூறு கிறார் வள்ளலார். அவர் ஒரு வேடிக்கையான வாதம் மூலம் கடவுளை நம்பும் பக்தியாளர்களுக்குப் புரியவைக்கும் வண்ணம் ஒரு கேள்வி கேட்கிறார்.!
காதில் இரண்டு பொத்தல் செய்து வரவித்தவர் ஆணுக்கு கடுக்கன் இடுதலும், பெண்ணுக்கு மூக்குத்தி முதலியன போடுதலும், தமக்கு சம்மதமானால், காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தலிட்டு வரவிட்டிருக்கமாட்டாரா? என்று விசாரித்துத் தெரிந்து கொள்கிற பட்சத்தில் காதில் கடுக்கன் இடவும், மூக்கு முதலியவற்றில் நகை இடவும் சம்மதம் வருமா?
(வள்ளலாரின் உரைநடையிலிருந்து)
வள்ளலாரை மதிப்பதாகக் கூறும் அன்பர்கள் வள்ளலார் என்ன சொன்னார், இறுதிக்காலத்தில் என்பதை அறிய வேண்டாமா? அறிந்தபடி நடக்கவேண்டாமா? என்பதுதான் நமது கேள்வி.
கடவுளர் திருவிழாக்களை பிள்ளை விளையாட்டு என்று அழகாகக் கூறிஇடித்துரைத்தார் வள்ளலார்!
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூடிய பல்சமயக் கூட்டமும்
அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்
காட்சிகளும் காட்சி தரு கடவுளரும் எலாம்
பிள்ளை விளையாட்டென நன்கு அறிவித்திங்கு எனையே
பிள்ளையெனக் கொண்டு பிள்ளையிட்ட பதியே
ஜாதி பேதம், பார்ப்பனரின் வருணதர்மம் பற்றி அவர் கூறும் புரட்சிக் கருத்துகள் இதோ:
நால் வருணம், ஆச்சிரமம், ஆசாரம் முதலாம்
நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே!
மேல்வருணம், தோல் வருணம் கண்டறிவர் இலை நீ
விழித்துப் பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே!
இவ்வளவையும் புறந்தள்ளி, அவரது சத்ய ஞான சபை முன்பே பார்ப்பனப் பாம்பு புகுந்ததை அண்மையில் விரட்டி விட்டது ஒரு பெருஞ்சாதனை கலைஞர் ஆட்சி மகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கல் அது!
-------------------- கி.வீரமணி அவர்கள் 12-2-2009 "விடுதலை" இதழில் எழுதிய கட்டுரை
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
பெரியார்- வள்ளலார் ஒப்பீடு சிறப்பாக இருந்தது.
Post a Comment