
இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் "நக்கீரன்" இதழில் தொடர் கட்டுரையை திரு. அக்கினிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியதை 2005 ஆம் ஆண்டு நக்கீரன் பப்ளிகேசன்ஸ் நூலாக வெளியிட்டுள்ளது. அந்நூலில் இந்து மதம் பற்றியும், பார்ப்பனர்களின் அட்டூழியங்கள் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் உண்மையை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார்.நக்கீரனில் இத்தொடர் வரும்போதே பெரியாரின் "விடுதலை" ஏடு தொடர்ந்து இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு உண்மையை உணர்த்தியது.
மற்ற துறைகளில் உள்ள பார்ப்பன ஆதிக்கம் போல் இணைய உலகில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் நாகரிகம் சிறிதும் இன்றி கொச்சையாக விமர்சித்து கருத்துக்களையும், பின்னூட்டங்களைம் அளித்து அவர்களின் தராதரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
பார்ப்பனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்பும் ஏமாளித்தமிழர்களும் உண்டு. அவர்களின் கண்களை திறக்கவும், உண்மையை அறியவும் நக்கீரன் இதழில் ராமானுஜ தாத்தாச்சாரி எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூலிலுள்ளவைகளை அப்படியே இங்கு வழங்குகிறேன்.
படியுங்கள்! உண்மையை உணருங்கள்!
*************************************************
விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.
இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது. இவர் எழுதியது என்ன?-செய்தது என்ன?-உபதேசித்தது என்ன?-இதெல்லாம் தெரிந்தோ-தெரியாமலோ இவரையே தெய்வமாக வழிபடும் ஓர் ஆன்மீக உலகம்தான் அது.
இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள் மட்டுமல்ல கோஷங்களும்கூட, எழுந்து கொண்டிருக்கின்றன.
யார் இவர்?கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே... அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர். அங்கமாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான் காலடி... தற்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழும்பியிருக்கும் ‘பெரியாறு’ நதி அழகாக காலடி வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இயற்கை செழிப்பான இந்த காலடியில்...
ஷிவகுரு எனும் பிராமணர் இவருக்கு ஆரியம்பாள் எனும் பத்தினி இவர்களுக்கு மகனாக பிறந்த செழுமை பூமியில் தன் மழலை காலடிகளைப் பதித்தான் சங்கரன். காலடியே இவனைக் கண்டு துள்ளிக் குதித்தது. ‘அழகான குழந்தை... கண்ணைப் பாருங்கள். ஞானம் சிரிக்கிறது. காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது.’ என பார்த்த ஊர்ப்பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள்.
அப்பாவும்... அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க.. ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து விட்டார்.
அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள்... கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள். சங்கரனின் குடும்பம் ஏழ்மையில் விழுந்தது.ஆனாலும்... சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அவனது அப்பா.
அவனது வயிற்றுப் பசியையும் போக்கி... அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள். உள்ளூர் பண்டிதர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் போதே 8 வயதில் சங்கரனுக்கு உபநய சடங்கை செவ்வனே செய்து வைத்தார்கள்.இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது.
அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான்.
“அம்மா... உள்ளூர் பண்டிதர்களிடம் படித்தது போதும் அம்மா... நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேனே...” அம்மாவிடம் சொல்லிவிட்டு...பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம் செய்தான் சங்கரன். அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக, நர்மதா நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கவுடபாதர் போன்ற வித்வான்களிடம் அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர்... அங்கே பல விடயங்களைத் தெரிந்து கொண்டார்.அவர்கள் உபதேசித்த விடயங்களை உள் வாங்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார். சங்கரர் கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் போன்றவற்றுக் கெல்லாம் பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்... அப்போது புத்தரையும் வாசிக்க ஆரம்பித்தார்.
அதுவரை அவர் படித்த வேதம்.. பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம் சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம்.
புத்தன் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார்.மறுபடியும் மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்கத் தொடங்கிய சங்கரர்.. இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார்.
புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய்... அதுதான் எனக்கு கிடைத்த ஞானம்.
நம் பிறப்பு பொய்.. வாழ்வு பொய் இவ்வுலகத்தில் ஞானம். அக்ஞானம் ஆகிய இரண்டும்தான் உண்டு, மற்ற எதுவுமே கிடையாது” என தனக்கு கிடைத்த ஞானத்தை ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர்.
வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் கடவுளைத் தவிர... என சங்கரர் மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.
இதெல்லாம் சங்கரரின் இளமைக்காலம். ஆண் பொய், பெண் பொய் அனைவரும் பொய் என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் மறுத்தார். அம்மா எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார். தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட உலகையே மாயம் என ஒப்புக் கொள்கிற இளைஞர்களை திரட்டினார் சங்கரர்.
அவருக்கு முதன் முதலில் கிடைத்தவர்கள் நான்குபேர். ஆனந்தகிரி, சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகம். இவர்கள் தன்னை பின்தொடர ஒவ்வொரு ஊராய் சென்றார். உலகமே மாயம் எதுவுமே உண்மையில்லை. எதற்கும் கலங்காதே...
தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார் ஆதிசங்கரர்...‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’ என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதி சங்கரரை அந்த சம்பவம் அழுத்தமாக உலுக்கியது.
------------------------- தொடரும்
-------------------நன்றி: - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்- நூல்: "இந்துமதம் எங்கே போகிறது?" பக்கம்:- 53-56
2 comments:
//விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சை//
கலவரங்களே கடவுளால் தான் எற்படுகிறது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
திருநாவு
Post a Comment