Search This Blog

26.2.09

இந்துத்துவா தாலிபன்கள்


இந்தியத் தாலிபன்கள்!பர்தா அணியவில்லை; முகங்களை மறைக்கவில்லை என்று கூறி இஸ்லாமிய சகோதரிகள் மீது காஷ்மீரில் ஆசிட் ஊற்றினார்கள். மலர்ந்தும் மலராத பல மங்கைகளின் ரோஜா முகங்கள் கோரமாக வெந்து போயின. அந்தச் சகோதரிகள் மதக் கோட்பாடுகளை மதிக்கவில்லை என்பது குற்றச்சாட்டு.

இதேபோன்று ஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இஸ்லாமிய சகோதரிகள் எத்தனை எத்தனையோ சோதனைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். பெண்கள் படி தாண்டக்கூடாது; படிக்கக்கூடாது என்று பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பல நூறு பள்ளிகளை தாலிபன்கள் மூடிவிட்டனர்.


சினிமா தியேட்டர்கள் இல்லை. வீடுகளில் தொலைக்காட்சி கள் இல்லை என்ற நிலையில், இன்றைக்கும் ஆப்கனிஸ்தானில் பல நூறு கிராமங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றன. ஆமாம்! அத்தகைய இரும்புத் திரைகளின் காவலன் - தாலிபன் என்ற தீவிர வாத இஸ்லாமிய அமைப்புத்தான்.

அந்தத் தாலிபன்களுக்குப் போட்டியாக இங்கேயும் இந்துத்துவா தாலிபன்கள் உருவாகி வருகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் ஆப்கனிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை எட்டிப் பிடித்த தாலிபன்கள் உலக அதிசயமான மாபெரும் புத்தர் சிலையையே உடைத்து நொறுக்கினர். தேவாலயங்கள் தீக்கிரை யாக்கப்பட்டன.

அதே திருப்பணிகள் கர்நாடகாவில் பி.ஜே.பி. ஆட்சியில் அமர்ந்ததும் அரங்கேறின. இங்கேயும் தேவாலயங்கள் தாக்கப் பட்டன. ஏசுபிரானின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. கிறிஸ் துவ மதப் பிரச்சாரக் கூட்டங்கள் கலவரக் காடுகளாயின. பைபிள்கள் கொளுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். அவர்களுடைய பஸ் வழிமறித்து நிறுத்தப்பட்டது. மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாகப் பயணிப்பது சமய விரோதம் என்றனர். பிற மத மாணவர்களோடு இந்து சமய மாணவர்களும் மாணவிகளும் எப்படி ஒன்றாகச் செல்லலாம் என்று தாக்கினார்கள் இந்துத்துவா தாலிபன்கள்.


அண்மையில் மங்களூர் நகரின் இரவு விடுதிக்குள் காவித் தாலிபன்கள் நுழைந்தனர். அங்கிருந்த இளம் பெண்களை அடித்தனர். அவமானப்படுத்தினர். அந்த நள்ளிரவில் அவர்களை வெளியே துரத்தினர்.

ராம் சேனா என்ற இந்துத்துவா அமைப்பு இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டே நடத்தியது. உள்ளூர்த் தொலைக்காட்சிகள் இந்தக் கோரத் தாக்குதல்களை ஒளிபரப்பியபோது கர்நாடகம் கலங்கிப் போனது.

ராம் சேனாவுக்கும் பி.ஜே.பி.க்கும் சம்பந்தமில்லை என்றார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இந்துத்துவா போட்ட பல குட்டிகளில் அதுவும் ஒரு குட்டி என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். முன்னர் தேவாலயங்கள் தாக்கப்பட்ட போதும் எடியூரப்பா இப்படித்தான் வாதம் செய்தார். மதமாற்றத்தைத்தான் எதிர்த்தனரே தவிர, வேறு விபரீதங்கள் நடைபெறவில்லை என்று வாதிட்டார்.

கர்நாடகாவில் அடிக்கடி இத்தகைய நிகழ்வுகள் நடை பெறுவது இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்றன. அவமானங்களைத் தேடிக் கொடுத்திருக்கின்றன.

இந்த நிகழ்வுகள் ஏதோ தற்செயலாக நடந்தவை அல்ல. தனித்தனியான நிகழ்வுகளும் அல்ல. இந்திய சமூகத்தையே இப்படி வன்முறையில் சுத்தம் செய்வது என்று இந்துத்துவா சக்திகள் முடிவு செய்திருக்கின்றன. மாநிலத்திற்கு மாநிலம் அதன் களங்களும் போர் முறைகளும் மாறி இருக்கின்றன. ஆனால் காவிக் கலவரக்காரர்கள் ரகசியமாக இணைந்தே செயல்படு கின்றனர்.

மங்களூர் இரவு விடுதித் தாக்குதலை நடத்திய ராம்சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் சரியான கிரிமினல். ஏற்கனவே அவர் மீது 45 வழக்குகள் நிலுவையில் நிற்கின்றன. அவர்தான் இளைய தலைமுறை யைச் சிலுவையில் அறையும் செயல்களைச் செய்கிறார். அவர் ஓர் இந்துத்துவா அமைப்பின் சேனைத் தலைவர் என்பதால், கர்நாடக அரசு அவரைக் கண்டு கொள்வதில்லை.

மராட்டிய மாநிலத்தில் இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள் மீது குண்டுகள் வெடித்தன. அதற்கும் காரணம் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டே வந்தனர். ஆனால் உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தது. நாடு நன்கு அறிந்த மாலேகாவ்ன் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் ரகசியமாக இயங்கும் இந்துத்துவா சக்திகள் என்பது அம்பலமானது. அந்தச் சக்திகளின் மூளை பலம் சில ராணுவ அதிகாரிகள் என்பது தெரிந்தபோது நாடே அதிர்ந்து போனது.

அந்த மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு நிகழ்வு பற்றி ராம் சேனைத் தலைவர் பிரமோத் முத்தலிக் அண்மையில் என்ன சொன்னார் தெரியுமா? மாலேகாவ்ன் சம்பவங்கள் இனி நாட்டில் நடைபெறப் போகும் சம்பவங்களுக்கு முன்னோடி. இந்துக்கள் ராணுவ அவதாரம் எடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. ஒவ்வொரு தாய்மாரும் சமையல் கரண்டியை ஏந்துவதற்குப் பதிலாக (இஸ்லாமியருக்கு எதிராக) வெடிகுண்டுகளை ஏந்தினால் என்ன நடைபெறும்? என்று அந்த ராம் சேனைத் தலைவர் நெருப்பு வைத்தார்.

ராம்சேனையின் துணை அமைப்பாக இந்து ஜனஜாக்குருதி சமிதி என்றஅமைப்பை உருவாக்கி இருக்கிறார். அந்த அமைப்பிற்கு இளைஞர்கள் திரட்டப்படுகிறார்கள். அந்த அமைப்பின் ரகசிய மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் பல்வேறு கொலைக் கருவிகள்தான் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

கர்நாடகாவில் நடந்த இந்த மாநாட்டில் சட்ட மன்ற பி.ஜே.பி. உறுப்பினர் யோகேஷ் பட்டும் பெஜாவர் மடத் தலைவரும் உடுப்பி இந்துத்துவா தலைவரான விஸ்வேஷ் தீர்த்தாவும் கலந்து கொண்டனர். அத்தகைய ரகசிய மாநாடு மங்களூர் விடுதித் தாக்குதலுக்கு முன்னரும் மீண்டும் நடைபெற்றிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் இந்துத்துவா அமைப்புகளுக்கு இடையே இணைப்பும் தொடர்பும் இருக்கிறது. இப்போது பி.ஜே.பி. ஆட்சி பிறந்த மாநிலங்களில் அந்த அமைப்புக்கள் பகிரங்கமாகச் செயல்படுகின்றன. சிறுபான்மை இனமக்கள் மீது சீறிப்பாயும் வன்முறைப் பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றன. களங்கப்பட்ட அந்த நெஞ்சங்கள் இந்தியாவைத் தூய்மைப்படுத்தப் போகின்றனவாம்.

எப்படி ஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பெண்களைக் கொத்தடிமைகளாக வைத்திருக்க தாலிபான்கள் முயற்சிக் கிறார்களோ, அதே காரியங்களைத் தான் இங்கே ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் சங்பரிவாரங்கள் செய்கின்றன.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் சர்வசாதாரணமாக நடை பெறுகின்றன. இளம் விதவைச் சகோதரிகளுக்கு மறுமணம் தேவையில்லை. அது இறைவன் விதித்த விதி என்கிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் மும்பையில் தர்ம ரட்சமஞ்ச் என்ற அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அந்த நிறு வனம் அறநெறிப் பாதுகாப்புக் குழுவாம். காஞ்சி சங்கராச்சாரியர் உள்பட ஏராளமான இந்து மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


அது மட்டுமல்ல. மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றனர். ஆனால், பி.ஜே.பி. தான்ஆட்சியில் அமரவேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல வெட்கப்பட்டனர்.

இன்னொரு அதிரடிக் கோரிக்கையையும் வெளியிட்டனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம்தான் இருக்க வேண்டும் என்றனர்.


மங்களூர் இரவு விடுதித் தாக்குதலும் மும்பையில் கூடிய காவிப் பெரியவர்களின் அறைகூவலும் நாடு எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பதனைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.

----------------------------நன்றி: - - சோலை - "குமுதம் ரிப்போர்ட்டர்", 13.2.2009

0 comments: