Search This Blog

15.2.09

சர்வதேச அமைதிப் படையை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்வார்களா?


இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காண
மத்திய அரசு அய்.நா. சபையை வலியுறுத்தவேண்டும்
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின்
துணைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்



இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறுவதற்காக முதல்வர் கலைஞர் அவர்களின் உத்தரவுக்கிணங்க அமைக்கப் பட்ட இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை துணைக் குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று மாலை அதன் அமைப்பாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காண வேண்டு மென்று நாடாளுமன்றத்தில் தமது உரையில் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதோடு இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காண அய்க்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானம் நிறை வேற்றப் பட்டது.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்குத் துணை அமைப்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட துணைக் குழுவின் இரண்டாவதுகூட்டம் அதன் அமைப்பாளர் சட்ட அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்றுமாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைப்பின் செயலாளர்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் ஆ.இராசா, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆகியோரும், குழுவின் உறுப்பினர்கள் நீதியரசர் மோகன், நீதியரசர் பி.ஆர். கோகுல கிருஷ் ணன், நீதியரசர் பாஸ்கர், நீதியரசர் ஏ.கே.ராஜன், நீதியரசர் ஜனார்த்தனம், நீதியரசர் சாமிதுரை, நீதியரசர் சண்முகம் மற்றும் பேராசிரியர் ஆர்.வி. தனபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பின் அதன் அமைப்பாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணை அமைப்பின் இரண்டாவது கூட்டம் இன்றைக்கு நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விரிவான ஆக்க பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.

முதல் முறையாக இந்திய அரசின் சார்பில் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசியல் தீர்வு காண முன்வரவேண்டும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அந்த அரசோடு பேசச் சென்று வந்ததோடு நின்று விடாமல், இந்தியக் குடியரசத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள் 12-2-2009 அன்று நடைபெற்ற நாடாளு மன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்றும்போது - இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், அங்கு வாழும் தமிழர்களின் பிரச்சினைக்கு அந்த அரசு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதுபாராட்டுக்கு உரியது - தமிழர்களின் நன்றிக்கும் உரிய தாகும் என்பதை குடியரசுத் தலைவருக்கு இக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பு நடை முறைக்கு வரவும் செயல் வடிவம் பெறவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக்குழுகேட்டுக் கொள்கிறது என்கிறது ஒரு தீர்மானம்.

இரண்டாவது. இன்றைய கூட்டத்தில் அன்றைக்கு நாங்கள் சொன்னோம் ஒரு முறையீடு ஒன்று தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் இந்திய அரசு - அய்.நாவின் பாதுகாப்புக் கவுன்சி லுக்கு - அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு,
குறிப்பாக மனித உரிமைக் குழுக்கள்,காமன் வெல்த் நாடுகள் ஆகியநாடுகளின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்வோம் என்று கூறியிருந்தோம். இப்போது அதற்கான முறையீடு நகல் ஒன்று தயாரித்துள்ளோம்.

அதிலே முதன் முதலாக மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். இலங்கையில் நடை பெற்று வரும் போரினைக் குறித்து கவலை கொண்டிருக்கும் மத்திய அரசு உடனடியாக அய்க்கிய நாட்டு சபை மற்றும் அதன் பாது காப்பு கவுன்சில் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்று இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவும், அதன் மூலம் அங்கு அமைதியை நிலைநாட்டவும், அங்கு நடைபெற்று வரும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவும் வலியுறுத்த வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளம்.


இதே போல் - மத்திய அரசை வலியுறுத்தியதைப் போல் சர்வதேச அமைப்புகளை வலி யுறுத்தியுள்ளோம்.

இந்தக் குழுவின் சார்பில் அனைத்து நாடுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.அதாவது இந்த அமைப் புகள் அய்க்கிய நாட்டுச்சபையை உடனடியாக அணுகி - இலங்கையில் நிலவும் பிரச்சினை குறித்து உடனடியாக அய்.நா விதி 11/2/1945 யின் கீழ் பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டு சென்று சர்வதேச அளவிலான அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து விவாதிக்க வேண்டும்.

சர்வதேச அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பவேண்டும்


அடுத்து இலங்கையில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அமைதிப் படையை அய்.நா.விதி 24/1/1945 இன்படி அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய அரசு மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா, நார்வே, ஜப்பான் மற்றும் அமைதியை விரும்பும் நாடுகள் அனைத்தும் பாதுகாப்புக் கவுன்சிலின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று இப்பிரச்சினையால் உருவாகும் அபாயம்குறித்து விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும். சர்வதேச அளவில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத் துவது என்பதுஅய்.நாவின் விதி எண் 35/1945 இன்படி கடைப் பிடிக்க வேண்டியதாகும். அதன்படி அவைகள் வலியுறுத்தப்பட வேண்டும்.

மனித உரிமை குழுக்கள் அங்கே மனித உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து ஆய்ந்து உடனடியாகத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து கண்காணிப்புக் குழுவின் விதி எண். 41/1966 இன்படிஇதை மேற்கொள்ள வேண்டும்.

காமன்வெல்த் நாடுகள் இலங்கை அரசை அழைத்து இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அங்கே யுள்ள இலங்கைத் தமிழர்க்கு மனித உரிமைகள் நிலை நாட்டிட வலியுறுத்த வேண்டும்.

சார்க் நாடுகள் - அதாவது தென் கிழக்கு ஆசிய நாடுகள் - இலங்கைஅரசை அழைத்து அந்நாடு சர்வதேசச் சட்டதிட்டங்களையும் - மனித உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்று கோருவ தோடு - இலங்கை வாழ் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.

வெளிநாட்டுத் தூதர்களிடம் மனு

இந்த வேண்டுகோளை எங்கள் முறையீட்டு மனுவில் விவரமாக எழுதி இருக்கிறோம். அதற்கு ஆதாரங்களையும் அதிலே சேர்த்து வைத்திருக்கிறோம். டில்லி செல்கிறபோது குடியரசுத் தலைவர், மற்றவர்களை சந்திக்கிற அதே நேரத்தில் முக்கிய நாடுகளின் தூதரக அலுவலகங்களுக்குச் சென்று தூதர்களிடத்திலும் மனு கொடுப்பது என்றும் முடி வெடுத்திருக்கிறோம். மனித உரிமைக் கமிஷனுக்கு நாம் நேராகவே அனுப்பலாம். அதை நாங்களே அனுப்பி விடுவோம்.

திருமதி சோனியா காந்தியிடமும் மனு அளிக்கப்படும்


பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் வருமாறு:

கேள்வி: சார்க் நாடுகளுக் கெல்லாம் நீங்கள் கொடுப்பீர்களா? இந்திய அரசு வழங்குமா?


அமைச்சர் துரைமுருகன்
:

இந்திய அரசுதான் அளிக்கும். பெரும்பாலும் இந்திய அரசு மூலம்தான் வழங்குவோம். மனித உரிமை கமிஷனுக்கு மட்டும்தான் நாம் அனுப்பலாம். மற்ற இடங்களுக்கெல்லாம் மத்திய அரசுதான் வழங்க முடியும்.

கேள்வி: எப்போது அளிக்கப் போகிறீர்கள்?

துரைமுருகன்:


இந்த வாரத்திற்குள் நாங்கள் அனைவரும் டில்லிக்குச் சென்று அளிப்போம். நாங்கள் அனுமதி கேட்டிருக்கிறோம். அவர்கள் என்றைக்கு கொடுத்தாலும் அன்றைக்குச் சென்று அளிப்போம்.

கேள்வி: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம்மனுவை அளிப்பீர்களா?

துரைமுகன்:

வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் இந்த மனு அளிக்கப்படும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களிடமும் அளிப்போம்.

கேள்வி: சர்வதேச அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறீர்களே? அய்.நா. அமைப்பு ஏற்றுக் கொள்ளுமா?

துரைமுருகன்:

அதற்காகத் தான் அய்.நா.விற்கே அப்பீல் கொடுக்க உள்ளோம். அவர்கள்தான் அதற்கான அனுமதியைத் தரவேண்டும்.

கேள்வி: இதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்வார்களா?

துரைமுருகன்:

இரு ஒரு சர்வதேச அமைதிப் படைதானே. அய்க்கிய நாடுகளுடைய அமைதிப் படை இது.

நீதியரசர் மோகன்:

இது தொடர்பாக நார்வே நாடு சில முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே நார்வே நாடு இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கேள்வி: இலங்கை அரசு சர்வதேச நிர்ப்பந்தத்தை ஏற்க மறுத்து வரும் நிலையில் இது சாத்தியமா?

துரைமுருகன்:

சர்வதேச நிர்ப்பந்தத்தை எப்படியெல்லாம் ஏற்படுத்தப் போகிறோம் என்பதைத் தான் விவரித்துள்ளோம்.

தமிழர் தலைவர் கி.வீரமணி:


சர்வதேச அமைப்புகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுவதன் காரணமே இலங்கைத் தமிழர்கள் சம உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

கேள்வி: ஒரே நேரத்தில் இலங்கை இராணுவமும் விடு தலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறிய போதிலும், தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் டில்லியில் முகாமிட்டு இது திருப்தி இல்லை என்று கூறுகிறார்களே?

துரைமுருகன்:

நாங்கள் எங்கள் பணியைச் செய்கிறோம். அவர்களுக்குத் தெரிந்த பணியை அவர்கள் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேட்டி யளித்தார்.

------------------நன்றி:- "விடுதலை" 15-2-2009

0 comments: