Search This Blog

4.2.09

ஈழத் தந்தை செல்வா மகன் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதம்




தங்கள் உடல்நலனும் ஆட்சியும் முக்கியம்!

முதல்வருக்கு சந்திரகாசன் கடிதம்


முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உடல்நல னும் மிக முக்கியம் என்று ஈழ அகதிகள் மற்றும் மறுவாழ்வுக் கான அமைப்பின் பொறுப்பாளரான சா.செ. சந்திரகாசன் (ஈழத் தந்தை செல்வா அவர்களின் மகன்) அவர்கள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் வருமாறு:-

வணக்கம். தாங்கள் முதுகுவலி காரணமாக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருப்பது அறிந்து துடித்துப் போனோம். இம்மடல் தங்கள் கைக்குக் கிடைப்பதற்கு உள்ளாகவே தாங்கள் முழு நலம் பெற்று திரும்பிவிட்டீர்கள் என்ற நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகின்றோம். தங்கள் உடல்நலத்தையும், உள நலத்தையும் கெடுக்கக்கூடிய எத்தனையோ நிகழ்வுகள். எனினும், தங்கள் நலத்தில்தான் தமிழ்கூறும் நல்லுலகத்தின் நலனே தங்கியுள்ளது என்பதால், உங்கள் உடல் - உள நலம் உங்களுக்கு மட்டுமல்ல, தமிழின நலத்திற்கும் இன்றியமையாதது. ஆகவே, அருள்கூர்ந்து முதற்கண் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

தங்களின் ஆட்சி முக்கியம்


ஈழத்தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும், தாங்கள் ஆட்சியிலிருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளி யிட முடிகின்றது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தி, தங்கள் ஆதங்கத்தை உலகிற்குத் தெரிவிக்க முடிகிறது. இந்தியாவும், உலகமும் மெல்லவேனும் இலங்கைத் தமிழர் உயிர்க் காப்பிலும், உரிமைக் காப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

எனவே, தங்கள் உடல் நலத்தைப் போலவே தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியும் - நலமும் பலமும் பெற்றுத் தொடர்வது இன்றியமையாததாகும். தடாகத்தில் நீர் இருந்தால்தான் தாமரை மலரும். மீன் வளம் பெருகும். பறவைகள் நாடிவரும். சூழவுள்ள நிலங்களில் செழிப்புத் திகழும். அதுபோல் தமிழாய்ந்த தமிழராகிய, மொழி உணர்வும், இன உணர்வும், மாந்த நேயமும் கொண்டவராகிய தங்கள் ஆட்சி தொடர்வது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களுக்கும், எங்குமுள்ள தமிழர்களுக்கும் இன்றியமையாததாகும்.

ஈழத்தமிழர் உரிமைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு எதிரான போரை நிறுத்தத் தாங்கள் பதவி துறக்க வேண்டு மென்ற கோரிக்கை அறியாமையில் இருந்து எழுவதாகும். ஈழத் தமிழர்களே அதை விரும்பவில்லை. ஈட்டி இழந்த நிலையில் கேடயத்தையும் தூக்கியெறிய வேண்டுமென்று கேட்பது போன்றதாகும் அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை எவர் மறுத்தாலும் அதனை ஏற்க முடியாது.

பாராட்டுதலுக்குரிய கலைஞரின் அணுகுமுறை

இந்திய நடுவண் அரசை எங்களுக்காக - ஈழத் தமிழர்களுக்காக இயங்கச் செய்வதில் உங்கள் பங்கு முக்கியமானது. தமிழக அரசில் தாங்கள் தொடர்ந்தால் அதனை சிறப்பாகச் சாதிக்க முடியும் என்பதைத் தமிழீழ மக்களும், தமிழக மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். மிக ஆழமான சிந்தனையுடன் கூடிய மிகப்பக்குவமான உங்கள் அணுகுமுறையைப் பாராட்டுகிறோம்.

தற்போதைய குழப்பங்களும், கொந்தளிப்புகளும் முடிவுக்கு வந்து, இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு கண்ட பின், நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது பெரும் பணியாகும். இவ் வளவு பெரிய தமிழ்நாட்டை, இன்னும் சொன்னால் இந்தியாவையே எத்தனையோ பிரச்சினைகளுக்கு நடுவில் புதிய புதிய திட்டங்கள்மூலம் வானளாவ உயர்த்தியிருக்கும் தங்களின் வழிகாட்டுதலும், உதவிகளும் எங்களுக்கு இன்றியமையாதவை யாகும். அவற்றை வழங்கி ஊக்குவிக்கவேண்டும் என்று நாங்கள் இப்போதே விண்ணப்பித்துக் கொள்கிறோம்.

ஆதலால், சவாலை, அழுத்தங்களைக் கண்டு கவலை கொள்ளாமல், தமிழின நலன்களையும், தங்கள் நலன்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தங்களை நேரில் வந்து காண ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி ஒப்புதல் தரவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தந்தை செல்வாவின் மகன் நாட்டு நடப்புகளை கொஞ்சம் படித்துப் பார்த்துவிட்டு புனைவுக் கடிதங்களை எழுதலாம், இந்தக் கடிதம் உண்மையாக இருக்கும் பட்சத்தில்!