Search This Blog

4.2.09

இதுதான் இவர்கள் நடத்தும் பத்திரிகா தர்மமோ! வெட்கம்!! மகாவெட்கம்!!!


பத்திரிகா தர்மம் படும்பாடு

பாசிசம் என்பதில் ஊடகங்களைத் தாக்குவது - தமக்கு எதிராகக் காணப்படும் அனைத்துப் பிரச்சாரங்களின் மூல ஊற்றுக்கண்களையும் முற்றாக ஒழிப்பது என்பது மிகவும் முக்கியமான அடக்கமாகும்.

இலங்கை சிங்களப் பேரினவாத அரசு பாசிசத் தன்மையது என்பதற்கு - தமக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதும் ஏடுகளை, அதன் ஆசிரியர்களை, தொலைக்காட்சி நிறுவனங் களைத் தாக்கி அழிப்பது என்பதை ஒரு வழமையாகவே கொண்டு மூர்க்கத்தனமாகச் செயல்பட்டு வருவதே அடையாளமாகும்.

சண்டே லீடர் என்ற இலங்கை ஆங்கில வார இதழின் முதன்மை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்படுவதற்கு முதல் நாள் அவ்விதழில் அவர் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதியைப் படித்தால் ராஜபக்சே என்ற கொடிய மனிதரின் மட்டரகமான மனப்பான்மையின் கனபரிமாணம் எளிதில் விளங்கும்.

இராணுவத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தொழில் நிமித்தமாக - அந்தத் தொழில் புரிவோரின் உயிரைப் பலியாகக் கேட்பதில்லை. இலங்கையில் இந்த வகையில் பத்திரிகைத் தொழிலும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஊடகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் எரிக்கப்படுவதும், வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாவதும், பலவந்தமாக நிறுத்தப்படுவதும் தொடர் கதையாக உள்ளாகி வருகின்றன. எண்ணற்ற செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர், இந்த அனைத்தும் - கடைசி அம்சம் உள்பட, எனக்கும் பொருந்தும் என்பது எனக்குச் சிறப்பு செய்வதாக உள்ளது.

11.1.2009 அன்று வெளிவரவேண்டிய சண்டே லீடர் இதழுக்காக சனவரி 7 ஆம் தேதி லசந்த விக்ரமதுங்க அவர்களால் எழுதப்பட்ட தலையங்கம் இது. இவ்வளவுக்கும் அவர் தமிழரல்லர் - சிங்களர்தான்.

என்ன கொடுமை! அவர் எதிர்பார்த்ததுபோலவே, இதனை எழுதிய மறுநாளே அவர் படுகொலை செய்யப்பட்டார். அந்தத் தலையங்கம் அவரைப் பொறுத்தவரை ஒரு மரண சாசனமாகவே அமைந்துவிட்டது.


2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 தொடக்கம் வரை இலங் கைத் தீவில் ஊடகத் துறையில் பணியாற்றிய ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். 27 பேர் கடுமையாகத் தாக்கப் பட்டனர். இதனைத் தெரிவித்தவர்கள், "ஏனோ தானோக்கள்" அல்லர்.

இலங்கை நாடாளுமன்றத்தில், பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஸ் குணவர்த்தனேவால் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்ட தகவலாகும் (22.1.2009).

இப்பொழுது இலங்கையில் நடக்கும் நிலைமைகள் என்ன? ஈழத்தமிழர்களின் ஜென்மப் பகைவர்களாக இறுமாப்புடன் காட்டிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் ஏடு ஒன்றே ("தினமணி", 2.2.2009) முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

"விடுதலைப்புலிகளின் மூச்சு அடங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது; அவர்களுக்கு உயிர்க் காற்றைத் தரும் வகையில் எவரும் செயல்பட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்'' என்று ராஜபக்சே காட்டமாகக் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தமிழர்கள் அல்லல்படுவதாகக் காட்ட, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இணைய தளங்களில் வெளியாகும் புகைப்படங்களையும், காட்சிகளையும் தொலைக் காட்சிச் செய்தியாளர்களும், வெளி நாட்டுத் தூதர்களும் கையாள்வதாக கோத்தபய ராஜபக்சே குற்றம் சாட்டியிருக்கிறார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர், அவர்களுடைய இன்னல்கள் என்னவென்று நாங்கள் பார்த்து வருகிறோம் என்று செய்தியாளர்களோ, சர்வ தேச உதவிக்குழுக்களின் பிரதிநிதிகளோ கெஞ்சினால் இலங்கை ராணுவ அதிகாரிகள் அனுமதி தர பிடிவாதமாக மறுக்கின்றனர்.

அந்தக் காட்சிகளை ஒளிபரப்பினால் தங்களுக்கு சர்வதேச நெருக்கடி நேரும். எனவே அதை மறைத்து விடுதலைப்புலிகளை நிர்மூலம் செய்துவிடலாம் என்று இலங்கை ராணுவம் கருதுவதைப்போலத் தெரிகிறது. யாரையாவது அனுமதித்தால் தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்னவென்று தெரிந்துவிடுமோ என்று விடுதலைப்புலிகள் தரப்பிலும் தயங்குவது போலத் தெரிகிறது."

விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் கங்கணம் கட்டிக் கொண்டு கனல் கக்க செய்திகளை வெளியிடும், தலையங்கங்களைத் தீட்டும் "இந்து"க் கூட்டமும், "துக்ளக்" வகையறாக்களும் குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களுக்கு எதிராக பாசிச வெறியுடன் செயல்படும் சிங்கள ராஜபக்சேக்களைக் கண்டிக்க முன்வரவில்லையே? இதுதான் இவர்கள் நடத்தும் பத்திரிகா தர்மமோ! வெட்கம்!! மகாவெட்கம்!!!

----------------நன்றி:- "விடுதலை" தலையங்கம் 4-2-2009

2 comments:

அர டிக்கெட்டு ! said...
This comment has been removed by the author.
அர டிக்கெட்டு ! said...

முன்னரிட்ட கருத்து வேறு இடுகைக்கு மாற்றியதால் நீக்கினேன்