Search This Blog

22.2.09

கலைஞருக்கு சிலை ஏன்? கலைஞர் சிலையைத் திறக்க அடிகளாரை அழைத்ததேன்?பெரியார் பெற்ற மகிழ்ச்சி


அம்மா விளக்கம்

கலைஞர் சிலையைத் திறக்க அடிகளாரை அழைத்ததேன்? தந்தை பெரியார் அவர்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதில் இன உணர்ச்சிக் கண்ணோட்டம் தான் முக்கியம் என்று கருதி அதன்படியே செயல்படக் கூடியவர்கள், அவர்கள் மதவாதியாக இருந்தாலும், வேறு பல கருத்துகளில் மாறுபாடாக இருந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாது, அவர்களிடம் தமிழன் என்கின்ற இன உணர்ச்சி இருக்கிறதா என்பதைத்தான் முக்கியமாகப் பார்ப்பார்கள். உதாரணமாக 1925-ம் ஆண்டிலே அய்யா அவர்கள் குடிஅரசு ஏட்டைத் துவக்கிய நேரத்திலேகூட திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரைத்தான் அழைத்துத் துவக்க விழா நடத்தினார்கள். நம்முடைய இனத்திலே பிறந்த ஒருவர் எந்த இடத்திலே இருந்தாலும், அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் - பெருமையாக நடத்த வேண்டும் என்று கருதுபவர் தந்தை பெரியார். அந்த அடிப்படையில்தான் ஞானியார் அடிகளை அழைத்து இன உணர்ச்சியின் சின்னமாகத்தான் இன்றைய தினம் கலைஞர் அவர்கள் சிலையை, தந்தை பெரியாருடைய ஆணையை ஏற்று திராவிடர் கழகம் எடுத்து இருக்கிறது.

ஓர் இன உணர்ச்சி விழாவிற்கு ஓர் இனவுணர்வு கொண்ட தமிழரைத்தான் அழைக்க முடியுமே தவிர வேறு யாரையும் நாங்கள் அழைக்காதற்குக் காரணம், அடிகளார் அவர்களைத் தவிர சிறந்த ஒருவர் எங்கட்குக் கிடைக்காததாலேயாகும் என்று அம்மா அவர்கள் குறிப்பிட்டார்கள். கலைஞர் சிலை திறப்பு விழாவில் நான் வரவேற்புரை நிகழ்த்தினேன். (விடுதலை 27.9.1975) அப்பொழுது, அய்யா அவர்கள் ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள் என்றால் அதை ஆணையாக ஏற்றுக் கொண்டு செயல்படுவதுதான் எங்கள் வேலை. அந்த ஆணை இன்று செயல்படும் வகையில் தான் டாக்டர் கலைஞர் அவர்கள் அதோ, சிலை வடிவாக நின்று கொண்டு இருக்கிறார்!

தந்தை தனயனுக்கு எடுக்கும் சிலை!

நாட்டில் பிள்ளைகள் என்பவர்கள் தன் தந்தையார் பெயரை எடுக்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு விசித்திரமான நிலை. தன் தனயனைப் பாராட்டி தந்தையே சிலை எடுத்து மகிழும் அற்புதம் இங்குதான் உண்டு! என்பதுடன் இது சூத்திரன் அரசு என்று தமிழ்நாடு அரசு நாலாஞ்சாதி மக்களான சூத்திரர்களுக்காக பாடுபாடும் அரசுதான் - எங்களை எல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகிறேன் இவ்வரசு நாலாந்தர அரசுதான்! பிராமண, சத்திரிய, வைசிய சூத்திரன் என்ற முறையில் நாலந்தர அரசைத்தான் நாலாந்தர மக்களுக்காவே நடத்துகிறோம் என இறுமாப்புடனும் பெருமையுடனும் கர்வத்துடன் கூறிக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்தினார் கலைஞர் என்று பெருமைப்பட எடுத்துக்கூறிய அந்த சம்பவத்தை விடுதலையில் கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு வெளியிடப்பட்டது. இந்தச் செய்தியை அய்யாவிடம் கூறினேன்.

அய்யா அகமகிழ்ந்து, இதனையே முக்கிய தலைப்புச் (Banner) செய்தியாக விடுதலை ஏட்டில் போடுங்கள் என்றார்; ஏற்கெனவே அப்படியே போட்டு விட்டோம் என்று கூறியதைக் கேட்டு மேலும் மகிழ்ந்தார்கள். என் பொது வாழ்வியல் நான் பெற்ற பெரிய மகிழ்ச்சியான செய்தி இது!
என்று தந்தை பெரியார் அவர்கள் இதை குறிப்பிட்டுக் கூறினார்கள்.

அண்ணாசாலையை எடுத்துக் கொண்டால்கூட தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட மூன்று முதலமைச்சருக்குச் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. பச்சைத் தமிழர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்கள் - இப்படி சிலைகள் எல்லாம் தமிழர்களுக்கே எடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கண்டு எதிரிகளுக்குப் பொறுக்க முடியவில்லை. இதில் நம் இனத்து விபீஷணர்களே அம்புகளாகப் பயன்படுவதுதான் வேதனை! என்று குறிப்பிட்டு என் பேச்சை முடித்துக் கொண்டேன்.

சிலை வைப்பது குறித்து கலைஞர் அறிக்கை (விடுதலை: 15.10.1975)

தனக்குச் சிலை வைக்க பல இடங்களில் ஏற்பாடு நடந்து வருவதாகவும், அதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கேட்டு, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இன்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார். முதல்வர் கலைஞர் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தந்தை பெரியார் அவர்களுடன் தான் கலந்து கொண்ட ஒரு விழாவில் எனக்குச் சிலை அமைக்க வேண்டும் என்ற கருத்தை பெரியார் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்கள். அதற்குப் பதில் அளிக்கும்போது நான்: எனக்குச் சிலை வேண்டாம் என்றும், அப்படி வைப்பதாக இருந்தால் தந்தை பெரியாருக்கு வைத்த பிறகு அது பற்றி யோசிக்கலாம் என்றும் கூறி அன்றைக்கு ஒரு விதமாக பெரியாரின் பிடிவாதமான கருத்தைச் சமாளித்தேன்.

பெரியார் மறைவுக்குப் பிறகு பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றி வரும் திராவிடர் கழகத்தினர் இதில் உறுதியாக இருந்தனர். அவர்கள் முதலில் ஒருமுறை எடுத்த முயற்சியைத் தடுத்து சிலை வைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுகளை திரும்பப் பெறுமாறு செய்தேன்.

அதன் பிறகும் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள், பெரியாரின் கடைசி ஆசைகளில் ஒன்று எனக்குச் சிலை வைப்பது என்று கூறி அந்த முடிவில் பிடிவாதமாக இருந்து வெற்றியும் பெற்று விட்டார்கள் என்று குறிப்பிட்டார். நேரிலும் சென்னை வந்து அம்மாவிடம் நன்றி கூறினார்.

1971ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களின் 93-ஆம் ஆண்டு பிறந்தநாள் - 17-9-1971-இல். அவர்தம் சொந்த பூமியாகிய பகுத்தறிவு மண்ணில் தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாளை வெகு விமரிசையுடன், ஈரோடு நகரமக்கள் பலரும் குழு அமைத்து, ஈரோட்டின் மய்யப்பகுதியில் சிலை திறப்பு விழாவை நடத்தினார்கள். அக்குழுவில் நகரத்தின் முக்கியப் பிரமுகர், பெருவணிகர் எம்.ஜி.அங்கப்ப (செட்டியார்). இவரது வளர்ச்சிக்கு அய்யா அவர்கள் பெரிதும் துணையாக இருந்தவர்கள் என்ற நன்றி உணர்ச்சியோடு இறுதிவரை இருந்த வெள்ளைச் சட்டை அணிந்த சுயமரியாதைக்காரர். மற்ற பிரமுகர்கள் ஈரோடு திரு. எஸ்.ஆர்.சந்தானம், அவருடைய சகோதரர் எஸ்.ஆர்.சாமி. (அய்யா வின் தங்கை கண்ணம்மையார்தம் அருமைப் புதல்வர்கள் - மாப்பிள்ளை நாயக்கர் மஞ்சள் மண்டியை நடத்தியவர் - பின்னவர். கடைசிவரை அய்யா, அம்மா மற்றும் எனது நிருவாகத்தில் ஈரோட்டின் இயக்கச் சொத்துகளை நிருவகித்த நாணயமான - நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர்.)

திரு. எஸ்.ஆர்.சந்தானம் அவர்கள் ஈரோட்டில் அண்ணா இருந்தபோது மிக நெருக்கமாகப் பழகியவர். கடைசிவரை ஈரோடு நகராட்சி உறுப் பினராகவே அய்யா குடும்பப் பாரம்பரியத்தோடு இருந்தவர். இவர்கள் எல்லாம் சேர்ந்து அய்யா பிறந்த ஊரில், அவரிடம் ஈரோட்டுக் குருகுலத் தில் சீடராக இருந்து பிறகு அண்ணாவுக்கு அடுத்தபடி முதல்வராகி, அப்பதவிக்காலத்தில் பதவிக்காலம் முடியும் - ஓராண்டுக்கு முன்பே சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து, பெருவாரி யான வெற்றியைத் தி.மு.க. பெற்று, மீண்டும் 2ஆம் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திறந்துவைத்த பெரியார் சிலை ஈரோட்டில் என்பது வரலாற்று முக்கியத்துவ நிகழ்ச்சியாகும்!

1971 தேர்தலிக்கு முன்பு நடைபெற்ற தி.மு.க. எதிர்ப்புப் பிரச்சாரத்தில் கலைஞர் தலைமையில் நடந்த தி.மு.க.யைக் ஆட்சியைக் குறை கூறிய சோ.ராமசாமி, முதல்வருக்கு முக்கிய வேலையே பெரியாருக்குச் சிலைகளை ஆங்காங்கே சென்று திறந்து வைப்பதுதான் என்று வயிறு எரிந்து ஆத்திரத்துடன் தனது ஏட்டில், தேர்தலுக்கு முன் எழுதியததற்காகவே, வெற்றி பெற்றவுடன் ஈரோட்டிலேயே முதல்வர் கலைஞரை அழைத்து பிரமாண்ட நிகழ்ச்சியாக சிலை திறப்பு விழா நடைபெற்றது!

சிலை திறப்பு விழாவிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அதே ஈரோட்டில்தான் தந்தை பெரியார் அவர்களும், அடிகளாரும் தனியார் ஒருவர் இல்லத்தில் சில ஆண்டுகளுக்குமுன் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சிலை திறப்பு விழாவில், வரவேற்புரையை சிலைக்குழுத் தலைவர் எம்.ஜி.அங்கப்பனார் அவர்கள் நிகழ்த்தினார். முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள் ப.உ.சண்முகம், க.ராசாராம், கண்ணப்பன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

--------------------------நினைவுகள் நீளும்

------------------------ கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் அய்யாவின் அடிச்சுவட்டில் (இரண்டாம் பாகம்: தொடர் - 13) - "உண்மை" பிப்ரவரி 15-28 2009

2 comments:

Unknown said...

//நம்முடைய இனத்திலே பிறந்த ஒருவர் எந்த இடத்திலே இருந்தாலும், அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் - பெருமையாக நடத்த வேண்டும் என்று கருதுபவர் தந்தை பெரியார். அந்த அடிப்படையில்தான் ஞானியார் அடிகளை அழைத்து இன உணர்ச்சியின் சின்னமாகத்தான் இன்றைய தினம் கலைஞர் அவர்கள் சிலையை, தந்தை பெரியாருடைய ஆணையை ஏற்று திராவிடர் கழகம் எடுத்து இருக்கிறது.

ஓர் இன உணர்ச்சி விழாவிற்கு ஓர் இனவுணர்வு கொண்ட தமிழரைத்தான் அழைக்க முடியுமே தவிர வேறு யாரையும் நாங்கள் அழைக்காதற்குக் காரணம், அடிகளார் அவர்களைத் தவிர சிறந்த ஒருவர் எங்கட்குக் கிடைக்காததாலேயாகும் என்று அம்மா அவர்கள் குறிப்பிட்டார்கள்.//

பெரியாரின் செயல் பாடுகளைப் படிக்கும் போது வியப்பாக இருக்கிறது. பெரியாரைப் பற்றிய செய்திகளை தேடித் தேடி படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு