Search This Blog

20.2.09

சென்னை உயர்நீதிமன்ற நிகழ்வுக்குப் பின்னணி என்ன?




* சு.சாமியின் வருகையால் முதல்நாள் சச்சரவு ஏற்பட்ட நிலையில், மறுபடியும் சு.சாமி நீதிமன்றம் வந்ததன் அவசியம் என்ன?
* சு.சாமி, ஜெயலலிதா ஆகியோருக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளருடன் சு.சாமி நடத்திய ஆலோசனை என்ன?
* தி.மு.க. ஆட்சியை உடனே கலைக்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் அவசர அறிக்கை ஏன்?

திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட நடவடிக்கைகள்பற்றி
உரிய முறையில் ஆய்வுகள் நடத்தப்படவேண்டியது அவசியமாகும்

குற்றவாளிகள் யாராகவிருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று (19.2.2009) பிற்பகல் நடந்த வழக்கறிஞர்கள் - காவல்துறை மோதல் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டமாக மாறியுள்ளது மிகவும் வேதனை அளிக்கக் கூடியது; சமுதாய நலனில் அக்கறை உள்ள அனைவரது கண்டனத்திற்கும் உரியதாகும்!

சு.சாமியால் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகள்


அதற்குமுன், அதாவது 17.2.2009 அன்று சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்திற்கு, தன்னையும் சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் கட்சியாடுபவராக நீதிமன்றம் சேர்த்துக் கொள்ள வேண்டும் (Impleading) என்பதற்காக சென்றபோது, நீதிமன்ற வளாகத்திற்குள் - இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பே அவர்மீது முட்டைகள் வீசப்பட்டதாகவும், அவரைப்பற்றி ஜாதியைக் குறித்து பார்ப்பான் ஒழிக என்றெல்லாம் கூச்சல் போடப்பட்டதாகவும், காவல்துறையினரையும் மீறி நடந்ததாகவும், இதை உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதிவு செய்து, என்ன நடவடிக்கை - பாதுகாப்பு கருதி எடுக்கப்படவேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளதாகவும் வெளிவந்த செய்திகளின் தொடர் நிகழ் வாகவே நேற்றைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

தள்ளுமுள்ளுகள் - தடியடிகள் - எரிப்புகள்

நேற்று மீண்டும் சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்திற்கு வருவதை யொட்டி, (அப்பீல் மனுவை நீதிமன்றம் அனுமதிக்கும் முன்பே இம்மனுவை சேர்ப்பது என்பது நமக்கு விளங்கவில்லை) சென்னை காவல்துறையினர் அதிரடிப்படை கமாண்டோக்கள் உள்பட ஏராள மானவர்களை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தி, அங்கேயே முந்தைய நிகழ்வுக்காக குற்றம் சுமத்தப் பட்ட வழக்கறிஞர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஏற்பட்ட வாக்குவாதம், முரண்பாடுகள், தள்ளுமுள்ளுகள், கல்லெறிகள், தடியடிகள் என்றெல்லாம் வளர்ந்து, சமாதானம் செய்யச் சென்ற நீதியரசர் ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உள்பட தடியடியால் தாக்கப்பட்ட நிலை ஏற்பட்டு, பிறகு அங்குள்ள காவல் நிலையமும், காவல் நிலையத்தில் இருந்த பொருள்களும் தீ வைத்துக் கொளுத் தப்பட்டுள்ளன!

இவைகளையெல்லாம் பல்வேறு தொடர் வன்முறைச் சம்பவங்களை பல தொலைக்காட்சிகள் படமெடுத்து ஒளிபரப்பியுள்ளன.

தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்ற ஜெயலலிதாவின் வழமையான பல்லவி

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை; ஆகவே, கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை - நிகழ்வு நடந்த சில மணிநேரத் துளிகளில் பேட்டியாகக் கொடுக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்கள்!

அவரைப் பொறுத்தவரை தி.மு.க. பதவியேற்ற அடுத்த நாள் முதலே இப்படி ஒரு பல்லவியை சதா பாடி வருபவர்; எப்படியாவது பதவியில், தான் அமர்ந்துவிடவேண்டும் என்று நாளும் ஜெபித்து வருபவர்!

சதித்திட்டப் பின்னணி

நேற்றைய சம்பவமும் சரி; அதற்கு முன்பே 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சு.சாமி வந்தபோது நடந்ததாகச் சொல்லப்படும் நாடகம் போன்ற காட்சிகளுக்கும் சரி சரியான சதித் திட்டப் பின்னணி இருக்கவேண்டும்; அதுபற்றி முழு ஆராய்வும், விசாரணையும் நடத்தப்பட்டு அதில் மறைந்துள்ள அல்லது மறைக்கப்பட்ட பல உண்மைகளும் வெளிவரவேண்டும்.

தற்காலிக தலைமை நீதிபதிக்கு முதலமைச்சரின் நெஞ்சுருக்கும் கடிதம்

மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து தேறிவரும் முதலமைச்சர் அவர்கள் அந்த வேளையிலும் தானே உடனடியாக தமிழக - சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி அவர்களுக்கு மருத்துவமனையிலிருந்தே கடிதம் எழுதியுள்ளார்.

அன்புள்ள தலைமை நீதிபதி அவர்களுக்கு,

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இதுவரை கண்டிராத வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.

இந்த நிலைமையைப்பற்றி உங்களிடம் விளக்குவதற்காக, அரசு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோரை அனுப்பியுள்ளேன்.

எதனால் தவறு ஏற்பட்டிருக்கிறது என்பதையும், தவறு வழக் கறிஞர்கள் பக்கமா அல்லது காவல் துறையினர் பக்கமா என் பதையும், அடிப்படைக் காரணங்களையும் உறுதி செய்ய, அரசுக்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் தேவை!

இந்த வன்முறையைக் கட்டுப்படுத்தி - நீதி நிலை நாட்டப்படு வதை உறுதி செய்யவும், அமைதியை நிலைநாட்டவும் உங்களுடைய மதிப்பு மிக்க ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

நான் மருத்துவமனையில் இருந்தாலும் தாங்கள் விழைந்தால், உங்களைச் சந்திக்க ஆம்புலன்சில் வரக் கூடத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்கள்.

இது நமது முதலமைச்சரின் உயரிய கடமை உணர்வையும், நெஞ்சுருக்கும் செயலாற்றும் திறனையும் தெளிவாகக் காட்டுகிறது என்பதை மனச்சாட்சி உடைய அனைவரும் ஒப்புக்கொள்வர்.

சி.பி.அய். விசாரணை

இப்பிரச்சினை சம்பந்தமாக பொதுநல மனு ஒன்றை வக்கீல்கள் தாக்கல் செய்துள்ளதை ஏற்று, நீதிபதிகள் தற்காலிகத் தலைமை நீதிபதி முகோபாத்தியாயா, தனபாலன், சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்றிரவு விசாரித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி சி.பி.அய். (CBI) விசாரணைவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரசு எவ்வித மறுப்பும் கூறாமல் உடனடியாக ஒப்புக்கொண்டதால், அதை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.பி.அய். விசாரணைக்கு இதனை விட்டுள்ளார்கள்!

மேலும் உயர்நீதிமன்றப் பதிவாளர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதில் சில வழக்கறிஞர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!

இந்த சி.பி.அய். விசாரணை மூல காரணங்கள்பற்றியும், இதில் உள்ள சதித் திட்டப் பின்னணிபற்றியும் ஏதாவது சதித் திட்டம் இதன்மூலம் உருவாகியுள்ளதா? என்றும் விசாரித்து பல கோணங்களில் ஆய்வு செய்யவேண்டும்.

திட்டமிட்ட நடவடிக்கைகளா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படவேண்டும்

(1) சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் கோயில் சம்பந்தப்பட்ட வழக்கின் அப்பீல் சென்னை உயர்நீதிமன்றத்தால் விசாரணைக்கே ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்திற்கு வருவதற்கு, தன்னையும் ஒரு கட்சிக்காரராக இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கூற அவருக்கு உரிமை சட்டப்படி உண்டா என்பதும், அவர்மீது முட்டை வீசி, பார்ப்பான் ஒழிக என்று கூச்சல் போட்ட ஏற்பாட்டுக்கு உண்மையில் யார் ஏற்பாடு, நீதிமன்றத்தில் நீதியின் போக்கை மாற்றி, தங்கள் பக்கம் அனுதாபத்தைப் பெற, விளம்பரத்தைப் பெற, தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று சு.சாமிகள் தொடர்ந்து கூறி வருவதற்கு மேலும் வலு சேர்க்கப்பட இப்படி திட்டமிட்ட சம்பவங்கள் நடை பெற்றனவா? என்ற கோணத்திலும் சி.பி.அய். விசாரணை இருப்பது அவசியம் என்பது பொது நோக்கர்கள் கருத்தாகும்!

(2) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளே வழக்கறிஞர்கள் சிலரைக் கைது செய்யச் சென்ற காவல்துறையின் அணுகுமுறை மதிநுட்பமுடைய செயல் ஆகாது; அத்துடன் உயர்நீதிமன்ற அனுமதியின்றி அப்படி போலீசை - அதிலும் குறிப்பாக கமாண்டோ படையினருக்கு விதிகள், முறையான சட்ட நடவடிக்கைகள் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதுபற்றியும், அங்குள்ள காவல் நிலையத்தையே தீக்கிரையாக்கும் அளவுக்குச் செயல் நடந்தது திடீரென ஆத்திரத்தினால் மட்டும் நடக்கக் கூடியதல்ல; இது யாரால் நடத்தப்பட்டது; இதை நடத்தியவர்கள் யார்? வழக்கறிஞர்களா? அல்லது சமூக விரோதிகளா? என்பதுபற்றியும், தடியடி என்பது நீதியரசர் ஒருவர் தாக்கப்படும் அளவுக்கு ஏன் செல்லவேண்டும்? என்பதும், கடிதோச்சி மெல்ல எறிக தெரியாத நிலை ஏன் ஏற்பட்டது? என்பது குறித்தும் முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறை எப்படி நுழைந்தது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிகழ்வுகளுக்கு இரு நாள் முன்பு (17.2.2008) நீதிமன்ற வளாகத்துக்குள் சு.சாமி தொடர்பாக நடந்த கசப்பான அனுபவங்களை மனதிற்கொண்டு, காவல்துறை அவசர நடவடிக்கையாக தமது கடமையினை ஆற்றிடச் சென்றிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

சில நேரங்களில் அவசர நிலையில், சூழல்கள் காரணமாக காவல்துறை சில நடவடிக்கைகளை மேற்கொள்வது தவிர்க்கப்பட முடியாததாகிவிடுகிறது என்பதும் யதார்த்தமானதாகும். இல்லையேல் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பாவர்.

ஒரு பத்திரிகையாளருடன் ஆலோசனை

ஆனால், ஒன்று உறுதி. தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, அதனால் அரசியல் லாபம் பெற இது திட்டமிட்ட ஏற்பாடு என்பதும், சென்னை உயர்நீதிமன்ற 17 ஆம் தேதி சம்பவத்திற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வற்புறுத்தும் ஜெயலலிதா, சு.சாமி இவர்களோடு நெருக்கமாக ஆலோசனைகள் வழங்கிவரும் ஒரு பார்ப்பன பத்திரிகையாளரை சந்தித்துப் பேசியுள்ளார் சு.சாமி என்பதும், உடனே தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய் என்ற அம்மையார் அறிக்கை கொடுப்பதோடு, காங்கிரசுக்கு அறிவுரை, வேண் டுகோள் என்ற தனது நப்பாசையை வெளியிட்டுள்ள (மறுப்பை வாங்கிக் கட்டிக்கொண்டு) நிலையும் எதனைக் காட்டுகிறது?

தி.மு.க. ஆட்சியின் பட்ஜெட்டால் ஏற்பட்டுள்ள
நற்பெயரைத் திசை திருப்ப முயற்சி!


தி.மு.க. பட்ஜெட் 17 ஆம் தேதி மிக அருமையானதாக அமைந்ததை மக்கள் அறவே மறந்துவிட்டு, இதுபற்றிப் பேசிட திசை திருப்பவும் இது அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஊகமும் தவறு ஆகாது!

அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்
அண்ணா சாலையில் நடந்தது என்ன?


ஆனால் ஒன்று, இன்னும் இரண்டு ஆண்டுகாலம் ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசினை கவிழ்த்துவிடலாம் என்ற ஜெயலலிதா, சோ, சு.சாமி போன்ற சிலரின் கனவு ஒருபோதும் நடக்காது; இது போன்ற வன்முறை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அண்ணாசாலை யில் நடக்கவில்லையா? இதே சு.சாமிக்கு அ.தி.மு.க. மகளிரணி இதே நீதிமன்றத்தில் அளித்த வரவேற்பு மறக்கக் கூடியது தானா?

அ.தி.மு.க. அமைச்சர்களே சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையால் அந்த தடியடியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட வரலாறு மறந்துவிட்டதா?

இதுபோல எத்தனையோ சம்பவங்கள் உண்டு. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, இதுபற்றி மேலும் நாம் பலவிதமான செய்திகளைச் சொல்வது முறையாக இருக்காது.

தமிழ்ப் பெருமக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

குற்றம் செய்தவர்கள் யாராகவிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்

குற்றத்திற்கு யார் பொறுப்பானாலும், அதன் விசாரணை விருப்பு வெறுப்பின்றி - காவல்துறையோ, வழக்கறிஞர்களோ ஆனாலும் அதன்பிறகு தயவு தாட்சண்யம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வைத்து நாட்டின் பல பகுதிகளில் வழக்குரைஞர்களோ, மற்றவர்களோ அல்லது வேறு தீயசக்திகளோ கலவரத்தில் ஈடு பட்டால், அத்தகைய நிலவரத்தினைத் தடுத்து, உரிய சட்ட நடவடிக் கைகளை எடுப்பதற்குத் தமிழக அரசு தயங்கக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

பிரச்சாரம் செய்யப்படவேண்டும்

அதேநேரத்தில், முதல்வரின் கவலை தோய்ந்த பொறுப்புமிக்க அணுகுமுறை நடுநிலையாளர்களால் - உலகத்தவரால் புரிந்து கொள்ளக்கூடும்.

தி.மு.க.வும், அதன் உண்மையான தோழமையினரும் இச் சம்பவங்கள்பற்றி மக்களிடையே பரப்புரை (பிரச்சாரம்) செய்யத் தயங்கக்கூடாது என்பதும் நமது வேண்டுகோள்!


------------------ "விடுதலை" - 20.2.2009

0 comments: