Search This Blog

22.2.09

சங்ககால இலக்கியங்களும் பெரியாரின்பகுத்தறிவுக் கொள்கைகளும்


சங்ககால இலங்கியங்களும் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளும்

(முனைவர் பேராசிரியர் இரா. மணியன்
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் (தஞ்சாவூர்) மதிப்பியல் பேராசிரியர் முதுபெரும் புலவர் ஆவார். பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள் எனும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.)


கடவுளும் மதமும்

பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளுள் தலையாயது கடவுள் பற்றியது. மனிதனை ஏமாற்ற மனிதனால் படைக்கப் பட்டதுதான் கடவுள் என்பது பெரியாரின் திடமான நம்பிக்கை ஆகும்.
கடவுள் இருக்கிறார் என்றால், அதனை எல்லோர் முன்னிலையிலும் காட்டவேண்டும் என்று பெரியார் கூறியதைப் பகுத்தறிவாளர்கள் யாவரும் ஒப்புக் கொள்வர்.

கி.பி. 1694 முதல் 1778 வரை வாழ்ந்து, பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டு,சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைக் கோட்பாடுகளாகக் கொண்டு உலகையே அதிரவைத்த பகுத்தறிவாளர் வால்டேர், இயற்கையால் நம்முள் கடவுள் அறிவு புகுத்தப்படவில்லை. அப்படி புகுத்தப்பட்டிருந்தால் எல்லா மனிதர்களும் ஒரே சமயத்தில் கடவுளைப் பற்றிய அறிவு ஏற்பட்டிருக்கும். ஆனால் நாம் பிறக்கும்போது கடவுளைப் பற்றிய இந்த அறிவுடன் பிறப்பதில்லை என்று கூறியுள்ளார்.

இதே கருத்தைத்தான் பெரியாரும் கூறுகிறார் என்பது நோக்கத்தக்கது. இந்தக் கருத்துடன், மதம் பற்றிய பெரியாரின் கருத்தும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
மதம் மனிதனை அறிவில்லாதவனாகவும், மூட நம்பிக்கை கொண்டவனாகவும் ஆக்குகிறது என்பதைப் பெரியார் பல்வேறு ஆதாரங்களோடு விளக்குகிறார். மதம்தான் வருணா சிரமத் தர்மத்தையும், சாதி வேறுபாடுகளையும் வேரூன்றச் செய்தது என்பதையும் பெரியார் புலப்படுத்துகிறார். அதனால் தான், மதம் தொடர்பான எத்தகைய இலக்கியமானாலும் அவ்விலக்கியம் தமிழர்களுக்குத் தேவையில்லாதது என்று கூறுகிறார்.

கடவுளும் மதமும் கூறப்பட்ட எந்த இலக்கியமாக இருந்தாலும் அதைப் பெரியார், இலக்கியமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ சொல்லாத எத்தனையோ சங்ககாலப் பாடல்கள் உள்ளன என்றாலும், கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் எடுத்துரைக்கும் பாடல்களும் சங்ககாலத்தில் பாடப்பட்டுள்ளன என்பதை மறுக்க இயலாது.

சங்ககாலத்துக்கு முற்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்துள்ளும் தெய்வம் பற்றிய கருத்து இருப் பதைக் காண்கிறோம். அணங்கே விலங்கே, கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே என்ற நூற்பாவால் (1202) அறியலாம்.

சங்ககாலக் கடவுள்கள்

நிலத்தை நானிலம் என்று கூறினாலும், பாலையையும் சேர்த்து அய்வகை நிலமாகக் கூறி, அவற்றுக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயரிட்டு அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தெய்வத்தையும் அக்காலத்திலேயே தமிழர்கள் படைத்துக் கொண்டுள்ளனர். இக்கருத்தைப் பெரியார் ஏற்றுக் கொள்ளாததில் வியப்பில்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற கொள்கையைக் கொண்ட பெரியார் தமிழர்களின் கடவுட் கொள்கையை ஏற்றுக் கொள்வார் என்று நாம் எவ்வாறு எண்ண இயலும்? அய்வகை நிலங்களுக்கும் முறையே சேயோன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை என்று கடவுள்களைப் படைத்த மக்களைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்றே பெரியார் எண்ணுகிறார்.
தமிழகத்தில் வாழ்ந்திருந்த ஆதிகுடிகளின் கடவுட் கொள்கைகளும்,தமிழ் மக்களின் சமயக் கொள்கைகளும், ஆரியரின் சமயக் கொள்கைகளும் ஒன்று கலந்து சங்க காலத்து சமுதாயத்தில் இடம் பெற்றிருந்தன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பண்டைக் காலத் தமிழரிடையே துறக்கம்,நரகம் பற்றிய எண்ணங்கள் குடி கொண்டிருந்தன. நரகமும் சொர்க்கமும் ஆரியப் பார்ப்பனர்களின் கற்பனைகள் என்றும், தமிழர்களை அடிமைப்படுத்துவதற்காகவே இக்கொள்கைகளைப் பரவவிட்டனர் என்றும் பெரியார் கூறுகிறார்.

புறநானூற்றில் ஆரியப் பண்பாடு

சங்ககால இலக்கியங்களுள் மிகச் சிறந்ததாகக் கருதப் பெறும் புறநானூற்றிலேயே தமிழர்களின் கொள்கைகளுக்கு மாறான கடவுட் கொள்கைகளைக் காண முடிகிறது. ஆலமரத்தின் கீழ் சிவபெருமான் அமர்ந்திருக்கும் புராணக் கூற்று புறநானூற்றிலே காணப்படுகிறது.
தமிழகத்தில் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னா லேயே குடியேறிய ஆரியர்கள் சமயக்கதைகள்பலவற்றைப் புனைந்து மக்களிடையே பரப்பி விட்டனர். இக்கதைகள் சிலப்பதிகாரத்திலும் நுழைந்து ஆரியக் கலாச்சாரத்தைத் தமிழ் மக்கள் கலாச்சாரம் என்று கூறமளவுக்கு ஆகிவிட்டது என்பதைப் பெரியார் பல்வேறு சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

சமயக் கதைகளைத் தமிழ்நாட்டில் பரப்பிவிட்ட ஆரியர்கள், வேள்விகளைப் பற்றி அரசர்களிடையே புகழ்ந்து கூறி, தமிழ் மன்னர்களின் துணைகொண்டு பல்வேறுவகை யான யாகங்களை நடத்தியுள்ளனர். பார்ப்பனர்களுக்குப் பல வேள்விச்சாலைகளை அமைத்துக் கொடுத்துப்புகழ் கொண்ட முதுகுடுமிப் பெருவழுதி, பல்யாகசாலை என்ற விருதைத் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்ட வரலாற்றுச் செய்தியைக் காண்கிறோம்.
இதுபோலவே பெருநற்கிள்ளி இராச சூயம் வேட்ட என்னும் அடைமொழி பெற்று பாராட்டப் பெற்றுள்ளான். பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பாலைக்கவுதமனார் என்ற புலவர் ஒருவரின் உதவியுடன் ஒன்பது வேள்விகளை வேட்பித்துள்ளான். இவ்வாறு ஆரியப் பார்ப்பனர்கள், தங்கள் கடவுட் கொள்கைகளை மிகப் பழங்காலத்திலேயே மன்னர்களின் துணைகொண்டு தமிழ்நாட்டிலே பரப்பியுள்ளனர். இந்தச் செயல்களைப் பெரியார் போற்றவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாமா?

இறை வணக்கம் எப்படிப் புகுந்தது?

ஆரியர்கள் தமிழகத்திற்குள் புகுவதற்கு முன்னர், தமிழர்கள் கடவுளைப் பற்றிய சிந்தனைகளே இல்லாமல் இருந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இறந்து போன வீரர்கள் நினைவாகக் கல்நட்டுப் பாராட்டி ஆண்டுதோறும் நினைவுநாள் கொண்டாடியுள்ளனர் என்பதற்குச் சங்க இலக்கியங்களில் ஆதாரங்கள் உள்ளன.
தொல்காப்பியத்துள்ளும் நடுகல் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. விழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல் அன்னஎன்ற தொடர் அய்ங்குறுநூறில் உள்ளது. பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் என்று அகநானூறு கூறும். அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து இனி நட்டனரே கல்லும் என்ற புறநானூற்றால் அறிகிறோம்.

இவ்வண்ணம் நடுகல் பற்றிப் பல்வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். இந்த நடுகல் வணக்கம் ஆரியக் கலாச்சாரம் புகுந்த பின் இறைவணக்கமாக மாறிவிட்டது எனலாம்.

சங்க இலக்கியத்தில் கடவுள்கள்

கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று பல்வேறு ஆதாரங்களோடு விளக்கிய பெரியார், தமிழ் நூல்களுள் கடவுள் பற்றி வரும் செய்திகள் யாவும் ஆரியப் பார்ப்பனர்களின் உறவால் வந்தன என்று கூறுவதை மறுப்பதற்கில்லை. கடவுள் வாழ்த்தோடு கண்யிவருமே என்றும், அருந்திறற் கடவுள் அல்லன் என்றும், கடவுள் ஆயினும் ஆக என்றும், நிலைபெறு கடவுள் ஆக்கிய என்றும், கடவுள் சான்ற கற்பின் சேயிழை என்றும், வெள்வியில் கடவுள் அருத்தினை என்றும் பலவாறாக கடவுள் என்ற சொல்லாட்சி சங்க நூல்களுள் சிறந்து காணப்படுகிறது. இச்சொல், சிவன், முருகன்,திருமால், கொற்றவை போன்ற பல்வேறு கடவுள்களைச் சுட்டுகின்றது. இவ்வாறு கடவுள் பற்றிய செய்திகள் சங்க நூல்களுள் சிறந்து காணப்படுகிறது. இச்சொல், சிவன், முருகன், திருமால், கொற்றவை போன்ற பல்வேறு கடவுள்கைச் சுட்டுகின்றது. இவ்வாறு கடவுள் பற்றிய செய்திகள் சங்க நூல்களில் கூறப்பட்டிருப்பதால், கடவுள் இல்லை என்று கூறும் பெரியார், சங்க இலக்கியத்தையும்கூட வெறுத்து ஒதுக்குவதற்குத் துணிந்துவிட்டார் எனக் கருத வேண்டியுள்ளது.

சங்கப் பாக்களில் மூடநம்பிக்கைகள்

பகுத்தறிவுப்பகலவனாகத் தோன்றிய பெரியார் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து இலக்கியங்களில் கூறப் படினும் அதனைக் கண்டிக்கத் தயங்காததில் வியப்பில்லை. சூரிய கிரகணம் ஞாயிற்றைக் கேது பற்றுவதால் ஏற்படுகிறது என்ற பகுத்தறிவுச் செய்தி பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின் வாய்ப்பட்டான் என்று சங்க இலக்கியத்துள் வருவதை எவ்வாறு பெரியார் ஒப்புக் கொள்வார்? அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல்நிலாப் போல எனவரும் சந்திரகிரகணச் செய்தியைப் பகுத்தறிவாளர்களால் ஏற்கமுடியுமோ?

நாண்மீன்கள் இருபத்தேழும் மகளிர் என்றும், இவர்களைச் சந்திரன் மணம் செய்து கொண்டான் என்றும், சந்திரன் ரோகினியிடத்து மட்டும் அன்பு செலுத்தினான் என்றும், அதனால் சாபம் பெற்றான் என்றும், சிவபெரு மானின் அருள் பெற்றுத் தேய்வதும் வளர்வதுமாக உள்ளான் என்றும் ஆரியர் கூறும் கதை கூறப்பட்டிருப்பதை ஆய்ந்தால், ஆரியப் பார்ப்பனர்கள் எவ்வண்ண மெல்லாம் திட்டமிட்டு, புலவர் பெருமக்களிடையேயும் தங்களின் புராணக்கதை களைத் திணித்து விட்டனர் என்பதை அறியலாம். இதைப் பெரியார் கண்டிக்காமல் இருப்பாரா?

சங்க இலக்கியத்தில் புராணச்செய்திகள்

சங்க நூல்களுள் புராணக் கதைகள் கருத்து விளக்க, உவமை உத்திகளாகக் கையாளப்பட்டு உள்ளன. பாரதக் கதைகள் பல இடங்களில் வருகின்றன. இராமாயணக்கதையும் சில இடங்களில் சுட்டப்படுகின்றது. வீமன் தன் சுற்றத்தினரை, அரக்கு மாளிகை எரிந்தபோது காப்பாற்றினான் என்றும் பாரதக் கதை கவித்தொகையுள் கூறப் பெற்றுள்ளது. வீமன் துரியோதனின் தொடையை அறுத்துக் கொன்ற செய்தியை மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான்போல் கூர்நுதி மடுத்து என்று வரும் கலித்தொகைப் பாடலின் அடிகளால் அறியலாம். இங்ஙனம் பாரதக் கதையின் செய்திகள் அகம், புறம், பதிற்றுப் பத்து, சிறுபாணாற்றுப்படை முதலிய நூல்களிலும் காணக் கிடக்கின்றன. இது போலவே இராமாயணக் கதைக் குறிப்புக்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுவதைக் காணலாம். அய்இரு தலையின் அரக்கர் கோமான் என்று கலித்தொகைப் பாடலில் வருகின்றது. கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை, வலித்தகை அரசக்கன் வவ்விய ஞான்றை எனப் புறநானூறும் இராமன்சீதையைக் குறிப்பிடுகிறது. இந்திரன் அகலிகைக் குறிப்பு திருக்குறளிலும் கூட வந்திருப்பதைக் காண்கிறோம்.

சங்கப் பாக்களில் பகுத்தறிவற்ற கருத்துகள்


பகுத்தறிவுக்குப் புறம்பான, மூட நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்ட கதைச்செய்திகளையும் சங்க காலத்தில் காணலாம். மழைநீர், உப்பு என்ற பொருள்களில் பழந்தமிழர் அமிழ்து என்ற சொல்லைக் கையாண்டனர் எனினும், சங்ககாலத்தில் சாகாத நிலைதரும் தேவாமிர்தம் என்ற பொருள்படக் கையாண்டுள்ளார். இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் என்று புறநானூறு கூறுகிறது. ஏஎர், வயங்குபூண் அமரரை வௌவிய அமிழ்தின் என்றும், நகை அச்சாக நல்லமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயமில் ஒருகை என்றும் பரிபாடலில் வருவதைக் காணுங்கால், திருமால் மோகினி வடிவு கொண்டு தேவர்க்கு அமிழ்து வழங்கிய பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஆரியப் பார்ப்பனர்களின் கதை அந்தக் காலத்திலேயே நடமாடியிருப்பதை உணரலாம். சாவா மருந்து என்று அமிழ்தத்தைக் கூறுகின்ற திருக் குறளையும் காணலாம். ஆயிரந்தலைகளையக் கொண்ட ஆதி சேடன் என்ற பாம்பு பூமியைத் தாங்கிக் கொண்டிருப்ப தாகவும், பாற்கடலில் அமுது கடையக் கயிறாக விளங்கியது எனவும் கூறுகின்ற ஆரியக்கதை பரிபாடலில் உள்ளது.

தமிழில் தலைவிதித் தத்துவம்


தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது எல்லாமே அவரவர் தலைவிதிப்படிதான் நடக்கும் என்று தமிழர்கள் நம்பியதுதான் என்பது பெரியார் அவர்களின் தலையாய கருத்தாகும். அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தத்தைவிடச் சமுதாயச் சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது என்று அவர் வாதிட்டார். இப்படி வாதிட்ட காரணத்தால் அவரைப் பொதுவுடைமைக் கட்சியினர் குறை கூறினர் என்றாலும் பெரியார், தலைவிதித் தத்துவத்தை வன்மையாகக் கண்டித்து, இத்தத்துவம் தமிழர்களிடையே வேரூன்றுவதற்கு இலக்கியங்களும் காரணமாக இருந்தன என்று தமிழ் இலக்கியங்களில் குறைபாடு கண்டார். ஊழைப் பற்றிய செய்திகளை ஓர் அதிகாரமாகவே கொண்டு அதை ஓர் இயலாகவும் அமைத்துள்ளதை எண்ணியும் தலைவிதிக் கொள்கைளை வள்ளுவர் ஏற்றுக் கொண்டிருப்பதைக் கருதியும் திருவள்ளுவரின் எல்லாக் கருத்துக்களையும் தன்னால் ஏற்றுக் கொள்ள இயலாது எனப் பெரியார் கூறுகிறார்.

மூடக் கருத்துகளே நிறைந்துள்ளன


சங்ககால இலக்கியங்கள் என்று தமிழறிஞர் களால் போற்றப்பெறும் பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு என்று அடியளவால், கருத்தளவால் வகுக்கப்பட்ட முப்பத்தாறு நூல்களிலும் புராணக் குறிப்புகளும், மூட நம்பிக்கைக் கருத்துகளும் மிகக் குறைவாகவே உள்ளன என்றுபல தமிழறிஞர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால் அவ்வெண்ணத்துக்கு நேர் மாறாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரியப் பார்ப்பனப் புராணக்கதைக் குறிப்புகளும், அவர்களால் அறிவுறுத்தப் பெற்ற மூடக் கருத்துகளும் சங்ககால இலக்கியங்களுக்குள் மண்டிக்கிடக்கின்றன என்பதை தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
அதனால்தான் தந்தை பெரியார், தமிழர்களின் பண்பாட்டை மட்டுமே விளக்கக்கூடிய ஆரியம் கலவாத, இந்துமத ஆத்திகம் ஊடுருவாத இலக்கியங்களையே இனிமேல் எழுத வேண்டும்என்று பல்வேறு சொற்பொழிவுகளிலேயும் கட்டுரைகளிலேயும் குறிப்பிட்டுள்ளார்.
புராதன மனிதன் தனது அறியாமைக்கும் அச்சத்துக்கும் காரணமும் உதவியும் தேட முயலும் போது அவன் கடவுள்களிடமும் மதங்களிடமும் போய்ச் சேர்ந்தான் என்பதுதான் தத்துவ இயல் ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்தக் கருத்துக்கு ஒப்பவே தமிழறிஞர்களும் ஆனார்களோ என்ற அய்யம் வரத்தான் செய்கிறது.

நற்றிணை முதலான எட்டுத்தொகை, திருமுருகாற்றுப்படை முதலான பத்துப்பாட்டு ஆகிய பதினெண்மேற்கணக்கு நூல்களுள்ளும், திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்ளும், ஆங்காங்கே ஆரியக்கடவுள்களும், சிறு தெய்வங்களும், தேவர், நரகர் பற்றிய குறிப்புகளும், சொர்க்கம், நரகம் பற்றிய செய்திகளும், பார்ப்பனர்களுக்குத் தானம் வழங்கினால்தான் புண்ணியம் கிடைக்கும் என்பன போன்ற ஆரியச் சிந்தனைகளும், அணங்குகள், பேய்கள் பற்றிய கருத்துகளும், அரக்கர்கள் மக்களுக்கும் தேவர்களுக்கும் தீங்கிழைத்தனர் என்ற புராணக் கதைகளும், சிவன், திருமால், முருகன், உமாதேவி, இலக்குமி, மூதேவி, சீதேவி, பிரம்மா, சரசுவதி ஆகிய கடவுள்களின் உறவு முறைகளும் கூறப்பெற்றுள்ளன.

சொர்க்கமும் நரகமும்

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் என்று தேவலோகம் பற்றிய செய்தி தொல்காப்பியத்துள் காண்கிறோம். நெடுமாவளவன் - தேவர் உலகம் எய்தினன் ஆதலின் என்று புறநானூற்றிலே கூறப்பட்டுள்ளது. புத்தேள் உலகு, புத்தேளிர், புத்தேள்நாட்டு, புத்தேள்நாடு என்ற தொடர்கள் மூலம் திருக்குறள் தேவர்களையும், அவர்கள் வாழும் உலகையும் குறிப்பிட்டுள்ளது. வானோர், வானகம் என்னும் தொடர்களைத் திருவள்ளுவர் கையாண்டுள்ளார். மேல்உலகம், உயர்ந்த உலகம் என்ற சொற்றொடர்களும் திருக்குறளில் காணப்படுகின்றன.

புராணச் செய்திகள்

திருக்குறளிலே மட்டுமன்றி இதர பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள்ளும், ஆரியப் பார்ப்பனப் புராணக் கருத்துகள் நிறைந்து கிடக்கின்றன. வசிஷ்டன் மனைவியாகிய அருந்ததி கற்பில் சிறந்தவள் என்னும் ஆரியப் புராணக் குறிப்பு திரிகடுகத்தில் அருந்ததிக் கற்பினார் தோளும் எனக் காணப்படுகிறது. தேவேந்திரன் மாறினாலும் அவன் மனைவியாகிய இந்திராணி மாறமாட்டாள். (தேவலோகத்தில் இந்திரன் மாறிவிடலாம். ஆனால் இந்திராணி மாறமாட்டாள். அதாவது எத்தனை இந்திரர்கள் மாறி மாறி வந்தாலும் இந்திராணி ஒருத்திதான் நிரந்தரமானவள்) என்பது புராணக் கதை. அந்த இந்திராணியைக் கற்புக்கரசியாகக் காட்டுகிறது நாலடியார். அரும் பெறற் கற்பின் அயிராணி அன்ன என்று நாலடியார் கூறுகிறது. இந்திரனைத் தேவாதி தேவன் என்று ஏலாதி குறிப்பிடுகிறது. பொலந்தார் இராமன் என்ற தொடர் மூலம் இராமாயணக் கதையை ஒப்புக் கொள்கிறது பழமொழி நானூறு.

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளுக்கு நல்வினை, தீவினைகளே காரணமாகும் என்ற ஆரியக்கருத்து தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே என்று வரும் நாலடித் தொடரால் தமிழ் நாட்டில் புகுத்தப் பட்டுள்ளது.

ஊழ்வினைத் தத்துவம்

ஆரியக் கலப்பால் ஏற்பட்ட ஊழ்வினைத் தத்துவம் பதினென்கீழ்க்கணக்கு நூல்களான பழமொழி, திரிகடுகம், திணைமாலை நூற்றைம்பது ஆகியவற்றுள் வந்துள்ளதைக் காண்கிறோம்.

அறவினை ஊழே அடும் என்றும், ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம் என்றும், தெய்வம் முடிப்புழி எவன் செய்யும் என்றும், ஊழினால் ஒட்டி வினைநலம் பார்ப்பானும், பாலால் கடும்புனலின் நீந்திக் கரைவந்தார்க் கல்லால் என்றும் வந்துள்ள தொடர்கள் தமிழர்களின் அறிவு வளர்ச்சியையும் ஊக்க உணர்வையும் தளர்வடையச் செய்துள்ளன என்பது மிகையன்று.

பாடல்களில் பரமசிவனும் பார்வதியும்


சிவபெருமானைப் பற்றிய புராணக் கருத்துக்களும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் வந்துள்ளன. கண்மூன்று உடையானும் என்றும் கண் மூன்று உடையான்தாள் சேர்தல் கடிதினதே என்றும் ஆலம் சேர் கண்டத்தான் என்றும் வரும் தொடர்கள் சிவனைத் தமிழ்க் கடவுளாக ஆக்கிவிட்டன.

ஆரியர்களின் இதிகாசப் புராணக் கதைக் குறிப்புகளும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தோன்றித் தமிழ் மக்களின் பகுத்தறிவை வீழ்த்தியுள்ளன. பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பாகமாகக் கொண்ட கதையை ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா என்னும் தொடர் உணர்த்துகிறது. கண்ணன் உலகை உண்ட கதையை படியை மடியகத்திட்டான் என்ற தொடர் கூறுகிறது. திருமால் உலகளந்த கதையை அடியினால் முக்கால் கடந்தான் முழு நிலம் என்ற தொடர் அறிவுறுத்துகிறது. பாண்டவர் அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய கதையை அரக்கிலுள் பொய்யற்ற அய்வரும் போயினர் என்ற தொடரால் உணர்த்தப்படுகிறது.

ஆரிய ஊடுருவல்


இதுகாறும் கூறியவற்றால், சங்ககால இலக்கியங்கள் பலவற்றுள்ளும் ஆரியப் பார்ப்பன, புராண இதிகாசப் பகுத்தறிவுக் கொவ்வாத கருத்துகள் தோன்றி நிலைபெற்று விட்டன என்பதை உணரலாம்.

இயற்கையோடு இயைந்த அகம் - புறக் கருத்துகள் நிறைந்த சங்க இலக்கியங்களுக்குள்ளும், ஆரியக் கருத்துகள் ஊடுருவியதால்தான் பெரியார் அவற்றையும் கண்டிக்கிறார் என்பதை உய்த்துணர முடியும்.

------------------நன்றி: "விடுதலை" 15-2-2009 $ 22-2-2009

0 comments: