
இலங்கைத்தமிழ்மக்களுக்குப்பாதுகாப்பில்லை
அனைத்துநாடுகளின்அமைப்புகள்,மனிதஉரிமைஆணையம், காமன்வெல்த்நாடுகள்தலையிட்டுதீர்வுகாணவேண்டும்
அய்.நா.சபை உடனேதலையிட்டு தமிழர்களைக்காப்பாற்றவேண்டும்
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையினர் அமைப்பாளர் துரைமுருகன், செயலாளர்கள்
தமிழர் தலைவர் கி. வீரமணி, ஆ. இராசா, கனிமொழி, நீதியரசர்கள் ஆகியோர் வேண்டுகோள்
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணைக் குழுவினர் அதன் அமைப்பாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று (17.2.2009) மாலை புதுடில்லிக்கு வருகை தந்தனர்.
இக்குழுவினர் நேற்று மாலை குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் கொடுமையை அய்.நா. சபை மூலம் தடுத்து நிறுத்திட மத்திய அரசு உடனடியாக முன்வரவேண்டும்; சர்வதேச அமைப்புகள் - மனித உரிமை ஆணையம் - காமன்வெல்த் நாடுகள் இதில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கையில் பொது அமைதி சீர்குலைந்து விட்டது, தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத மில்லை. எனவே இலங்கைப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தமிழர்கள் அமைதியாக வாழ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துணைக் குழுவின் செயலாளர்கள் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் - கி.வீரமணி, மத்திய அமைச்சர் ஆ.இராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும், நீதியரசர்கள் ஜனார்த்தனம், இராஜன், பாஸ்கரன், சாமிதுரை, சண்முகம், பேராசிரியர் தனபாலன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோரும் நேற்று (17.2.2009) குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர். இக்குழுவினர் குடியரசத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் அவர்களிடம் அளித்த மனுவின் விவரம்:
இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் நிலைமையின் பேரழிவு விளைவுகளைப் பற்றி கவலை கொண்டுள்ள இந்தப் பேரவை அமைப்பு, தீர ஆய்வு செய்து, விவாதித்து கீழ்க்கண்ட தகவல்களை அவசர நடவடிக்கைக்காகத் தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறது.
பின்னணி
1948 ஆம் ஆண்டு இலங்கை, இங்கிலாந்து நாட்டிடமிருந்து விடுதலை பெற்றது. அவர்கள் ஏக ஜனநாயகக் குடியரசை ஏற்றுக் கொண்டுள்ளனர். இலங்கை மக்கட் தொகையில் சிங்கள மொழி பேசுவோர் 75 சதவீதமும் தமிழர்கள் 20 சதவீதமும் அடங்குவர். பல்வேறு காரணங்களால் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் உருவாகி, இறுதியில் தமிழர்களுக்குத் தனிநாடு என்ற கோரிக்கைக்கு இட்டுச் சென்றது. மோதல்களில் வன்முறை தொடங்கி, 1983 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக தமிழர் குழுக்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் உள்நாட்டுப் போராக மாறியது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம்
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் 29-1-2009 அன்று அதன் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழர் பிரிவினைவாதம் அதீத துணிகரவாதம் போலவே சிங்கள இனவெறி வாதத்தின் விளைவாகவும் உள்ளது. இராணுவப் பணிகள் உட்பட அரசின் பல்வேறு பிரிவினர் இனவெறி மனநிலையின் கைதிகளாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உள்நாட்டுப் போரால் தமிழர்கள் வரையறுக்கப் பட்ட ஒரு பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தங்களுக்கென்று சொந்தமான இராணுவத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும் இலங்கை அரசுக்கு ஆட்களைத் திரட்டி தமிழ்ப் போராளிகளுக்கு எதிராகத் தொடர்ந்து வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்த முடிந்திருக்கிறது.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள அப்பாவிப் பொதுமக்கள் இந்த உள்நாட்டுப் போரில் பலியாக்கப்பட்டுள்ளனர். நார்வே, இந்தியா போன்ற நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் சமரச முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற முடியவில்லை. போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று பிரிட்டன் அவசர அறைகூவல் விடுத்துள்ளது. இனமோதல்களுக்குப் பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண உடனடி போர் நிறுத்தம்செய்ய வேண்டும் என்று பிரிட்டன் அறைகூவல் விடுத்துள் ளது. நாம் முன்னேற்றம் காண வேண்டுமானால், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புதிய போர் நிறுத்தம் உருவாக்கப்படவேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஹோவெல்ஸ் கூறினார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா - 31-1-2009)
இந்து நாளிதழின் செய்தி
ஆனால் 13-2-2009 தேதி இந்து நாளிதழ் செய்தியின்படி இலங்கை அரசு சிறப்புத் தூதர் நியமனத்தை நிராகரித்துள்ளது.
இலங்கை, பிரிட்டன் தூதுவரை நிராகரிக்கிறது. கொழும்பில் அரசு அதிகாரி இலங்கைக்கு சிறப்பு தூதராக பிரிட்டன் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் டைஸ் பிரவுனி என்பவரின் நியமனத்தை இலங்கைஅரசு நிராகரித்தது.
விமானப்படை, கடற்படை, இராணுவம், டாங்கிப் படைகள்பயன்பாட்டுடன் சமீபத்திய நிகழ்வுகள், குறிப்பாக இன மோதல் தொடர்பானவை முழுமையான போர் நிலைமையாக மாறியுள்ளது. இதன் விளைவாக தமிழ் மக்கள் தங்களது நகரங்களையும், வீடுகளையும் விட்டு குடி பெயர்ந்துள்ளனர். ஏறத்தாழ இரண்டு லட்சம் தமிழர்கள் அவர்களது வீடுகளி லிருந்து விரட்டப்பட்டு, வெட்ட வெளிகளிலும், காடுகளுக்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு உயிர் வாழ்வதற்கான உரிமையும், உணவு, இருப் பிடம், குடிநீர், மருந்துபோன்ற அத்தியாவசியத் தேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் அச்சம், மிரட்டல்கள் சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சிசுக்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, பெற்றோர் கவனிப்பு, உணவு, இருப்பிடம் ஆகியவை மறுக்கப்பட்டுள்ளன. ஆண்களும், பெண்களும் வீடுகளிலிருந்தும், வேலைகளிலி ருந்தும் துரத்திவிடப்பட்டு மிகவும், மனிதத் தன்மையற்ற நிலைமைகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசு இந்த நிலையை ஒத்துக் கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் போராளிகள் மீது குற்றம் சுமத்தி, மக்கள் அவர்களாகவே தங்களது குடியிருப்புகளிலிருந்து போகவில்லை என்றும் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறுகின்றனர். இதைப் போராளிகள் மறுத்துள்ளனர்.
22-1-2009 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரி விப்பதாவது:
அரசு கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் 2,50,000 பேர் வெளியேறி வருவதற்கு ஏதுவாக புதன் கிழமையன்று இலங்கை இராணுவம் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை அறிவித்தது. போர்ப் பகுதியிலிருந்து தமிழ் அகதிகள் எவ்வாறு கொண்டு வரப்படுவார்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் 28-1-2009 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிப்பதாவது: முன்னாள் அமெரிக்க துணை அரசு தலைமை வழக்கறிஞர் ப்ரூஸ் வெய்ன் கூறுவதுபடி நடந்தால், இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோதபயா ராஜபக்சேதான் இனப் படு கொலை குற்றத்திற்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் முதல் அமெரிக்கக் குடிமகனாக வரலாற்றில் பதிவு செய்யப்படுவார்.
இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் போர் நிறுத்தத்தை உறுதி செய்யத் தவறினார்.
3-1-2009 அன்றைய தினத்தந்தி செய்தி வருமாறு:
தொடர்ந்த குண்டு வீச்சுகளால் நாசமாக்கப்பட்ட பேய் நகரம் போல கிளிநொச்சி காட்சி அளிக்கிறது. 6-1-2009 அன்று தினத்தந்தியில், நகர வீதிகளின் வழியாக அழைத்துச் செல்லப் பட்ட பத்திரிகையாளர்கள் நாய்கள், ஆடு, மாடுகளையும், கூரைகளற்ற வீடுகளையுமே பார்க்க முடிந்தது என்றும் கூறுகிறது.
உண்மை என்னவென்றால், இலங்கையின் வட பகுதியில் வசிக்கும் சுமார் 2,60,000 பேர் அவர்களது வீடுகளிலிருந்து துரத்திவிடப்பட்டு மனிதநேயமற்ற நிலைகளிலும், அச்சத்திலும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். உள்நாட்டுப் போரால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் நிலைமை மிக மோசமாகவும், பரிதாகமாகவும் உடனடியாகவும் அவசரமாகவும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. போர் போன்ற மோதல்களை நிறுத்தி, மனித உரிமைகள் மீட்கப்பட வழிவகுக்கும் வகையில் உடனடி நிவாரணத்துக்காக இந்த நிலைமை பற்றி சர்வதேச சமு தாயம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனம் ஈர்க்கப்பட் டுள்ளது.
சிங்கள சமுதாயத்துக்கும், தமிழர் சமுதாயத்துக்கும் இடையில் வெறுப்புணர்வு இருந்து வந்துள்ளது என்பதும், அது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது என்பதால் அரசு மற்றும் சிங்கள இராணுவத்தை ஏற்றுக் கொள்வது சிரமமாக உள்ளது என்பதும் தெளிவாகிறது. பல நூற்றாண்டுகளாக வரலாற்றுக் காரணங்களாலும், விடுதலைக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், சிறுபான்மை தமிழர்களுக்கும் இடையில் இனரீதியிலான பதற்றம் நிலவி வந்துள்ளது. இருப்பினும் தற்போதுள்ள கட்டத்தில் வரலாற்றுக்குள்ளும், தற்போதைய நிலைமைக்கு உள்நாட்டுக்குள் குடிபெயர வேண்டிய அளவிற்குக் காரணமான நிகழ்வுகள் போன்றவற்றிற்குப் போக வேண்டியஅவசியமில்லை.
தற்போதைய நிலைமை
இனமோதல் பின்னணியில் தற்போது வரையில், தொடர்ந்து உள்நாட்டுப் போர்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புப் பகுதிகள், கல்வி மய்யங்கள், மருத்துவமனைகள் ஆகியவை அழிக்கப்பட்ட சம்பவங்கள். 70,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சாவு, தமிழ் மக்கட்தொகை முழுவதுமோ அல்லது பெரும் பான்மையினரோ படுகொலை செய்யப்படும் சாத்தியக் கூறு நிலவுகிறது. பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகளைப் போட இலங்கை இராணுவம் விமானப்படையைப் பயன்படுத்துகிறது. நம்பத்தக்க செய்திகள், ஏற்றுக் கொண்ட செய்திகள் என்ற வகையில், அரசும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள குழுக்களும் மனித உரிமைகளை மீறுவது பற்றிய ஏராளமான செய்திகள் வருகின்றன.
தீர்வு எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் அய்.நா. சாசனத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள உரிமைகள் ஆகியவை மீறப்பட்டு, இலங்கைத் தமிழர் களுக்கு உயிர் வாழ உரிமை, குடியிருப்பு, உணவு, மருந்துகள் போன்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது தெளிவாகிறது. இலங்கை அரசும், அவர்களது இராணுவமும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும், போர்க்குற்றங் களையும் இழைத்து வருகின்றன.
1-2-2009 அன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுவ தாவது:
இலங்கையின் வடபகுதியில் சிக்கியுள்ள2,50,000 அப்பாவிப் பொதுமக்கள் வெளியேற உதவும் வகையில் பாதுகாப்பான வழியை அனுமதிக்கப் போராளிகளுடன் எந்தவிதமான போர் நிறுத்தத்திற்கான சாத்தியத்தையும் இலங்கை அதிகாரிகள் நிராகரித்தனர்.
மேலும் 1-2-2009 அன்று செய்தியில், தமிழர்கள் பலர் சிங்களர்களின் தயவில் தாங்கள் தற்போது இருக்க வேண்டும் என்று அஞ்சுகின்றனர் என்ற கூறப்பட்டுள்ளது.
அப்பாவிப் பொதுமக்களின் சாவு தவிர ஏராளமான அப்பாவி மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர் என்று அய்.நா. அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
(27-1-2009 தினத்தந்தி செய்தி)
ஏற்கெனவே மூன்று முறை அமைதிப் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தன; 1987 முதல்; 1990 வரையில் இந்தியா இராணுவத்தை அமைதி காக்கும் படையாக நிறுத்தி வைத்ததும் தோல்வி அடைந்தது. உள்நாட்டுப்போர் தணியாது தொடர் கிறது. இலங்கை அரசு இராணுவ ரீதியில் நிலத்தில் வெற்றிகளைப் பெற்றாலும், பல பத்தாண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போரால் இலங்கைஅரசு மீது தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லாதது போலத் தெரிகிறது. வீடுகளை, நிலங்களை, சொத்து களைத் திரும்பக் கொடுப்பது, மனித உரிமைகளை மீட்டுக் கொடுப்பது போன்ற நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த முடியும் என்று எதிர்பார்ப்பது மிகவும் சிரமம்.
கோரிக்கைகள்
மோதல்கள் நடைபெற்று வருவதை முழுமையாக அறிந்த பல்வேறு அரசுகளாலும், நாடுகளாலும் மக்களுக்கு அமைதி யைக் கொண்டுவர முடியாதது துரதிஷ்டவசமானதாகும். இந்தியாவிற்கு ஏதிலிகளாக 1,20,000 தமழர்கள் வந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டிலிருந்து நான்கு லட்சம் தமிழர்கள் அய்ரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழ் நாட்டில் 107 ஏதிலிகள் முகாம்களில் சுமார் 65,000 தமிழ் ஏதிலிகள் உள்ளனர். இலங்கை நிலைமை இந்தியா உட்பட இந்தப் பிராந்தியம் முழுவதற்கும் அமைதியும், பாதுகாப்பும் முற்றிலும் சீர்குலைவாக அமைந்துள்ளது.
அய்க்கிய நாடுகள் அமைப்பு நாடுகளுக்கு, குறிப்பாக இந்திய அரசுக்கு, அய்.நா. சாசனத்தின் ஷரத்துகளை மேற்கோள் காட்டி சச்சரவுகளுக்கு குறிப்பாக தீர்வு காண பாதுகாப்புக் கவுன்சிலை வலியுறுத்தவேண்டியது கடமையாகும். அவர்கள் தவறும் பட்சத்தில், அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக தீர்மானகரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களை விடுவிக்க முறையான நடவடிக்கைக்கு அய்.நா. அமைப்புதான் ஒரே நம்பிக்கையாகும்.
இந்தச் சூழ்நிலையில், இந்தக் குழுவின் உறுப்பினர்களாகிய நாங்கள், இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை நிறுத்த தீர்மானகரமான நடவடிக்கைகள் எடுக்கவும், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், குடும்பங்களின் துயரங்களைக் களைய உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்திய அரசு, இலங்கை அரசு, உலகில் உள்ள நல்லுறவு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றை வலியுறுத்துகிறோம்.
1970 களிலிருந்து இந்த உள்நாட்டுப் போர் நிலைமை தொடர்ந்து ஏராளமான வீடுகள் அழிக்கப் பட்டு, லட்சக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு உள்ளதால், தீர்மானகரமான போர் நிறுத்தத்திற்கும், மனித உரிமைகள் பாதுகாக்கப் படுவதற்கும் அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில், அய்.நா. மனித உரிமை கமிஷன் ஆகியவற்றில் இப்பிரச்சினையை எழுப்பும்படி அனைத்து உறுப்பு நாடுகளையும், சர்வதேச அமைப்புகளையும் இந்த அமைப்பு சிரத்தையுடன் கேட்டுக் கொள்கிறது.
அய்.நா. சாசனம் 35 ஆவது ஷரத்தின் கீழ்
இதனைக் கொண்டு செல்லவேண்டும்
அனைத்து நாடுகளும், குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, நார்வே, ஜப்பான் போன்ற மற்றும் அமைதியை நேசிக்கும் இதர நாடுகள் இப்பிரச்சினையை அய்.நா. சாசனம் 35 ஆவது ஷரத்தின் கீழ் பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று இந்தக் குழு கேட்டுக்கொள்கிறது.
12-2-2009 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள் இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் உடனடியாகப் பேச்சு வார்த்தைக்குத் திரும்பவேண்டும் என்று அறைசுவல் விடுத்தார்கள்.
எல்லையிலுள்ள நாடும், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டதைப் போல் இராணுவ மோதல் தீவிரமடைந்துள்ளதால் உள் நாட்டிலேயே குடிபெயர்ந்த, பொதுமக்ககளின் (இலங்கைத் தமிழர்களின்) துயரத்தை உணர்ந்த இந்திய அரசு, இப்பிரச்சினை பற்றி விவாதிக்கவும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அய்.நா.வின் பொதுமகாசபையில் கிளப்பவும்; சர்வதேச மோதல்களுக்கு இட்டுச் செல்லக் கூடியதும், தொடர்ந்து இப்படிப்பட்ட நிலைமை நீடிப்பதால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரிப்பதையே ஆபத்துக்குள்ளாக்கக்கூடிய தான இலங்கையிலுள்ள மிகமோசமான நிலைமையால் எழுந் துள்ள சச்சரவுக்கு அமைதியான முறையில் தீர்வு காண அய்.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்குக் கொண்டு செல்லவும் இந்திய அரசை இந்தக் குழு கேட்டுக் கொள்கிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை மீட்டுத்தர வேண்டிய தார்மீகக் கடமை தனக்கு உள்ளது என்பதை பிரிட்டிஷ் அரசு கருதவேண்டும். மிகவும் வலிமை வாய்ந்த சுதந்திரத்தை நேசிக்கும், தனிநபர்களின் சுதந்திரத்தை நேசிக்கும், தனிநபர்களின் சுதந்திரத்தைப் பற்றி அக்கறையும் கொண்ட நாடுகளான அமெரிக்காவும், அய்ரோப்பிய நாடுகளும் கடந்த 40 ஆண்டுகளாக இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
உலகிலுள்ள நல்லுறவு நாடுகள் அனைத்தும், நாடுகளின் பிராந்திய குழுக்களும், சர்வதேச அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் கீழ்க்கண்டவற்றிற்காக உடனடியாக நட வடிக்கை எடுக்கும்படி இக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
(அ) அய்க்கிய நாடுகள் அமைப்பு சாசனம் 1945 ஷரத்து 11(2) ன் கீழ், இலங்கை நிலைமை பற்றி விவாதிக்க அய்.நாவின் பொது மகாசபைக்குக் கொண்டு செல்லவேண்டும். சர்வதேச அமைதியையும், பாதுகாப்பையும் அச்சுறத்தக்கூடிய இலங்கை நிலைமை பற்றி பாதுகாப்புக் கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும்.
(ஆ) அய்க்கிய நாடுகள் அமைப்பு, 1945 ஷரத்து 35 ன் கீழ் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு பராமரிப்பை அச்சுறுத்தக் கூடிய நிலைமையை விசாரித்துப் புலனாய்வு செய்ய, பாதுகாப்புக் கவுன்சிலின் கவனத்திற்கு இந்திய அரசு, பிரிட்டன், அமெரிக்கா, நார்வே, ஜப்பான் மற்றும் அமைதியை நேசிக்கும் நாடுகள் அனைத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச அமைதிப்படை ஒன்றை அனுப்பிட வேண்டும்
(இ) அய்.நா. சாசனம் 24 (1) ஷரத்தின் கீழ் அமைதியைப் பராமரிக்க இலங்கைக்கு சர்வதேச அமைதிப் படை ஒன்றை அனுப்பி நிறுத்தவேண்டும்.
(ஈ) குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் சர்வதேச ஒப்பந்தம் 1966 இன் 41 ஆவது ஷரத்துப்படி மனித உரிமை மீறல்களைப் பரிசீலித்து, தகுந்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளமனித உரிமைகள் குழுவிடம் முறையிடவேண்டும்.
(உ) உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளை மீண்டும் அளிக்கவும் இலங்கை அரசுக்கு அறைகூவல் விடுக்க காமன்வெல்த் நாடுகளை வலியுறுத்தவேண்டும்.
(ஊ) சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதித்து, இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்கும்படிஇலங்கை அரசுக்கு அறைகூவல் விட தெற்காசிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
2 comments:
ஈழத்தமிழனுக்கு எப்படியாவது விடிவுகாலம் பிறக்க வேண்டும்.அதற்கு யார் முயற்சி செய்தாலும் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருநாவு
Post a Comment