Search This Blog

27.2.09

விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கீழே போட வேண்டுமா? ஒரு விவாதம்

எந்த வகையில் சரியோ!

கேள்வி: ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே, விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற் புறுத்த முடியாது என்று ப. சிதம்பரம் கூறியுள்ளாரே?

பதில்: கரெக்ட், சரியாகப் பேசியிருக்கிறார். அகில இந்திய கட்சிகளில் காங்கிரஸ் ஒன்றுதான் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

துக்ளக், 4.3.2009, பக்கம் 11


விடுதலைப்புலிகள், ஈழத் தமிழர்கள் பற்றியவை என்றால், அவர்களுக்கு எதிர்ப்பாக எது சொல்லப்பட்டாலும், சோவைப் பொறுத்த வரை கரெக்ட்தான்.

தான் நேசிக்கும், சுவாசிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி, டில்லியில் ம.தி. மு.க. நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசியதைக் குறை கூறியுள்ளார். இதே துக்ளக் இதழில். அந்த அளவுக்குத் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான காழ்ப்பு! அத்வானியாக இருந்தாலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் வேறு குரலாகப் பேசினால் சோவைப் பொறுத்த வரையில் வெறுப்புதான்!

ஆயுதம் தாங்கிய போராளிகளுடன் எந்த அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது என்று மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் முன்மொழிந்ததை திருவாளர் சோ, வழிமொழிந்துள்ளாரே - கரெக்ட் என்று சான்றிதழ் கொடுத்துள்ளாரே!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினை கோரி ஆயுதம் தாங்கிப் போராடுகிறார்களே - அவர்களோடு இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லையா? பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது அவர்கள் கைகளில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்று சமாதானம் சொல்வார்களோ!

பூடான் தலைநகரான திம்புவில் விடுதலைப்புலிகள் மற்றும் போராளி அமைப்புகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தாரே அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி (1985), இலங்கை அரசின் சார்பில் அதிபர் ஜெயவர்த்தனேயின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜெயவர்த்தனே தலை மையிலான தூதுக்குழு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதே, அந்தக் காலகட்டத்தில் எல்லாம் விடுதலைப்புலிகளோ மற்ற போராளிக் குழுக்களோ ஆயுதம் தாங்கியதைக் கைவிட்ட காலகட்டமா?


இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கு மிடையே நார்வே அரசு சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திய துண்டே - அப்பொழுது என்ன விடுதலைப்புலிகள் ஆயுதங் தாங்கிகளா கக் கண்களுக்குத் தெரிய வில்லையா?

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஒருவர், அப்படிப் பேசுவதும், அதனை அறிவு ஜீவி என்று அக்ரகாரம் மெச்சும் ஆசாமி கரெக்ட் கரெக்ட் என்று இப்படி தாளம் போடுவதும் எந்த வகையில் சரியோ!

--------------- "விடுதலை" - 27-2-2009

0 comments: