Search This Blog

2.2.09

ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேட்டி




தமிழ்நாடு அரசை தனிமைப்படுத்தி
ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியுமா?

தேர்தல் ஆணையர் கோபாலசாமி -
பா.ஜ.க. கூட்டுச் சதியா?

தஞ்சாவூரில் தமிழர் தலைவர் பேட்டி


தமிழ்நாடு அரசை தனிமைப்படுத்தி விட்டு ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (1.2.2009) தஞ்சையில் அளித்த பேட்டி வருமாறு:

பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் முடியும் என்ற எதிர் பார்ப்பு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன்சாவ்லாவை நீக்கவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் கோபால சாமி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு உள்ள தகுதி 3 தேர்தல் ஆணையாளர்களுக்கும் உண்டு. தேர்தல் ஆணையரை நீக்க வேண் டும் என்றால் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிபதியை நீக்குவது போல் தான் நீக்க முடியும்.

தலைமை தேர்தல் ஆணையர் என்ற பொறுப்பு வாய்ந்த அதிகாரி, அரசியல் நெருக்கடியை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தலுக்கு முன்பே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். பா.ஜ.க. வுக்கும், தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமிக்கும் இடையே ஒப்பந்தமா? என்பதை ஆராய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். முழுமையாக ஆராய்ந்து மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் மத்திய அரசு எடுத்துக்கூற வேண்டும்.

பல்வேறு யூகங்களுக்கு இடம் தராமல் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருந்தால் தலைமை தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்கக்கூடாது. வருகிற 12ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் கூடுவதற்கு முன்பு இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். வருகிற ஏப்ரல் 20ஆம் தேதியுடன் கோபாலசாமிக்கு பதவிக் காலம் முடிகிறது. அதற்கு முன்பாகவே தேர்தலை நடத்த வேண்டும் என்று இப்படி செயல்படுகிறாரா? என்று எண்ணத் தோன்றுகிறது.

முழு அடைப்பு

இது மூன்றாம் பருவம் - மாணவர்களுக்கு தேர்வு வரக் கூடிய நேரம் ஆகையால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்தப் பிரச்சினையை எங்களைப் போன்றோர் பார்த்துக் கொள்வோம்.

4ஆம் தேதி முழு அடைப்பு அறிவித்து இருப்பதற்கு அரசு தனது நிலைப்பாட்டை தெளி வுபடுத்தியுள்ளது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுவதற்காக முழு அடைப்பு என்று அறிவித்தபோது, உச்சநீதிமன்றம், முழு அடைப்பு நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கூறியது. உடனே முழு அடைப்பை கைவிட்டு விட்டு உண்ணாவிரதம் நடத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் - முழு அடைப்பு நடந்தது; பஸ்கள் ஓடவில்லை; கடைகள் அடைக்கப்பட்டிருந்தது என்று கூறினர். இது தொடர்பாக முதல் அமைச்சர் கரு ணாநிதி மீதும், டி.ஆர்.பாலு மீதும் வழக்கு நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. முழுஅடைப்பிற்கு அனுமதி அளித்தால் ஆட்சியை கவிழ்க்க ஒரு வாய்ப்பு வழங்கியதுபோல் ஆகிவிடும். இலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் கிடையாது. தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று சிலர் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர்.

தி.க. துணை போகாது

ஈழப் பிரச்சினையை வாய்ப்பாக கொண்டு, சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று பிரசாரத்தைப் பரப்பி, ஆட்சியைக் கவிழ்க்க ஈழப்பிரச் சினையை துருப்புச் சீட்டாக யார் பயன்படுத்தினாலும் தி.க.வும், தமிழர் உணர்வாளர்களும் துணை போகமாட் டார்கள். மாணவர்களின் எழுச்சியை அடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்லூரிகள் மூடப்படவில்லை. மாணவர்கள் தங்களது உணர்வை வெளிப்படுத்தி விட்டார்கள். எந்த உணர்வாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செய்ய வேண்டுமே தவிர, சட்டத்திற்கு அப்பால் செய்யக் கூடாது.

படிப்பில் அக்கறை

மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும்.

மாணவர்களின் உணர்வு உலக எல்லைக்கு சென்றுவிட்டது. இனி விரும்பத்தகாத நிகழ்வு நடந்து விடக்கூடாது என தடுக்க அரசுக்கு அக்கறை உண்டு. கல்லூரிகளை மூடி தனது கடமையைத் தான் செய்தது. இது நிரந்தரமானது அல்ல. தற்காலிகம் தான். அரசை தனிமைப்படுத்தி விட்டு ஈழப்பிரச்சினையில் தீர்வு காண முடியாது. அனைத்து அமைப் புகளும் ஒன்று சேர்ந்து அரசுடன் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே ஈழப்பிரச்சினையில் தீர்வுகாண முடியும்.

- இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

Unknown said...

//தமிழ்நாடு அரசை தனிமைப்படுத்தி
ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியுமா?//

ஒற்றுமையாக செய்ல்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

தமிழன் நெல்லிக்காய் மூட்டையாக சிதறிக் கிடக்கிறானே? இதற்கு விடிவு காலமே வராதா?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்

அ.பிரபாகரன் said...

அய்யா தமிழ் ஓவியா, உங்களுக்கு பிடித்திருப்பது வீரமணி பைத்தியம். நீங்கள் பெரியாரை விட்டுக்கொடுத்தாலும் கொடுப்பீர்களே தவிர, வீரமணியை விட்டுக்கொடுக்கமாட்டீர்கள்.

வீரமணியின் எல்லா மானங்கெட்ட செயலையும் நியாப்படுத்தாதீர்கள். அல்லது தயவு செய்து பெரியாரை விட்டுவிடுங்கள். இதுவே நீங்கள் பெரியாருக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டு.