Search This Blog

2.2.09

மூடநம்பிக்கை, முட்டாள் தனமற்ற அறிவிற்கும் பொருத்தமான விழா எது?


அறிவுக்குப் பொருத்தமான பொங்கல் விழா

நமது மதம், -- இலக்கியம்,-- மொழி, அரசியல், பத்திரிகைகள் எல்லாமே நமது மடமையையும் முட்டாள் தனத்தையும் நிலை நிறுத்துவதாகவே இருக்கின்றன.

இந்த பொங்கல் என்பது நமது இயக்கம் ஏற்பட்டபின்தான் இது தமிழர்களின் பண்டிகை என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதுவரை அது ஆரியப் பண்டிகையாகவே இருந்தது. நமக்குள்ள பண்டிகைகள் யாவும் ஆரியப் பார்ப்பனப் பண்டிகைகளே தவிர தமிழனுக்கு என்று தனியான பண்டிகை எதுவும் கிடையாது; மாரியாயி பண்டிகையும் பார்ப்பானின் பண்டிகையேதான்; மற்ற எந்தமதப் பண்டிகையை எடுத்துக் கொண்டாலும்அவைகள் யாவும் ஆரியச் சார்புள்ளவைகளே ஆகும்.


நாங்கள்தான் தமிழர்கள் பண்டிகை பொங்கல் என்றும், அறிவிற்கு ஏற்ற விழா என்றும் சொல்லி நாட்டு மக்களிடையே எடுத்துச் சொன்னோம்.

நாம் பாடுபட்டு வேளாண்மை செய்கிறோம். புதிய வேளாண்மையை எடுக்கிறோம். அந்த வேளாண்மையில் கிடைத்த பொருளைக் கொண்டு எல்லோருடனும் சேர்ந்து பொங்கி மகிழ்ச்சியோடு உண்டு கொண்டாடும் விழாவேயாகும். இது அறிவிற்கும் பொருத்தமாகும், அடுத்து வேளாண்மைக்கும் துணையாக உழைத்து இருக்கும் மாடுகளுக்கும் ஒருநாள் ஓய்வு கொடுத்து நல்ல உணவு கொடுத்துக் கொண்டாடுகிறோம்.

நமக்கும் ஒரு பண்டிகை வேண்டும் என்பதற்கு இது மிகப்பொருத்தமாக இருக்கிறது அறிவிற்கும் பொருத்தமானதாகும். மற்ற பண்டிகைகள் யாவும் அறிவிற்குப் பொருத்த-மற்றதும் மூடநம்பிக்கை நிறைந்ததும் பார்ப்பானை உயர்த்துவதாகவுமே இருக்கும் தீபாவளிப் பண்டிகையை எடுத்துக் கொண்டால் பார்ப்பானுக்கு விரோதமாக இருந்ததற்காக தமிழனைக் கொன்றிருக்கிறான். இதற்கான விழாதான் தீபாவளி!

தோழர்களே! நமது நாட்டிலே பண்டிகைகள் என்பது எந்த நாள் முதல் தெரிய வருகிறதோ அன்று முதல் பெரியவர்கள், அறிஞர்கள், படித்தவர்கள் எல்லோருமே வெகுநாட்களாக நடந்து வருகிற வழக்கப்படி பெரியோர்கள் நடப்புப்படி சாஸ்திரப்படி என்றுதான் கொண்டாடிக் கொண்டு வந்தார்களே தவிர, எவரும் அறிவோடு கொண்டாடியது கிடையாது. யாராவது அப்படி சிந்தித்தார்களா என்பதும் எனக்குத் தெரியாது பெரிய புலவர்களுக்குத் தெரியுமோ என்னமோ!

நான் 35 வருடங்களுக்கு முன் இந்தப் பொங்கல்தான் அறிவுக்கு ஒத்தது தமிழர்களுக்கான பண்டிகை; தமிழர்கள் இதைத்தான் தங்களின் விழாவாகக் கொண்டாட வேண்டும்; இதைத் தவிர்த்து பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட்டுவரும் மதப்பண்டிகைகள் எல்லாம் முட்டாள் தனமான காட்டுமிராண்டித் தன்மையோடு மூடநம்பிக்கை நிறைந்தவைகளே ஆகும். இது ஒன்றுதான் மூடநம்பிக்கை, முட்டாள் தனமற்ற அறிவிற்கும் பொருத்தமான விழாவாகும் என்று சொல்லி வருகின்றேன்.

மனிதன் உழவு செய்கிறான். அதற்கு முக்கியமாக மாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறான். நல்ல வெள்ளாமை எடுக்கிறான். பெரும்பாலும் இதுதான் அறுவடைக்காலம் பாடுபட்டு உற்பத்தி செய்தவன் தன் குடும்பம் -- சுற்றம் -- நண்பர்களோடு சேர்ந்து, தான் வெள்ளாமை செய்த பொருளைப் பொங்கிப் பங்கிட்டு உண்டு மகிழ்ச்சியடைகின்றான்! அதற்குப் பயன்பட்ட மாடுகளை சிறப்பு செய்யும் பொருட்டு அதைக் குளிப்பாட்டி அதற்கு நல்ல உணவும் ஓய்வும் கொடுத்து அதற்குத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டாடப்படுவதே இந்த மாட்டுப் பொங்கல் விழாவாகும்.

இந்தப் பண்டிகைகளில் பார்ப்பனர்கள் பலவற்றைப் புகுத்தி நம்மக்களை மூடர்களாகவே ஆக்க வேண்டுமென்று இதைமூடநம்பிக்கைப் பண்டிகையாக்கி விட்டார்கள். இது இந்திரனது பண்டிகை இந்திரனுக்கு செய்கிற பொங்கல் என்று எழுதி இருக்கிறான். போகி என்றாலே அகராதியில் இந்திரன் என்கிற பொருளாகும். இதற்கு அவன் கட்டியிருக்கிற கதை வேடிக்கையானது அதற்கு முன் இந்திரனுக்கே இந்தப் பண்டிகை நடந்து வந்தது. மக்கள் இந்திரனுக்குப் பொங்கல் வைத்து படைத்து வந்தனர். இதைக் கண்ட கிருஷ்ணக் கடவுளுக்கு பொறாமை வந்தது. நாம் கடவுள்; இவன் சாதாரண இந்திரன்; இவனுக்கு மட்டும் பொங்கல் ஏன் எனக்கருதி மக்களை எல்லாம் அழைத்து இனி இந்திரனுக்கு விழா செய்யக் கூடாது என்று சொல்லி விட்டான். மக்களும் அவன் சொல்லைக்கேட்டு இந்திரனுக்கு விழா கொண்டாடவில்லை. உடனே இந்திரனுக்கு கோபம் வந்து பெருமழையைக் கொண்டு வந்து வெள்ளத்தைப் பெருக்கி மக்களுக்குத் தொல்லை கொடுத்தான். மக்கள் கிருஷ்ணனிடம் போய் முறையிட்டனர். உன் பேச்சைக் கேட்டதால்தானே எங்களுக்கு இந்தக் கதி என்று உடனே கிருஷ்ணன் மலையைத் தூக்கி மழையை மறைத்து மக்களைக் காப்பாற்றினானாம்! பின் இந்திரன் கிருஷ்ணனிடம் வந்து நீ எப்படி மழையைத் தடுக்கலாம் என்று கேட்டானாம். பின் இருவருக்கும் வாதம் ஏற்பட்டுக் கடைசி-யில் இருவரும் சமாதானம் அடைந்து இந்திரனுக்கு வழக்கம் போல் விழா செய்வதென்று மறுநாள் கிருஷ்ணனுக்கும் விழா கொண்டாடச் செய்வதென்றும் ஏற்பாடு செய்து கொண்டார்களாம்! அதன்படி போகி இந்திரனுக்கான விழாவாகவும் மறுநாள் பொங்கல் கிருஷ்ணனுக்கான விழாவாகவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருவதாக கதை எழுதி வைத்திருக்கின்றார்கள்.

மற்றும் ஒரு கதை இது;

சங்கராந்திப் பண்டிகை. மூதேவியானவள் இந்த மாடுகளுக்கெல்லாம் கேடு செய்ய வேண்டுமென்று புலி உருவம் எடுத்து மாடுகளுக்கெல்லாம் தொல்லை கொடுத்தாளாம். அதனால்தான் இந்த பொங்கல் பண்டிகையன்று சேகண்டி அடித்துக் கொண்டு தாம்பாளத்தில் கம்பால் தட்டிக் கொண்டு பொங்கலோ பொங்கல் புலி போ புலி என்று கூவுகிறார்கள் என்று கருதுகின்றேன். இப்போதும் அந்தப் பழக்கம் இருந்து வருகிறது. இங்கெல்லாம் உண்டோ என்னமோ எங்கள் பக்கம் நடைபெற்று வருகிறது. இவைகள் யாவும் மனிதன் காட்டு-மிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கருத்துகள், கதைகள் ஆகுமே தவிர அறிவோடு சிந்திப்பதற்கு இதில் ஒன்றுமே இல்லை.

---------------------தந்தைபெரியார் - "விடுதலை" 22,23.1.1968.

2 comments:

Unknown said...

//தோழர்களே! நமது நாட்டிலே பண்டிகைகள் என்பது எந்த நாள் முதல் தெரிய வருகிறதோ அன்று முதல் பெரியவர்கள், அறிஞர்கள், படித்தவர்கள் எல்லோருமே வெகுநாட்களாக நடந்து வருகிற வழக்கப்படி பெரியோர்கள் நடப்புப்படி சாஸ்திரப்படி என்றுதான் கொண்டாடிக் கொண்டு வந்தார்களே தவிர, எவரும் அறிவோடு கொண்டாடியது கிடையாது. யாராவது அப்படி சிந்தித்தார்களா என்பதும் எனக்குத் தெரியாது பெரிய புலவர்களுக்குத் தெரியுமோ என்னமோ!//

புலவர்கள் எல்லோருமே மூடநம்பிக்கைவதிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆரம்ப காலகட்டங்களில் பகுத்திறிவுப் புலவர்கள் இருண்டார்களா? என்பது அய்யமே.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்