Search This Blog

2.2.09

கட் அவுட் கலாச்சாரத்திற்கு கெட் அவுட்




கட் அவுட்!


புதுச்சேரியில் ஒரு ஆணையை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.

அதன்படி கட்அவுட்டுகள் வைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட் அவுட் என்பது விளம்பரம் செய்யத்தானே என்று தர்ம நியாயம் பேசலாம். ஆனால் கட் அவுட் என்பது ஒரு அழுக்கான கலாச்சாரமாகவே மாறி வெகு மக்களின் குறிப்பாக இளைஞர்களின் இதயங்களில் விகார, அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தலைவர்களுக்குக் கட் அவுட்டு வைப்பது மாறி, கண்ட கண்டவர்களுக்கெல்லாம், சினிமா நடிகர் களுக்கெல்லாம் கட் அவுட் என்ற நிலை ஏற்பட்டு இருப்பது பரிதாபமே!

புதுச்சேரியில் ஒரு சினிமா நடிகருக்குக் கட் அவுட் வைக்கப்பட்டு அதன் மீது பீர் அபிஷேகம் செய்தனர் என்கிற செய்திகள்கூட வெளிவந்ததுண்டு.

மக்கள் மத்தியில் செயற்கையாகத் திணித்து, ஒரு விளம்பரப் போதையை ஏற்படுத்தி, தலைவர்களாக இடம் பிடிக்கும் யுக்திகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த யுக் திக்குப் பலியாகும் நிலையும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. நடிகை அய்ஸ்வர்யா உள்ளிட்டவர்களையும் கிரிக்கெட் விளையட்டாளர்களையும் தேர்தலில் நிற்க வைக்க எண்ணும் அளவுக்கு, இத்தகு விளம்பர யுக்திகள் கை கொடுக்கின்றன.

தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள்கூட சில மாதங்களுக்கு முன் அளவு மீறும் கட்அவுட் கலாச்சாரத்தைக் கண்டித்து கருத்தும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட சில நாள்கள் வரைதான் எந்த பதாகையும் வைக்கப்பட வேண்டும் என்றுகூட தமிழக அரசின் ஆணை ஒன்று வெளி வந்தது. அதனைக் கறாராக அமல்படுத்துமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் நாட்டில் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்களை சினிமா ரசிகர் மன்ற வளையத்துக்குள் கொண்டு வந்து, அவர்கள் மூலம் சினிமாக்காரர்களுக்குக் கொடி கட்டுவது, சுவரில் எழுதுவது, சுவரொட்டி ஓட்டுவது பதாகைகள் வைப்பது, கட் அவுட் வைப்பது என்கிற வியாதி விகாரமாக பரவிக் கொண்டு இருக்கிறது.

ஒட்டு மொத்தமாகச் சொல்லப் போனால் கட் அவுட் கலாச்சாரம் கெட் அவுட் என்று சொல்லப் பட வேண்டிய நிலை நாட்டில் உருவாகியிருப்பதை யார்தான் மறுக்க முடியும்?

------------------- மயிலாடன் அவர்கள் 1-2-2009 "விடுதலையில் எழுதியது.

2 comments:

Unknown said...

//கட்அவுட்டுகள் வைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட் அவுட் என்பது விளம்பரம் செய்யத்தானே என்று தர்ம நியாயம் பேசலாம். ஆனால் கட் அவுட் என்பது ஒரு அழுக்கான கலாச்சாரமாகவே மாறி வெகு மக்களின் குறிப்பாக இளைஞர்களின் இதயங்களில் விகார, அலைகளை ஏற்படுத்தி வருகிறது//

அதோடு தாங்கள் குறிப்பிடுவது போல்// மக்கள் மத்தியில் செயற்கையாகத் திணித்து, ஒரு விளம்பரப் போதையை ஏற்படுத்தி, தலைவர்களாக இடம் பிடிக்கும் யுக்திகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த யுக் திக்குப் பலியாகும் நிலையும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது.//
காசு உள்ளவன் கண்ட இடத்தில் கட்டவுட் வைத்து பெருமை தேடுவதில் குறியாக இருக்கிறான்.

என்ன அவனைத்தான் அரசியல் வாதிகள் மதிக்கிறார்கள். எளிமையாக இருப்பவர்களை உதாசீனப் படுத்துகிறார்கள்.
இதற்கும் ஒரு கெட் அவுட் சொல்ல வேண்டியிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்