Search This Blog
4.2.09
திராவிடர் - ஆரியர் போராட்டம்
தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.
‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?
சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?
தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.
---------------------சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment