Search This Blog
2.2.09
கலைஞர் சிலை திறப்பு விழா - ஒரு பார்வை
அய்யாவின் ஆணையை நிறைவேற்றினேன்
சென்னை அண்ணாசாலையில், ஜெனரல்---பேட்டர்ஸ் சாலை பிரியும் சந்திப்பில் முக்கிய-மான இடத்தில் கலைஞர் சிலை நிறுவ, முறைப்படி நாங்கள் தமிழக அரசின் பொதுப்-பணித் துறைக்கு மனுச் செய்து, அவர்களும் போக்குவரத்துத் துறை (Traffi Cell Clearence) யின் தடையின்மை, காவல்துறை அனுமதி முதலியவைகளையெல்லாம் பெற்ற பிறகு G.O. அரசு ஆணை வழங்கினர்.
அய்யா அவர்களிடத்தில் பயிற்சி எடுத்த எங்களைப் போன்றவர்களுக்கு எதையும், அது - தானே நடந்து விடும் என்கிற (Take it for granted) மனப் போக்கில் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்னும் பாடம் - அய்யாவுடன் பழகிய எங்களுக்கு அவர் சொல்லிக் கொடுத்து நாங்கள் கற்றுக் கொண்ட பாடமாகும்!
அய்யா அவர்கள் ஒரு மாநாடோ, ஒரு நிகழ்ச்சியோ நடத்தத் திட்டமிட்டால், அதன் சகலவித தேவைகள், முறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் நேர்த்தி மிகவும் சிறப்பானது. எதையும் உறுதி செய்த பிறகே நாங்கள் அவர்களிடம் சொல்லிடும் பழக்கம் உண்டு. எடுத்துக்காட்டாக: அய்யாவுக்கு மிகவும் அறிமுகமான ஒருவர் பெரியார் திடலுக்கு வருவதைக் காணும்போதே, உடனே அய்யா அவர்களிடம் ஓடி வந்து அவர் அய்யாவைப் பார்க்க வருகிறார் என்று அவசரப்பட்டுச் சொல்லி விட மாட்டோம்; காரணம் அவர் பெரியார் திடலில் உள்ள வேறு சில நண்பர்களைப் பார்க்க வந்திருக்கக் கூடும்; அல்லது வந்தவருக்கு அவசரத் தகவல் வந்துகூட அவர் திரும்பிவிடக் கூடும் - அய்யாவைச் சந்திக்காமலேயேகூட அல்லது அவரேகூட இப்போது போய் அய்யாவைச் சந்திப்பதைவிட, மற்றொரு நாளில் சற்று வசதியாக சந்தித்து உரையாடினால் நல்லது என்றுகூடக் கருதி திரும்பிட முனையலாம் - இப்படி எத்தனையோ நிகழ வாய்ப்புகள் உண்டு!
அய்யாவை மிகவும் நெருங்கிவிட்டார் என்றால் உடனே நாங்கள் ஓடோடிப் போய் அவர்கள் அய்யாவைப் பார்க்க வருவதை (உறுதி செய்து கொண்ட நிலையில்) சொல்வோம்; அப்போது அய்யா அவர்கள் கட்டிலிலிருந்து எழுந்து அவர்களுக்கே உரிய தக்க பண்போடு வாங்க வாங்க என்று வணக்கம் தெரிவித்து அன்பொழுகக் கைபிடித்து வரவேற்க வசதியாக அய்யா அருகில் அவரைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பின்னே நிற்க, பிறகு அமர்ந்து அவர்கள் உரையாடத் துவங்குவர்.
எனவே, சின்னச் சின்ன விஷயங்களில்கூட எங்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முழுப் பயிற்சி - அய்யாவிடம் பழகியதால் தானே வந்து விடும்!
கலைஞர் சிலை அமைவதற்குரிய அரசு ஏற்பாடுகள், ஆணைகள் எல்லாம் முடித்து சிலைபீடம் அமைக்க இரவு 11 மணிக்குமேல் பணிகள் துவக்கப்பட்டன (முதல்வர் கலைஞர் திறப்பு 21.9.1975) 18.9.1975 - அன்று வட ஆர்க்காடு மாவட்டத்(அப்பொழுது - திருவண்ணாமலை)திலேயே முதன்முதலாக அய்யா அவர்களுக்கு அங்கேதான் சிலை நிறுவப்-பட்டது. வரலாற்றை உருவாக்கிய வைக்கம் வீரருக்கு இந்த மாவட்டத்தில் எடுக்கப்படும் முதல் சிலை என்ற வரலாற்றுச் சிறப்புக்கு திருவண்ணாமலை நகரமே தன்னை முழுமையாக ஆயத்தம் செய்து கொண்டு நிறுவப்பட்டது.
அய்யாவின் சிலை திறப்பு திருவண்ணாமலை நகரிலே ஒரு தனிச்சிறப்புமிக்க அத்தியாயமாக இருக்கவேண்டும் என்றும், இதை விஞ்சி இங்கு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதில்லை என்கின்ற வரலாற்றைக் சமைக்க வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆர்வத்தால் கழகக் கண்மணிகள் இராப்பகலாகப் பம்பரம்போல் சுற்றிச்சுழன்று பணியாற்றினார்கள். திராவிடர் கழக - திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களின் இரவு, பகல் உழைப்பின் முத்திரை எங்கும் பளிச்சிட்டுக் காணப்பட்டது.
சிலை அமைப்பானது திராவிட இன மக்களுக்கு அறிவுத்தீ கொளுத்தி அறிவுப் புரட்சியை முடுக்கிவிடும் ஆசானாக - அவரைப் புகழ்வது போல் அய்யா அவர்கள் வீற்றிருக்கும் முழுஉருவ வெண்கலச் சிலையை முதல்வர் கலைஞர் அவர்கள் இரவு 10-.10 மணிக்கு திறந்து வைத்தார்கள். திருவண்ணாமலையில் முதல்வர் கலைஞர் அவர்களும், அன்னை மணியம்மையாரும் அமைச்சர் ப.உ.சண்முகமும், அமைச்சர் சாதிக்பாட்சாவும் கலந்து கொண்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்றோம்.
சிலையைச் சுற்றிலும் பேரறிஞர் அண்ணா, பாரதிதாசன் மற்றும் கலைஞர் ஆகியோரின் வாசகங்கள் அய்யா அவர்களின் சிலை பீடத்தின் பல பக்கங்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
இதில் திருவண்ணாமலை நகரமன்ற உறுப்பினர் வையாபுரி, வட ஆர்க்காடு மாவட்ட தி.க.தலைவர் ஆம்பூர் ஏ.பெருமாள், திருவண்ணாமலை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் முத்து, மாணவர் சித்தார்த்தன், கழகத் தோழர் தட்சிணாமூர்த்தி, வட ஆர்க்காடு மாவட்ட தி.க.செயலாளர் ஏ.டி.கோபால், திருவண்ணாமலை சுந்தரேசன், செய்யாறு அண்ணாமலை மற்றும் கவுதமன் ஆகியோர் கலந்துகொண்டு பெரும்பங்காற்றினார்கள். மிகச் சிறப்பான முறையில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா 18.9.1975 திருவண்ணாமலையில் நடைபெற்று முடிந்து, அமைச்சர் ப.உ. சண்முகம் அவர்களது இல்லத்தில் இரவு விருந்து - அன்னை மணியம்மையார், முதல்வர் கலைஞருக்கும் எங்களுக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து விடுதலை நிருவாகி நண்பர் நாகரசம்பட்டி சம்பந்தம் அவர்களிடமிருந்து எனக்கு தொலைப்பேசி (திரு. சண்முகம் அவர்களது இல்லத்தில் இரவு 10.30 மணி சுமாருக்கு) வந்தபோது, சென்னை அண்ணாசாலையில் முதல்வர் கலைஞருக்குச் சிலை அமைப்பது போக்குவரத்துக்கு இடையூறாக அமையும்; அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று திரு. ராமகிருஷ்ணபாபு என்ற ஒரு அண்ணா திமுக உறுப்பினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போடப்பட்டு, அண்ணா திமுக வழக்கறிஞர் (பின்னாளில் இவர் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சர் ஆன ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகவும் ஆனவர்) நாளை காலை விசாரணைக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்தார். மற்ற கழகப் பொறுப்பாளர்களும் இருந்தபோது, உடனடியாக இரவோடு இரவாக எப்படியும் கலைஞர் சிலையை சிலை பீடத்தில் நாட்டி நிறுத்தி விடுங்கள்; உடனே புறப்பட்டு வருகிறோம் என்று கூறி, அம்மா அவர்களும் நானும் புறப்பட்டு இரவு 1 மணியளவில் சென்னைக்குத் திரும்பி, பெரியார் திடலில் அம்மாவை இறக்கி விட்டு விட்டு, நான் திரும்பி சிலை அமைக்கும் இடத்திற்கு வந்தபோது, தோழர் என்.எஸ். சம்பந்தமும் அவரது தம்பி ஏகாம்பரம் அவர்களும், என்ஜினியர் நண்பர்களும், கழகத் தோழர்களும் குறிப்பாக மறைந்த தோழர் கந்தசாமி (இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தலைமைப் பொறியாளர் சி.வி. பத்மநாபன் அவர்களது அன்பைப் பெற்ற வடசேரித் தோழர்) ஆகியோரும் முன்னிற்க, விடியற்காலை 3 மணிக்குள் சிலை கம்பீரமாக எழுந்து நின்றுவிட்டது அவ்விடத்தில்!
தோழர் சுபா. சுந்தரம் அவர்களும் இரவெல்லாம் எங்களுடன் இருந்தவர். அவர் புகைப்படங்களை எல்லாக் கோணத்திலும் எடுத்து முடித்து, காலை 8 மணிக்குள் நெகடிவ்-வைக் கழுவி, படங்களைப் போட்டு நமது வழக்கறிஞர்களிடம் ஒரு செட் படங்களைக் கொடுத்து விட்டு, உயர்நீதிமன்றத்தில் காலை 11 மணியளவில் 19-ஆம் தேதி (19.9.1975-இல்) வழக்கு. ஜஸ்டிஸ் ராமரானுஜம் அவர்கள் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நமது சார்பில் வழக்காடியவரும் அரசு வழக்குரைஞர்களும், இடைக்காலத் தடை விதிக்க இயலாது; அரசு ஆணைப்படி கலைஞர் சிலை ஏற்கெனவே அங்கு நிறுவப்பட்டு விட்டது. எனவே இந்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க இயலாது என்பது சுட்டிக்காட்டப்பட்டு, எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று மாலை நான் நேரில் சென்று பார்த்தேன்; அப்போது சிலை அங்கு இல்லை என்று எதிர்த் தரப்பு வழக்குரைஞர் நண்பர் பாண்டியன் வாதிட்டார்; படங்களைத் தாக்கல் செய்தபோது அவருக்கே ஓர் அதிர்ச்சி.
திட்டமிட்டபடி, கலைஞர் சிலை திறப்பு விழா சீரும் சிறப்புடன், 21.9.1975 அன்று நடைபெறும் என்று எங்களால் விடுதலையில் அறிவிக்கப்பட்டு, அதேபோல் எழிலார்ந்த வகையில் அருமை அம்மா அவர்களால் அச்சிலை திறக்கப்பட்டு அய்யாவின் ஆணையை நான் நிறைவேற்றி, கடமையாற்றிய நிம்மதியைப் பெற்றேன்.
- நினைவுகள் நீளும்...
------------------நன்றி: "உண்மை" சனவரி 15-31 2009 இதழில் - கி.வீரமணி அவர்கள் எழுதிவரும் "அய்யாவின் அடிச்சுவட்டில்"... இரண்டாம் பாகம் (12)
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment