Search This Blog

3.2.09

ஆரியன் தமிழினத்தை அடிமைப்படுத்தியது எப்படி?






ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் இனமாகக் கூட்டங்கூட்டமாய்க் காந்தார நாட்டு ஆபுகானித்தானம் வழி இந்தியாவிற்குட் புகுந்தாராயினும், அவருட் பூசாரியர் தவிரப் பிறரெல்லாம் இந்தியப் பழங்குடி மக்களோடு கலந்துபோனமையால், வடநாட்டிலும் தென்னாட்டிலும் ஆரியத்தைப் பரப்பியவரும், ஆரியரென்று பொதுவாகச் சொல்லப்படுபவரும், பிராமணரே என்றறிதல் வேண்டும்.

ஆரியர் தம் முன்னோர் மொழியை மறந்து போனதற்கும், அவரது வேதமொழி வடநாட்டுப் பிராகிருதத்தொடு கலந்து எகர ஒகரக் குறிலில்லாமலிருத்தற்கும், அவர் சிறுபான்மையராயிருந்து பழங்குடி மக்களோடு கலந்து போனதே கரணியமாகும்.

ஆரியர்க்கும் பழங்குடி மக்கட்கும் இடையே நடந்தனவாக வேதத்திற் சொல்லப்படும் போர்களெல்லாம், பிராமணியத்தை ஏற்றுக்கொண்டவர்க்கும் ஏற்காதவர்க்கும் இடைப்பட்டனவேயாம்.

விரல்விட்டு எண்ணத்தக்க பிராமணர் தென்னாடு வந்து, தாம் நிலத் தேவரென்றும் தம் மொழி தேவமொழி யென்றும் சொல்லி, மூவேந்தரையும் அடிப்படுத்தியதையும்; இன்றும் ஆரியச் சார்பான பேராயத் தமிழர் உரிமைத் தமிழரை வன்மையாக எதிர்ப்பதையும் நோக்கின், தமிழ் திரிந்தும் தமிழாட்சியின்றியும் போன வடநாட்டில், ஆரியப் பூசாரியர் சில அரசரைத் துணைக்கொண்டு நாட்டு மக்களை வென்றது, ஒரு சிறிதும் வியப்பன்று.

ஆரியர் முன்பு பிராகிருதரையும் பின்பு திராவிடரையும் அதன்பின் தமிழரையும் வெல்லக் கையாண்ட வழிகளுள் ஒன்று, அவர் தெய்வத்தைத் தாமும் வணங்கல். இது அடுத்துக் கெடுத்தல் என்னும் வலக்காரத்தின் பாற்பட்டது.


முதலிற் சிந்துவெளியிலும், பின்னர்ச் சரசுவதி யாற்றிற்கும் திருடத்துவதி யாற்றிற்கும் இடைப்பட்ட பிரமவர்த்தத்திலும், அதன் பின் விசனசத்திற்குக் கிழக்கும் பிரயாகைக்கு மேற்குமாகப் பனி மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட மத்திய தேசத்திலும், இறுதியில் ஆரியாவர்த்தம் என்னும் வடஇந்தியா முழுதும் பரவிய ஆரியர், வங்கத்திலுள்ள காளிக்கோட்டத்தையடைந்த பின், காளி வணக்கத்தை மேற்கொண்டனர். பிராமணனே காளிக்குக் கடாவெட்டும் பூசாரியுமானான். காளி - வ.காலீ. ஆரியர் சிந்துவெளியிலிருந்தபோதே, வேந்தன் வணக்கமாகிய இந்திர வணக்கத்தை மேற்கொண்டது முன்னர்ச் சொல்லப்பட்டது. வேதக் காலத்தின் இறுதியில், இந்திரன் தலைமை ஆரியத் தெய்வமானது கவனிக்கத் தக்கது.



இந்திர வணக்கத்தையும் காளி வணக்கத்தையும் மேற்கொண்டும், சில பிராகிருத (வடதிராவிட) மன்னரைத் துணைக் கொண்டும், வடஇந்தியா முழுவதையும் அடிமைப்படுத்திய பின், ஆரியர் விந்தியமலை தாண்டித் தென்னாடு வந்தனர். மக்கட் குடியிருப்பு மிக்கில்லாத தண்டகக் காட்டையும், குடியிருப்பிலும் ஆட்சி முறையிலும், அதினுஞ் சிறந்த தக்கணத்தையும், படிப்படியாகக் கடந்து தமிழகம் வந்த பின், தலைசிறந்த நாகரிகத்தையும் நாட்டு வளத்தையும் தமிழுயர்வையும் இலக்கியச் சிறப்பையும் மூவேந்தர் செங்கோலாட்சியையும் கண்டு, வியந்து வெஃகி, வடநாட்டில் தாம் கையாண்ட வழிகளையே தென்னாட்டிலுங் கையாண்டு முதற்கண் மூவேந்தரையும் தம் அடிப்படுத்தத் திட்டமிட்டு, அதன்படியே எல்லாவற்றையுஞ் செய்து வருவாராயினர்.

(2) ஏமாற்று

வெப்ப நாட்டு வாழ்க்கையால் தமிழருட் பெரும்பாலார் கருத்திருந்ததையும், மூவேந்தரும் முந்தியல் பேதைமை மதப்பித்தம் கொடைமடம் ஆகிய முக்குணங்களைக் கொண்டிருந்ததையும், கண்ட ஆரியர், தம் வெண்ணிறத்தையும் வேதமொழியின் வெடிப்-பொலியையும் பயன்படுத்தி, தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தம் வேத மொழி தேவமொழியென்றும் கூறி ஏமாற்றிவிட்டனர். அதனால், அவர் என்ன சொன்னாலும் நம்பவும், எது கேட்டாலும் கொடுக்கவும், அவரைத் தெய்வமாக வழிபடவும், வேண்டிய-தாயிற்று.

தெய்வா தீனஞ் ஜகத்ஸர்வம்

மந்த்ரா தீனந்து தைவதம்

தன் மந்த்ரம் ப்ராஹ்மணாதீனம்

ப்ராமணா மமதைவதம்.

இதன் பொருள்: உலகம் தெய்வத்துள் அடக்கம்; தெய்வம் மந்திரத்துள் அடக்கம்; மந்திரம் பிராமணருள் அடக்கம்; ஆதலாற் பிராமணரே நம் தெய்வம்.

ஒருசார் பழங்குடி மக்களின் பேதைமை கண்டு, பிராமணரே இங்ஙனம் தம்மைப் புனைந்துரைத்துக் கொண்டனர்.

மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி ஆதலால், மூவேந்தரும் சென்ற நெறியே பொதுமக்களும் சென்றனர். திருவள்ளுவர் போன்ற தெள்ளறிஞர் எத்துணை நல்லறிவு கொளுத்தி எச்சரிப்பினும், பேதை வேந்தர் பொருட்படுத்தியிலர். பிராமணர்க்குக் கடவுட்குரிய பகவன்(பகுத்தளித்துக் காப்பவன், படியளப்பவன்) என்னும் பெயர் இலக்கிய வழக்கில் வழங்கத் தொடங்கிற்று. உலக வழக்கில் அவரைச் சாமி என்றனர். சொம் - சொத்து, சொம் - வ.ஸ்வாம். சொம் - சொம்மி - வ.ஸ்வாமின்

(3) நாற்பிறவிக் குலப் பிரிவினை

தொழில் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பொருளிலக்கணத்திற் கூறப்பட்டுள்ள, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பாற் பாகுபாட்டைத் தீய முறையிற் பயன்படுத்திக்கொண்டு, இந்தியரெல்லாரையும் தொழில் நிற அடிப்படைகளில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வருணப் பிறவி வகுப்புகளாக வகுத்து, அவை முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவையென்றும், தாம் பிராமணரும் ஏனையர் ஏனை மூவகுப்பாரு மாவர் என்றும், இப்பாகுபாடு இறைவன் படைப்பே யென்றும், கூறிவிட்டனர் ஆரியப் பூசகர்.

ப்ராஹ்ம ணோஸ்ய முகமாஸீத்

பாஹூ ராஜன்ய; க்ருத:

ஊரூத தஸ்ய யத்வைஸ்ய:

பத்வியாக்ம் ஹூத்ரோ அஜாயத.

இது இருக்கு வேதம் 8ஆம்அட்டகத்திலுள்ள புருடசூத்தம் (புருஷ ஸூக்த) என்னும் பகுதியைச் சேர்ந்ததாகும்.

(இ-ள்) பிராமணன் பிரமத்தின் முகத்தினின்றும், சத்திரியன் அதன் தோளினின்றும், வைசியன் அதன் தொடையினின்றும், சூத்திரன் அதன் பாதத்தினின்றும் தோன்றினர்.

பிராமணர் தமிழகம் வந்தபின், அந்தணர் (அருளாளர்) என்னும் தமிழ முனிவர் பெயரையும் மேற்கொண்டனர்.

பாரதம் - அநுசாச, நீக பருவம் - பூதேவர் மகிமை யுரைத்த சருக்கத்து,

அந்தணர்கள் தவவலியா லரசர்செங்கோல் நிகழ்வதெலாம்

அந்தணர்க ளொழுக்கத்தா லாருயிர்கள் செறிவதெலாம்

அந்தணர்கள் நான்மறையா லருமாரி பொழிவதெலாம்

அந்தணரி லதிகருல கதிலுண்டோ புகலாயே.



ஆயுள்வேண் டினர்செல்வ மாண்மை
வேண்டினர்மிக்க
சேயைவேண் டினர்தத்தஞ் சீலம்வேண் டினர்முத்தி
நேயம்வேண் டினர்சுவர்க்க நீடுவேண் டினர்விப்பிரர்
தூயதா ளினிற்றொழுது சூழ்வரே யேற்றமென

என்னும் செய்யுள்களும்,

இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே

என்னும் புறநானூற் றடிகளும் பிராமணர் இந்தியா வெங்கும் பெற்றிருந்த மாபெரு மதிப்பை யுணர்த்தும்.

---------------------- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் - நூல்: ”தமிழர் மதம்”

0 comments: