Search This Blog

6.5.08

ஆண்களின் விபச்சாரித்தனம்

தேவ தாசிகளுக்கு விபச்சாரித்தனம் எப்படி குற்றமற்றதும் குறை கூறப்படாததுமாய் இருக்கிறதோ, அதுபோல் ஆண்களுக்கும் விபச்சாரித்தனம் குற்றமற்றதும் குறைகூறக் கூடாததுமாய் இருக்கின்றது. அது போலவே, ஆண் கடவுள்களின் விபச்சாரித்தனம் எப்படி போற்றி மகிழக் கூடியதாகவும், அதன் பேரால் உற்சவம், திருநாள் கொண்டாடும்படியான பெருமை அளிக்கத்தக்கதாகவும் இருக்கிறதோ, அதுபோல் ஆண்களின் விபச்சாரித்தனமும் ஆண்களுக்கு ஒரு பெருமையாகவே இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், பல ஆண்கள் தங்கள் நடத்தையால் தங்களது மனைவிமார் தப்பாக நடக்க நேருமே, சில இடங்களில் தப்பாக நடந்து அடையாளங்கள் கூடத் தெரிந்து உலகம் இகழுகின்றதே என்று தெரிந்தும் அதைப்பற்றிக் கவலை இல்லாமல், பெயர் பெற்ற சில விபச்சாரிகளை தாங்கள் வைத்துக் கொண்டிருப்பதாகப் பிறர் கருதும்படி நடந்துகொள்ளுவார்களா? சில கிராமாந்தரங்களிலே "பண்ணையாருக்கு பிறந்தது பள்ளுப்பாடிப் பிழைக்குது; பண்டாரத்துக்குப் பிறந்தது (அதாவது தவசிப்பிள்ளை அல்லது சமையல்காரருக்குப் பிறந்தது) பட்டா மணியம் செய்யிது" என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, எஜமானனின் சொந்த மனைவி, சமையல்காரன் சம்பந்தத்தால் பெற்ற பிள்ளை எஜமானனது சொத்துக்கு உரிமையாகிவிட்டது என்றும், எஜமானனின் தாசியினிடம் எஜமானனுக்கே பிறந்த பிள்ளை கீழான தொழில் செய்து இழிவான நிலையில் இருக்கிறது என்றும் அருத்தமாகும். இதிலிருந்து, ஆண்கள் விபச்சாரித்தனத்தால் இழிவடைவதில்லை என்பது தெரிகிறது.

----------தந்தைபெரியார் "குடிஅரசு" -18-3-1944

0 comments: