Search This Blog

3.5.08

சாவர்க்காரும் - பகத்சிங்கும் ஒன்றா?

பார்ப்பனர்கள்தான் எவ்வளவுக் “கெட்டிக்காரர்கள்!” கெட்டிக் காரர்கள் என்று நாம் சொல்லுவது நயவஞ்சகமாக எப்படியெல்லாம் காய்களை நகர்த்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதாகும்.

சில தலைவர்கள் பற்றி சுருக்கமாக வரலாறுகளைக் கூறுவது போன்ற சந்தடி சாக்கில், அவாளின் இஷ்ட தெய்வமான ஆசாமிகளை ஓகோ என்று உருவகப்படுத்திக் காட்டி விடுவார்கள்.

அதிலே “தினமலர்” ஏட்டுக்குத்தான் முதல் பரிசு!

“யார் இவர்கள்?” என்ற தலைப்பில் ரவீந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, ராஜீவ் காந்தி, ராஷ் பிகாரி போஸ், ஜவகர்லால் நேரு இவர்களைப்பற்றி குறிப்புகளைத் தந்துவிட்டு, இறுதியாக இந்தப் பட்டியலில் சாவர்க்காரும் திணிக்கப்பட் டுள்ளார். அதன் விவரம் இதோ:
“வீர சாவர்க்கர் (1883-1966): விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற முழுப் பெயருடைய இவர் புரட்சிவாதி. ரஷ்யா, அயர்லாந்து, எகிப்து மற்றும் சீனா வரை இவரது புரட்சி இயக்கத்தின் தொடர்பு பரவியிருந்தது. பிரிட்டிஷ் அரசு விதித்திருந்த தடையை மீறி பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இவரது புத்தகங்களை வெளியிட்டன. 1910-இல் நாசிக் கலெக்டர் ஜாக்சன் துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை மேல் விசாரணைக்காக கப்பலில் அழைத்து வந்தனர். அதிலிருந்து தப்பிய இவர் கரையை அடைவதற்குள் ஸ்காட்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷ், பகத்சிங் போன்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். இந்தியா விடுதலை அடைந்த பின் இவர் இந்து மகாசபை கட்சியை நிறுவினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது வரலாறு என்ற பெயரில் சிப்பாய் கலகத்தின்போது நடைபெற்ற வரலாற்றுக் குறிப்புகளை பதிவு செய்தார்.

இது “தினமலர்” (26.4.2008) வெளியிட்டுள்ள குறிப்பாகும்.

இதனைப் படிப்போர் என்ன கருதுவார்கள்? சுபாஷ் சந்திரபோசுக்கும், பகத்சிங்குக்கும் முன்னோடி இந்த வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்று தானே கருதுவார்கள்?
பெயரில்தான் “வீர” சாவர்க்கார் என்று இருக்கிறதே தவிர - இவர் எத்தகைய கோழை என்பதை உண்மையான தகவல்களை அறியும் எவரும் முடிவுக்கு வருவார்கள்.
அந்தமான் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். 50 ஆண்டுகள் அவருக்குத் தண்டனை என்றெல்லாம் புகழ் புராணம் படிக்கிறார்களே - இவர் 50 ஆண்டுகாலம் சிறையில் கழித்தாரா? அப்படி கழிக்கவில்லையானால், அவர் சிறையிலிருந்து எப்படி வெளியில் வந்தார்? இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலில்தான் உண்மையான சாவர்க்கார் வெளிச்சத்துக்கு வருகிறார்.
அந்தமான் சிறையில் இருந்த அந்த மூன்று ஆண்டுக்குள் ளேயே நான்கு முறை மன்னிப்பு எழுதிக் கொடுத்த கடைந்தெடுத்த கோழை மனிதர்தான் இந்த சாவர்க்கர். அந்த மன்னிப்புக் கடிதத்திலும் அவர் என்ன குறிப்பிட்டு இருந்தார்? “என்னை விடுதலை செய்தால் நான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாச மாக இருப்பேன்”
என்றல்லவா எழுதிக் கொடுத்தார். இல்லை என்று இந்தத் “தினமலர்”, “தினமணி”, “சோ” வகையறாக்களால் மறுக்க முடியுமா?

இவரைப் போய் பகவத்சிங்குக்கு முன்னோடி என்று கூறுவது - மாவீரன் - நாத்திகச் செம்மல் பகவத் சிங்கைக் கொச்சைப்படுத்துவதாகும்.

தூக்குக் கயிறை முத்தமிட்ட அந்தக் கடைசி நேரத்தில்கூட பகத்சிங் கம்பீரமாகவே நின்றான். அரசிடம் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டான். பாச உணர்வின் காரணமாக தனது தந்தையார் கருணை மனு அனுப்பியதற்காக அவரை மிகவும் கடிந்து கொண்டு இருக்கிறார்.
தன்னை விடுதலை செய்யவேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சரணாகதி அடைந்த சாவர்க்காரை அந்த மாவீரனோடு ஒப்பிடலாமா? அப்படி ஒப்பிடுவது கடைந்தெடுத்த மோசடியல்லவா? சுண்ணாம்பை வெண்ணெய் என்று காட்டும் கயவாளித்தனம் அல்லவா?

அதேபோல மாவீரர் சுபாஷ் சந்திரபோஸோடு ஒப்பிட்டு “தினமலர்” எழுதுகிறது. பாமர மக்கள்தானே “தினமலரை”ப் படிக் கிறார்கள். படித்தவற்றையெல்லாம் அப்படியே நம்பி ஏமாறக்கூடிய வர்கள் இந்தப் பாமரர்கள் என்கிற திமிர் பிடித்த எண்ணம்தான் இப்படியெல்லாம் தகிடுத்தத்தமாக இந்தக் கூட்டத்தால் செய்திகளை வெளியிட முடிகிறது.

மதச்சார்பற்ற சக்திகள் இதில் விழிப்பாக இருந்து இதுபோன்ற புரட்டுச் செய்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்து கிறோம்.

----------- "விடுதலை" தலையங்கம் 2-5-2008

0 comments: