Search This Blog

15.5.08

கிரேக்க – ரோம கடவுள்களுக்கும் இந்துக் கடவுள்களுக்கும் உள்ள ஒப்புமை

பிரம்மன்

பிரம்மன் உலக சிருஷ்டிகர்த்தா என்கின்றனர். கிரேக்கர்களும், பெத்தினியர்களும் குறிப்பிடும் சாட்டர்ன் (சனி) தெய்வ வரலாறு இதே போன்றுளது. இந்த பிரம்மா சிகப்பு அல்லது பொன்னிறத்துடன் நான்கு தலைகளுடையவராம். இவருக்கு அய்ந்து தலைகள் இருந்ததாகவும், சிவன் தன்னைவிட மேலானவனென இந்த பிரம்மன் ஒப்புக் கொள்ளாததால் சீற்றமடைந்த சிவன் ஒரு தலையைக் கிள்ளி எறிந்து விட்டதாகவும் சைவர்கள் கூறுகின்றனர். மற்றும் சிவனுக்கும் 5 தலையாகவும் இருந்ததால் சிவன் மனைவி அடையாளம் தெரியாமல் அடிக்கடி ஏமாற ஏற்பட்டதால் பிரம்மாவின் ஒரு தலை சிவனால் கிள்ளப்பட்டது என்றும் கூறுகின்றனர். இந்த பிரம்மனுக்கு ஹம்சம் (வாத்து) வாகனம் சிலர் அன்னப்பறவை என்கின்றனர். வைஷ்ணவர்களும் சைவர்களும் இந்த பிரம்மன் கோவில்களை அழித்து விட்டனராம். இப்போது பிரம்மனையாரும் மதிப்பதில்லை. இவருக்கும் ஏராளமான குட்டிப் பெயர்களுண்டு.

தட்சன்

தட்சன் பிரம்மனின் அவதாரமாம். சிவன் மனைவி சதி இவர் மகளாம். மகனெனப்படும் வீரபத்திரன் தகப்பனாரான சிவனின் ஜடாமுடியிலிருந்து பிறந்தானாம். தன் தகப்பனான சிவனை அவமதித்ததாலும் தாய் தீயில் விழுந்து இறக்கச் செய்ததாலும் சீற்றமடைந்த வீரபத்திரன் தட்சனின் தலையை வெட்டி விட்டானாம். தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி பிரம்மா மீண்டும் தோற்றுவிக்கப்பட்டாராம். ஆனால் அவர் தட்சனாக இருக்கையில் வெட்டப்பட்ட தலை தீயில் விழுந்து பொசுங்கி விட்டதால் இந்த பிரம்மனுக்கு ஆண் ஆட்டின் (கடா) தலை ஒட்டப்பட்டதாம். இப்போதும் அந்த பிரம்மா இந்த ஆட்டின் தலையுடன் இருக்கின்றாராம்.


விஸ்வகர்மா

உலகை அமைத்த தச்சனார் விஸ்வகர்மா என்பவராம். கடவுளுக்குக் கையாம். பிரம்மனின் மகனாம். இவர் மூன்று கண்களைக் கொண்ட வெள்ளை நிற உடலுடையவராம்.

நாரதர்

இவர் பிரம்மா – சரஸ்வதி மகன். இவர் கடவுள்களின் செய்தி பரப்பும் தூதனாம். வீணையைக் கண்டுபிடித்தவனாம். இவனுக்கு மனைவியோ,காதல் கிழத்திகளோ இல்லை. ஒரு தடவை கிருஷ்ணனைச் சந்தித்த போது கிருஷ்ணனுக்குள்ள பதினாயிரம் கோபிகளில் ஒருவரைத் தனக்கு இரவலாகக் கொடுக்கும்படி அந்தக் கிருஷ்ணனையே கேட்டாராம். ஆனால் எந்தப் பெண்ணின் அறையில் நுழைந்தாலும் அங்குக் கிருஷ்ணன் உருவங்களைக் கண்டு திரும்பிவிட்டாராம்.

பிருகு

பிருகு பிரம்மாவின் மகன் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரில் யார் உயர்ந்தவரெனத் தேவர்கள் இவரைக் கேட்டார்களாம். இவர் அம்மூவரைப் பரீட்சிக்கச் சென்றாராம். தகப்பனான பிரம்மாவுக்கு வழக்கமான வணக்கம் செலுத்தாது கண்டபடி திட்டிவிட்டு சிவனிடம் சென்று அவரையும் அதிகமாகத் திட்டினாராம். அவர்கள் கோபித்துக் கொள்ளவே ஏதோ சாக்குப் போக்குக் கூறி இருவரையும் சமாதானம் செய்துவிட்டு விஷ்ணுவிடம் சென்றாராம். அப்போது லட்சுமி பக்கத்தில் அமர்ந்திருந்த விஷ்ணு தூங்கிக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட பிருகு விஷ்ணு கண் விழித்தார். பிரம்மா சிவனைப் போல் கோபிக்காது உதைத்த கால் வலிக்கிறதா என்று கேட்டாராம். அதோடு நிற்காது. பிருகுவின் காலையும் தடவிக் கொடுத்தாராம். இந்த பிருகுவைப் பற்றிக் கூறப்படும் வரலாறுகள் தற்காலத்தவர் நம்பத்தகாதனவாக உள்ளன. மலடியாகவிருந்த சுகுரு என்ற அரசனின் மனைவிக்கு 60- ஆயிரம் மக்கள் பிறக்கச் செய்தாராம் இவர். இவள் இன்னும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறாளா என்பது பற்றி இந்து புராணங்கள் குறிப்பிடவில்லை.

சப்த ரிஷிகள்

பிரம்மாவின் மகனான மனுவிற்குப் பிறந்தவர் ஏழு ரிஷிகள். இவர்கள் ஆறு பெண்னளை மணந்தனர். ஏழு ஆண்கள் எவ்விதம் ஆறு பெண்களை மணந்து வாழ்க்கை நடத்தினரென்பதும் புராணங்களில் விளக்கப்படவில்லை.

சரசுவதி

பிரம்மாவின் மனைவி சரசுவதி படிப்பின் தெய்வமாம். இவள் பிரம்மாவின் மகள் என்றும் விஷ்ணுவின் மனைவிகளில் ஒருத்தியென்றும் ( உடன் பிறந்தவளே மனைவியானாள்) இந்துக்கள் கூறுகின்றனர். பிரம்மாவின் மனைவி என்றே பெரும்பாலோர் சொல்லுகின்றனர். (தகப்பன் தன் சொந்த மகளையே பெண்டாட்டியாக்கிக் கொண்டாராம்) படிப்பு இந்த தெய்வதினிடமிருந்து தான் இந்துக்களுக்குக் கிடைக்கிறதாம். பொய்களை மன்னிக்க இவருக்குப் பூசை போடுவதாகக் கூறப்படுகிறது. இந்த பூசை வெற்றி தருவதாகவிருந்தால் அடிக்கடி பூசைபோட வேண்டுமே. ஏனெனில் இந்துக்கள் அடிக்கடி பொய் கூறும் வழக்கமுடையவர்களென்று மேனாட்டுப் புலவர் சார்லஸ் கால்மன் கிண்டல் செய்கின்றார். கிரேக்கர்களின் - ரோமர்களின் மினர்வா என்ற படிப்புத் தெய்வம் போன்றதே இந்த சரசுவதி. கீழ்காணும் பட்டியலின்படி இரு வேறு மதஸ்தர்கள் - நாட்டினர் கடவுளும் ஒன்றியிருப்பதால் ஒரே கட்டுக்கதையையே இந்த இருமதத்தாரும் வெவ்வேறு பெயர்களில் காட்டுகின்றனரென்பதாகிறது. எனவே புராணங்கள் இந்துக்களின் சொந்தம் என்றும், இந்து கடவுள்களின் பிறப்பு நடப்பு வரலாறுகள் என்றும் கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்றதாகிறது.

கிரேக்க – ரோம கடவுள்களுக்கும் இந்துக் கடவுள்களுக்கும் ஒப்புமைப் பட்டியல் வருமாறு :

சிவன், இந்திரன் - ஜீபிட்டர்
பிரம்மா – சாட்டர்னஸ்
யமன் - மைனாஸ்
வருணன் - நெப்ட்யூன்
சூரியன் - சோல்
சந்திரன் - லூனஸ்
வாயு - ஈயோவஸ்
விசுவகர்மா – காஸ்டர் - போல்வாக்ஸ்
கணேசன் - ஜீனஸ்
விரஜாநதி அல்லது வைத்ராணி - ஸ்டிக்ஸ்நதி
குபேரன் - ப்ளுட்டர்ஸ்
கிருஷ்ணன் - அப்பிலோ
நாரதன் - மெர்குரியன்
ராமன் - பச்சுஸ் (மதுவைக் கண்டு பிடித்தவர்)
கந்தன் - மார்ஸ்
துர்க்கை – ஜீனோ
சரசுவதி – மினர்வா
ரம்பை – வீனஸ்
உஷா – அரோரா
ஸாகா – வெஸ்டா
பிரிநிவி – சைபெல்விசி
சிறீ - சிரஸ்

.---------- "புரட்டு - இமாலய புரட்டு" என்ற நூலில் இருந்து தந்தை பெரியார். பக்கம் 41-46

0 comments: