Search This Blog

16.5.08

பெண், ஆணின் பெயரைச் சொல்லி அழைக்கவேண்டும்

எங்கள் பிரசாரத்தின் பயனாகத் தான் பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத் துரிமை போன்ற உரிமைகள் கிடைத்தன. மனைவியை அடித்து, கை ஒடித்த கணவனுக்குக் கீழ்க் கோர்ட்டில் பத்து ரூபாய் அபராதம் விதித்தார்கள். அய்க் கோர்ட்டில் நீதிபதி முத்துசாமி அய்யர் அபராதத் தைத் தள்ளுபடி செய்து, கணவனுக்கு மனைவியை அடிக்க அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பு கூறினார். தாலி கட்டுதல் பற்றி பேசப்பட்டது. தாலி என்பது நாய்க்கு முனிசிபாலிட்டி பட்டை போன்றது. தாலி, பெண்ணை ஆண் அடக்கி ஆளும் மூர்க்கத்-தனத்தின் சின்னம். தாலி பற்றி புலவர்கள் பேசும்போது, காளை அடக்குதல், புலி வேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள். பெண்-களுக்கு அறிவு வந்தால் ஒழிய, தாலியை நீக்க முடியாது.

* * *

“கலப்பு மணம்” என்பது பைத்தியக்காரத் தனமானது. அந்தச் சொல்லுக்கும், நடவடிக்-கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஜாதியின் பெயரால் கலப்பும் இல்லை. மனிதன் எல்லாம் மனித ஜாதி. மனிதனுக்கும் மனித ஜாதிப் பெண்ணுக்கும் நடைபெறுவது எப்படி கலப்பு மணமாகும்? மனிதனும், மிருகமும் கலந்தால் கலப்பு எனலாம்.
மனித ஜாதியில் கூட முரணான கலப்பு ஒன்றும் இங்கு நடைபெறவில்லை. ஓர் ஆணு-க்கும் ஆணுக்குமோ, ஒரு பெண்ணுக்கும் பெண்ணுக்குமோ நாம் திருமணம் செய்து வைக்கவில்லை. ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் தான் திருமணம் நடத்துகிறோம்.

* * *

காதல், காதல் என்று கண்மூடித் தனமாக ஆசைப்பட்டு - அவசரப்பட்டுக் காரியத்தில் இறங்-கிய பிறகு எலியும் - பூனையுமாக, கீரியும் -பாம்புமாக இருப்பதில் என்ன பலன்?
எனவே, நன்றாக ஒருவரை ஒருவர் உணர்ந்து, அறிந்து கொண்டு, மணம் ஒப்பித் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதற்குப் பெற்றோர் எதிர்த்தாலும் பரவாயில்லை. தங்களைக் காத்துக் கொள்ளத் தைரியமும் இருக்க வேண்டும்.

இந்தக் காதல் என்பதை விட மோசம் பொருத்தம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என்பது -மிகமிக முட்டாள்தனம். பொருத்தம் பார்க்கும் ஜோசியனுக்கு ஆணையோ, பெண்ணையோ தெரியாது. இருந்தாலும் பொருத்தம் பார்க்கின்றீர்கள். இரண்டு ஆண்களின் ஜாதகத்தையோ, இரு பெண்களின் ஜாதகத்தையோ அல்லது அண்ணன், தங்கை ஜாதகத்தையோ கொடுத்தால் இவை பொருத்தமற்றது என்று எவனாவது கூற முடியுமா? வீணான முட்டாள்-தனமான செயலே இப்படி எல்லாம் பொருத்தம் பார்ப்பது?

* * *

கல்யாணம் என்றால் ஓர் ஆண், ஒரு பெண்ணை அடிமையாகக் கொள்ளுவது என்று தான் பொருள். அடிமை என்றால் நிபந்-தனை அற்ற அடிமை என்று தான் பொருள். கணவன் வைதாலும், திட்டினாலும், அடித்-தாலும், உதைத்தாலும் ஏன் என்று கூட கேட்-காமல், சாகும் வரையில் அடிமையாகவே இருந்து, அவன் விரும்பியவற்றை எல்லாம் செய்-வது என்பதாகும்.

கல்யாண முறை என்றால் ஜாதியைப் பாதுகாப்பது, மதத்தைக் காப்பாற்றுவது, கடவுளையும், சாஸ்திரங் களையும், பழக்க வழக்கங்களையும் அழிந்து விடாமல் பாதுகாப்பது என்பது தான் அர்த்தம்.
இப்படி இந்தக் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங் களையும் அழிந்து விடாது வைத்துக் கொண்டு, எப்படி நாம் நமது ஜாதி இழிவினை ஒழிக்க முடியும்? நாம் எப்படி நமது காட்டு-மிராண்டித்தனத்தில் இருந்து விடுதலை அடைய முடியும்?

பெரிய புராணத்தை எடுத்துக் கொண்டால், அதில் ஒரு ஆண் தான் மோட்சத்திற்குப் போவதற்காகத் தன் மனைவியை ஒரு பார்ப்பானுக்குக் கூட்டிக் கொடுத்து, மனைவியை அவனுடன் அனுப்பி, தான் மோட்சத்திற்குப் போனான் என்று இருக்கிறது. அது தான் இயற்-பகை நாயனார் கதை!

ஒழுக்கம் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அரிச்சந்திரன் தன் பெண்-டாட்டியை ஒருவனுக்கு விலைக்கு விற்றான். அவளும் வாங்கினவனுடன் சென்று மனம் ஒப்பும்படி நடந்து மோட்சத்திற்குப் போனார்கள் என்று இருக்கிறது. பாரதக் கதை அதைவிட மோசம். ஒரு ரிஷி பத்தினி தன் குஷ்டரோகியாக உள்ள தன் கணவன் தாசி வீட்டு-க்குப் போக விரும்பினானாம். அவனால் நடந்து போக முடியாத காரணத்தால், கணவன் விருப்-பத்தை நிறைவேற்றினால் தான் தனக்கு மோட்சம் உண்டு என்ற எண்ணத்தால், அவன் மனைவி அவனை ஒரு கூடையில் உட்கார வைத்துத் தாசி வீட்டிற்குக் கொண்டு போய் விட்-டாள் என்று இருக்கிறது. இவை எல்லாம் நடந்ததா என்றால் அது வேறு சங்கதி. கற்பனையாக இருந்தாலும், பெண் ஆணுக்கு அடிமை என்று காட்டவே இம்முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்றும் கடவுள் பிரசாரம், கடவுள் செயல், ‘கற்புள்ளவளுக்குக் கணவன் தானே கடவுள்’ என்பார்கள். ஏண்டா இப்படிக் கூறுகிறீர்கள்? இது பொருந்துமா? இது அடுக்குமா? என்று கேட்டால், இது முன்னோர்கள் கூறியது, ரிஷிகள் நடந்தது, மகான்-கள் கூறியது, சாஸ்திரம் - சட்டம் இது-தான்; நீ பேசாதே என்பான். ஒழுக்கம், நாணயம் பற்றிச் சிறிது கூடச் சிந்திக்க மாட்டான்.


ஜாதிக்கும், திருமணத்திற்கும் சம்பந்தமே இல்லை. அம்மி மிதிப்பது, விளக்கு வைப்பது, சட்டி - பானைகள் அடுக்குவது, இவை யாவும் நம் மூடத்தனத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். சிறிது வசதியாக, பணக்காரனாக இருந்து விட்-டால் போதும். அதெல்லாம் முடியாது, நான் திருமணத்திற்குப் பார்ப்பானை அமைத்துத் தான் நடத்துவேன் என்பான். ஏன், என்றால் பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்பது இவன் எண்ணம். தாழ்ந்த ஜாதியாகிய தன் வீட்டுத் திருமணத்தை உயர்ந்த ஜாதியானான பார்ப்பான் வந்து நடத்துவதால் தனக்குப் பெருமை என்ற எண்ணம். இவன் பார்ப்பானைக் கூப்பிடும் போதே தன்னைத் தாழ்ந்த ஜாதி என்றும், அவனை உயர்ந்த ஜாதி என்றும் நினைத்து உறுதி செய்து கொண்டு தானே, ஒத்துக் கொள்ளும் முறையில் கூப்பிடுகிறான்? இந்தப் பார்ப்பானுக்குத் திருமணத்தில் ஒரு வேலையும் கிடையாது. நம்மைத் தாழ்ந்த ஜாதியாக ஆக்கி இழிவுபடுத்துவதைத் தவிர, வேறு என்ன செய்கிறான்? வேறு வேலை தான் என்ன?

தோழர்களே! வெள்ளைக்காரனிடம் போய் உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்று கேட்டால், அவன் பரிகாசம் செய்வான். என்னடா நீ முட்டாளாக இருக்கின்றாய்? என் மகனுக்கு எப்போ கல்யாணம் என்றால் அது அவனைப் போய் கேள். என்னை வந்து கேட்கிறாயே, என்பான். இங்குப் பெண் தனக்குத் தேவையான, பிடித்தமான ஒருவனைத் தாn-ன தேர்ந்தெடுத்து, அவனுடன் நண்பர்களாக சில மாதம் பழகுவார்கள். அது விவரம் தகப்பன் காதில் வீழ்ந்ததும் உடன் திருமணம் செய்து விடுவான். அதுதானே ஒழிய, மகளுக்கு தான் மாப்பிள்ளை தேட மாட்டான்.

ஆனால், இங்கு அப்படியில்லை. பெற்றோர்தான் பெண் பார்ப்பதும், மாப்பிள்ளை பார்ப்பதும், வேலையில் இருக்கும் தன் மகனுக்கு எழுதுவான், மூன்றாம் நாள் உனக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளது. ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வா என்று இந்தப்படிதான் இங்கு நிலைமை.

"பெரியார் களஞ்சியம் தொகுதி" - 22 "பெண்ணுரிமை" பாகம் - 3 நூலிலிருந்து...

0 comments: