தோழர்களே!
கடவுளும், மதமும் நன்மைக்கென்றே ஏற்பட்டவையாயினும் ஒழிக்கப்பட வேண்டி-யவையே. சமுதாயத் தொண்டை வலியுறுத்தவும், அதில் உண்மையையும், அன்பையும், ஒழுக்கத்தையும் ஏற்படுத்தவும் என்பதாகச் சொல்லிக்கொண்டே, மேற்கண்டவைகள் (கடவுள், மதம், பார்ப்பான், சாதி முதலியன) ஏற்பட்டு, இப்போது அவை தேவை இல்லாதவைகளாக ஆகிவிட்டதோடு, ஒழிக்கப்பட வேண்டியவையாகவே ஆகிவிட்டன. மிருகப் பண்புகளே தெய்வீகப் பண்புகளாய் அமைந்தன.
கடவுள், சமயம், பார்ப்பான் முதலியவைகளாலேயே மனிதனுக்கு, சமுதாயத்திற்குத் தேவை இல்லாதவைகள் எல்லாம் கடமை ஆக்கப்பட்டு, மனிதனை மனிதன் இம்சிப்பது, வஞ்சிப்பது முதலிய துஷ்ட ஜந்துக்கள் குணமே தெய்வீகக் குணங்களால் அமைந்துவிட்டன. மத சாஸ்திர புராண இதிகாசத் தத்துவங்-களைப் பார்த்தால் இவை விளங்கும். நெறியற்ற வாழ்வே மலிந்து காணப்படுகிறது. உயிர் வாழ்வில் எனக்கு 78 ஆண்டு அனுபவமுண்டு (1956). 65 ஆண்டுகளாக உலக நடப்பும் மனித வாழ்வின் தன்மையும் எனக்குத் தெரியும். அறிவு எவ்வளவோ வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றாலும், மனித வாழ்வு மிகமிகக் கீழான நிலைக்குப் போய்விட்டது. வஞ்சகத்திற்கும், துரோகத்திற்குமே அன்பு, ஒழுக்கம் என்றும், திருட்டுக்கும் புரட்டுக்குமே நாணயம் என்றும் அகராதிகளில் விளக்கம் எழுதவேண்டிய நிலைக்கு மனிதன் வந்து விட்டான். இதில் என்ன அதிசயம் என்றால், இந்த விதிக்கு விலக்களிக்க இன்று இந்த நாட்டில் ஒரு ஆளைக்கூடக் காண முடியவில்லை என்பதுதான்.
கடவுளும் சமயப் பிரசாரங்களும் நற்பயனளிக்கவில்லையே! கடவுள்களுக்கும், சமயங்-களுக்கும் - இவைகளுக்குக் கோவில்களுக்கும், உற்சவங்களுக்கும் குறைவில்லை; சமயப் பிரசாரகர்களுக்கும் கடவுள், சமயம் பற்றிய ஆதாரங்களுக்கும் குறைவில்லை; இவைகளில் தேர்ந்த புலவர்களுக்கும் குறைவில்லை; மற்றும் கடவுள் சமய நம்பிக்கைக்காரர்களுக்கும், பக்தர்களுக்கும், பக்தி செலுத்துபவர்களுக்கும் குறைவில்லை. இந்நிலையில் மனிதனிடம் அன்பு, ஒழுக்கம், நாணயம், நம்பிக்கை இல்லாமல், துரோகத்தினால், ஒழுக்கக் கேட்டால், நாணயக் குறைவால், ஏமாற்றுதலால் அல்லாமல் வேறு வழியில் மனிதன் வாழ முடியவில்லை என்கின்ற நிலை மக்களுக்கு ஏற்பட்ட காரணம் என்ன?
மனிதனின் வாழ்க்கைத் திட்டத்தையே ஏமாற்றுதல் மீதும், துரோகத்தின் மீதும் அன்னியன் உழைப்பின் பயனை அநியாயமாய் அனுபவிப்பதன் அஸ்திவாரத்தின்மீது அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமென்ன? துரோகிகள், போலிகள், ஏமாற்றுக்-காரர்களுடன் இணைந்திருப்பதெப்படி? இவைகள் எல்லாம் இரண்டாவது குணம் என்கின்ற தன்மையில் கொள்ளும்படியான அளவுக்கு, அயோக்கியர்களையும் துரோகிகளையும் நாணயக் குறைவானவர்களையும் நம்பிக்கை மோசம் செய்பவர்களையும் வெளிப்படையான போலிகளையும் வெறுக்-காமல், அவர்களிடம் வெறுப்புக் காட்டாமல், மக்கள் அப்படிப்பட்ட காரியங்களில் நிபுணர்களிடம் இணைந்தாவது வாழ-வேண்டும் என்று கருதுவதும், அவர்களோடு இணைந்திருப்பதில் வெட்கப்படாமல் இருப்பதுமான நிலையில், மனிதன் இருக்கக் காரணம் என்ன?
கடவுள் சமயத்துறை ஒழுக்க ஈனங்களும், வியாபாரம் நிர்வாகத்துறை ஒழுக்க ஈனங்களும் நீண்ட நாட்களாகவே இருந்து வருவதாக சமய, வியாபாரத் துறை ஆதாரங்களில் காணப்-பட்டாலும், இப்போது அரசியல் துறையின் நடப்புக்கள் ஒழுக்கக் கேட்டின் துரோகத்தின் எல்லையை அடைந்து விட்டன. அயோக்-கியர்களுக்கும், துரோகிகளுக்கும் முதலிடமா? இவைகள் எல்லாம் மனித சமுதாயத்திற்கு எவ்வளவு கேடு பயக்கின்றன? பயக்க இருக்-கின்றன? என்பதை எண்ணினால், நெஞ்சம் பிளக்கும்படியான வேதனை ஏற்படுகின்றது. அயோக்கியர்களும் துரோகிகளும் நாட்டில் தைரியமாய் உலாவவும் அவர்களை மக்கள் வெறுக்காமல் இருப்பதையும் பார்த்தால், இக்கூட்டத்தில் நாம் வாழ்வதே ஒழுக்கக்கேடு என்று தோன்றுவதுடன், அப்படியாவது ஏன் வாழவேண்டும் என்றே தோன்றுகிறது. ஒழுக்கக் கேட்டைக் களைந்தே ஆகவேண்டும். ஆகவே-தான், நாம் இனி ஒரு வினாடி வாழ்வ-தானாலும் இதற்கு ஒரு பரிகாரம் செய்து வாழவேண்டுமே யொழிய, மற்றபடி வாழ்வது இழிவு என்றே தோன்றுகிறது. இவ்வித பரிகாரத்திற்கு இனி எந்த விதத்திலும் கடவுளும் சமயமும் பயன்படாது என்றும் தோன்றுகிறது.
ஒழுக்கக் கேட்டிற்கு இதுவரை காரணமாக இருந்தவைகளை, ஒழுக்க வளர்ச்சிக்குப் பயனில்லாமல் இருக்கின்றவைகளை ஒழித்துவிட்டு, ஒழுக்கப் பிரசாரமும், ஒழுக்க ஈனராய் துரோகிகளாய் இருப்பவர்களை ஒழிக்கும் பிரசாரமும் செய்ய வேண்டியதுதான் தனக்கென வாழாதவர்களுக்கு முக்கியமும் முதன்மையுமான கடன் என்றே கருதுகிறேன். ஒழுக்கமும் அன்பும் இல்லையானால் மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது.
---------------தந்தைபெரியார் - குன்றக்குடியில், 6.6.1956இல் சொற்பொழிவு -‘விடுதலை’ 20.6.1956
Search This Blog
18.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment