Search This Blog

25.5.08

ஒ பிராம்மணரல்லாத இந்து சகோதரர்களே!

இனி பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டாம்


கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் உலகத்தையும் அதிலுள்ள எல்லாவஸ்துக்களையும் அவரே திருஷ்டித்தா ரென்றும் சாதாரணமாக உலகத்தில் ஜனங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சர்வ சக்தியுள்ள அப்படிப்பட்ட கடவுளை நாம் பக்தியுடன் தொழுவோமானால் நமக்கு இகத்தில் நல்ல சுகபோகங்களும் இறந்த பிறகு மோக்ஷமும் கிடைக்கும் என்பது நமது ஜனங்களின் சாதாரணமான நம்பிக்கை. இது மெய்யோ பொய்யோ அதை இன்னும் ஒவ்வொருவரும் சரியாய்க் கண்டுபிடித்தபாடில்லை.

ஆனால், இந்துக்களில் புத்திசாலிகளாகிய பிராம்மணர்கள் இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பிராம்மணரல்லாத இதர இந்துக்களிடத்திலிருந்து பொருள்களை கிரஹிக்க ஆரம்பித்தார்கள். இதுதான் ஆச்சரியம். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் என்றும் அவைகளுக்குப் பெண் பிள்ளைகளென்றும் கற்பித்தும் கோவில் குளங்களைக் கட்டுவித்தும் தேவதைகளைப் பற்றி அநேக பொய்க் கதைகளை புராணங்களில் எழுதி வைத்து, அவைகளை நம்பும்படி செய்தும், புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி தேவதைகள் சம்பந்தமாக உற்சவங்கள் செய்யச் சொல்லியும் அனேகவிதமான பண்டிகைகள் கொண்டாடச் செய்தும் பிரார்த்தனைகள் புரியச் செய்தும் பிராமணர்கள் பிராம்மணரல்லாத இதர இந்துக்களிடத்திலிருந்து கொள்ளையிட்டுத் தின்கிறார்களே. இது மட்டுமா? பிராம்மணரல்லாத இதர இந்துக்களாகிய நமக்கு கடவுளிடத்தில் இருக்கும் ஒருவிதமான நம்பிக்கையை நமது நித்திய வாழ்க்கையில் கொண்டு வந்து சம்பந்தப்படுத்திக் கலியாணம், சோபனம், சீமந்தம், கருமாந்திரம், திவசம், மாசியம் முதலிய சுபாசுபச் சடங்குகளை ஏற்படுத்தி அவைகள் மூலமாகவும் நம்மைப் பிடுங்கித் தின்கிறார்களே. இது என்ன அநியாயம்? இது என்ன விபரீதம்? ஓ பிராமணரல்லாத இந்து சகோதரர்களே! பிராம்மணர்கள் நம்முடைய தலையைத் தடவி மூளையை உரிகிறார்களே. அது உங்கள் மனதில் படவில்லையா? அவர்கள் நம்மை ஏமாற்றித் தின்கிறார்களே. அது உங்களுக்குத் தெரியவில்லையா? நம்முடைய முன்னோர்கள் மோக்ஷத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் சேராததும் தெரியவில்லையே. கடவுள் நம்மைத் தேங்காய், பழம் பொங்கல், புளியோரை, ததியோதனம் கேட்கிறாரா? உற்சவங்கள் செய்யச் சொல்லுகிறாரா? பண்டிகைகள் கொண்டாடும்படி வற்புறுத்துகிறரா? பிரார்த் தனைகள் புரியும்படி தொந்தரவு செய்கிறாரா? எல்லாம் பிராமணர்கள் செய்கிற ஆர்ப்பாட்டத்தானே இவைகளெல்லாம் நமது வயிறு எரிய பிராமணர்கள் தம் குக்ஷியைத்தானே நிரப்புகின்றனர். ஐயோ! பிராம்மணரல்லாத இந்து குடும்பங்களில் எத்தனையோ, உற்சவங்கள் செய்தும் பண்டிகைகள் கொண்டாடியும், பிரார்த்தனைகள் புரிந்தும், சுபா சுபச் சடங்குகள் செய்தும் தரித்திரதசையையடைந்திருக்கின்றன. ஒ பிராம்மணரல்லாத இந்து சகோதரர்களே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள்

`திராவிடன்" வந்திருக்கிறான். அவன் சொல்வதைக் கேளுங்கள் நீங்களும் நன்றாய் யோசித்துப் பாருங்கள். பிராம்மணர்களுக்குக் கொடுத்தால் என்ன? நமது முன்னோர்களைவிட நாம் புத்தி சாலிகளா? முதலிய வீண் குதர்க்கங்கள் வேண்டாம். தீர யோசனை செய்து பாருங்கள் நல்லது. இது கெட்டது இது என்று தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் ஒருவர் இருக்கும் பக்ஷத்தில் துட்டு துக்காணி வீண் செலவில்லாமல் அவரிடத்தில் உண்மையான பக்தியுடன் தொழுதால் அதுவே போதுமானது. அதை விட்டு வீண் செலவு செய்ய வேண்டாம். பிராம்மணர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம், கொடுக்க வேண்டாம். நாம் செல்வான்களாக ஆகிறதைப் பாருங்கள்.


---------------- போரூர் சண்முக முதலியார் -"திராவிடன்" 15.6.1917

0 comments: