சென்ற சில வாரங்கள் முன் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்க மாநாட்டில் சேகுவாராவும் பகத்சிங்கும் திருஉருக்களாக முன்னிறுத்தப்பட்டதைப் பார்த்தோம். நூற்றாண்டை (1907_2007) ஒட்டி மட்டுமல்ல, கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாகவே இந்திய மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டவர் பகத்சிங். இந்திய மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்ட இன்னொரு திருஉருவாகிய மகாத்மா காந்தியைக் காட்டிலும்கூட ஒருகட்டத்தில் செல்வாக்கு மிகுந்தவராக பகத்சிங் விளங்கியதை நேருவே பதிவு செய்துள்ளார்.
பகத்சிங்கின் இளம் வயது (1907_1933), சிறைக்குள்ளும் நீதிமன்றத்திலும்கூட அவர் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம், மரணத்தைத் துச்சமென மதித்தது _ இவை அவரது பெரும் புகழுக்குக் காரணமாயின. நவீன கால இந்தியா தொடர்பான ஆவணக் காப்பகங்கள் எதற்குள் நுழைந்தாலும் தடைசெய்யப்பட்ட நூற்பகுதியில் அதிகம் நிறைந்துள்ளதை பகத் சிங் தொடர்பான நூற்களே.
‘‘பகத்சிங்கைக் கொன்றது படுமோசம் படுமோசம்
பாரினில் யாரிடம் கூறித் தணிப்பது படுமோசம் படுமோசம்
பாலகனாம் சுகதேவர் ராஜகுரு
ஞாலமதில் அவரோடு இறந்தது படுமோசம் படுமோசம்
பாராளும் வெள்ளை நீதி
அறிவுடையோர் நகைக்கும் சேதி படுமோசம் படுமோசம்’’
என்கிற வரிகளை ‘மகுட’ மாகக் கொண்டு நெருக்களிலும் மேடைகளிலும் பாடுவதற்கென இயற்றப்பட்ட நாகை சாமிநாதனின் பாடலைப் படித்தால், இப்போதும் நம் நெஞ்சு பதறும். அடித்தள சாதி ஒன்றைச் சேர்ந்த சாமிநாதன், பொதுவுடைமையரின் சர்வதேச கீதத்தைத் (பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்கள்) தமிழில் பெயர்த்தவர். நாத்திகர் பகத்சிங் குறித்து அவர் எழுதியுள்ள இரு பாடல்களிலும் ஜார் அரசனுக்கெதிரான புரட்சிகரப் போராட்டத்துடன் இந்த ‘‘இளஞ்சிங்கங்களின்’’ தியாகம் இணைத்து நினைவு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. ரசியப் புரட்சி ஒரு மிகப் பெரிய எழுச்சியை இந்திய மண்ணில் விதைத்திருந்த பின்னணியில் பகத் சிங்கின் செயற்பாடுகள் அமைந்ததை நாம் மறந்துவிட இயலாது.
இடதுசாரிகள் மத்தியில் பகத்சிங்கிற்கு ஒரு நீங்காத இடம் வலுவாக அமைந்ததற்கு எல்லாவிதமான நியாயங்களும் உண்டு. சென்ற நூற்றாண்டின் முதற் பாதியில் கிடைத்திருந்த தகவல்களைக் காட்டிலும், கூடுதலாக அரிய ஆவணங்கள் கிடைக்கக் கிடைக்க, இது மேலும் மேலும் உறுதியாகிறது. வெள்ளையர்களுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிய முதல் நபர் பகத்சிங் அல்ல. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மூலம் வெள்ளையர்கள் மீதான தனிநபர்க் கொலைகள் நடைபெற்று வந்தன. திலகர் போன்ற காந்திக்கு முந்திய இந்தியப் பெருந்தலைவர்கள் ஆசியுடன் அது நடைபெற்று வந்தது. இரண்டு தேசபக்தர்களைத் தண்டித்த நீதிபதி டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்டைப் ‘புத்தகக் குண்டு’ (ஒரு கனமான சட்டப் புத்தகத்தை நடுவில் தோண்டி வெடி மருந்துகளைப் பொதிந்து செய்யப்பட்டது) ஒன்றின் மூலம் கொல்ல முயற்சித்தார், வங்க தேசத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரதாஸ் (1907). கிங்ஸ்ஃபோர்ட் என நம்பி தாயும் மகளான இரு வெள்ளைப் பெண்மணிகளை வெடிகுண்டு வீசிக் கொன்றார் குதிராம் போஸ் (1908).
‘‘மஸ்கெட் (படைத்துப்பாக்கி)களையும் பயன்படுத்துவதையும் உற்பத்தி செய்வதையும் ஆயுதச் சட்டங்கள் மூலம் தடுத்திட முடியும். ஆனால் சட்டங்கள் போட்டும் உளவுத்துறை மூலம் கண்காணித்தும் குண்டுகளைத் தடுத்துவிட முடியுமா? குண்டு என்பது ஒரு வகை அறிவு, மந்திரம், தாயத்து, சூன்யத்தந்திரம்’’ என்கிற பொருள்படத் தனது ‘கேசரி’ இதழில் எழுதியதற்காக திலகர் கைது செய்யப்பட்டார். மேற்படி வாசகங்கள் மராட்டியில் அவர் எழுதியதன் ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து தமிழாக்கப்பட்டது. ‘குண்டை ஒரு அறிவு’ என அவர் வகைப்படுத்துவது சுவையான ஒரு விஷயம் மட்டுமல்ல ஆழ்ந்த சிந்தனைக்கும் உரிய ஒன்று. வழக்கு மன்றத்தில் இந்த மொழியாக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு திலகர் புரிந்த நுணுக்கமான வாதம் இன்றும் நம்மை வியப்படைய வைக்கும் ஒன்று. தான் வெடிகுண்டுக் கலாச்சாரத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்கிற அரசியலைத் தவிர்த்து சட்டத்தின் இடுக்குகள் வழியாகக் குற்றச்சாட்டைத் தகர்க்க முயன்றவர் திலகர். வெள்ளை நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. ஆறாண்டுகள் சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க நேரிட்டது.
மகாராஷ்டிரச் சத்பவன் பார்ப்பனரான பால கங்காதர திலகர், இன்றைய இந்துத்துவ அரசியலின் முன்னோடி. காந்திக்கு முன் இந்திய உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பெருந்தலைவர். விநாயக ஊர்வலங்களுக்கு வித்திட்டவர். நிதிராம்போஸ் தனது கடைசி விருப்பமாகக் கேட்டது தூக்கு மேடை ஏறும்போது கையில் பகவத் கீதையை ஏந்திக்கொள்வதற்கான அனுமதிதான். அரவிந்தரின் மாணிக்டோலா தோட்டத்தைச் சோதனையிட்டபோது கிடைத்தவை வெடிகுண்டுகள் மட்டுமல்ல, சில பகவத்கீதைப் பிரதிகளும் கூடத்தான்.
இந்தப் பின்னணியில்தான் பகத்சிங்கின் ‘பயங்கரவாதத்தை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. அவருடையதும் தோழர்களுடையதுமான ஹிந்துஸ்தான் ‘குடியரசு சோசலிசப் படை’ ‘வை ஜவான் பாரத் சபை’, கிடைக்கும் அவரது எழுத்துக்கள், இறுதியில் அவர் தனது தந்தைக்கும் அரசுக்கும் எழுதிய கடிதங்கள் தெளிவான நாத்திகப் பிரகடனம். இறுதிநிலை எழுத்துக்களில் வெளிப்படும் தீர்க்கமான மார்க்சியப் பார்வை ஆகியவை மட்டுமின்றி அவரது ‘பிராண்ட்’ தேசபக்தியும், அரசியலும் கூட சம கால ஆயுதம் தாங்கிய அரசியலிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளது. (இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நூற்றாண்டு ஒட்டி வெளிவந்த பகத்சிங் ஆவணத் தொகுப்புகளில் முக்கியமானது இளைஞர் த.சிவக்குமார் மொழியாக்கித் தொகுத்துள்ள ‘கேளாத செவிகள் கேட்கட்டும்; தியாகி பகத்சிங்’ என்னும் நூல். தொடர்புக்கு: நெம்புகோல் பதிப்பகம், மதுரை, செல்: 9443080634)
‘நேதாஜி மற்றும் நேருவின் சிந்தனையும் உலகப் பார்வையும்: ஒப்பீடு’ என்னும் பகத்சிங்கின் கட்டுரை (ஜுலை 1928) அவரது தேசபக்தியைப் புரிந்துகொள்ள உதவும். புதிய இந்தியாவின் நம்பிக்கைக்குரிய தலைவர்களாக போசையும் நேருவையும் குறிப்பிடும் பகத்சிங், அவர்கள் இருவரும் மகாராஷ்டிர காங்கிரஸ் மாநாட்டில் பேசிய உரைகளை ஒப்பிடுகிறார். ‘‘இந்த உலகத்திற்குச் சொல்வதற்கு இந்தியாவிடம் சிறப்புச் செய்தி ஒன்று உள்ளது’’ எனக் கூறித் தன் உரையைத் தொடங்கிய சுபாஷ் சந்திரபோஸ், ‘‘ஆன்மிக போதனை, தாஜ்மஹாலின் அழகு’’ என்றெல்லாம் கூறிவிட்டு ‘‘வேதங்களுக்குத் திரும்புமாறு’’ மக்களை வேண்டிக் கொண்டார். சத்தியம்_சிவம்_சுந்தரம் என்கிற அடிப்படையில் உருவாகிய இந்திய தேசியவாதம் பிற தேசியங்களிலிருந்து வேறுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஜவஹர்லால் நேரு இந்தக் கருத்தை மறுத்துப் பேசிய பங்கை விதந்து போற்றி எழுதுகிறார் பகத்சிங்.
எல்லா நாட்டிற்கும்தான் சொல்வதற்குச் சிறப்புச் செய்திகள் உண்டு என்று தொடங்கிய நேரு, ‘‘இவ்வுலகை நாகரிகமாக மாற்றியதற்கான ஏகபோக உரிமை தனக்கே உரியது என இங்கிலாந்து கோருகிறது. அப்படிப்பட்ட சிறப்பான விஷயம் எதுவும் என்னுடைய நாட்டில் இருப்பதாக நான் பார்க்கவில்லை’’ என்று கூறியதோடு நிற்காமல் 1300 ஆண்டுகளுக்கு முந்திய அரேபியா அல்லது வேதகால இந்தியாவை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும் என்கிற பழம் பொற்கால வரலாற்றுக் கட்டமைப்பைக் கண்டிக்கவும் செய்தார். இரண்டையும் ஒப்பிட்டு சுபாஷின் கருத்துக்களைப் புறந்தள்ளும் பகத்சிங் நேருவை ‘‘புதிய சகாப்தத்தின் சிற்பி’’ என்கிறார்.
‘‘புரட்சி ஓங்குக’’ (இன்குலாப் ஜிந்தாபாத்) என்கிற முழக்கத்தை மட்டும் பகத்சிங் ஒலிக்கவில்லை. சாம்ராஜ்யபாத் மர்தாபாத்’’ (‘ஏகாதிபத்தியம் ஒழிக’) என்றும் முழங்கினார். அவருடைய பிரிட்டிஷ் எதிர்ப்பு வெறும் ‘அந்நிய’ எதிர்ப்பு அல்ல, இந்த நாட்டின் இயற்கை வளங்களையும் அடித்தள மக்களின் உழைப்பையும் சுரண்டிச் செல்லும் முயற்சிக்கு எதிரானதாகவே இருந்தது. ஏகாதிபத்தியத்திற்கெதிரான போரைத் தொடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டபோர்க் கைதியான தன்னைத் தூக்கிலிட்டுக் கொல்லக் கூடாது, சுட்டுக் கொல்ல வேண்டும் எனக் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு அவர் எழுதிய கடித வாசகங்களைச் சுருக்கம் கருதி இங்கே தவிர்க்கிறேன்.
வழக்கின்போது சட்ட நுணுக்கங்கள் வழியாக நுழைந்து அவர் தப்பிக்க விரும்பவில்லை. சாட்சியங்களின் போதாமையைச் சுட்டிக்காட்டி முறையீடு செய்ய அவரது தந்தை முயன்றபோது, சினந்து எழுதிய பகத்சிங்கின் கடிதத்தைத் தயவு செய்து படியுங்கள். உயிர் தப்புவது அவரது நோக்கமாகஇல்லை. வழக்கை முழுக்க முழுக்க அரசியலாக்குவதே தனது நோக்கம் என்கிறார் பகத்சிங். அப்படிச் செய்யாததற்காக, சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான தந்தையை ‘‘முதுகில் குத்தினீர்கள்’’ எனக் குற்றம் சாட்டவும் செய்தார். அதே நேரத்தில் ஒரு தந்தையின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எழுதப்பட்ட அக்கடிதம் ஒரு இலக்கியம். வெடிகுண்டுத் தத்துவத்தில் திலகரும் பகத்சிங்கும் வேறுபடும் புள்ளி கவனிக்கத் தக்கது. காந்திய அறத்திலிருந்து இருவருமே வேறுபட்டவர்களாயினும் திலகரின் அரசியலறமும், பகத்சிங்கின் அரசியலறமும் வேறு வேறு.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குள்ளான ஒன்று பகத்சிங் விஷயத்தில் காந்தி நடந்துகொண்ட முறை. கிடைத்திருக்கும் ஆவணங்கள் அனைத்தும் எளிதில் காந்தியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் கூடியவை. ‘‘என்னால் முடிந்தவரை வைசிராயிடம் கெஞ்சிப் பார்த்தேன். என்னிடமிருந்த எல்லாவிதமான வற்புறுத்தும் திறன்களையும் பிரயோகித்துப் பார்த்தேன்’’ எனப் பகத்சிங்கும் தோழர்களும் தூக்கிலிடப்பட்ட அடுத்தடுத்த நாட்களில் காந்தி கூறியதற்கு கிடைத்திருக்கும் ஆவணங்கள் பெரிய அளவில் சான்று பகரவில்லை. காந்தியை வில்லனாக்கிய பகத்சிங்கைத் திரு உருவாக்க முயலும் தட்டை எழுத்தாளர்களுக்கு இதை விடச் சவுகரியமான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?‘‘தட்டை எழு,த்து’’ என இங்கே நான் சொல்வது அரசியல் உள்ளிட்ட எந்தச் சம்பவத்திலும் பிரச்சினையின் பன்முகப் பரிமாணங்களையும் கணக்கில் கொள்ளாமல் எழுதுவதைத்தான். தட்டை எழுத்துக்கள் குழப்பமின்றித் தெளிவாக இருக்கும். எழுதுபவரின் புரட்சிகர நிலைபாட்டிற்குச் சென்று பகர்வதால் இருக்கும். ஆனால் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கோ, அதிலிருந்து பாடம் கற்பதற்கோ அவை எந்த அளவு பயன்படும் என்பது கேள்விக்குறிதான்.
நூராணி சொல்வது போல நேருவுக்கும் மற்றவர்களுக்கும் ‘அஹிம்சை’ என்பது ஒரு நேர்மையான கொள்கை மட்டுமே. ஆனால் காந்திக்கோ அது ஒரு ‘மதம்’ என்கிற சொல்லின் எல்லாவிதமான மோசமான அர்த்தங்களையும் உள்ளடக்கித்தான் சொல்கிறேன். காந்திக்கும் சாவர்கருக்கும் விரிவான சந்திப்பு ஒன்றே ஒன்றுதான் நிகழ்ந்தது. (இன்னொன்று 1942 வாக்கில் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. தெளிவான ஆதாரமில்லை) 1909_ல் லண்டனில் இந்தியா இல்லத்தில் கர்ஸான் வைஸியை மதன்லால் திஸ்ரா என்கிற தேச பக்த இளைஞன், சாவார்கரின் உந்துதலால் கொன்று தூக்கு தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்த நேரம். ஆற்றல் வாய்ந்த பேச்சாளரான சாவார்கர் திஸ்ராவையும் அந்நியர்க்கெதிரான வன்முறைக் கருத்தியலையும் விதத்தோதிப் பேசுகிறார். எழுத்தாற்றல் மிகுந்தவராயினும் பேச்சில் கவர்ச்சி குறைந்த காந்தி எப்படியாயினும் தனி நபர்க் கொலையை ஏற்க மறுக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு எதிரி என்பதனால் ஒவ்வொரு பிரிட்டிஷ்காரனும் நமக்கு எதிரி எனக் கருத முடியாது என்கிறார். அன்றிருந்த உணர்ச்சிவயப்பட்ட சூழலில் காந்தியின் கருத்துக்கள் மிகவும் பலவீனமாகவே ஒலித்திருக்கும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு கப்பலில் திரும்பிக் கொண்டிருந்த பொழுது இந்தப் பிரச்சினையை காந்தி விரிவாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார். இதன் விளைவாக உருவானதே அவரது புகழ்பெற்ற ‘‘ஹிந்த் சுயராஜ்’’ என்னும் நூல் (இணைய தளங்களில் முழு நூலையும் காணலாம்) இந்திய தேசியம் குறித்த அணுகுமுறை அன்று தொடங்கி ஒன்றுக்கொன்று சந்திக்கவே இயலாத இருவேறு எதிர் எதிர்ப் பாதைகளில் செல்லத் தொடங்கியது. என்று அரவிந்தர்_சாவர்கர்_ஹெக்ஹேவரின் தேசியம். மற்றது காந்தியின் தேசியம்.
பகத்சிங் உயிருடன் இருந்திருந்தால், மூன்றாவதாக ஒரு தேசியம் உருப்பெற்றிருக்க வாய்ப்புண்டு. காந்தியுடையதைவிட கூர்மையான ஏகாதிபத்திய எதிர்ப்புடையதாகவும் உழைக்கும் மக்கள் சார்புடையதாகவும் அது அமைந்திருக்கக்கூடும். விரிந்த படிப்பு, கற்கும் ஆர்வம், எல்லாவற்றையும் விட சிறந்த பண்பாகிய திறந்த மனது நிறைந்த பகத்சிங் வன்முறை வழிமுறையிலிருந்து விலகத் தொடங்கியதற்கான சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன. காந்தியின் உள்ளடக்கம் (வீஸீநீறீusவீஷீஸீ) தேசியத்துடன் அது நெருக்கமாக இருக்கட்டும்.
வன்முறையும் தனிநபர்க் கொலையும் மனிதரின் அடிப்படையான அற உந்துதலுக்கு (வீனீஷீக்ஷீணீறீ வீனீஜீuறீsமீ) எதிரானவை. சற்று முன் குறிப்பிட்ட பகத்சிங்கின் இறுதி மனுவில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கும் தங்களுக்குமான போர் தவிர்க்க இயலாது என்று சொல்லும் அவர், இந்தப் போரின் தன்மை (வன்முறையா இல்லையா என்பது) ஏகாபத்தியத்தின் அணுகல் முறையாலேயே தீர்மானிக்கப்படும் என்கிறார். ‘‘எந்தப் பாதையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆனால், அந்த ஓயாத போர் அற்பமான (....... இந்த இடத்தில் ஒரு சொல் தெளிவில்லாமல் உள்ளது_அ.மா.) மற்றும் அர்த்தமற்ற அறவியற் கோட்பாடுகளைக் கணக்கில் கொள்ளாது’’ (அழுத்தம் எனது_ அ.மா) என்று பகத்சிங் கூறுவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அறங்களை ‘அற்பமானது’ எனவும் ‘உன்னதமானது’ எனவும் பிரிக்க இயலுமா? சொல்லப்போனால், சுரண்டல் சமுதாயம் ஒன்று உருவாக்கும் பேரறத்தை காட்டிலும் இரண்டு தனி மனிதர்களுக்கிடையேயான ‘‘சிற்றறம்’’ முக்கியமானதில்லையா?
பகத்சிங்கிற்கும் தோழர்களுக்கும் மரண தண்டனை கிடைப்பதற்குக் காரணமான சாண்டர்ஸ் கொலையைத்தான் எடுத்துக் கொள்ளுங்கள். கொடூரமாக அது நிகழ்ந்தது. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்ட, பகத்சிங்கால் பெரிதும் மதிக்கப்பட்ட லாலா லஜபதிராய் இறப்பதற்குக் காரணமான வன்முறையை நிகழ்த்திய காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜே.ஏ.ஸ்காட் என்கிற வெள்ளையனைச் சுடுவதே அவர்களின் நோக்கம். ஆனால், கொல்லப்பட்டதோ துணைக் கண்காணிப்பாளர் ஜே.பி.சாண்டர்ஸ். கிட்டத்தட்ட பகத்சிங் வயதேயுள்ள அவன் ஒரு வெறும் பயிற்சியாளர் (றிக்ஷீஷீஜீணீtவீஷீஸீமீக்ஷீ). லாலாஜியின் கொலைக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. டிசம்பர் 17 (1928) அன்று மாலை நாலு மணிக்கு சிவப்பு மோட்டார் சைக்கிளில் வெளிவந்த சாண்டர்ஸை, ஸ்காட் என நினைத்துத் தகவல் கொடுக்கிறார் பின்னாளில் அப்ரூவராக மாறிப்போன ஜெயகோபால். அலுவலகத்தை விட்டு மெதுவாக வண்டியை ஓட்டி வந்த சாண்டர்ஸை அருகில் வந்தவுடன் தனது ரிவால்வரால் சுடுகிறார் ராஜகுரு. குண்டடிபட்ட சாண்டர்ஸ் கையைத் தூக்குகிறார். வண்டி கீழே விழுகிறது. சாண்டர்ஸின் கால் வண்டிக்குக் கீழ் சிக்கிக் கொள்கிறது. ஓடி வந்த பகத்சிங் தன் கையிலிருந்த தானியங்கி பிஸ்டலால் சாண்டர்ஸின் முகத்தில் சரமாரியாகக் குண்டுகளை உமிழ்ந்து சிதைக்கிறார். தப்பி ஓடுகையில் துரத்தி வந்த ஏட்டு சனன்சிங்கும் சுடப்படுகிறார். ஒரு மணி நேரத்திற்குப் பின் இறந்துபோன சனன்சிங்கைச் சுட்டது ‘பண்டிட்ஜி’யாக (சந்திரசேகர ஆஸாத்) ‘‘இருக்கக்கூடும்’’.
எனினும், சாண்டர்ஸைக் கொல்வதுதான் பகத்சிங் மற்றும் தோழர்களின் நோக்கம் எனத் தட்டை எழுத்தாளர்கள் சொல்வது வழக்கம். இதற்கு அவர்கள் ஆதாரமாகச் சொல்வது 1930 வாக்கில் ‘‘தீச் சக்கரம்’’ (ஆதிஷ் சக்கர்) என்றொரு தீவிர இயக்கத்தைக் கட்டிய யஷ்பாலின் நூலைத்தான். எந்தக் காரணத்திற்காக ஸ்காட்டை விட்டுவிட்டு சாண்டர்ஸைத் தேர்ந்தார்கள் என்கிற கேள்விக்கு, அவர்களிடம் பதிலிருக்காது. இரண்டு நாள் முன்னதாக, ‘‘ஸ்காட் கொல்லப்பட்டான்! லாலாஜி கொலைக்குப் பழிக்குப் பழி’’ என்ற போஸ்டர்களை கத்தரிப்பூ வண்ணத்தில் பகத்சிங் எழுதிக் கொண்டிருந்ததைப் பற்றி ஜெயகோபாலும் ஹன்ஸ் ராஜ் வோராவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். பகத்சிங்கிற்கு உதவும் பொருட்டு வோராவும் சில போஸ்டர்களை எழுதிக் கொடுத்தார். கிஷோரி லாலும் உடனிருந்தார். கொல்லப்பட்டது சாண்டர்ஸ்தான் எனத் தெரிந்தவுடன் பகத்சிங்கால் ‘போஸ்டர்கள்’ திருத்தப்பட்டன.
‘‘ஒரு மனிதனைக் கொன்றதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். ஆனால் இம்மனிதன் ஒரு கொடூரமான, வெறுக்கத்தக்க, அநீதியான அமைப்பின் அங்கம். பிரிட்டிஷ் அரசின் ஒரு ஊழியன் என்கிற முறையில் அவன் கொல்லப்பட்டான். உலகிலேயே மிகவும் கொடூரமான அரசு இது’’
என சாண்டர்ஸ் கொலைக்கு விளக்கமளிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் சோஷலிச குடியரசுப் படையின் ‘தலைமைத் தளபதி’ பால்ராஜ் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
வன்முறை நடவடிக்கைகளில் இப்படி நிகழ்வது புதிதல்ல. குதிராம் போஸ் திருமதி கென்னடி, செல்வி கென்னடி என்கிற இரு பெண்களைக் கொன்றதை முன்பே குறிப்பிட்டேன். திஸ்ரா, கர்ஸான் வைஸியைக் கொன்ற போது அருகிலிருந்த ஒரு அப்பாவியும் கொல்லப்பட்டார். இன்றைய பயங்கரவாதச் செயல்களுடன் பகத்சிங்கை ஒப்பிட இயலாது என்ற போதிலும், இவற்றின் விளைவாகக் கொல்லப்படும் அப்பாவிகளைப் பற்றி நாம் கவலைப்படாதிருக்க இயலாது. எல்லாவற்றையும் நாம் ஒன்றே போலப் பார்க்க வேண்டியதில்லை என்ற போதிலும், இது குறித்த ஒரு திறந்த வாதத்தைத் தவிர்ப்பது நேர்மையாகாது.
காந்தியைப் பொருத்தமட்டில் வைஸ்ராய் இர்வினுடன் நிகழ்ந்த அந்தச் சர்ச்சைக்குரிய பேச்சு வார்த்தைகளின்போது, இருமுறை பகத்சிங் மரண தண்டனை குறித்துப் பேசியபோதும், அதைக் குறைப்பது குறித்து அவர் அழுத்தம் கொடுத்துப் பேசவில்லை என்பதே உண்மை. முதல் முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது (1931, பிப்ரவரி 17) பகத்சிங்கின் மேல்முறையீட்டை ‘பிரிவு கவுன்சில்’ மறுத்திருந்தது. மரணதண்டணைக்குப் பதிலாக நாடுகடத்தல் (பீமீஜீஷீக்ஷீtணீtவீஷீஸீ) என்பதை காந்தி கோரியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஒத்தி வைக்க முடியுமா என்று மட்டுமே கோரினார்.
மார்ச் 5_ம் தேதி அன்று காந்தி_இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. மார்ச் 24 அன்று கராச்சியில் கூட இருந்த காங்கிரஸ் மாநாடு அந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும். இடையில் மார்ச் 19 அன்று காந்தி இர்வினைச் சந்தித்தபோது, இறுதியில் விடைபெறும் முன்பாக ‘‘பகத்சிங் பிரச்சினையைப் பேசலாமா?’’ என்றார். கராச்சி காங்கிரஸ் தொடங்கும் நாளில் அவர்களது தூக்குத் தண்டனைக்கு நாள் குறித்துள்ள செய்தி, இதழ்களில் வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். இர்வின்அப்போதும் உடன்படவில்லை. காந்தி வற்புறுத்தாமலேயே திரும்பினார்.
இவ்வளவுக்குப் பின்னும் ‘முடிந்தவரை கெஞ்சினேன், வற்புறுத்தினேன்’’ என அவர் பின்பு சொன்னதன் பொருளென்ன? காந்தி எதையும் வெளிப்படையாகப் பேசும் துணிச்சல் உள்ளவர் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். காந்தியின் கூற்றுக்கு ஆதரவாக ஒரே ஒரு நிகழ்வைத்தான் சொல்ல இயலும். பகத்சிங்கும் தோழர்களும் மார்ச் 23 முன்னிரவில் தூக்கிலிடப்பட்டதை அறியலாம். அன்று காலை காந்தி எழுதிய கடிதமொன்று இர்வினிடம் சேர்ப்பிக்கப்பட்டது. ‘‘நான் இந்தக் கடிதத்தை எழுதுவது உங்கள் மீது இழைக்கும் கொடுமைதான்’’ எனத் தொடங்கிய அக்கடிதத்தில் பகத்சிங் மற்றும் தோழர்களின் தண்டனை குறைப்பு அழுத்தமாக வற்புறுத்தப்பட்டிருந்தது. ‘‘சரியோ தவறோ பொது மக்களின் விருப்பு என்பது தண்டனைக் குறைப்பாகவே உள்ளது. வேறு ஏதேனும் (பெரிய) கொள்கைப் பிரச்சினை இல்லாதபோது அதற்கு மதிப்பளிப்பதே கடமை’’ என்று அக்கடிதம் முடிவடைந்திருந்தது. மார்ச் 23 (திங்கள்) காந்தியின் மவுன நாள். இருந்தபோதும் கூட அவர் இர்வினைச் சந்திக்க முயன்றார். இர்வின் அனுமதிக்கவில்லை.
பகத்சிங்கின் தண்டனைக் குறைப்பிற்காக காந்தி எழுத்துபூர்வமாக ஒன்றையும் செய்யவில்லை எனச் சிலர் எழுதியிருப்பது தவறு. வேண்டுமானால் இதை ஏன் அவர் முன்பே செய்யவில்லை என்று கேட்கலாம். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போல இது என்ன வேலை என்று விமர்சிக்கலாம்.
ஒத்துழையாமை இயக்கத்தின் இறுதி நிலையில் உருவானது காந்தி_இர்வின் ஒப்பந்தம். அரசுடன் ஒரு தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை உருவாக்குவது அவரது நோக்கமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தை முறியடிக்க உள்நாட்டில் மட்டுமல்ல பிரிட்டனிலும் முயற்சிகள்நடந்தன. கன்சர்வேடிவ் கட்சியினரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ‘அரை நிர்வாணப் பக்கிரி’ என சர்ச்சில், காந்தியை இழிவு செய்ததெல்லாம் இந்த நேரத்தில்தான். சில மாதங்களில் ஓய்வுபெற இருந்த இர்வினை வீழ்த்துவதும் அவர்களின் இலக்காக இருந்தது.
ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் காந்தி அதிகபட்சமான அக்கறை காட்டினார் என்பது உண்மைதான். ஒப்பந்தம் என்பது இருவர் அல்லது இரு தரப்பினர் அல்லது இரு தரப்பினரின் பிரதிநிதிகள் செய்து கொள்வது. வேண்டுமானால், ஒப்பந்தத்திற்கே செல்லாமல் இருக்கலாம். சென்றபின் ஒப்பந்தம் இருவருக்கும் பொதுவானதாகிறது. நிறைவேற்றுவது இருவரின் கடமை. உண்மை, அஹிம்சை என்கிற நிலைபாடுகளின்படியாக நின்றதாக அறிவித்துக் கொண்ட காந்தி பேச்சுவார்த்தைகளில் ஆதரவாகப் பேசத் தகுதியற்றுப் போனார்.
சிறைக்குள் பகத்சிங்கும் தோழர்களும் பல கொடுமைகளுக்குள்ளானார்கள். விசாரணை நியாயமாக நடைபெறவில்லை. இருந்தபோதிலும் தண்டனைக் குறைப்பிற்கு இது தகுதியான வழக்கல்ல என்பதே இர்வினின் இறுதி முடிவாக இருந்தது. தண்டனைக் குறைப்பு இல்லை என்றானபின் ஒத்தி வைத்தல் என்பது ஒரு ஏமாற்றாகவே இருக்க முடியும். கராச்சி காங்கிரஸ் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு ஒத்திவைப்பு நாடகத்தை நடத்துவது நியாயமாக இராது. ‘தூக்கிலிடுவதாக இருந்தால், அதை முன்னமேயே செய்யுங்கள் என காந்தி சொன்னதன் பின்னணி இதுதான். ஒத்திவைப்பு என்பதை முன்னதாக வற்புறுத்திக் கொண்டிருந்த காந்தி கடைசி நாளன்று ‘தண்டனை குறைப்பு’ என்பதைப் பேசியது கவனத்திற்குரியது.
ஏதேனும் நடந்து பகத்சிங்கும் தோழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்கிற முட்டாள்தனமான நம்பிக்கையும் காந்திக்கு இருந்தது. மா£ச் 7 அன்று டெல்லியில் பேசிய கூட்டமொன்றில், ‘‘கடவுள் அருளால் பகத்சிங்கும் மற்றவர்களும் மரண தண்டனையிலிருந்து மட்டுமல்ல, சிறையிலிருந்தே விடுதலையடைய வாய்ப்பிருக்கிறது’’ என்று குறிப்பிட்டார். பகத்சிங்கிற்கு வெளியிலிருந்த ஆதரவு அவரை மலைக்கச் செய்திருந்தது. கடைசி நாள் அவர் மேற்கொண்ட முயற்சி அவர் பெரும் மனப் போராட்டத்திற்குள்ளாகியிருந்ததற்குச் சான்றாகத்தான் அமைகிறது.
தேர்ந்த வழக்குரைஞரும் வரைவில் (பீக்ஷீணீயீtவீஸீரீ) மிக வல்லவருமான காந்திதான் கராச்சி மாநாட்டில் பகத்சிங் தொடர்பான தீர்மானத்தை எழுதினார். சுருக்கம் கருதி இதையும் இங்கே தவிர்க்கிறேன். பகத்சிங் மற்றும் தோழர்களின் தியாகத்தையும் நேர்மையையும் சிறந்த வார்த்தைகளால் போற்றிய அத்தீர்மானம் அவர்களின் வழிமுறைகளை மறுக்கத் தயங்கவில்லை.
அறிஞர் ஏ.இ.நூரானி குறிப்பிடுவது போல பகத்சிங் விஷயத்தில் காந்தி மூன்று அம்சங்களில் பிழைபடுகிறார். 1)சிறை வாழ்க்கையில் பகத்சிங் இடம் உருவான மாற்றங்கள், பயங்கரவாதத்தைக் கைவிடுவது முதலியன. 2) வழக்கு விசாரணையின் அநீதிகளை காந்தி கணக்கில் கொள்ளவில்லை. 3)பகத் சிங்கையும் தோழர்களையும் தூக்கிலிடுவதால் ஏற்படும் பின் விளைவுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரிட்டிஷ் அரசுப் பிரதிநிதியும் இன வெறியனுமான உள்துறை அமைச்சர் எமர்சனுடன் அவர் பேசியிருக்க வேண்டியதில்லை.
என்ன செய்வது, காந்திக்கு ‘அகிம்சை’ ஒரு மதமாக அல்லவா இருந்தது.
கவனத்திற்கு: வழக்கம்போல் விட்டுப்போன இரு குறிப்புகள்:
1. பகத்சிங்கும் தோழர்களும் சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்ததால் வழக்கு விசாரணை தள்ளிப் போவதைக் கண்ட பிரிட்டிஷ் அரசு இப்படியான சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இல்லாமலேயே வழக்கை நடத்தலாம் என ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயன்றது. இதையட்டி அன்றைய மத்திய சட்டமன்றத்தில் நடைபெற்ற வாதத்தின்போது 1929 செப்டம்பர் 12, 14 தேதிகளில் முகமது அலி ஜின்னா பேசிய பேச்சு மிக முக்கியமான ஒன்று. ஆழ்ந்த தயாரிப்புடன் கூடிய அந்த விரிவான ஆங்கிலப் பேச்சை அதன் வீர்யத்துடன் என்னுடைய தமிழில் கொண்டு வர இயலுமா என்பது அய்யமே. சட்டத்தை எதிர்த்தது மட்டுமின்றி பகத்சிங் மற்றும் தோழர்களை அவர் ஆதரிக்கவும் செய்தார். அன்றைய அமைப்பின் உள்ளார்ந்த வன்முறைக்கான எதிர்வினையே பகத்சிங்கும் தோழர்களும் என்று ஜின்னா குறிப்பிட்டார். ‘‘இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அந்த மனிதனிடம் ஒரு ஆன்மா (ஷிஷீuறீ) உள்ளது. அதனால் அவன் இரக்கப்படுகிறான். அவனது குறிக்கோளின் நியாயத்தில் அவனுக்குப் பரிபூரண நம்பிக்கையுள்ளது’’ _ஜின்னா.
2. கம்பளித் தொப்பி, இலேசாக முறுக்கப்பட்ட அழகிய மீசை ஆகிய வெள்ளைக் கனவானின் தோற்றத்திலேயே பகத்சிங்கின் திரு உரு 1930 தொடங்கி இன்று வரை இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜாட் சீக்கியரான பகத்சிங் தலைமறைவு வாழ்வின்போதுதான் (1928 செப்டம்பரில்) தனது சீக்கிய அடையாளங்களான தாடி மீசை, டர்பன் ஆகியவற்றைத் துறந்தார்.
தனது இறுதி நாட்களில் பாய் சாஹிப் ரன்பீர் சிங்கின் முயற்சியால் அவர் மீண்டும் மரபு வழி அடையாளங்களுக்குத் திரும்பியதாகவும், அவற்றை நீக்கிக் கொண்டதற்காக ‘வெட்கப்படுவதாக’க் கூறியதாகவும் அறிகிறோம். சீக்கிய, இஸ்லாமிய அடையாளங்களுடன் இந்திய திரு உரு ஒன்று சாத்தியமா?
----- 01-06-2007 "தீராநதி" இதழில் அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய கட்டுரை
Search This Blog
16.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment