Search This Blog

31.5.08

எம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் வேண்டும்-பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் 'பிராமின் வார்டு'


இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்

தந்தை பெரியாருடைய பணி எப்படிப்பட்டது என்பதை நம்முடைய இளைய தலைமுறையினருக்கோ ஏன் கலைஞரோ அல்லது எங்களைப் போன்றவர்களோ, பெரியார், பெரியார் என்று மூச்சுக்கு மூச்சு முந்நூறு முறை சொல்லுகிறோம் என்று சொன்னால், அது வெறும் நன்றி உணர்ச்சிக்காக மட்டுமல்ல, சமுதாயத்தினுடைய நிலை என்ன என்ற படப்பிடிப்பைத் தெரிய வேண்டும். நம்முடைய வேர்கள் எப்படிப்பட்டது என்பதை விழுதுகள் அறிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் பனகல் அரசருக்கு விண்ணப்பம்

ஒரு காலத்திலே நிலைமை எப்படி இருந்தது? டாக்டர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள். அவர்களுடைய நண்பர்கள் அவர்களோடு படித்தவர்கள் வந்திருப்பார்கள். நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. பார்ப்பனரல்லாதார் கட்சி ஆட்சிக்கு வந்தவுடேன தந்தை பெரியார் எழுதினார்.
பனகல் அரசருக்கு ஒரு விண்ணப்பத்தை கொடுத்தார். அன்றைய முதலமைச்சருக்கு.
எம்.பி.பி.எஸ். சேருவதற்கு சமஸ்கிருதம் முக்கியமாம்!

மெடிக்கல் காலேஜில் எம்.பி.பி.எஸ். சேர்வதற்கு முதல் தகுதி என்னவென்றால் நிறைய மார்க் வாங்குவது மட்டுமே தகுதி அல்ல. அந்த காலத்திலே முக்கியமாக சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும். உங்களிலே பலருக்கு இந்தச் செய்தி தெரியாது.

மெடிக்கல் காலேஜுக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்? அங்கு என்ன கருமாதி மந்திரம் சொல்லி புரோகிதம் செய்யப் போகிறார்களோ? அல்லது சமஸ்கிருதத்தில் இருந்து வேறு எந்தப் பாடத்தை அவர்கள் சொல்லிக் கொடுக்கப் போகின்றார்கள்? நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே சமஸ்கிருதம் படித்தி ருந்தால்தான் எம்.பி.பி.எஸ். சீட் என்ற நிலை இருந்தது. இது எவ்வளவு பெரிய கொடுமை? அப்படியானால், என்ன அர்த்தம்? சமஸ்கிருதம் படித்தவர்கள் யார்?

யாருக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கும்?

வழக்கமாகப் பார்ப்பனர்கள்தான் உயர்ஜாதிக் காரர்கள்தான் சமஸ்கிருதம் படித்தவர்கள். மற்றவர்கள் டாக்டர்களாக வரக்கூடாது என்பதற்கு எவ்வளவு இலாவகமாக ஒரு சூழ்ச்சி பொறியை அவர்கள் அமைத்திருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதை மாற்றிக் காட்டிய ஆட்சி திராவிடர் ஆட்சி. இதற்கு முயற்சி எடுத்தவர் தலைவர் தந்தை பெரியார் ஆவார்கள்.

உங்களுக்கு வியப்பாக இருக்கும்

பெரியார் பிறந்திருக்காவிட்டால் இன்றைக்கு நம்மவர்கள் இவ்வளவு டாக்டர்களாக வந்திருக்க முடியுமா? உங்களுக்கு வியப்பாக இருக்கும். சென்னையிலே மன நல காப்பகம் இருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி, பைத்தியக்கார ஆஸ்பத்திரி கீழ்ப்பாக்திற்குப் போ என்று சொல்லுவார்கள் சிகிச்சை பெறுவதற்காக.
டாக்டர்களுக்கே தெரியாது

மனநலம் குன்றியவர்களை யாரும் கேலி செய்யக்கூடாது. அவர்களை நாம் பக்குவப்படுத்த வேண்டும். மென்ட்டல் ஹாஸ் பிட்டல் என்று சொல்லக்கூடிய அந்த மனநல காப்பகம் ஏறத் தாழ 150,170 ஆண்டுகள் ஆன ஒரு காப்பகம். டாக்டர்களுக்கே பல பேருக்கு இது தெரியாது. இதுபோன்ற செய்திகளை இந்த நேரத்திலே நாங்கள் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பிராமின் வார்டு


நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே பிராமின் வார்டு என்று தனியாக பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்தது. அதாவது பார்ப்பனர்களுக்கென்று தனி வார்டு. நோயாளிகளில் பைத்தியம் பிடித்தவர்களுக்குக் கூட பார்ப் பனர்களுக்கென்று தனி வார்டு இருந்தது. இதில் பைத்தியத் திற்கான தனி இடம்? காரணம் என்ன? ஜாதியில் மேல் ஜாதி. ஆகவேதான் அவர்களுக்கு ஸ்பெசல் வார்டு.

மருத்துவத் துறையில் இருந்த நிலைகள்

அந்த வார்டுகளில் சூத்திரர்களைக் கொண்டு போய் வைக்க முடியாது. சூத்திரர்களோடு பார்ப்பனர்கள் இருக்கமுடியாது. இதெல்லாம் மருத்துவத்துறையிலே இருந்த நிலைகள். இவைகள் எல்லாம் மாற்றப்பட்டன என்றால் எப்படி மாற்றப்பட்டன?

சத்ய சாயிபாபா கையைத் தூக்கியவுடனே பொத்தென்று கீழே விழுந்ததா? அல்லது ஓம் சக்தி ஆதி பராசக்தி என்று சொன்ன வுடனே வந்துவிட்டதா? அல்லது முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகள், கிண்ணரர், கிம்புருடர், அஷ்டதிக்க பாலகர் இவர்களில் யாராவது ஒருவர் போராடி இந்த வெற்றியைக் குவித்தார்களா? இல்லை.

பெரியார் - சுயமரியாதை இயக்கத்தினுடைய விளைவு

ஒரு பெரியார் பிறந்தார். சுயமரியாதை இயக்கம் பிறந்தது. அதனுடைய விளைவாகத்தான் மனிதர்களுக்குள்ளே இருக்கின்ற பேதம் மாற்றப்பட்டது. எனவேதான் இதைத் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்

----------- தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் சொற்பொழிவு -"விடுதலை"-31-5-08

0 comments: